20 April 2009

உயிர் நிலை

பழைய சூனியக் கிழவி கதைகளில் அரக்கனின் உயிர்நிலை எழு கடல் தாண்டி எழு மலை தாண்டி ஏதோ ஒரு வனத்தில் ஒரு கிளியின் உடலுக்குள் இருப்பதாக வரும். கிளியை கொன்றால் தான் அரக்கன் சாவான். அது சரி மனிதனின் உயிர் நிலை எங்கே இருக்கிறது. எதை இழப்பதால் ஒருவன் மண்டையை போடுகிறான். அதோ மூக்கில் பஞ்சு வைத்துகொண்டு சுற்றி நடக்கும் ஒப்பாரி எதையும் கண்டு கொள்ளாமல் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறதே அதற்குள் இருந்த அவர் எங்கே போனார். "போனவாரம் எங்கிட்ட வந்து பத்தாயிரம் கடன் வாங்கிட்டு போனியே" என்று பொய்யாக கதறும் பக்கத்து வீட்டுக்காரனை கழுத்தைப் பிடித்து இறுக்காமல் ஆமோதித்த படி இவரை கிடத்தியது எது. விலை உயர்ந்த காரிலும் ஏசியிலும் பழக்கப்பட்ட உடலை பிறர் மண்ணுக்குள் தள்ளுவதை பார்த்தும் அடக்கமாக இருந்து அடக்கமாகிப் போவது எதை இழந்ததால்?

சாதாரணமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வியர்க்கிறார் சரிகிறார். ஒருவர் வந்து மூக்கில் கைவைத்து பார்க்கிறார். சுவாசம் இல்லை. நெஞ்சில் துடிப்பு இல்லை . உடனே ஒப்பாரி துவங்குகிறது. ஃபோன் கால்கள் பறக்கிறது. குளிர்ந்த தண்னீரில் உடலை நனைத்தெடுத்து மிச்சமிருக்கிற உயிரையும் நடுங்க வைத்து ஓட்டி விட்டு,ஒரு வேளை சுவாசம் திரும்பி உயிர் பிழைத்துவிட கூடும் என்று மூக்கில் பஞ்சை வைத்து அதையும் அடைத்து விடுகிறார்கள். அப்படியும் உயிர் திரும்பி தப்பி ஓடி விடாதிருக்க பெருவிரல்களை சேர்த்து கட்டி விடுகிறார்கள். இதயம் மீண்டும் துடிக்காதிருக்க கனத்த மலர் வளையத்தை நெஞ்சில் வைத்து விட்டு தங்கள் சம்பிரதாயங்களை முடித்துகொண்டு உயிலைப்பற்றி விவாதிக்கிறார்கள்.

இந்த மனிதர் யார் இவர் உண்மையில் எப்போது இறந்தார்? என்று யோசித்தோமானால் இவரது பிறப்புக்கு முன்னே அவரது இறப்பு தொடங்கி விட்டது. ஆனால் மண்னுக்குக்குள் புதைத்தபின்னும் அவர் உடலில் உயிர் கொஞ்ச நேரம் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என உணரலாம்.

உடல் என்பது பூமியின் தனிமங்களால் ஆக்கப்பட்டது என்றால் உயிர் என்பது தன்னுணர்வு. இங்கே கட்டையாக கிடப்பவர் பெயர் உதாரணமாக "கட்டை துரை" என்று வைத்துக் கொள்வோம். இந்த கட்டைதுரை யார்? முதலில் இந்த கட்டைதுரை என்பது பல இமேஜ் களின் கூட்டுதொகுப்பு. அவர் ஒரு அரசியல் தலைவராக இருக்கலாம். படைப்பாளியாக இருக்கலாம். கணவனாக தந்தையாக, மகனாக, அண்ணனாக என எத்தனையோ விதமாக பிறரது உள்ளங்களில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அதே போல அவரது உள்ளத்தில் அவரைப்பற்றி கொண்டுள்ள கருத்து தான் அவரது மனம்.

முன்பெல்லாம் இந்த மனம் என்பது இதயத்தில் இருக்கிறது என நம்பினார்கள். ஆனால் மனம் என்பது மூளையின் ஒரு விளைவு. ஆனால் காதலர்களுக்கு என்னவோ இன்னும் மனம் இதயத்தில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிப்பவர்களுக்கு மூளை இருப்பதில்லையோ என்னவோ?

மூளை இரண்டு வித செயல்களை செய்கிறது.
  1. உடலை,உடலின் அடிப்படை செயல்களை நிர்வகிப்பது.
  2. புலன்கள் வழி வெளியுலகைப்புரிந்து கொள்வது,நினைவில் வைப்பது,தன்னை உணர்வது.
மூளையும் உடலின் எல்லா பாகங்களும் செல்களால் ஆனது. தாயின் கருவில் ஒற்றை செல்லாக இருந்த போதே தன்னிடமிருந்து உருவாகப்போகும் மனிதனின் சகல புளூ பிரிண்டும் ஜீன்களாக வைத்திருக்கிறது. இது பெற்றோரிடமிருந்து பெற்றது. ஒரு செல் என்பதே ஒரு தனித்த உயிரினம் தான். அதற்கு தன்னுணர்வு உண்டு, வெளியிலிருந்து உணவைப் பெறவும், கழிவை வெளியேற்றவும் செய்யும். தூண்டலை எதிர்க்கும். வளரும். புதிய செல்களை உருவாக்கும். இறந்து போகும். பல கோடி செல்கள் சேர்ந்து உருவாகும் மனிதனிலும் இதே பண்புகள் தான் காணப்படுகிறது. ஒரு மரத்தின் தண்டு கிளைகள் போல் ஒரு இலையிலும் நரம்புகள் இருக்கிறது அல்லவா?

செல்லின் நடுவே உள்ள நியூக்கிளியஸுக்குள் குரோமசோம் எனும் இழைகள் காணப்படுகிறது. இந்த இழைகளுக்குள் இருக்கும் ஜீன்களில் தான் செல் பற்றிய தகவல்களும், அவை எப்படி பிரிய வேண்டும் பிரிந்த செல்கள் அணி சேர்ந்து எப்படி ஒரு மனிதனை உருவாக்கவேண்டும். என்னென்ன வகை செல்கள் எப்போது உருவாகி எப்படி ஒவ்வோர் உறுப்புகளாக வேண்டும் ஒவ்வொரு செல்களும் ஆயுள் எவ்வளவு ஒவ்வொரு செல்லும் எத்தனை முறை பிரிந்து புதிய செல்களை உருவாக்கலாம் ,தோலின் நிறம் என்ன ,உயரம்,சராசரி ஆயுள், போன்ற எல்லா தகவல்களும் அதில் இருக்கும். இந்த தகவல்களை படித்து அப்படியே செல்படுத்துவது செல்லின் தன்னுணர்வு எனும் உயிர் சக்தி தான்.

செல்கள் மூலக்கூறுகளால் ஆனது . மூலக்கூறுகள் அணுக்களால் ஆனது, அணுக்கள் இன்னும் பல சக்தி துணுக்குகளால் ஆனது என உயிரின் அடிப்படை இயக்கம் இடம் பொருளைக் கடந்த பிரபஞ்ச அலையாக மாறி விடுகிறது. அந்த நிலையில் உலகின் எல்லா உயிரும் ஒன்றே. பிரபஞ்சத்தின் உயிர் சக்தி வெளி எனப்படும் புலன்களுக்கு புலப்படா நிலையிலிருந்து புலப்படும் பொருள் நிலைக்கு வர அணு, மூலக்கூறு, செல்கள் என மாற்றமடையும் போது தன்னை இந்த பவுதீகப்பொருட்களுடன் பந்தபடுத்தி கொள்வதால் தன்னை பவுதீக உலகின் புதிய வேறொரு பொருளாக உணர்கிறது. இந்த உணர்வு தான் தன்னுணர்வு.

இது புது உலகத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளவும் தன்னை இன்னும் பலம் மிக்கதாக ஆக்கிகொள்ளவும் முயல்கிறது. அதன் காரணமாக ஒரு செல் சுற்றுபுறத்திலிருந்து தேவையான சக்தியை எடுத்துக்கொண்டு வளர்ந்து இரண்டாக பின் நான்கு, எட்டு எனப் பிரிகிறது. செல்கள் தான் திசுக்கள், எலும்புகள், நரம்புகள் பல வடிவம் பெற்று உடலாக மாறுகிறது. நரம்பு செல்கள் சேர்ந்து மூளையாக பரிணமிக்கிறது. உடலின் எல்லா செல்களும் மூளையுடன் நரம்புகள் வழி மின் சிக்னல்களை அனுப்பியும் பெற்றும் தொடர்பு கொள்கின்றன.இதனால் மூளை உடல் முழுவதும் உள்ள தனித்தனி செல்களை ஒரே உடலின் பாகமாக இணைத்து ஒர் தனி உயிராக நினைக்கிறது. உண்மையில் மூளையால் உணரப்படும் தன்னுணர்வு ஒட்டு மொத்த செல்களின் உணர்வு. வாழும்போதே கோடிக்கனக்கான செல்கள் இறந்து போவது கோடிக்கணக்கான செல்கள் உற்பத்தியாவது நிகழ்கின்றன. ஆனால் மூளையின் ஞாபகம் தொடர்ச்சியாக பிரதி எடுத்துக்கொண்டே இருக்கப்படுவதால் நாம் தினமும் இறப்பதும் பிறப்பதும் நமக்கு தெரிவதில்லை. சிறு வயதில் உள்ள நமது உடல் அல்ல இப்போது நாம் கொண்டிருப்பது. செல்கள் இப்படி பிரதி எடுக்கப்படுவது ஜீன்களில் எழுதப்பட்ட விதிப்படி ஒரு கட்டத்தில் குறைந்து விடுவதால் உடலில் முதுமை ,தளர்ச்சி தோன்றி விடுகிறது.

புதிய செல்கள் உற்பத்தி குறையத்தொடங்கும் போது உணவுத்தேவையும் குறையும் ஆனால் மேலே கூறிய கட்டதுரைக்கு அது தெரியாததால் இளமையில் சாப்பிட்ட அதே அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் தேவைக்கு மிஞ்சிய சக்தி கொழுப்பாக உடலி தேங்கி ரத்தக்குழய்களில் படிந்தது. நாளடைவில் கொழுப்பு காரணம் ரத்தக்குழாய் அடைபட்டு இதயத்துக்கு தேவையான இரத்தம் பாயவில்லை. இதனால் இரத்தத்தை மூளைக்கு பம்ப் செய்து செலுத்தும் சக்தி இதயத் திசுக்களுக்கு கிடைக்காமல் இதயம திணறியது. இதனால் மூளைக்கு தேவையான சக்தியும் பிராணவாயுவும் கிடைக்காததால் மூளையின் செல்கள் கூட்டம் கூட்டமாக மடியதொடங்கின. எனவே மூளை இதயம் , நுரை ஈரல், கை கால் என ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் இழந்து தான் சேமித்து வைத்த நினைவுகளையும் இழக்கதொடங்கும். மூளை இறக்கும் முன் தான் மூளை வலியெல்லாம் உணரும். மூளை இறக்கதொடங்கினால் மரணம் வலிக்காது. தான் பிழைக்கக் கூடும் எனும் நிலையில் தான் மனம் உயிர் பிழக்கப் போராடும். இனி பிழைக்க மாட்டோம் என உணரும் மனம் சரணாகதி அடைந்து உலகின் தேவைகளை இழந்து, புலன் இன்ப ஆசை இழந்து அமைதியாகி மரணத்தை ஏற்றுக்கொள்ள பக்குவப்படும்.

மூச்சு நின்று போனவர்களுக்கு தக்க சமயத்தில் செயற்கை சுவாசம் கொடுத்தால் உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கிறது. இதயம் நின்றால் கூட தக்க முதலுதவி செய்து மீண்டும் இதயம் துடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் டேமேஜ் ஆகி கோமா நிலைக்கு சென்று மீண்டவர்களும் இருகிறார்கள். மூளை முழுவது இறப்பதற்கு சில சமயம் எடுக்கும். அந்நேரம் இறந்தவரை சுற்றி ஒப்பாரி இடுவது கூட அவருக்கு கேட்டுக்கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. மூளை இறந்த பின் கூட வெகு நேரம் உடலின் மற்ற செல்கள் இறக்காமல் இருக்கும்.உடலின் செல்கள் எப்போது தங்கள் சக்தி இழக்கிறதோ அப்போதே உடலில் சாதாரணமாகவே சூழ்ந்திருக்கும் கிருமிகள் அதனை அழிக்கத் தொடங்குகின்றன. உடலின் மூலக்கூறுகளும் உயிரின் மூலமும் இயற்கையோடு கலந்து தன் அடையாளத்தை முழுவதும் இழந்து விடுகிறது. மீண்டும் இயற்கையிலிருந்து வேறொரு வடிவம் பெறலாம்.

உடலும் உயிரும் இப்படி இயற்கையிலிருந்து தோன்றி மறைவது இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனாலும் அழகான இந்த உலகத்தையும் வாழ்வையும் பிரிவதென்றால் கஸ்டமான காரியம் தான். இல்லையா?

நிஜம் என்னவென்றால் இந்த கட்டத்துரையின் மனம் உணரும் அழகிய உலகம் அவன் மனது கொஞ்சம் கொஞ்சமாக பிறப்பிலிருந்தே உருவாக்கியது தான். சிரமப்பட்டு உருவாக்கியதை இழக்க மனம் விரும்பாததன் காரணம் தன்னை தனது உலகத்தின் மையமாக கொண்டு தான் கட்டியது மணல் வீடு என உணராதது தான். மனிதனது வாழ்வும் அவனது உலகமும் பெரும்பாலும் அவனது புலனின்பத்திற்காக உருவாக்கப்பட்டதே. மனது என்பதே தன்னுணர்வின் ஒரு விளைவு தான். இந்த தன்னுணர்வு பொருளின் இயக்கத்தை காலமாக கருதத்தொடங்கியது தான் இது வரை சொல்லப்பட்ட எல்லா நிகழ்வுக்கும் காரணம். தன்னுணர்வின் பார்வையில் அல்லாமல் பிரபஞ்சத்தின் வேறு எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு சம்பவமே இல்லை.

கட்டத்துரை என்பது ஒரு விளைவு அன்றி ஒரு பொருள் அல்ல. கட்டத்துரை என்பது அவனது மனம் மட்டும் தான். மூளையின் ஞாபகம் அழிவதோடு அவனது ஐடென்டிடி அழிகிறது.
அது சொர்க்கம் நரகம் போய் சேருவதில்லை,
மறுபிறவி எடுப்பதில்லை,
பூர்வஜென்ம ஞாபகமும் இருப்பதில்லை.
இதெல்லாம் மதங்கள் சில விஷயங்களை எளிதாக சொல்ல முயன்றஉவமைகள்.
ஆனால் உயிர் அல்லது தன்னுணர்வின் ஆதாரம் அழிவதில்லை. அழிக்க முடியாதது. நிரந்தரமானது. ஒரு மரத்தின் இலை தோன்றி வளர்ந்து முதிர்ந்து கீழே சருகாய் விழுந்து எருவாகி மீண்டும் வேராகி,மரமாகி,வேறு இலையாகி...தொடர்ந்து கொண்டிருக்கும். பார்க்கும் நம் அறிவுதான் அதன் பல நிலைகளை உணர்கிறது. அறிவைக் கடந்த உண்மையில் இலையின் அணு் நிலையும் மண்ணின் அணு நிலையும் ஒன்று தான். இலை எப்போது இறந்தது?

Download As PDF

14 April 2009

பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை

இன்று சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு தகுதிக்கு மீறி பணம் செலவு செய்து தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் அதிக சம்பளம் பெறும் டாக்டர் அல்லது என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆசையும், தாங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் பயின்ற போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அசௌகரியங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றும் தான். அதனால் அவர்கள் உருவாக்குவது
1)பணத்தாசை பிடித்த தனியார் கல்வி நிறுவனங்கள்
2) தாய் மொழி மறந்த, ஆங்கில கலாச்சாரம திணிக்கப்பட்ட குழந்தைகள்.

இன்று எல்லா துறைகளிலும் பல முன்னேற்றங்கள் வந்து உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கல்வித்துறை மட்டும் இன்றும் ஆங்கிலேயன் காலத்து குதிரை வண்டி. கல்விக்கும் நடைமுறை வாழ்வுக்கும் உள்ள இடை வெளியால் பயனற்ற கல்வியை கற்றுக்கொண்டு அதற்கு ஒரு சான்றிதழும் பெறுகிறார்கள். தகுதியிருக்கிறதோ இல்லயோ அந்த சான்றிதழ் இருந்தாலே வேலை. திறமையற்றவர்கள் வெட்டி ஆபீசர்களாக அதிக சம்பளம் பெற்றும், திறமை உள்ளவர்கள் கூலித்தொழிலாளிகளாவும் இருக்கும் நிலை.

தொட்டிலில் ஆனாலும் கட்டிலில் ஆனாலும் கட்டையில் போகும் வரையும் கற்றுக்கொள்ளுவதில் ஆர்வமில்லாதவர் எவரும் இல்லை. எல்லோரும் எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் பள்ளிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பது ஏன்?
தாய்ப்பாலை ஆர்வமுடன் உறுஞ்சி குடிக்கும் குழந்தை தாய் சோறூட்டும் போதுமுகத்தைத் திருப்பிகொண்டு அடம் பிடிக்கிறது. திணிக்கப்படுவது யாருக்கும் பிடிக்காது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் கல்வி தடையின்றி கிடைத்தாலே கற்றுக்கொள்வது ஆர்வமாக இருக்கும். உதாரணமாக இணையம் கூகிள்.

இன்று இணையத்தில் எல்லாத் தகவல்களும் அறிவும் பொதுவாக மலிந்து கிடக்கும் தகவல் புரட்சிக் கால கட்டத்தில் கல்விக்கு இவ்வளவு விலை ஏன்? பெற்றோர்களின் கனவுகளை காசாக்கும் கல்விநிறுவனங்கள், தான் சொல்லிக்கொடுப்பது மாணவர்களுக்கு சேருகிறதா என்று கவலைப்படாமல் சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்க்கும் திறைமையற்ற அனேக ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்களை கூட பயன்படுத்திக் கொள்ளாமல் யாருக்கோ வேண்டி பள்ளிக்கு வந்தது போல் காலத்தை வீணாக்கி விட்டு பரீட்சை நேரத்தில் சுயநினைவு வந்து மனப்பாடம் செய்தும் பிட் அடித்து பாசாகும் மாணவர்கள். எல்லாமே கால விரயம்.

படி படிஎன்று பிழிந்தெடுப்பதாலும் குறைந்த மார்க் பெற்றால் பிள்ளகளை பிறரோடு ஒப்புமைப்படுத்தி திட்டுவதாலும் படிப்பு வரப்போவதில்லை. அது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வேரோடு பிடுங்கும் செயலாகும். இதனால் பரீட்சையில் தோற்றால் ஏதோ வாழ்க்கையே இழந்தது போல் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும்.ஒன்றை கற்பதால் என்ன பலன் என்று தெரிந்து விட்டால் கற்கும் ஆர்வம் தன்னால் ஊற்றெடுக்கும்.

ஒரு டாக்டர் அல்லது எஞ்சினீயர்களாகத்தான் பிள்ளைகள் வர வேண்டுமா? இன்னும் எவ்வளவோ அதை விட சிறந்த வேலைகள் உலகில் இருக்கின்றன. படிக்காமல் விளையாடப் போனாலும் திட்டாதீர்கள். விளையாடுவதை கற்றுக்கொள்ளட்டும். விளையாட்டு வீரனாகி கோடி கோடியாக சம்பாதிக்கலாம். வெறும் சினிமா பார்ப்பதை கூட ஒரு கல்வியாக கருதி கற்றுக்கொண்டால் குழந்தைகள் டைரக்டராகும், கதாசிரியராகலாம், ஏன் நடிகனாகலாம். சுற்றியுள்ள எல்லாமே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தான்.எனவே பிள்ளைகள் சுற்றியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நல்லதை மட்டும எப்படி கற்றுக்கொள்வது என்ற பயிற்சியை அவர்களுக்கு கொடுத்தாலே போதும். உதாரணமாக ஒரு சினிமா எப்படி தயாரிக்கிறார்கள் என்ற அடிப்படை ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்கள் பார்க்கும் சினிமா அவர்களை மயக்காது. கற்றுக்கொடுக்கும். ரசிகர் மன்றங்கள் அமைக்க மாட்டார்கள். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்று கற்பனை கதாபாத்திரங்களில் மனதை இழக்க மாட்டார்கள்.

சிறு வயதில் நான் நன்றாக பாடுவேன்.வெளியே போட்டிகளில் பல பரிசு வாங்கியிருந்தாலும் என் திறமையை வளர்த்துகொள்ள எனது பள்ளிக்கூடமும் பாடத்திட்டமும் உதவவில்லை. யாராவது படம் வரைய கற்றுத்தர மாட்டார்களா என ஏங்கிய காலத்தில் கஜினி முகம்மது படையெடுத்தை மனப்பாடம் செய்ய சொன்னது கல்வித்துறை. அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டது இருக்கட்டும். நான் எப்படி வீட்டில் ஒரு தென்னை மரம் நடுவது என்று சொல்லித் தந்ததா?. நீச்சல் கற்றுத் தந்த மாமாவை விடவும். சைக்கிளோட்ட கற்றுத்தந்த நண்பனை விடவும் சிறந்த வாத்தியார்கள் எவரும் என் பள்ளியில் இருக்க வில்லை. என்னுள் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து எந்த பாடபுத்தங்களும் கவலைப்படவில்லை. ஆனால் ஈரோடு ராமசாமி தாத்தா கவலைப்பட்டார். என் வாழ்வை வழி நடத்தும் , வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நான் பள்ளிக்கு வெளியே தான் கற்றுக்கொண்டேன். பக்கம் பக்கமாக இரட்டை வரியில் எழுதியும் திருந்தாத என் கையெழுத்து ஒரு நாள் ஒரு ஓவியன் சுவரில் விளம்பரம் எழுதுவதை பார்த்ததும் அழகானது. ஒரேயொரு புத்தகம் எனக்குள் மின்னணுவியலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்கு திரி கொளுத்திப் போட்டது.

தற்கால கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களது மூளையை ஒரு கணினியின் ஹார்ட் டிஸ்க் போல பாவித்து அதனுள் முடிந்த அளவு தகவல்களை திணிப்பதற்குத்தான் முயற்சி செய்கிறது. இத்தகைய தகவல்களை பல வருடங்கள் மாய்ந்து மாய்ந்து மண்டையில் ஏற்றிக்கொள்வதால் யாதொரு பயனும் இல்லை. ஒரு கூகிளில் தேடினால் கிடைத்து விட்டு போகிறது.

ஒரு பாடத்திட்டத்தை தயாரிக்கும் குழுவில் குறைந்த பட்சம் மூவர் இருக்க வேண்டும்
1)அந்த பாடத்தைப் பற்றிய விஷயஞானமுள்ள நிபுணர்.
2)அதை யாருக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்,
3)அதை எப்படி எளிதாக, புரியும்படி வரைபடங்கள் அல்லது மல்டி மீடியா உபயோகித்து விளங்கச் செய்பவர்.

நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது ஒரு ஜால வித்தைக்காரனைப்போல மாணவர்களின் கவனத்தை சிதறாமல் ஈர்த்து வைத்திருக்கத் தெரியவேண்டும். பாடங்களை உவமை, ஒப்புமை, செயல் முறை போன்றவை செய்து எளிதாக அதன் கருத்தை பதிய வைப்பார்கள். மாணவனது ஆர்வத்தைத் தூண்டி விட்டால் போதும் கற்பிப்பது எளிது.

சில திறனற்ற ஆசிரியர்கள் உண்டு. வகுப்புக்கு வந்ததும் மாணவர்கள் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள் திரும்பி நின்று கரும் பலகையில் எதையோ எழுதிவிட்டு கொஞ்சம் கத்திவிட்டு போவார்கள். இன்னொரு டைப் சரியாக சொல்லியே கொடுத்திருக்க மாட்டார்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஒப்பு வித்து விட்டு டெஸ்ட், இம்பொசிசன், ஹோம் வொர்க் என்று மனப்பாட மாணவர்களை உருவாக்குவது. மாணவர்களை தயார் படுத்துமுன் நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதும் தயார் படுத்துவதும் மிகவும் முக்கியம்.

பட்டாம் பூச்சி போல பறக்கத்துடிக்கும் சின்னக்குழந்தைகளை பிரம்பை காட்டி பயமுறுத்தி கட்டிப் போடக்கூடாது. பறக்கக் கற்று கொள்ளட்டும்.அவர்கள் பறக்கட்டும் . புத்தகங்கள் அவர்களுக்குரியது அல்ல. வெட்டி விடப்படாத சிறகுகள் தான் அவர்களுக்குத்தேவை. உங்கள் விருப்பங்களை அவர்களில் திணிக்காதீர்கள். கண்டிப்பு என்ற பெயரில் கட்டிப்போட்டு அவர்களை க்ரோட்டன்ஸ் செடிகளாக்க வேண்டாம். காட்டுச்செடிகளின் தன்னம்பிக்கையுடன் வளரட்டும். அவர்கள் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுந்தவர்கள்.
ஆடிப்பாட விடுங்கள் கதை சொல்லிக்கொடுங்கள். கதையினூடே கல்வி சொல்லிக்கொடுங்கள்.
எப்படி பல்லை சுத்தப்படுத்துவது? என்று சொல்லிக்கொடுங்கள்.
தினமும் குளிப்பதன் அவசியம் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சொல்லிக் கொடுங்கள்.
பிறரை, பெரியோரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
சத்தான உணவுகள் எவை? அதை எப்படி? ஏன்? உண்ண வேண்டுமென்று சொல்லிக் கொடுங்கள்.
ஒழுக்கமாக உடை உடுப்பதை கற்று வேண்டும். டை அணிவதும், ஷூ அணிவதும் இந்திய கலாச்சாரமில்லை. அதை சிறு குழந்தைகளுக்கு அவசியமும் இல்லை.
இதெல்லாம் பெற்றோர்கள் கடமையும் கூட என்றாலும் எல்லாப் பெற்றோர்களும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எண்கள், எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்களை முறையாக கற்றுக்கொடுங்கள்.
கூட்டல் கழித்தல், வாய்ப்பாடு போன்ற அடிப்படைக் கணிதத்தை சரியாக பயிற்று வித்து, அவர்கள் பயின்று கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆங்கில மொழி அறிவு அவசியம் தான். அதற்காக தமிழில் பேசுவதையே அவமானமாக கருதி தமிழே தெரியாமல் தங்க்லீஸ் பேசி வளர்க்கப்படும் பிள்ளகள் தான் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு விட துணிபவர்கள். தாய் மொழியில் புலவராகாவிட்டாலும் சரியாக எழுதவும், பேசவும், உச்சரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தை புத்தத்தை விடுத்து அன்றாடம் காணும் பொருட்களை வைத்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
வரலாறு கற்க ஒரு அனிமேசன் வீடியோ காட்சி போதும். பக்கம் பக்கமாக பழைய சாம்ராஜ்யங்களையும் யுத்தங்களையும் மனதில் பதிய வைத்து கொள்ள அவசியம் என்ன? ரொம்பப் பழைய வரலாறுகள் நூலகங்களில் இருந்து விட்டுப் போகட்டும். ரசாயன மாற்றங்களைப்பற்றி தேவை ஏற்படும் போது தெரிந்து கொள்ளலாம் அந்த இடத்தில்
விழிப்புணர்வு, மனிதநேயம், ஆளுமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, சமூக ஒன்றுமை, போன்றவற்றை கற்றுக்கொடுங்கள்.
முக்கியமாக வெறும் உழைப்புக்கும் முயற்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொடுங்கள். வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?வாய்ப்புகளை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றுக்கொடுங்கள். மற்றவர்களோடு இணக்கமாக பழகுவது எப்படியென்று சொல்லிக்கொடுங்கள்.

உலகமே மின்சார மயமாகி காலங்கள் ஆகிறது. வீட்டில் ஒரு பல்ப் ஃப்யூஸ் ஆனால் மாற்றத்தெரியாத பட்டதாரிகள். மின்சாரத்தைப் பற்றி மின்பொருட்களை பற்றிய செயல் முறை அறிவை அடிப்படை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

எல்லாத்துறையிலும் புரட்சி உண்டாக்கிய கணினியியலை அடிப்படைக் கல்வியில் சேர்க்க வேண்டும். கணினியின் வரலாறு, அபாக்கஸ் எல்லாம் தேவையில்லை. இன்றைய கணினியை எப்படியெல்லாம் வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்குவது? என்ற அறிவு தான் தேவை.

உடல் நலம் பேணுவது பற்றிய அறிவு, கையில் அடிபட்டால், ஒரு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முதல் உதவி செய்வது பற்றிய அறிவை பயிற்றுவிக்க வேண்டும்.

தனி நபர் பொருளாதார மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுங்கள்.

கவலை, மனழுத்தம், பயஉணர்ச்சி, மூட நம்பிக்கை போன்றவற்றைத் துடைத்தெறியும் மனப்பயிற்சியும் கல்வியும் வழங்குங்கள்.

ஒரு பருவத்தில் எல்லோருக்கும் தோன்றும் காதல் உணர்வு அழிவு சக்தியாக மாறாமல் ஆக்க சக்தியாக்க அதைப்பற்றிய விஞ்ஞான, மனோதத்துவ புரிதலை கற்றுக்கொடுங்கள்.பாலியல் கல்வியை தேவையான பருவத்தில் பக்குவமாக சொல்லிக்கொடுங்கள்.

இன்றைய வாழ்க்கை சூழலுக்கு உடற்பயிற்சி மிக அத்தியாவசியம். உடற்கல்வியை சரியாக சொல்லிகொடுப்பதுடன் அதை வழக்கப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்.

தோட்டம் அமைப்பது செடி வளர்ப்பது விவசாயம் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க்லாம்.

பொது அறிவு வளர்க்கவும், மாணவர்களது வாசிப்பு திறன், எழுதும் திறன், உரையாடல் திறனை வளர்க்கும் விதம் பயிற்சிகள் இருக்க வேண்டும்.

அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி நிற்காமல் அரசியல் அறிவையும் கற்றுக்கொடுங்கள்.

நவீன தொழில் நுட்பங்களையும், மல்டி மீடியா வசதிகளையும் பயன் படுத்தி சிறந்த பாடங்களை உருவாக்கி, குறுந்தகடுகளாக்கலாம். மாணவர்கள் இதை பள்ளியிலும் வீட்டிலும், இணையம் வழியும் பயன் படுத்தி அறிவுத் தெளிவடையலாம். வீட்டில் பெற்றோர்கள் கூட அறிவு பெறுவார்கள்.

தேர்வு முறைகளில் உள்ள பல குறைகள் களையப்பட வேண்டும். எளிமைப்படுத்தப் பட வேண்டும். ஒரு நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும்
ஒரு எழுத்து தேர்வில் ஒருமாணவனின் திறமைக்கு மதிப்பெண் போட முடியாது. அப்படியானால் ஒரு சிடிக்கு 100% மதிப்பெண் கொடுக்கலாம்.

மாணவர்களுக்குள் ஒழிந்து கிடக்கும் விஞ்ஞானிகளை, படைப்பாளிகளை, கலைஞனை மற்ற திறமைகளையும் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்குவித்து வெளிக் கொணரவேண்டும். ஆர்வம் அறிந்து கற்றுக்கொடுத்தால் கற்கும் வேகம் கூடும், காலமும் மிச்சம்.

கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். புது இரத்தம் பாயவேண்டும். பொருளாதார சாதி மத வேறுபாடுகள் கடந்து எல்லோருக்கும், எல்லா வயதினருக்கும், எப்போதும் எளிதாக சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்: வித்தக தந்திரங்கள்

காணொளி:Hackschooling makes me happy | Logan LaPlante | TEDxUniversityofNevada Download As PDF

13 April 2009

சூட்டு வாத்தியாரும் சூ மந்திரக் காளியும்

எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒரு சில சிறந்த ஆசிரியர்களை சந்தித்தாலும் மற்ற பலரும் தங்கள் கடமைகளில் அலட்சியமுடையவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், குரூர மனம் கொண்டவர்களாயும் இருந்து எத்தனையோ பேர்களின் வாழ்வை நாசம் செய்த மன்னிக்க முடியாத குற்றவாளிகள்.
ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் ஆகியவர்களை தேர்வு செய்வதில், பணியில் அமர்த்துவதில் அரசு அவர்களது திறமை, நடத்தை பற்றி மிக மிக கண்டிப்பாக இருப்பது நல்லது. என் சிறு வயது நினைவுகளிலிருந்து சில வடுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இது கதையல்ல.

புது உடுப்பு புது சிலேட்டு பலப்பம் என அப்பாவின் தோளில் தொங்கிக் கொண்டு சந்தோசமாக எனது முதல் பள்ளிப் பயணம். சீக்கிரம் வளர்ந்து விடுவேன் என்று சொல்லி பெரிதாக தைத்ததால் நிக்கர் , பேன்ட் போலிருந்தது. பள்ளியில் சேர்க்கும் போது சிரித்த ஹெட் மாஸ்டரின் பொக்கை வாயும், என் செவிக்கருகே கண கணவென்று அவர் ஆட்டிய மணியின் ஒலியில் காதைப் பொத்தியதும் அப்படியே நினைவில் இருக்கிறது.

என் முதல் வகுப்பில் பாட்டி வடை சுட உட்கார்ந்து விட்டாள். அழகான டீச்சர், அவர் சொல்லும் கதைகளும் அப்படியே. முதல் நாளே ஜொள்ளு!அட வடை தான் காரணம். ஒன்றாம் வகுப்பு கதையும் பாட்டுமாக நன்றாகத்தான் இருந்தது. டீச்சர் கையில் பிரம்பு இருந்தாலும் அது எப்போதாவது தரையில் அடித்து சப்தம் உண்டாக்க மட்டும் தான். ஆனால் பாடங்களை கவனிக்க முடியாமல் இடையூறாக பக்கத்தில் கொல்லன் பட்டறையிலிருந்து வரும் சம்மட்டி சத்தம்.

கொல்லன் பட்டறை என்பது பக்கத்திலிருந்த இரண்டாங் கிளாஸ். இரண்டாங்கிளாசில் சூட்டு வாத்தியார் மாணவர்களை போட்டு அடிக்கும் மாட்டு அடி சத்தத்தை தான் அப்படி சொன்னேன். சூட்டு வாத்தியாரின் உண்மையான பெயர் எது வென எனக்குத் தெரியாது. யாரிடமும் கேட்கவும் தைரியமில்லை. ஆனால் இந்த பக்கம் இருந்த மூன்றாம் வகுப்பு மிஸ்ஸின் வகுப்பில் வன்முறை இல்லை. இதனால் அதுவரை ஒழுங்காக பள்ளி சென்ற நான் முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் பள்ளி செல்ல அஞ்சி நடுங்கி பள்ளி செல்லாமல் அடம் பிடித்தேன்.

அப்பா என்னை ஒரு போதும் செல்லமாய் கூட அடித்ததில்லை.அதனால் தானோ என்னவோ பள்ளியில் என்னைப் போன்ற குழந்தைகளுக்கும் தரும் கொடூர தண்டனைகளை பார்த்து பயமாக இருந்தது. அப்பாவுக்கு என்னை படிக்க வைத்து டாக்டராக்கும் எண்ணம். என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தார்(அப்பா தட்சணை அதிகமாக கொடுத்தாரோ என்னவோ).

நான் அலறி அழுவதையும் பொருட்படுத்தாமல் என்னை தூக்கிகொண்டு பள்ளிக்கு செல்லும் அப்பாவின் முதுகை ரத்தம் வரும்படி நகத்தால் கீறி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறேன். காரணம் சூட்டு வாத்தியார். பின்னாளில் அந்த தளும்புகளை பார்க்கும் போது எனக்கு வலித்திருக்கிறது. "என்னை அடிக்க மாட்டேன் "என்று சூட்டு வாத்தியார் என் அப்பாவிடம் உறுதியளித்தபின் தான் இரண்டாம் வகுப்பில் ஆஜர் ஆனேன். இரண்டாம் வகுப்பில் நான் கற்றது எதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் என்னைத்தவிர அப்பாவி குழந்தைகளை அப் "பாவி" ஆசிரியர் மேஜைக்கடியில் நுளைய விட்டு பின்புறத்தை அடித்து நொறுக்கும் காட்சி தினமும் கண்டு இரண்டாம் வகுப்பு முழுவதும் பள்ளிக்கூடம் செல்லவே எனக்கு விருப்பமில்லை. குறுகிய மேஜையின் கால்களுக்கிடையே நூறு முறை முட்டி தேய தவழ்ந்து வருவது. பிளாக் போர்டின் கால்களுக்கிடையே போக வைத்து அடிப்பது. சுவரில் பல்லி போல ஏறச்சொல்லி படீர் படீரென அடிப்பது என பல வெரைட்டிகளில் தண்டனை வைத்திருப்பார். சின்னக் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே உண்டான குறும்பும் பரபரப்பும் போய் வகுப்பில் எல்லோரும் மிரட்சியுடன் பிடித்து வைத்த களிமண் சிலை போல அசையாமல் வைத்திருப்பது என்ன கொடுமை. மேலே கூரையும் இல்லை. கீழே சிமென்டும் இல்லை. நான்கு பக்கமும் சுவர் மட்டுமே. புலிக்கூண்டில் முயல் குட்டிகள். சில குழந்தைகள் பயத்தில் ஒன்றுக்கு இரண்டுக்கெல்லாம் போய் அப்படியே மறைத்துக் கொள்வதுண்டு.

என் பயத்தின் காரணம் புரியாமல் தினமும் அப்பா வலுக்கட்டாயமாக என்னைப் பள்ளிக்கு தூக்கிக் கொண்டு செல்வார். எனக்கு படிப்பில் நாட்டமுண்டாக்கும் முகமாக யாரோ ஒருவர் ஒரு மந்திரவாதியை அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனது பள்ளிக்கூட வெறுப்புக்கு காரணம் பேய் தான் எனவும் அதை ஓட்டித் தருவதாகவும் கூறிய மந்திரவாதி என் மீதிருந்த பேயை ஓட்ட நாள் குறித்தான். கோடை விடு முறையில் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்த என்னைப் பிடித்து நாற்காலியில் துணியால் கட்டி வைத்து என்னைச்சுற்றி பல கோடுகள் வரைந்து எதிரே அந்த மந்திர வாதி மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான். உடலெங்கும் திரு நீர் பூசிக்கொண்டும் பட்டைகள் தீட்டிக்கொண்டும், நீண்ட கூந்தலுடன் பயங்கரமாக தோன்றிய அவனது கையில் வேப்பிலை கொத்து ஒன்று வைத்துக் கொண்டு என் மீது அடித்து பேய் ஓட்ட ஆரம்பித்தான். ஆனாலும் மந்திர வாதி சூட்டு சார் அளவுக்கு ஒன்றும் மோசமில்லை. அவனது மந்திர உச்சாடனங்களும் என்னைப் பேயாக கருதி என்னிடம் ஓடிப்போகச்சொன்னதும் எனக்கு மிரட்சியாக இருந்தது. அழுவதற்கும் பயமாக இருந்தது. கடைசியாக மந்திரவாதி "ஸ்கூல் திறந்ததும் உங்கள் மகன் தானாகவே பள்ளிக்கு செல்வான். அவன் மீதிருந்த துஸ்ட தேவதை ஓடி விட்டது" என்று பணம் வாங்கி சென்றான்.

அடுத்தது பள்ளி திறந்ததும் மூன்றாம் வகுப்பில் சூட்டு சார் இல்லையாதலால் மந்திரவாதி சொன்னது போல் மனம் மாறி பயமின்றி நானாகவே சந்தோசமாக பள்ளிக்கூடம் சென்றேன்.

பேயைத் தாண்டி அடுத்த வகுப்புக்கு வந்துட்டோம்ல.

Download As PDF

09 April 2009

புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்

செல்லுக்குள் உள்ள ஜீன்களில் உண்டாகும் பாதிப்புகள் (mutation) புற்று நோய் செல்கள் உருவாக காரணம். கதிரியக்கத்துக்கு ஆட்படுதல் புகையிலைப் பொருட்களால் உண்டாகும் புண் போன்றவற்றாலும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஓரளவுக்கு இந்த பாதிப்புகளை செல்களே திருத்த முயன்றாலும் அதிக அளவில் செல்கள் தாக்கப்படும் போது கட்டுப்பாடின்றி புற்று நோய் செல்கள் பெருகுகின்றன.

நாம் உண்ணும் சாதாரண உணவுப்பொருட்களில் சில கான்சரை துரத்தியடிக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவை

ஆனைக் கொய்யா/வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் avocado வில் அபரிமிதமாக காணப்படும் glutathione ஒரு சக்திவாய்ந்த antioxidant. இது கான்சர் உருவாக்கும் free radicals நிறைந்த சில வகை கெட்ட கொழுப்புகள் குடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதே வேளை ரத்த கொலெஸ்ட்ராலையும் குறைக்கிறது. ஈரலை பாது காத்து ஈரல் கான்சரையும் தடுக்கிறது.

புரோக்கலி (broccoli) , முட்டைக்கோசு, பூக்கோசு ஆகியவற்றில் காணப்படும் indole-3-carbinolமார்பக புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதில் உள்ள sulforaphane மற்ற சில வகை கான்சர்களையும் தடுக்கிறது. மேலும் அதில் உள்ள lutein மற்றும் zeaxanthin என்ற antioxidant கள் புராஸ்டேட் கான்சரை குறைக்கிறது.

காரட்டில் ஏராளமான beta carotene காணப்படுகிறது. இது எல்லா வகை கான்சர்களின் தீவிரத்தை குறைத்து விடுகிறது. ஆனால் அதிக அளவில் அதாவது தினமும் 2 கிலோவிற்கு மேல் காரட் உண்பது கான்சரை உருவாக்கக் கூடும். முக்கியமாக காரட்டை சமைக்ககூடாது.

மிளகாயில் காணப்படும் capsaicin குடல் கான்சருக்கு காரணமான nitrosamines என்ற பொருளை செயலிழக்க செய்து குடல் புற்று அபாயத்தை குறைக்கிறது.

அத்திப்பழத்தில் காணப்படும் ஒரு வகை benzaldehyde சில டுயூமர்களை சுருங்க செய்ய உதவும் என ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அத்திப்பழத்தில்(Fig) காணப்படும் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை பசியை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. அத்திப்பழச் சாறு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையுள்ளது.

Flax எனப்படும் அல்லி விதைகளில் காணப்படும் lignans ஒரு antioxidant போல செயல் பட்டு புற்று நோயை மிதப்படுத்துகிறது. மேலும் அதில் கானப்படும் omega-3 fatty acid கள் colon cancer மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூண்டில் காணப்படும் allium compounds (dialyl sulfides)கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோயை எதிர்க்கிறது.மேலும் புற்று நோய் உருவாக்கும் carcinogen கள் செல்லுக்குள் ஊடுருவுவதை தடுக்கிறது. தினசரி உணவில் தவறாமல் பூண்டு சேர்த்து வருவது குடல் புற்று அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. குடல் புண் உருவாக்கும் Helicobacter pylori என்ற பாக்டீரியாவிற்கு எதிராக பூண்டு செயல் படுகிறது.

ஆரஞ்சு, எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் பழவகைகளில் காணப்படும் monoterpeneகள் புற்று நோய் உருவாக்கும் கார்சினொஜென்களை ஒழிப்பதாக நம்பப் படுகிறது. மேலும் இதில் காணப்படும் Iimonene புற்று செல்களை ஒழிக்கும் lymphocytes போன்ற நோயெதிர்ப்பு செல்களை தூண்டுகிறது.

திராட்சையில் காணப்படும் bioflavonoid ஒரு சக்தி வாய்ந்த ஆன்டஆக்ஸிடென்ட். இது புற்று நோயைத்தடுக்க வல்லது. மேலும் அதில் உள்ள resveratrol, ellagic acid ஆகியவை புற்று நோய் செல்கள் வளர்வதை தூண்டும் என்சைம்களை தடுக்கிறது.
ஆல்கஹால் இல்லாத சிவப்பு ஒயினில் காணப்படும் polyphenolகள் பலவகை புற்றுகளிலிருந்து பாது காக்கிறது. அனால் பலவகைஒயினில் காணப்படும் ஆல்கஹாலும் , sulfites களும் உடல் நலத்திற்கு தீது செய்யக்கூடும்.

பச்சைக் கீரைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குடல்புற்றை குறைக்கிறது.

சில வகை உணவுக் காளான்களில் (mushrooms) கானப்படும் polysaccharide கள் குறிப்பாக Lentinan உடலின் நோயெதிர்ப்பு சக்தி வளரத் தேவையானது. காளான்களில் Beta Glucan அதிகம் உள்ளது. மேலும் அதில் காணப்படும் lectin புற்று நோய் செல்களைத் தாக்கி அவை பெருகாமல் தடுக்கிறது. காளான்கள் உடலில் interferon உற்பத்தியை தூண்டுகிறது.

பப்பாளியில் காணப்படும் வைட்டமின் C ஒரு antioxidant ஆக செயல் பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் nitrosamine எனப்படும் புற்று நோய் காரணிகள் குடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் பப்பாளியில் உள்ள folic acid, சிலவகை புற்று நோய்களையும் cervical dysplasia வையும் மிதப்படுத்திகிறது.

Raspberries கள் குறிப்பாக Black raspberries களில் அதிக அளவு கான்சர் எதிர்ப்பு antioxidants கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Rosemary extract ல் காணப்படும் carnosol மார்பகப் புற்று மற்றும் தோல் கட்டிகளை தடுக்கிறது. மேலும் என்சைம்களின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

கடல் தாவர உணவுகளில் கானப்படும் beta-carotene, protein, vitamin B12, fiber மற்றும் chlorophylones மார்பகப் புற்றுக்கு எதிராக செயல் படுகிறது.

டோஃபு போன்ற சோயா உணவுகளில் பலவகை phytoestrogensகாணப்படுகிறது. இது மார்பக புற்று மற்றும் மூல நோயை தடுக்கிறது.ஆனால் மித மிஞ்சிய அளவு சோயா உணவு ஹார்மோன்கள் சமநிலையை பாதித்து புற்று நோயை தூண்டவும் கூடும்.

சர்கரை வள்ளிக்கிழங்கு அல்லது சீனிக்கிழங்கில் பலவகை கான்சர் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

Green Tea மற்றும் Black tea யில் உள்ள polyphenols (catechins) என்ற antioxidant புற்று நோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

தக்காளி, தர்பூசனியில் உள்ள lycopene, எனும் antioxidant கான்சருக்கு காரணமான free radical களை தாக்கி அழிக்கிறது.

மஞ்சளுக்கு கான்சர் உருவாக காரணமான புண்களை ஆற்றும் சக்தி உண்டு என நம்பப்படுகிறது.

 மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன
நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

வாழ்க நலமுடன்.

                                         The Anti-Cancer Green Juice

 
  

Cancer the Forbidden Cures

Download As PDF

பஞ்ச பூதங்கள்-ஒரு பூதக்கண்ணாடி பார்வை


பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுவது நீர், நிலம், நெருப்பு, காற்று , ஆகாயம்.

பஞ்ச பூதங்களால் ஆனதாக கூறப்படும் இந்த உலகம் முழுவதுமே பல பொருட்களால் ஆனது. பொருட்கள் பல சேர்மங்களாலும் சேர்மங்கள் எல்லாம் தனிமங்களாலும் ஆனது. இத்தகைய அடிப்படை தனிமங்கள் 106 என வகைப்படுத்தியும் வைத்திருக்கிறோம். இதில் நீர், நிலம், காற்று மூன்றுமே இந்த அடிப்படைத் தனிமங்கள் பல மூலக்கூறுகளாக சேர்ந்து உருவாகியது தான்.

நிலம் ஒரு திடப்பொருள், நீர் ஒரு திரவப்பொருள். காற்று ஒரு வாயுபொருள். நெருப்பு எனப்படுவது ஒரு வேதி மாற்ற விளைவு.

நெருப்பு என்பது வேறு வெப்பம் எனப்படுவது வேறு, சமையல் செய்யும்போது உருவாகும் நெருப்பு என்பது ஒரு எரிபொருளில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை குறிப்பிட்ட அளவு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகள் சிதைந்து அதிலுள்ள கார்பன் அணுக்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்ஸைடாக மாறுகிறது . இந்த வேதி மாற்றத்தில் உபரி சக்தி வெப்ப சக்தியாக வெளியிடப்படுகிறது. இது அணுக்களை இடம் பெயர்ப்பதால் எஞ்சும் சக்தி . இது சாதரண நெருப்பு. மைக்ரோ வேவ் அவனில் மின்சார சக்தி மைக்ரோ வேவ் அலைகளாக மாற்றப்பட்டு அந்த அலைகள் உணவுப் பொருள்களில் உள்ள நீர் மூலக்கூறுகளை அசைப்பதால் உணடாகும் உராய்வு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இங்கே நெருப்பு உருவாகவில்லை. அணுகுண்டு வெடிக்கும் போதும் அணு உலைகளிலும் கதிரியக்க அணுக்களை பிளப்பதால் பெரும் சக்தி வெளியாகிறது. இங்கும் வெப்பம் இருக்கிறது. நெருப்பு இல்லை. சூரியன் எரியும் போது ஹைடரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுகிறது. இதனால் பெரும் வெப்பம் வெளியாகிறது. அதும் நெருப்பல்ல.

நிலம் என்ற திடப்பொருளை சூடாக்குந்தோறும் அதில் உள்ள ஒவ்வொரு தனிமங்களும் வெவ்வெறு வெப்ப நிலைகளில் உருகி திரவ நிலை அடையும். அதாவ்து நீராகும். அப்படி 0*C க்கு மேல் 100* C குள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இணந்த மூலக்கூறுகள் நீராக இருக்கிறது. பூமியில் நிலவும் வெப்பம் 0*C க்கு கீழே இருக்குமானால் பூமி முழுவதும் ஒரே போல் திடமாகவே இருக்கும்.

இனி இந்த திரவப்பொருளை உதாரனமாக நீரை சூடாக்கினால் அது வாயுவாக மாறிவிடும். சாதரண பூமி வெப்பத்தில் எந்த மூலக்கூறுகள் எல்லாம் வாயு நிலைக்கு தள்ளப்படுமோ அது தான் காற்று. காற்றை அதிக அளவு குளிர்வித்தால் அது திரவமாகி விடும். மேலும் குளிர்வித்தால் அது திடமாகிவிடும். ஒரே பொருள் அது வெப்பத்தை ஏற்று திட நிலையிலிருந்து திரவமாகும் மேலும் வெப்பமூட்ட வாயு வாகும் . வாயுவை மேலும் வெப்பமூட்டினால் அது ஒளி அலைகளாகவும் வெப்ப அலைகளாகவும் மாறி பிரபஞ்சம் முழுதும் பரவுகிறது. வெப்ப இழப்பிற்கேற்ப வாயு , திரவ நிலக்கு வந்து பின் திட நிலைக்கு வருகிறது.

இரு ஹைட்ரஜன் அணு ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் சேர்ந்து ஒரு நீர் மூலக்கூறு உருவாகிறது, இது பூமியின் சாதரண வெப்ப நிலையில் திரவநிலையில் இருக்கிறது- இது தான் -நீர்.

ஒரு பொருளில் உள்ள கார்பன் அணுக்கள் குறிப்பிட்ட வெப்பத்தில் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களோடு சேர்ந்து கட்சி மாறும் நிகழ்ச்சி தான் நெருப்பு.

பூமியில் நிலவும் சாதாரண வெப்பத்தில் திட நிலையிலே இருக்கும் மற்ற தனிமங்கள் எல்லாம் கலந்த அமைப்பு தான் நிலம்.

சாதாரண வெப்பத்தில் வாயு ரூபத்தில் உள்ள சில தனிமங்களும் சேர்மங்களும் சேர்ந்து -காற்று

சூரிய ஒளி காற்று மண்டலத்தை கடக்கும் போது நீல வண்ண அலைகள் மட்டும் அதிகம் ஊடுருவுவதால் காற்று மண்டலத்தில் தோன்றும் நீல வண்ணத்தை தான் ஆகாயம் என்று சொல்கிறொம்.

அடிப்படையில் இவை எல்லாம் ஒரே பொருளின் பல் வேறு நிலைகள்.

கன்யாகுமரியிலிருந்து காஸ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை வழி ஒரு பாத யாத்திரை செய்வோம். நாம் நடக்கும் பாதை ஒன்று தான் அதன் பெயர் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் வழியில் எத்தனை ஊர்கள், மாவட்டங்கள், மானிலங்களை கடந்து செல்வோம். இதெல்லாம் உண்மையில் என்ன. நாம் வெவ்வேறு தூரங்களை புரிந்த்து கொள்ளும் பொருட்டு நாமாக வைத்துக்கொண்ட வெறும் பெயர்கள்.


தென்னிந்தியவின் நான்கு மானிலத்தையும் வைத்து, தென்னிந்தியா நான்கு பூதங்களால் ஆனது என்று சொல்லலாமா?

Download As PDF

07 April 2009

காலச்சுழலும் சோழன் மகளும்

என் மனைவியும் பிள்ளைகளும் அவளது சொந்தத்தில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்குக் போயிருந்தார்கள். எனக்கு இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் விருப்பமில்லையாதலால் நான் போகவில்லை.
"வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டில் இரு நாளை நான் வந்து கூட்டி வருவேன் "என்று சொல்லியிருந்தேன்.

இரவு தனிமையில் வீட்டில் இருக்க என்னவோ போலத்தான் இருந்தது. பயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டாலு்ம் பிள்ளைகளின் கலகலப்பும் சத்தமும் இல்லாததால் நிசப்தமாக இருந்த வீடு முதன் முதலாக எனக்கு லேசாக கிலி ஏற்படுத்தியது உண்மை தான். சீலிங் ஃபேனிலிருந்து கிடுகிடு சத்தம் இதற்கு முன் கேட்டதில்லை. பேசாமல் படத்துக்கு போகலாம் என்றால் பக்கத்து தியேட்டரில் "யாவரும் நலம் "ஓடிக்கொண்டிருக்கிறது. பதிவெழுதலாம் என்று உட்கார்ந்தால், நிஜமாகவே பேய் இருக்கிறதா? என்ற எனது பதிவுக்கு கோப்பெருஞ்சோழன், கென்னடி, லிங்கன் எல்லாம் பின்னூட்டம் எழுதியிருந்ததால் அப்பீட் ஆகி விட்டேன். டீவியை போட்டால் ஜக்கம்ம்மா..தாயம்மா என்று அருந்ததி விளம்பரம். எல்லாம் சேர்ந்து என் உள்ளுணர்வில் ஏதோ ஒன்று உறுத்தவே டீவியை ஆஃப் செய்து விட்டு மேஜை மேல் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத்தொடங்கினேன்.


வெளியே லேசாக மழைச்சாரல் இட தொடங்கியது. ஆனால் காற்று பலமாக வீசியது. ஜன்னல் திரைச்சிலையும், கதவும் படபட வென அடித்ததால் ஜன்னலை இழுத்து அடைக்கப் போனேன். பளிச்சென ஒரு மின்னல், தொடர்ந்து மின்சாரம் போய்விட்டது. பயங்கர இடியோசையத்தொடர்ந்து சோ...வென பேய் மழை தொடங்கியது. கும்மிருட்டு.

"டார்ச் லைட் எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே,அலமாரியின் மேல் தட்டில் வைத்தேனோ?" என்று இருட்டில் துழாவிய போது ...

"ஹே..இங்கிருந்த அலமாரி எங்கே? "
ஆச்சரியத்தை பயம் முந்திக்கொண்டது. பயத்தில் இரண்டடி எடுத்து வைத்ததும் எதிலோ போய் முட்டிக்கொண்டேன் .அது ஒரு ஸ்டூல் போல இருந்தது.
"என் வீட்டில் ஏது ஸ்டூல்? "
யோசிக்கும் முன் நான் போய் இடித்ததில் ஸ்டூல் தடக்கென சரிந்து விழவும் அதன் மேல் நின்று கொண்டிருந்த யாரோ என் மேல் சாய்ந்தது போல தோன்றியது. பயத்தில் எனக்கு இதயம் வாய்வெளியே வெளியே வந்து விடும் போல் இருந்தது.இதயம் துடிக்கும் ஓசை செல்போன் ஒலிப்பது போல் கேட்டது.

"ஆ.. செல் போன்! "
பாக்கட்டில் இருந்த செல்போன் ஞாபகம் வந்ததும், அதை எடுத்து வெளிச்சம் உண்டாக்கி பார்த்தேன். அதிர்ச்சியின் உச்சகட்டம் என்பார்களே அது இது தான். என் மேல் சரிந்து தொங்கிகொண்டிருந்தது ஒரு பெண். ஆம் "தொங்கிக் கொண்டிருந்தது."

கழுத்தில் முறுக்கப்பட்ட சேலையின் ஒரு நுனி. மறு புறம் உத்தரத்தில்.

"ஐயோ தூக்கு மாட்டிக்கொண்டிருக்கிறாள்! யாரிந்த பெண் ?"

யோசிக்கும் முன் தாங்கிப் பிடித்து விட்டு ஸ்டூலை நிமிர்த்தி மெல்ல கழுத்து சுருக்கை விடுவித்தேன்.நல்ல வேளை உயிர் போகவில்லை. "கக் ,கக் "கென்று இருமிவிட்டு மலங்க மலங்க விழித்தபடி திகிலாய் பார்த்துக்கொண்டிருந்த மிக அழகான அந்த பெண்ணை இதற்கு முன் நான் எந்த விளம்பரப் படத்திலும் பார்த்ததே இல்லை. அதுவும் "எப்படி பூட்டியிருந்த என் வீட்டுக்குள்?"

"என் வீடு.!...." மங்கிய மொபைல் வெளிச்சத்தில் பார்த்த போது என் வீட்டின் தோற்றம் வெகுவாக மாறித்தோன்றியது. கல் சுவரும் மர வேலைப்பாடுகளும் மிகுந்த அரண்மனை மாளிகை போல் இருந்த்தது. ஏதோ புராதன கலைப்பொருள் கண்காட்சி போன்ற அறை. அங்கே இருந்த எந்த பொருளும் எனக்கு பரிச்சயமில்லை. அந்த அழகு மங்கை உட்பட. எதோ சரித்திர நாடக மேடை போல் இருந்தது.அவளும் இளவரசி வேடத்தில்.

எனக்கு தலை சுற்றியது போல் அவளுக்கும் சுற்றியிருக்க வேண்டும்.

"என்ன எழில் நம்பி எப்படி உயிர் பிழைத்தீர்கள்? இது என்ன உடை? உடை வாளுக்குப் பதில் இதென்ன ஒளிப் பேழை?" முதன் முதலாய் பவள வாய் திறந்தாள்.

எவ்வளவு தடவை தான் அதிர்சி அடைவது ஒரு விவஸ்தை இல்லையா? மெல்லமாக அவளிடம் பேச்சுக்கொடுத்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களின் சாராம்சம் இது தான்.

இப்போது நான் இருப்பது பதினொராம் நூற்றாண்டாம். அந்த பெண், நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் மகளாம் பெயர் கலையரசியாம். டான்ஸ் மாஸ்டர் எழில் நம்பியோடு காதல் . விஷயம் நலங்கிள்ளிக்கு தெரிந்தால் தலை கிள்ளி விடுவான். ஒரு நாள் இரவு ஊரை விட்டு ஓடிப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய திட்டம். கலையரசி மேக் அப் போட்டு வருவதற்கு தாமதமாகி விட்டது. அந்தப்புரத்துக்கு அருகே குதிரையுடன் பதுங்கியிருந்த எழில் நம்பியை ராசாவின் போலீஸ் சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்து விசாரித்ததில் குட்டு உடைந்து எழில் நம்பியை, நம்பிக்கை துரோகத்திற்காக அரசர் மேலே டிக்கெட் கொடுத்து அனுப்பி விட்டார். மகளுக்கு வீட்டுச்சிறை. அழுது புலம்பிய அவள் கடைசியில் காதலனைச்சேர சேலையில் கழுத்தை மாட்டிய போது தான் எனது என்ட்ரி. இதில் நான் வேறு அழகாக இருந்ததால் நான் தான் எழில் நம்பி என்றும் அவளை அழைத்துப் போகவே வந்திருப்பதாகவும் நம்பிக் கொண்டு இருக்கிறது இந்த பேதை

சரி நான் எப்படி பத்து நூற்றாண்டுகள் ஸ்லிப் ஆகி பேக் அடித்து இங்கு நிற்கிறேன்? கழிந்த வாரம் யூ ட்யூபில் பார்த்த காலத்தைப் பற்றிய ஒரு டாகுமென்ட்ரியிலிருந்து நான் அனுமானித்தது இது .

காலம் என்பது மூளையால் உணரப்படும் ஒரு தோற்றம் தானாம். ஊட்டி மலையின் வளைந்த ரோடு போல காலம் போய்கிட்டே இருந்தாலும், சில வொர்ம் ஹோல் வழி ஒரு வளைவில் இருந்து சுற்றாமல் சறுக்கி ஷார்ட் கட்டில் முந்திய வளைவுக்கு போவது போல போகக் முடியுமாம். அப்படி ஒரு காலத்துளைக்குள் விழுந்து பத்து நூற்றாண்டுகள் முன்பு அதே இடத்தில் இருந்த ஒரு அரண்மனை அந்த புரத்திற்குள் வந்து விட்டேன் போலிருக்கிறது.

அது சரி! வெளியே காவலாளிகளின் காலடி சத்தம் கேக்குது.
"அரண்மனை அந்த புரத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நீ உன் வூட்டுக்கு எப்படி போவாய்? சங்கு தான் மவனே! "என உள்ளுக்குள் உடுக்கை ஒலி கேட்டது

நினைத்தாலே முதுகுத்தண்டு ஜில்லாகி விட்டது.
"ஃபோன் செய்து போலீஸ் உதவி கேட்டால் ?...வேண்டாம் ரெய்டு செய்து வேறு கேசில் உள்ளே தள்ளி விடுவார்கள்".
"மனைவிக்கு ஃபோன் செய்தால், அதுக்கு ராஜாவே பெட்டர்."
பக்கத்து வீட்டு முருகேசுக்கு போன் செய்து நிலைமையை சொல்லலாம் என்றால் ஃபோனில் டயல் டோனே கேட்க வில்லை.ஆனால் கதவை யாரோ தட்டும் ஓசை தெளிவாக கேட்டது. காவலாளிகள் குரலும் "ஹலோ"என்று அழைப்பது போல் கேட்டது.

என்ன செய்ய? இப்படி வந்து வசமாக மாட்டிக் கொண்டேனே! உயிர் அப்போதே பெட்டி படுக்கை யெல்லாம் தயாராக கையில் எடுத்துக்கொண்டது.
"வேறு வழியில்லை அன்பே அந்த சேலையை மீண்டும் உத்தரத்தில் கட்டுங்கள்.நாம் இருவரும் ஒன்றாக போய் விடலாம்"என்று அவள்.

"ஏய் பைத்தியம் . என் பெண்டாட்டி புள்ளைக்கு என்ன பதில் சொல்வேன். செத்தாலும் அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டேன்"

கதவு இப்போது முன்னை விட பலமாக தட்டப்பட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன? கண்ணை மூடிக்கொண்டு பீதியில் உறைந்து நின்றேன். அதில் அவளும் பயத்தில் என்னை கட்டிக்கொண்டு நின்றதை ரசிக்கும் மனநிலையில்லை.

திடீரென ஒரு மின்னல் .தொடர்ந்து இடிசத்தம். கண் திறந்து பார்த்தால் காலம் நிகழ் காலமாகியிருந்தது .இடம் என் வீடு. அட கலையரசி கூட என்னுடன் இங்கே வந்து விட்டாள். CFL பல்பு ஒளியில் அவள் அழகு ஜொலித்தது. முக்கியமாக அவள் ஒரு நகை கடை போலிருந்தாள். ஒரு பெரிய ஜூவல்லரி திறப்பது பற்றிய யோசனையில் நான் இருந்த போது

கதவு தட்டப் பட்டது. வெளியே எந்த நூற்றாண்டு என்று கன்ஃபுயூசன் தான். எதுவானாலும் மின்னலும் இடியும் உறுதி. எனக்கு மயக்கமே வரும் போலாகி விட்டது.இப்படி நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் கதை மிக சுவாரசியமாக போய்க் கொண்டிருந்த நேரம் காலிங் பெல் அடித்தது. புத்தகத்தை மனமில்லமல் கீழே வைத்து விட்டு கதவைத்திறந்தால் மனைவியும் பிள்ளைகளும்.

"ஏன்! நாளை வந்தால் போதுமென்று தானே சொல்லியிருந்தேன்"

"உங்களை இங்கு தனியே விட்டு விட்டு நான் நிம்மதியாக இருக்க முடியுமா? அதான் வந்துவிட்டேன். இதென்ன கண்றாவி புக் சரித்திர கதையா சயின்ஸ் பிக்ஸனா? இதெல்லாம் படிச்சுட்டு நடு ஜாமத்திலே அலறியடிச்சுகிட்டு எழுந்து உட்காரணும், அந்த குப்பையை தூக்கிப் போட்டுவிட்டு தூங்குங்கள் ".

Download As PDF

05 April 2009

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 4)

நேற்று மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகம் படித்து விட்டு அப்படியே தூங்கி போய்விட்டேன். ஒரே யுத்தக் கனவாக வந்து பயமுறுத்திகொண்டிருந்தது. சரித்திர மன்னர்களின் அட்டூளியம் தாங்க முடியவில்லை. ஏதோ ஒரு கொள்ளைக்காரனின் குறுவாள் என் தொண்டையை அழுத்த பதறிப் போய் எழுந்தேன். என் கழுத்திலிருந்து பக்கத்தில் கிடந்த என் பிள்ளையின் காலை எடுத்து நீக்கி வைத்து விட்டு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தேன்.

கண்ணை மூடியதும் தான் தாமதம் கால எந்திரம் ஏதோ ஒரு போர்களத்தில் என்னைக் கொண்டு விட்டு விட்டது. ஒரு மொகலாய மன்னனின் உடையில் நான். கையில் இருந்த வாளை சுழற்றி சுழற்றி எதிரிகளையும் என் நாட்டு வீரர்களையும் முகம் நோக்காமல் கண்ணில் பட்டவர்களின் தலைகளை கொய்து கொண்டிருந்தேன். என் வாளால் துண்டாகிப் போன ஒரு தலை "அரசே நான் உங்கள் தளபதி என்னையா....என்று தொங்கி விட்டது. கடைசியில் பார்த்தால் என் வீரர்கள் எவரும் உயிருடன் இல்லை. நான் மட்டுமே நின்றிருந்தேன். எதிரி மன்னன் என் அருகே வந்து குதிரையிலிருந்து இறங்கி கை குலுக்கினான். என் எதிரிகளையெல்லம் நீ வெட்டிச் சாய்த்த வீரத்தை பார்த்தேன். மெச்சுகிறேன். வீரனே இனி மேல் நான் மன்னனில்லை நீ தான் எனக்கும் மன்னன் என்று என்னை குதிரையில் ஏற்றி விட்டான். (அரசியலில் இதெல்லம் சகஜமப்பா) மற்ற எல்லா வீரர்களும் ஒத்த குரலில் "எங்கள் தானைத் தலைவா நீ வாழ்க "என்று போட்ட கோசத்தில் கனவு கலைந்தது.(வரும் தேர்தலை என் கனவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்)

அப்பாடா எல்லாம் கனவு தானா? நல்ல வேளை நான் யாரையும் கொல்லவில்லை. ஹோ .. அந்த தளபதியின் துண்டான தலை வேறு என் மேனேஜர் தலை போல் இருந்தது. நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன்.

இன்று கடவுளுடன் சாட் செய்யும் போது நேற்றைய கேள்வியை ஞாபகப்படுத்தினேன்.

"பாவிகளுக்கு நீ என்ன தண்டனை வைத்துள்ளாய்?"

"நீ இன்று போரில் எத்தனையோ தலைகளை உருட்டித்தள்ளினாயே அதற்கு நான் உன்னை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுக்கட்டுமா?"

"ஐயோ கடவுளே நான் யாரையும் கொல்லவில்லை , அது வெறும் கனவு"

"அது கனவென்று யார் சொன்னது, அத்தனையும் ஏன் நிஜமாக இருக்கக்கூடாது"

"அதான் நான் விழித்து விட்டேனே. தலை துண்டான தளபதி மேனேஜரை கூட காலையில் நல்ல ஆரோக்கியமாகப் பார்த்தேன்"

"சரி நீ விழித்ததால் தானே அதை கனவென்கிறாய் விழிக்காமல் அப்படியே கனவிலே இருந்தாயானால் நீ கொலை காரன் தானே.."சரி உன் கழுத்தில் கத்தி வைத்த கொள்ளைக்காரனையாவது தண்டிக்கலாமா"

"வேண்டாம் கடவுளே அது என் மகனின் கால் தான், கனவால் ஏற்பட்ட பிழை. சரி நான் தான் சாகவில்லையே அப்புறம் என்ன?"

"இப்போது புரிகிறதா நீ விழித்திருப்பதாக கருதும் இந்த வாழ்வும் அது போல் ஒரு கனவு தான். உன்னை சுற்றி நடப்பதெல்லாம் அறிவின் மயக்கத்தால் உருவான கோலங்கள். இதுவரை கண்டது கனவென்று இதிலிருந்தும் நீ விழிப்படையும் போது தான் தெரியும். அதுவரை தான் நீ காண்பது நிஜம்"

"மரங்களும் எனைய மிருகங்களும் பாவம் செய்வதில்லை, பகுத்தறிவு தான் பாவத்தை செய்கிறது, பாவத்தை உணர்கிறது. அறிவுக்கு வெளியே பாவம் என்று எதுவும் இல்லை யாரும் பாவியும் இல்லை. என்னைப் பொருத்தவரை யாரும் கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை. எல்லாம் அறிவின் மயக்கம் தான். எனவே நான் யாரைத் தண்டிப்பது. தண்டனை என்பதே அதைப் பார்த்து மற்றவர்கள் தவறு செய்யக்கூடாது என்று தான். திருத்திக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் மரணத்திற்கு பின் நான் தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? அதன் பயன் தான் என்ன? மனம் செய்யும் தவறுக்கு உடலுக்கு தண்டனை தருவதா? எந்த ஒரு மனமும் ஒரு தவறை உணர்ந்து செய்யும் போது அதற்குரிய தண்டனையை தானே பெற தகுதி பெற்றுக்கொள்கிறது. செய்த தவறை உணர்ந்து வருந்தும் போது மன்னிப்பு பெறும் தகுதிபெறுகிறது."

"எனக்கு புரிய வைத்து விட்டாய் கடவுளே ஆனால் இது எல்லோருக்கும் புரியுமா? கடவுளின் தண்டனை பற்றி சாமானியர்களுக்கு பயமிருந்தால் தானே தவறு செய்ய மாட்டார்கள்?"

"கடவுளின் தண்டனைப் பற்றி அதிகமாக நம்பும் மதவாதிகள் தான் சரித்திரத்தில் அதிகமாக கொலைகள், கொள்ளைகள் என கடவுளின் பெயரால் அரங்கேற்றியிருக்கிறார்கள். எல்லா குற்றவாளிகளும் குற்றம் செய்யும் போது தன் பக்கம் நியாயமும் கடவுளும் இருப்பதாகத்தான் நம்புகிறார்கள்."

"இத்தனை மதங்களை ஏன் படைத்தாய் கடவுளே "

"நான் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை, அது மனிதன் உருவாக்கிகொண்டது. தன் கடவுள் தான் உயர்ந்தது தன் மதம் தான் பெரிது என்று அடித்துக்கொள்ளும் மூடர்களுக்கு எங்கே தெரிகிறது? எல்லாவற்றையும் படைக்கும் வல்லமையுடய கடவுளுக்கு தன்னையும் தன் மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாதா? உன் மதம் பொய் என்று சொன்னால் சொன்னவன் நாக்கை அறுக்க துடிப்பது தானே மதம்.

கடவுளிடம் சாட் பண்ணிக்கொண்டிருக்கும் போது வெளியே ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சப்தம். தொடர்ந்து திபு திபுவென்று சில ஆட்கள். எல்லோரும் ஒரு கையில் கொடி மறு கையில் உருட்டுக்கட்டை அரிவாள் போன்ற ஆயுதங்கள். ஒவ்வொரு கொடியும் ஒவ்வொரு நிறத்தில் வெவ்வேறு மத சின்னங்கள் . கடவுளை பற்றி பதிவு எழுதியது நீ தானா? பல ஆயிரம் ஆண்டுகள் நாங்கள் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தில் அடிக் கல்லை அசைத்து பார்க்கிறாயா? எங்கள் வேதங்களும் விளக்கக்களும் சொல்லாத அறிவை நீ பதிவெழுதி சொல்லப்போகிறாயா? இந்த கைதானே எழுதியது என்று ஓர் உருட்டுக்கட்டை என் கையை பதம் பார்த்தது.
"ஏய் நில் கடவுள் ஆன்லைனில் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடிக்காதே அவர் சொன்னதை தான் எழுதினேன், அவரையே கேட்டுப்பார்"
அடுத்த அடியில் என் கம்ப்யூட்டர் வாய் பிளந்தது. என் மண்டையை குறி வைத்து ஒரு தடி இறங்கி வந்தது நினைவிருக்கிறது .
"கடவுளே உன் விதியை திருத்தி எழுது இவர்களை தண்டிக்காமல் விடாதே?"
"அவர் தாண்டா அனுப்பி வைத்தார்"
"கடவுளே இதுவும் உன் சித்தமா ?" என்று நினைவு தப்பியது.

(இருந்தா பார்ப்போம்)

Download As PDF

03 April 2009

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி3)

நேற்று கடவுளுடன் எனது சாட்டிங் கட் ஆனதிலிருந்து மனசே சரியில்லாமல் இருந்தது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..." ஆடியோ கேசட்டை ஐந்தாவது முறையாக ரிவைன்ட் செய்து போட்டும் எதையோ இழந்ததைப் போல் இருந்தது. ஆறாவது முறையாக போட்ட போது அதில் அதுவரை நல்ல விதமாக ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தவர் கடுப்பாகி உனக்கு இத்தனை முறை சொல்லியும் ஏறவில்லை. இனி நான் வாசிக்கப் போவது உனக்காக அல்ல எனக்காக! என்று கூறிவிட்டு வாசிக்கத் தொடங்கினார். என்ன இது ஏப்ரல் ஒன்று தான் முடிந்து விட்டதே, இந்த மாதம் பூரா இப்படித்தானோ?

யாஹூ மெசெஞ்சரில் கடவுள் ஐகான் வழக்கத்திற்கு மாறாக உர்ரென்று சிவப்பாக இருந்தது. என்ன கோபமோ?

கடவுள் வரும் வரை ஒரு காயத்ரி ஆன்லைனில் இருந்தாலாவது கடலை போடலாம்.

எனவே இறைவனைக் காண முடியுமா? , நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? ஆகிய எனது முந்தய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.

நல்ல வேளையாக Rajeswari அக்கா அவரது பெயரை கடவுளுக்கு அறிமுகப்படுத்தியதால் நெகிழ்ந்தோ என்னவோ ஒரு பட்டாம் பூச்சி விருது தந்து கவுரவித்தார். கைநிறைய சாக்கோ பாரும் ஐஸ் கிரீமும் கிடைத்த குழந்தையை போல மனம் புன்னகைத்தது. எனினும் அந்த புகழை கடவுளிடம் ஒப்படைத்ததால் கடவுளின் கோபம் பறந்து. கடவுள் ஐகான் மெள்ள மஞ்சளாகி பின் பச்சையானது.

"நீ என்னைய வச்சு காமடி கீமடி ஒண்னும் பண்ணலையே" என்றார் கடவுள் சீரியசாக.
"ஒரு போதும் இல்லை கடவுளே. கவர்ச்சியான போட்டோக்கள் எதுவும் உன்னைப்பற்றிய பதிவில் போட முடியாது. அப்படியே போட்டாலும் அதை புனிதப்படுத்தி கொண்டாடிவிடுவார்கள். எனவே படங்கள் போடவில்லை. பதிவில் சின்னதாக நகைச்சுவையும் இல்லாவிட்டால் படிப்பவர்களுக்கு சலூன் சேரில் இருப்பது போல் கண் செருகிக்கொண்டு போகும். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்"

"சரி சரி எப்படியெல்லாம் பேசக்கூடாது? இந்த பதிவை நீ தானே எழுதினாய்?"

"ஆமாம் கடவுளே! எதாவது தப்பாக பேசி விட்டேனா?"

"பின் என்ன? நேற்று என்னிடம் நீ கேட்ட குண்டக்க மண்டக்க கேள்விக்கு நான் என்னத்த பதில் சொல்ல? எப்படி பதில் சொன்னாலும் லாஜிகல் எர்ரர் வரும் கேள்வி இனி கேட்காதே? இதனால் தான் எந்த வம்புக்கும் போகாமல் மவுனமாக இருப்பது" எல்லா கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்தாலும் சில கேள்விக்கு பதிலை நேரடியாக சொல்ல முடியாது? கேட்பவரின் புரிந்து கொள்ளும் திறனைப் பொறுத்தே பதிலின் விளக்கம் இருக்கும். புரிஞ்சுதா?"

உண்மை தான் கடவுளே. டிவியில் "புரிஞ்சவன் தான் பிஸ்தா" விளம்பரத்தை என்ன விளம்பரம் என்று என் சின்ன மகன் கேட்ட போது பிஸ்தா விளம்பரம் என சொல்லி தான் சமாளித்தேன். அவன் வளர்ந்தபின் தானாகவே பிஸ்தாவாகட்டும்(அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருந்தா தர்ம சங்கடத்தை தவிர்த்திருக்கலாமே என யாரும் Pin ஊட்ட வேண்டாம்.)

"சரி கடவுளே நீ ஒரே கடவுள் தானே பிறகு ஏன் பல கடவுள்களாக அறியப்படுகிறாய்?"

"அது ஜனங்களின் அறியாமை. வீடு முழுவதும் ஒரே மின்சாரம் தான் ஓடுகிறது. ஆனால் மின்சாரம் இருப்பதை தொட்டுப்பார்க்கும் தைரியமில்லாதவர்களால் எந்த மின்கருவியும் இன்றி அறிய முடியாது. விளக்கு எரிந்தால், ஃபேன் சுற்றினால் கரண்ட் இருப்பதை உணரலாம். ஆனால் ஒரு விளக்கையும், ஃபேனையும் மின்சாரம் என எண்ணும் பேதைகள் தான் கடவுளை பல வடிவங்களில் பார்ப்பது. கடவுள் ஒன்றே."

"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? எங்காவது ஒர் இடத்தில் இருக்கிறாரா?"

"இரண்டும் தவறு. இடம் என்பது கடவுளுக்கில்லை. இடமும் எல்லாமுமாக இருப்பது தான் கடவுள்"

"கடவுளுக்கு தொடக்கமும் முடிவும் உண்டா?"

"இல்லை. உலகில் உள்ள எந்தப் பொருளும் தொடர்ச்சியான மாற்றத்தின் பகுதியே. உதாரணமாக ஒரு பூ அரும்பாக தோன்றுவதும் மலர்வதும் உதிர்வதும் மனதால் உணரப்படும் உணர்வு தான். உண்மையில் தொடர்ச்சியான மாற்றத்தின் கட்டங்கள் தான் இவைகள். பிறப்பதும் வயதாவதும் இறப்பதும் எல்லாம் தொடரும் மாற்றம் தான் அது பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் கூட ஒரே போல் முடிவிலாது தொடர்கிறது. பார்க்கும் நம் அறிவு தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்பது போல் மயங்கி நிற்கிறது.

"கடவுளுக்கு பிறப்பு, மூப்பு, இறப்பு, குடும்பம், பெற்றோர்கள், மனைவி, மக்கள், உறவுகள் எதுவும் இருக்க முடியாது. இருந்தால் அது கடவுளல்ல. இவை எல்லாம் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உரியவை."

"கடவுளின் காதல் லீலைகள் என்று எழுதி வைத்திருக்கிறார்களே?"

"கடவுளை கேவலப்படுத்தும் குப்பைகள் அவை. மனிதர்கள் தங்கள் லீலைகளுக்கு கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். கடவுளுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை."

"அச்சம், விருப்பு, வெறுப்பு, கோபம், காதல் போன்ற மனித குணங்கள் எதுவும் கடவுளுக்கு இல்லை.

"என்ன கடவுளுக்கு கோபம் வராதா? கடவுளுக்கு சினம் தானே பிரசித்தமான குணம்."

"கோபம் எதனால் வருகிறது? நம் எதிர்பார்ப்புக்கு மாறாக பிறர் நடக்கும் போது கோபம் வருகிறது. கடவுளுக்கு கோபம் என்றால் கடவுள் சித்தப்படி எதுவோ நடக்கவில்லை என்று தானே பொருள்? எல்லாம் வல்ல கடவுளுக்கு கோபம் வந்தால் அதன் பெயர் இயலாமை அல்லவா?."

"அப்போ என்மீது உனக்கு கோபம் இல்லையா?"
"இல்லை உன்னை அப்படி கேள்வி கேட்க வைப்பதே நான் தான்."

"அப்படியானால் யாராவது அநியாயம் செய்து விட்டு கடவுள் சித்தம் அது என்று கூற மாட்டார்களா?"

"அநியாயம் செய்பவர்களை நான் தண்டிக்கத் தேவையில்லை. அவர்கள் செய்த அநியாயமே அவர்களை தண்டிக்கும் படி தான் விதி எழுதி வைத்துள்ளேன்."

"அது என்ன விதி"
"ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் உண்டு" நான் தான் ஐசக் நியூட்டனிடம் சொல்லி அனுப்பி்யிருந்தேனே சொல்லவில்லயா?

"அப்படியானால் நீ ஏன் உலகில் தீமைகளை படைக்க வேண்டும்?"

"நன்மையும் தீமையும் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டது. கெட்டதை உருவாக்கி நல்லதையும், நல்லதிலிருந்து கெட்டதையும் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வு பொருள் தான். உண்மையில் என்னைப் பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாம் ஒன்று தான்."

"இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்ல கடவுளே. உன் கோபத்தையும் தண்டனைப் பற்றிய பயமும் இல்லாவிட்டால் உலகில் குற்றங்கள் பெருகும். தவறு செய்துவிட்டு மற்றவர்கள் கண்ணில் மண்ணைதூவி நல்லவர்களாக நடிப்பவருக்கு யார் தண்டனை தருவது? மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலர்களை கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்க வேண்டாமா?"

"எவ்வளவோ செய்தோம் இதை செய்ய மாட்டோமா? அதை பற்றி நாளை பேசலாம் "

"சுனாமி ,பூகம்பம் என அனுப்பி ஒரு பாவமும் அறியாதவர்களை அள்ளிகொண்டு போகும் விதியை ஏன் ஏற்படுத்தினாய் கடவுளே? இதில் யாரை தண்டிப்பது?"

கடவுள் இப்போது ஆஃப் லைனாகி விட்டார்.

இந்த கடவுளை விடக்கூடாது கேட்க வேண்டிய கேள்விகளை பின்னூட்டமிடுங்கள்.

Download As PDF

02 April 2009

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 2)

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 1) பதிவின் தொடர்ச்சி இது......

நேற்று ஆன்லைனில் கடவுள் வந்து போனதிலிருந்து மனதில் ஒரே குழப்பம். தேர்தலில் யார் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன? பைசாவுக்கு பிரயோஜனமில்லாத கேள்வி கேட்டு கடவுளை கடுப்பேத்தியது தான் மிச்சம்.

இருக்கிற விலைவாசிக்கு பேசாமல் ஒரு பத்து கிலோ தங்கத்தை ஜிப் செய்து அனுப்ப சொல்லியிருக்கலாம். அதை வைத்து ஏதோ காலம் தள்ளலாம்.
ம்ஹூம் வேண்டாம் அதிலும் ரிஸ்க். முன்பு எவனோ ஒரு பேராசைக்காரன் கடவுளிடம் ஐம்பது கிலோ "தங்கம்" கேட்டு மாட்டிக்கொண்டான். வரமாகவோ சாபமாகவோ கிடைத்த தங்கம் என்ற பெயருள்ள அவளை வைத்து காலம் தள்ளுவதற்குள் அவனுக்கு நுரை தள்ளி விட்டது.

அதிலும் இன்று கடவுளே கிஃப்டாக எது தந்தாலும் திறந்து பார்க்கக் கூடாது. கான்ஃபிக்கெர் வைரஸ் இருக்கலாம். ச்சே ஒண்னும் வேணாம். நல்லதா நாலு கேள்வி கேட்டு கடவுளை நல்லா புரிஞ்சு கொண்டாலே போதும்.
வெயிட் சாதிக்! கடவுளிடம் பேசும் போது எதையும் ப்ளான் பண்ணிபேசணும். இல்லாட்டா இப்படித்தான். ஒண்ணும் வேண்டாம் மண்ணும் வேணாம்னுட்டு சொன்னா கடவுள் இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிட்டா என்ன செய்ய? அப்புறம் வேலையிழந்த அமெரிக்க கோபாலு கதி தான்.
எது டைப் செய்தாலும் ஸ்பெல்லிங் செக், கிராமர் செக், லாஜிக் செக் எல்லாம் செய்து விட்டு செய் - மனதின் எச்சரிக்கை குரல் மண்டையில் குட்டியது.

கடவுள் வருவார் என இன்று முழுதும் கம்ப்யூட்டரை ஆஃப் செய்யவில்லை. மின்சார வாரியம் ஃபியூசை பிடுங்கிவிடக்கூடாதே கடவுளே!

ஒரு ஐடியா! கடவுளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் என்ன? அதாங்க கண்ணை மூடி கடவுளே கடவுளே கடவுளே மூன்று முறை பிரார்தனை செய்து விட்டு கட் செய்து விட்டேன்.

"ப்ளிங்" என்று மெசெஞ்சரில் கடவுள் ஐகான் பச்சையாகியது. உடனே என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதும் மாணவன் விடைகளை மறந்தது போல் எனக்கு கேள்விகள் எல்லாம் மறந்து விட்டது. விரல்கள் அதுவாகவே எதாவது டைப் அடித்து கேள்வி கேட்க துடிப்பது போல் நடுங்கியது.
"ஹ ஹாய்ய்ய் " என தொடங்கினேன். எக்ஸ்ட்ரா எழுத்துக்கள் விரல் நடுங்கியதால் ஏற்பட்டது.
அபூ அஃப்சரின் பின்னூட்டத்திலிருந்து கொஞ்சம் தைரியம் பெற்றுக்கொண்டு

"வணக்கம் கடவுளே! தயவு கூர்ந்து தங்கள் அருட்பார்வையை என் மீது பார்க்கவும்"-- (முதலில் இதற்கொரு குறுஞ்சொல் கண்டுபிடிக்க வேண்டும்.) என்று டைப் செய்து கடந்த பதிவில் சகோதரி ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தின் லிங்ககும் கடவுளுக்கு பார்வேர்ட் செய்தேன்.
"என்ன வேண்டும் கேள் மானிடா? என் அருள் பார்வை உனக்கு உண்டு, பயம் நீங்கி தெளிவடைவாய்." என்று இமைக்கும் இரு கண்களின் ஸ்மைலியை கடவுள் அனுப்பினார்.
பின் குறிப்பாக ராஜேஸ்வரியின் பின்னூட்டத்தில் காணப்பட்ட சிரிப்பில் தானே சற்று பயந்து போனதாக கடவுள் ஒப்புக்கொண்டிருந்தார். (சும்மா அதிருதில்லே)

"நேற்று நான் கேட்ட கேள்வியில் தவறிருந்தால் மன்னிக்கவும். தாங்கள் அவசரமாக லாக் அவுட் செய்தது ஏனோ?" -இது நான்.

"பிழையான கேள்வி தான். அதனால் தான் இல்லீகல் ஆபரேசன் என்று தகவல் சொல்லி விட்டு என் கம்ப்யூட்டர் தானாகவே ஷட் டவுன் ஆகி விட்டது."

"புரியும்படி சொல்லுங்கள் பிரபுவே ஸாரி கடவுளே"

தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என நீ கேட்டு நானும் உண்மையான பதிலை சொன்னால் நீ சும்மா இருப்பாயா? அதை பதிவில் எழுதுவாய். அதைப் படித்து இப்போது சாணி வாரி எறியும் எல்லாக் கட்சிகளும் ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடும். எல்லோரும் ஒரே அணியில் இருந்தால் போட்டி எப்படி? தேர்தல் எப்படி நடக்கும்? அப்புறம் ஜெயிப்பது யார்? ---கடைசியில் என் வார்தை பொய் என்றாகி விடும் . எனவே தான் நான் பதில் சொல்வதற்குள் விபரீதம் உணர்ந்து கம்ப்யூட்டர் ஆஃப் ஆகி விட்டது. இனி இது போன்ற குருட்டுக் கேள்விகள் கேட்காமல் உருப்படியாக கேள்?


"ஓ..அப்படியா விஷயம் எனக்கு இது எட்டவில்லயே! சாரி கடவுளே. என் முதல் கேள்வி கடவுள் உண்டு என்று ஒரு கோஸ்டியும் கடவுள் இல்லையென்று ஒரு கோஸ்டியும் உலகில் இருக்கிறதே? யார் சொல்வது சரி ?"


"உண்டு என்று தீவிரமாக நம்புபவர்க்கு நான் உண்டு. அதே போல் இல்லை என்று சொல்பவர்களும் மதங்கள் எனக்கிட்ட முக மூடியை தான் இல்லை என்கிறார்கள். கடவுள் என்று என்னை அவர்கள் நம்பாவிட்டாலும் இயற்கை என்றோ சக்தி என்றோ பொருள் என்றோ எதாவது பெயரில் என்னை அறிவதால் எனக்கு இருவரையும் பிடிக்கும். ஆத்திகர்களை விட நாத்திகர்கள் தான் அதிகம் கடவுள் என்று உச்சரிக்கிறார்கள். என்னைப்பற்றி அதிகம் நினைக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா?
ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகக் கூறிக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என அறிய முயலாது தன் விருப்பத்திற்கு கடவுளை உருவகப்படுத்தி கடவுள் பெயரை சொல்லி கொலை முதற்கொண்டு அக்கிரமங்கள் செய்வார்கள். இத்தகைய போலிகளைத் தான் நான் அடியோடு வெறுக்கிறேன்.

உண்மை - பொய் இரண்டும் ஒரு நாணயத்தில் இரு பக்கம் போல சேர்ந்தது தான் அறிவு. அறியப்படும் எந்த விஷயமும் உண்மையாக அல்லது பொய்யாக இருக்க சம வாய்ப்பு உள்ளது. அது அந்த விஷயத்தை பார்க்கும் கோணத்தைச் சார்ந்தது.

மனதில் வைத்துக்கொள் அறிவு சார்பானது.

"ஓ.. புரிகிறது தெய்வமே காஷ்மீரை இந்திய மேப்பில் பார்த்தால் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மேப்பில் பார்த்தால் அது இந்தியாவில் இல்லை. இது போல் தான் இறைவன் சரிதானே?

"சபாஷ் சரியாக சொன்னாய் இப்போது சொல் உன்னைப் பொருத்தவரை நான் இருக்கிறேனா இல்லையா?"

தெளிவாக இருந்த நான் சொன்னேன் "கடவுளே !நீ உண்மையில் இல்லை என்று சொல்கிறேன். சரிதானே?" என்று கேட்டது தான் தாமதம்

கடவுள் "ட்டுய்ங்"என்று ஆஃப் லைன் ஆகிவிட்டார்.

"ச்சை மீண்டும் தவறாக ஏதோ கேட்டுவிட்டேன் போலிருக்கு..கன்னத்தில் கை வைத்தபடி காத்திருக்கிறேன்
(தொடரும்)

Download As PDF

01 April 2009

கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 1)

இன்று எனது யாஹூ மெசெஞ்ஜெரை பார்த்த போது ஒரு ஆச்சரியம் அதில் எனது காண்டாக்ட் லிஸ்டில் "கடவுள்" என்றொரு ஐடி இருந்தது. இது எப்படி வந்தது யாராவது ஏப்ரல் ஃபூல் ஆக்க இப்படி செய்து வைத்திருக்கிறார்களா ?என யோசித்துக்கொண்டிருந்த போது அந்த ஐகான் பச்சையாகி
"ஹாய்" என்று மெசேஜ் வந்தது. அதன் பின் எங்கள் உரையாடல் இப்படியிருந்தது.

"ஹாய் நீங்கள் யார்"

"நான் கடவுள்"

"இருக்கட்டும் இருக்கட்டும் என் அக்கவுண்டில் எனக்குத்தெரியாமல் உங்கள் பெயரை எப்படி சேர்க்க முடிந்தது?"

"ஹ ஹா அது ஒன்றும் கஸ்டமில்லை உன் ஐடி பாஸ்வேர்டு எனக்குத்தெரியும் நானே லாகின் ஆகி...."

"அடக் கடவுளே! அப்ப நீ ஹேக்கரா"

"நீ சொன்ன முதல் பாதி தான் சரி"

"நான் நம்ப மாட்டேன் நீ கடவுளாக இருக்க முடியாது?என் பாஸ்வேர்டை எப்படியோ திருடி விட்டாய்?"

"சரி நான் கடவுள் தான் என்று நீ நம்ப என்ன செய்ய வேண்டும்"

"நான் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறேன் சொல்ல முடியுமா?" என்று டைப் அடித்து விட்டு என்டர் பட்டனை அழுத்தவில்லை அதற்குள்

"டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டிருக்கிறாய், கண்ணாடி போட்டிருக்கிறாய்" மனதில் நினைத்ததற்கு சேர்த்து பதில் வந்தது.

அதிர்ந்து போனேன். என் முன்னாலிருந்த வெப் காமிராவைப் பார்த்தேன் அது கம்ப்யூட்டரில் இணைக்கப்படாமல் தான் இருந்தது. இருந்தும் அதனை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு துணியும் எடுத்து போர்த்தி விட்டேன்.

சட்டென்று பொறி தட்டியது கூகிள் எர்த்தின் சாட்டலைட் காமிரா ஜன்னல் வழி கண்காணிக்கிறதா? ...

ஜன்னலை இறுக மூடிக்கொண்டேன்.

"LOL"

"கடவுளே இதென்ன சோதனை. சரி என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?"

"உன் ஐ பி அட்ரெஸ் சொல்லவா? டெஸ்க் டாப் வால் பேப்பர் சொல்லவா?உன் இ மெயில்கள் வாசிக்கவா?அதிலிருந்து வேறு பல அக்கவுண்ட் பாஸ் வேர்ட் சொல்லவா? உன் கம்ப்யூட்டரில் ஹிட்டன் ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்கள் பேர் சொல்லவா? கூகிள் செர்ச் ஃஹிஸ்டரி, பிரவுசர் ஹிஸ்டரி சொல்லவா? டாரென்ட் டவுண்லோடு ஹிஸ்டரி சொல்லவா? பேங்க் யூசர் ஐடி பாஸ்வேர்ட் சொல்லவா?"

"ஐய்யோ நீ ஹேக்கர் தான்"

"நீ நாத்திகனானால் நான் ஹேக்கர் தான். உன் அக்கவுண்ட் பணமெல்லாம் ஆன்லைன் வழி என் அக்கவுண்டுக்கு மாற்றப்பட்டு விட்டது நீ தொலைந்தாய். நீ என்னை கடவுள் என்று நம்பினால் கேட்பதை தருவேன்" .சொல் . நம்பிக்கை தான் உன் உலகை தீர்மானிப்பது. எப்படி நம்புகிறாயோ அது தான் உண்மை.

"அய்யயோ கடவுளே! நீ ஹேக்கராக இருக்கக் கூடாது. இல்லை இல்லை நீர் கடவுள் தான் நம்புகிறேன் ஐயா நம்புகிறேன். இருந்தாலும் நான் மனிதன் இல்லையா சந்தேகம் கூடப்பிறந்தது. சரி இந்த தகவல் எல்லாம் எப்படி தெரிந்தது? நீ கடவுள் என்றால் உண்மையை சொல்.

"நீ என்னை நம்புவதாய் சொன்னது பொய். எனவே அதற்கேற்ற உண்மையை சொல்கிறேன். உன் மேஜை மேல் கிடக்கும் காமிரா ஃபோன் வழி இணையத்தில் லைவ் ஆக எல்லாம் எனக்கு பார்க்க முடிகிறது. நீ அதை ஆஃப் செய்ய மறந்து விட்டாய். நீ மற்றொரு பிசி யில் யாஹூவில் பாஸ்வேர்ட் அடித்து லாகின் செய்வது கூட தெளிவாக பார்க்க முடிந்தது. உன் சட்டை கலரும் அப்படித்தான் சொன்னேன்" என்று நான் சொன்னால் நீ திருப்தி யாவாய். ஆனால் நான் உண்மையான கடவுள், உண்மை தான் சொல்வேன். மேலே "_"சொன்னது பொய்.

"முகத்தில் தண்னீர் தெளித்து நினைவு வர வைத்து அடிக்கிறாயே கடவுளே நான் எதை நம்ப"

"நம்பிக்கை வரும் வரை குழப்பமாகத்தான் இருக்கும். நான் இருக்கிறேன் அல்லது இல்லையென்று தெளிவாக நம்பும் வரை குழப்பம் தான். பார் நானே உன்னை வலிய தொடர்பு கொண்ட போதும் நம்பிக்கை வரவில்லை உனக்கு"

"ஒகே உன்னை நம்புகிறேன். நேற்று நான் இன்னேரம் என்ன சாப்பிட்டேன் சரியாக சொன்னால் கடவுள் என நம்புகிறேன்."

"இது போன்ற சில்லியான கேள்வி கேட்டு என் நேரத்தை வீணடிக்கிறாய். இருந்தாலும் உனக்கு நம்பிக்கை வருவதற்காக சொல்கிறேன் சில்லி சிக்கனும்
நாலு பரோட்டாவும். இன்னும் இரண்டு கூட சாப்பிட இடமிருந்தும் கொலெஸ்ட்ரால் கருதி நிறுத்திக்கொண்டாய் சரியா?"

அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். சந்தேகமே இல்லை கடவுளே தான். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது. கடவுளிடம் கேட்க கருதி வைத்திருந்த எல்லா கேள்விகளையும் கேட்டு விட மனசு பரபரத்தது. ஆனால் தற்போதய தேர்தல் பரபரப்பால் எல்லாக் கேள்விகளையும் முந்திக்கொண்டு முந்திரி கொட்டை போல எந்த கட்சி ஜெயிக்கும்? என்று கேட்க நினைத்தது தான் தாமதம். அதற்குள் டுடொய்ங் என்று கடவுள் லாக் ஆஃப் ஆகி விட்டார்.

கடவுளை எதிர் பார்த்து வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இனி வந்தால் கடவுளுக்கும் பிடிக்காத அரசியல் சாக்கடையை கிளறக்கூடாது. கடவுளிடம் வேறு நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.

இன்றைய தினத்தை கருதி இதை நீங்கள் கூட நம்பாமல் இருக்கலாம் . அது உங்கள் இஸ்டம். உங்களுக்கு கடவுளிடம் சீரியசான கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடவும், கேட்டு சொல்கிறேன்

(தொடரும்)
Download As PDF