15 July 2012

காலம்

         எதைப் பத்தி கொஞ்ச நேரம் யோசித்தாலும் விளங்கிப்போகும் ஆனா காலத்தை பத்தி யோசிக்கும் போது மட்டும் நான் காணாமல் போய் விடுகிறேன். பூமி இன்னும் தட்டையாத்தான் இருக்குன்னு அன்றாட அறிவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அப்படியே இருங்கள்.மேலே வாசிக்காதீங்க.
மெய்ப் பொருள் காண விரும்புறவங்க மேலே படிங்க 
      நாம இடம் காலத்தால் ஆன முப்பரிமாண உலகத்தில வாழுறோம். அதாவது நமக்கு இடமும் வலமும் முன்னும் பின்னும் இடம் என்பது இருக்கிறது. அந்த இடத்தில நாம ஒரு பொருளா இருக்கிறோம். அது போல நேற்று, இன்று, நாளை போன வருஷம் அடுத்த நூற்றாண்டு எல்லாமுமான காலத்திலும் வாழ்கிறோம்.
      என் கேள்வி என்னன்னா நாம இடமும் காலமுமா இருக்கிற பிரபஞ்சத்தில வாழ்கிறோமா? இல்ல நம்ம மூளைக்குள்ளே தான் இந்த இடமும் காலமும் உருவாகிறதா? ---அப்படி பாக்காதீங்க பொறுமையா யோசிச்சு பாருங்க
       காலம்னு நாம் எதை சொல்றோம். கடிகாரம் காலண்டர் இதெல்லாம் காலமில்லை. இவைகள் காலத்தை அளவிட நாம் பயன்படுத்துற கருவிங்க தான் மணி பார்க்கத் தெரியாத ..சின்ன வயசுல  எனக்கு சூரியன் உதிச்சு மேக்கால மறையிறது தான் காலம். .
     அப்ப இந்த சூரியனும் பூமியும் சுத்துறது தான் காலமா? .பூமியோ சூரியனோ அது பாட்டுக்கு நகர்ந்து விட்டு போகட்டும் அதனால காலம் எப்படி தோன்றுகிறது? பூமி நின்னா காலம் நிக்குமா? ஒரு கடிகாரத்தின் ஊசல் முன்னும் பின்னும் நகர்வது, சூரியன், பூமி சுற்றுவது எல்லாம் வெறும் இயக்கங்கள். இவை காலத்தை அளக்கிறதுக்கு தான் உதவும் அல்லாது காலம் ஆவதில்லை
        பொருட்கள் உண்மையில்  நகர்வது என்பது ஒரு இடத்தில் தோன்றி பின் மறைந்து வேறு இடத்தில் தோன்றுவது என்பதாகும். பொருட்களை நுணுக்கி நுணுக்கி பார்த்தால் கடைசியில் எலெக்ட்ரான் புரோட்டான் போன்ற அணுத் துகளையும் கடந்து பொருள் அலை என்ற இரு நிலைக்கு போய்விடும். அதாவது ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையும் இழந்து விடுகிறது மீண்டும் அது பொருளாகும் போது இடம் , பொருளை பற்றிய அறிவிற்கு ஏற்ப தன் மையத்தையும் எல்லையயும் நிர்ணயித்துக்கொள்கிறது. பொருளும் அலையும் பரஸ்பரம் நிலை மாறுவது தான் இயக்கம். அந்நிலையில் அதன் இயக்கம் உண்டு இல்லை அல்லது பொருள் அலை அல்லது தோன்றி மறைதல் என்பதாகத்தான் இருக்கும் அதாவது ஒரு எலெக்ட்ரானின் இயக்கம் ஒரு பழத்தை சுற்றும் ஈ போல இருக்காது ஒரு சீரியல் செட்டில் வரிசையாக தனித்தனி பல்புகள் அணைந்து எரியும் போது வெளிச்சப்புள்ளி ஓடுகிறது அல்லவா இது போல தான் அதன்  நகர்வு இருக்கிறது  எனவே இத்தைகைய அணுக்களால் ஆன அத்தனை பொருட்களின் இயக்கமும் அடிப்படையில் இந்த தோன்றி மறைதல் பைனரி தான்.
      ஒரு  பிலிம் ரீலை பார்த்தால் ஒரு திரைப்படம் எப்படி இயங்குகிறது எனப் புரியும் நம் மொத்த உலகமும் இப்படித்தான்  இருக்கிறது. ஆனால் அந்த இயக்கங்களை எப்போது நாம் காலமாக உணர்கிறோம்? பொருட்கள் இப்படி இடம் மாறி தோன்றுவதை உற்று நோக்கி  நம் மூளையில் பதிய வைக்கிறோமே.அந்த பதிவுகளை நமது மூளை தான் தொடர்பு படுத்தி பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு  இடத்திற்கு நகர்வதாக  உணர்கிறது. உதாரணத்திற்கு..நம் நினைவுகள் என்பது ஒரு கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்கில் ஒரு இடத்தில் பதிவு செய்து வைக்கப்பட்ட ஒரு  மூவி ஃபைல் எனக் கொள்வோம் இதை ஒரு மீடியா பிளேயர் என்ற மென்பொருள் மூலம் இயக்கும் போது தான் அது இரண்டு மணி நேரம் திரைப்படமாக ஓடுகிறது. இது போல மூளையில் உள்ள ஒரு புரோகிராம் தான் நினவுகளை அது காலத்தில் நிகழ்வதாக காட்டுகிறது. காலம் என்பது வெறும் கருதலே. காலம் என்பதை உருவாக்குவது மூளையும் அதன் பயாலஜியும் தான்.
  அப்படீன்னா காலம் என்பது தனியாக இல்லையா? ஆனா நான் சிறுவனாயிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்  என் ஞாபகத்தில் இருக்கிறதே காலம் இருப்பதை தானே இது காட்டுகிறது. கொஞ்சம் நிதாதானமாக யோசித்தால் ஒன்று புரியும்,
      இக்கணத்தில் இருப்பது மட்டும் நீங்கள். உங்கள் ஞாபகத்திலிருக்கும் சிறுவன் நீங்கள் அல்ல.அந்த நிகழ்வுகளும் உங்களுக்கு உரியது அல்ல.உங்கள் மூளையில் ஏதோ ஒர் இடத்தில் ஞாபகமாக பதிந்திருக்கும் விஷயங்களை உங்கள் மூளை காலம் என்ற உணர்வில் தொடர்ச்சியாக காட்டுகிறது.அந்த சிறுவன் தான் வளர்ந்து இப்பொது இருக்கும் நீங்கள் என்று நம்பச்சொல்கிறது,

ஒரு திரைப்படக்காட்சியில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அடுத்து 15 வருடங்களுக்கு பிறகு என்று ஸ்லைடு போட்டு விட்டு அடுத்த வினாடி ஒரு காதல் ஜோடியை காட்டினால் அந்த சிறுவன் சிறுமி வளர்ந்து பெரியவர்களானதாக நினைத்துக்கொள்வோம். இதே போல் தான் நிழ வாழ்க்கையிலும் அந்த ஸ்லைடுக்கு பதில் 15 வருட காலத்தை உணர்த்தும் வேறு சம்பவங்களின் பதிவு இருந்தால் தான் மனம் அந்த சிறுவன் தான் வாலிபனாக இருக்கிறான் என் ஏற்றுக்கொள்ளும்.
30 வருடம் கோமாவில் கிடந்து எழுந்தவருக்கு பக்கத்தில் இருப்பது மாமியார் அல்ல மனைவிதான் என்று புரியவைக்க சற்று சிரப்படவேண்டியிருக்கும்.
           நாம்  காலத்தில் வாழ்வதில்லை.இந்தக் கணத்தில் வாழ்வது தான் நாம்.. பொருள் அலையின் ஒவ்வொரு நிலை மாற்றத்தின் போதும் மூளையின் நியூரான்கள் ஃபயர் ஆகி அந்த கணத்தின் நம்மை ஞாபகத்தில்பதிவு செய்கிறது கணம் தோறும் இந்தப் பதிவுகள் மூளையில் ஓர் இடமாக இருக்கிறது, கஜினி சூர்யா மாதிரி நிகழ்கால காட்சிகளை மூளையில் எழுதி வைத்து கொள்வதால் தான் நமது இருப்பை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
        இது போல் பல விஷயங்கள் அதன் உண்மை ஒன்றாகவும் நாம் உணர்வது ஒன்றாகவும் இருக்கிறது. இங்கே ஞாபகங்கள் என்பது மூளையில் நியூரான் இணைப்புகளாக உருவாகி மூளையின் ஒரு பாகமாக இருக்கிறது  இதை  காலமாக நம்மை உணரச்செய்வது  மனம், இந்த மனம் கூட மூளையின்  நீயுரான் இணைப்புகளின் ஒரு விளைவு தான். பிறகு நமது தன்னுணர்வு. இவையல்லாது காலம் என்று ஒன்று எங்கே இருக்கிறது. ஞாபகங்கள் வேறு காலம் என்பது வேறு.இதை நாம் பிரித்து அறிய முடியாததற்கு காரணம் நம் மனதால் நாம் கணம்தோறும் உருவாக்கும் முப்பரிமாண உலகில் நம்மையும் ஒரு பொருளாக கருதி மயங்கிக் கிடப்பதால் தான்
         காலம் என்பது அனைவருக்கும் ஒன்றுபோல இல்லை காலம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கருதல்களுக்கு தக்கபடி அனுபவப்படுகிறது. காலத்தைப் பற்றிய அறிவு அதை நாம் கவனிப்பதை பொறுத்தே அமைகிறது. நகர வாசிக்கு வேகமாய் நகரும் காலம் ஒரு கிராமத்தில் மெதுவாக நகர்கிறது. இன்றைக்கு உள்ள அவசரம் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களிடம் இல்லை அதாவது முக்கியமான சம்பவங்களின் பதிவுகள்  மூளையில் அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது அதனால் அதிக காலம் அனுபவப் படுகிறது குறைவான அல்லது முக்கியமில்லாத சம்பவங்களை பற்றிய காலமும் குறைவாகவே கருதப்படுகிறது. காதலிக்காக காத்திருக்கும் போது ஐந்து நிமிடம் என்பது ஐந்து நாள் போல தோன்றும். அதே போல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு எவ்வளவு காலமாச்சு என்று ஒரு பையனின் கால அளவீடும் ஒரு முதியவரின்  கால அனுபமும் வேறு வேறாக இருக்கும். பத்து வருடமே பள்ளியில் படித்தாலும் ஏதோ ரொம்ப காலமாகவே ஸ்கூலுக்கு போன அனுபவம், ஆனா பின்னாளில் முப்பது வருஷம் ஒரே ஆபீசில் குப்பை கொட்டிகிட்டிருந்தாலும் அது அவ்வளவு கால உணர்வு தராது..காலத்தை நாம் இவ்வாறு உணர்ந்து கொள்ளக் காரணம் நமது மனம் தான்
 .     கடிகாரமும் காலண்டரும் இல்லாவிட்டாலும் கூட  காலம் என்று ஒன்று இருப்பதாக  நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் அப்படி காலமாக கருதுவது இடத்தையே தாம்
            இரவில் கொஞ்சம் வெளியே போய் வானத்தை உற்று நோக்குங்கள். எல்லையில்லாமல் எல்ல இடத்திலும் வின்மீன்கள் வாரி இறைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள். கண்ணுக்கு முன்னே இடமும் தெரிகிறது அங்கே பொருளாக நட்சத்திரங்களும் மின்னிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்ன இப்போது நாம் இருப்பதாக காணும் அனேக நட்சத்திரங்கள் பல்லாயிரம் ஒளி வருஷ தூரத்தில் இருக்கிறது அதாவது ஒரு நட்சத்திரம் இப்போது இருப்பதாக காணும் காட்சி பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தயது. வானில் இப்போது நாம் பார்க்கும் இடமும் காட்சியும் தொன்னூறு சதவீதம் இப்போது அங்கே இருக்காது. நாம் அவற்றின் பழைய காலங்களை தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இடம் இங்கே காலத்தில் புதைந்து கிடக்கிறது  இதையே கொஞ்சம் மாத்தி சொன்னா சூரியன் அல்லாத ஒரு நட்சத்திரத்தில் இருந்து ஒரு பவர்புல் டெலஸ் கோப் மூலம் நமது பூமியை இப்போது உற்றுப்பார்த்தால் புர்ஜ் அல் அராபும் ,திருவள்ளுவர் சிலையும் தெரியாது ஆனால் பக்றுளி ஆறும் மறைந்த லெமூரியா கண்டத்தில் மக்கள் வாழ்வதும் தெரியலாம் .பார்க்கும் தூரத்திற்கு தக்கபடி பல வரலாற்று நிகழ்வுகளையும் லைவ் வாக காணலாம் எகிப்தில் பிரமிடுகள் கட்டிக் கொண்டிருப்பதை நேரில் பார்க்கலாம். காலத்துக்கும் இடத்துக்கும் அப்படி ஒரு கனெக்சன் இருக்கிறது.

   ஒரு கற்பனை விமான பயணத்தில் என் அருகிலிருந்த நண்பர் கேட்டார். என்ன இது நாம் கடந்த ஒரு மணி நேரமாக பக்கத்தில் இருந்து பயணம் செய்கிறோம் இது உண்மை தானே  இந்த காலம் வெறும் கற்பனை தான் அப்படி ஒன்று இல்லை என்றா சொல்கிறீர்கள்.?
. காலம் என்பது கற்பனை அல்ல நாம் கருதுவது அவ்வளவே ..நாம் அறிவால் அறிந்துணரும் இடம் பொருள் காலம் ,தூரம் இயக்கம் எல்லாம் அவ்வாறு கருதுவது தான். ஒரு கணினியில் வெறும்  on/off லாஜிக்கில் எப்படி பலவகையான சாப்ட்வேர்கள் உருவாக்குகிறோமோ அது போல தான்.
உண்மை என்பதும் அப்படி கருதுவது தான். இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீகள்? அமைதியான என் அருகில் உட்கார்ந்து காபி குடித்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.இது நமது உண்மை. ஆனால்  இந்த விமானத்தையும் சேர்த்த நமது உண்மை என்னவென்றால் 30,000 அடி உயர்த்திற்கு மேலே விண்ணில் படு பயங்கர வேகத்தில் நேராக ஓடிக் கொண்டிருக்கிறோம் சரிதானே இன்னும் இந்த பூமியோடு சேர்ந்த நமது உண்மை என்ன? அதை விட வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறோம் அதுவும் உண்மை தானே அதை கொஞ்சமும் அறியா வண்ணம் சிறிது கூட சிந்திக்கொள்ளாமல்  காபி குடிக்கிறோம் சாய்ந்து தூங்குகிறோம் காலமும் அப்படித்தான் நம் அறிவுக்கு மட்டும் தான் உண்மை அதற்கு வெளியே ????

விமான நிலையத்தில் வைத்து என் சிறிய மகன் கேட்டான் அது சரி அப்பா இவ்வளவு பெரிய  விமானம் மேலே செல்லும் போது எப்படி சிறிதாகி ஏன் மெதுவாக செல்கிறது? -

Download As PDF

29 June 2012

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

             கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?
இதோ பட்டியல்

         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

        மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.
 
      காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

      கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

       கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்

      சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.

      நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.

       வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

       ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்

       பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்

       பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.         பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்        பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.

       தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்

       சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.

      குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.

      ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.

      நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.

      தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்

     "கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.

       இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.

      சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.

       தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்

        கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்
.
      ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.

    முட்டை யில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டையாக விற்கிறார்கள்.

   மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்
      விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.


Top 10 “Vegetarian” Foods Which Aren’t Actually Vegetarian

Download As PDF

16 June 2012

சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து  சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
சரியான முறையில் சாப்பிடுவதன் மூலம் உணவின் சர்க்கரைப் பொருள் சரியாக ஜீரணிக்கப்பட்டு தேவையான இன்சுலினை பெற்று உடலால்ஏற்றுக்கொள்ளப்படும்.தவறான உணவுப்பழக்கத்தாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்கரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.

சாப்பிட வேண்டியவை
 காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. 

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

 வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் பச்சடியாக தயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப் படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

 மேலும் கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி,  புடலங்காய், பலாக்காய்,காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகள், பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம்.
அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா.

சாப்பிடக்கூடாதவை:
 வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதையும்  தவிர்க்கவேண்டும்
சாப்பிடக்கூடாத பழங்கள் : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா., சீத்தா  போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
அருந்தக் கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

தொடர்புடைய பதிவு:
நீரிழிவு நோய் -அறிந்துகொள்வோம்

Download As PDF

08 June 2012

டெங்கு காய்ச்சல்

டெங்கு என்றால் என்ன?
டெங்கு எனப்படுவது  ஒருவகை வைரஸ் கிருமி. இது கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவி நோயுண்டாக்குகிறது.

எப்படி பரவுகிறது?
டெங்கு வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை  'ஏடிஸ் எஜிப்டி ’ (Aedes aegypti )  என்ற பிரிவைசசார்ந்த  ஒரு பெண் கொசு கடித்து விட்டு அந்த வைரசை சுமந்து கொண்டு இன்னொருவரை கடிப்பதன் மூலம் மட்டுமே நோய் பரவுகிறது.

மற்றபடி டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரது தொடுதல், எச்சில், இருமல் மூலமோ, காற்று தண்ணீர் மூலமோ இது பரவுவதில்லை.

ஏடிஸ் கொசு முட்டைகள் 300 நாட்கள்  அழியாமல் இருக்கும. திடீரென பெய்யும் மழையால் டயர் முட்டையோடு சிரட்டைகள் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரில் இந்த கொசு முட்டைகள் செழித்து வளரும்.

டெங்கு அறிகுறிகள்
கடுமையான தலைவலி,104* வரை காய்ச்சல், சோர்வு, கடுமையான மூட்டுவலி மற்றும் தசை வலி, உடல் வலி, கண்வலி, வாந்தி, உடலில் அரிப்பு இவை தான் டெங்குவின் அறிகுறிகள். இவற்றோடு சிலருக்கு ஈறுகளில் ரத்தக்கசிவும் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் சிவந்தும் இருக்கும்.

நோய் தாக்கப்பட்டு 3 முதல்7 நாட்கள் வரை உடலில்  நோய்கிருமிகள் பெருகி வளரும் காலம் வரை எந்த அறிகுறிகளும் தென்படாமல் இருந்து பின்னர் வெளிப்படலாம்.

டெங்குவால் என்ன பாதிப்பு உண்டாகிறது?
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ் களை  வேகமாக அழித்து விடும். இதனால் ரத்தத்தின் உறையும் திறன் குறைந்து நுரையீரல், வயிறு, சிறுநீரகப்பாதைகள், பல் ஈறுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவுக்கு காரணமாகிறது. தகுந்த சிகிட்சை பெறாமல் இருந்தால் இது உயிரிழப்புக்கு ஏதுவாகும்.

தடுப்பு மருந்துகள் உள்ளதா?
இதுவரை இல்லை. ஆரம்ப நிலையிலேயே சிகிட்சை பெற்றால்  உயிரிழப்பைத் தடுக்கலாம்.

என்ன சிகிட்சை?
டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு தனியாக சிகிட்சை எதுவும் இல்லை. ஆனால் இதன் பாதிப்புகளை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஐ .ஜி.எம் , எலிசா, பி.சி.ஆர்  போன்ற பரிசோதனைகள் மூலம் டெங்கு இருப்பது உறுதியானால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். பிளேட் லெட்ஸுகள் எண்ணிக்கை  வேகமாக குறைந்து உயிருக்கு ஆபத்தை தவிர்க்க இரத்தம் ஏற்ற வேண்டி வரலாம். ஆபத்து இல்லையெனில் மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொள்ளலாம். வாந்தி பேதி ஏற்பட்டு நிலமை மோசமானால் மருத்துவமனையை நாடவும்.

காய்ச்சல் காரணம் உடலில் நீர் சத்து குறைவதை ஈடு செய்ய அதிக அளவு இளநீர், கஞ்சி, உப்பு சர்கரை கரைசல் போன்ற நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்?
ஏழு நாட்களில் சரியாகிவிடும். மற்றபடி  சோர்வு ,உடல் வலி முழுமையாக  குறைய இரண்டு வாரங்கள் ஆகலாம்.

டெங்கு பரவாமல் தடுப்பது எப்படி?
கொசு ஒழிப்புதான் ஒரே வழி.
வீட்டைசுற்றி எங்கும் தண்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
திறந்த சிமென்ட் தொட்டிகள், முட்டை ஓடுகள், சிரட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டுக்குள் கொசுவராமல் தடுக்க ஜன்னல்களில் கொசுவலை பயன் படுத்தலாம்.
கொசு வத்தி, கொசுவிரட்டி, களிம்பு, ஸ்பிரே, மின்சார கொசு கொல்லி பயன் படுத்தலாம்.
வீட்டுச் சுவர்களில் டி டி டி மருந்து தெளிக்கலாம்.
ஓடைகள் சாக்கடைகளில் டெல்டா மெத்திரின் மருந்து தெளிக்கலாம்.
1000 கன அடிக்கு 4 அவுன்ஸ் கிரிசாலை புகை செலுத்தலாம்.


தொடர்புடைய பதிவுகள்:
 கிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்
 பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

Download As PDF