25 December 2008

என்ன சாப்பிடலாம்?

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
ரசாயன உரங்கள் இட்டு அதிக மகசூல் பெற்று வியாபார நோக்கத்தில் உருவாக்கப்படும் உணவுகள்,சுற்றுச் சூழல் மாசு. மன அழுத்தம், ஓய்வின்மை போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வயிறும் நிரம்பிவிடும். ஆனால் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை

சமச்சீர் உணவு:
உடலும், மனமும் ஆராக்கியமாக இருக்க சத்தான - சமச்சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro nutrients),. சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients).
கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன.
வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கும் அதனை பாதுகாக்கவும் மிக மிகஅவசியமானது.
நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால் இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

புரத சத்து (Protein):
ஊட்டச்சத்துகளில் முதலாவது விளங்குவது புரத சத்து.இது உடல் வளர்ச்சிக்குத் தேவையானது. இதுஉடலில் நோய்த் தொற்றை எதிர்க்க உதவும். எதிர் உயிரிகளை உருவாக்கப் பயன்படும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்
பால், பாலாடைக் கட்டி,பருப்பு,பயறு வகைகள், வேர்கடலை, இறைச்சி, மீன், பேரீத்தம் பழம்,அத்திப்பழம்,திராட்சைப் பழம்,மாதுளம் பழம்,நேத்திரம் பழம் ,
வாதம் பருப்பு , எண்ணெய் வித்துக்கள், உணவுத் தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை, கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது.முதல் தர புரத சத்து பாலில் தான் கிடைக்கிறது.
மாவுச்சத்து (Carbohydrate) மற்றும் கொழுப்புச் சத்து (Fat)உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளிக்கின்றன
மாவுச்சத்து (Carbohydrate)
அரிசி, கோதுமை, மக்காச் சோளம், கேப்பை, கம்பு, தினை உள்ளிட்ட தானிய வகைகள், சர்க்கரை, தேன், வெல்லம்,உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.இது உடலுக்கு ஆற்றலை அளிக்கும்
கொழுப்புச் சத்து (Fat)
வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் வித்துக்கள், மீன், ஈரல் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. இது ஆற்றலை அளிக்கும். உயிர்ச் சத்துகள் கரைய உதவும்
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:(Vitamins and Minerals):
வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன.
வைட்டமின் ஏ
பால், தயிர், வெண்ணெய், நெய், கேரட், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிறக் காய்கள், மாம்பழம், மீன் எண்ணெய், ஈரல். ஆகியவற்றில் உள்ளது
மாலைக் கண் வராமல் தடுக்கும்.கண்களுக்கு நல்லது. உடல் செல்களைப் புதுப்பிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
வைட்டமின் ஏ1 (தயமின்):
பருப்புகள், பயறு வகைகள், முளை கட்டிய தானியங்கள், புழுங்கல் அரிசி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது. ஜீரணத்துக்கு உதவும். நன்கு பசி எடுக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும்.
வைட்டமின் ஏ2 ரிபோஃப்ளேவின்:
பால், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், பாலாடைக் கட்டி, முழுத் தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை ஆகியவற்றில் உள்ளது. வாய்ப் புண் வராது. தோலில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்.
வைட்டமின் பி:
நரம்பு தொடர்பான நோய்கள், ரத்தக் குழாய் தொடர்பான நோய்கள், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலிவு, எரிச்சல் அடையும் தன்மை, தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்க வல்லது.
வைட்டமின் சி:
கொய்யாப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு,திராட்சை, மாம்பழம், தக்காளி, முளை கட்டிய பயறுகள், வெங்காயம், கீரை வகைகள் உருளைக் கிழங்கு ஆகியவற்றில் உள்ளது
காயம் விரைவில் ஆற உதவும். எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். இயல்புக்கு மாறான எலும்பு வளர்ச்சியைத் தடுக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கும். ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.ரத்த அழுத்த அளவைக் குறைக்கும். இச் சத்து குறைந்தால் ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் கசியும்.
வைட்டமின் டி :
சூரிய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
உடலில் சுண்ணாம்புச் சத்தை கிரகிக்கும். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். குழந்தை பிறந்த பிறகு தினமும் சிறிது நேரம் வெயிலில் காண்பிப்பது எலும்புகள் வலுப்பட உதவும்.
வைட்டமின் இ :
கோதுமை, முளைதானிய வகைகள், எண்ணெய், பருத்திக் கொட்டைகள் ஆகியவற்றில் உள்ளது.
ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகரிக்கிறது. இனப் பெருக்கத்துக்கு உதவும்
வைட்டமின் கே :
முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், கீரை, கோதுமை, தவிடு, சோயாபீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் உள்ளது.
ரத்தம் உறைதலுக்கு இது அவசியம் தேவை. இச்சத்து இல்லேயேல் ரத்தப் போக்கு ஏற்படும்
வைட்டமின் நியாசின்:
மீன்.பருப்புகள், பயறுகள், முழு உணவுத் தானியங்கள், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் உள்ளது.
வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் காக்கும்
கால்ஷியம் (சுண்ணாம்புச் சத்து):
பால், பால் பொருள்கள், கீரைகள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சைக் காய்கறிகள், மீன்,கேழ்வரகு ஆகியவற்றில் உள்ளது.
எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். நரம்புகள், வைட்டமின் டி-யை கிரகித்து தசைகள் இயல்பாகச் சுருங்கி விரிய உதவுவது கால்ஷியம் சத்து கொண்ட உணவுப் பொருள்களே. கர்ப்பிணிகள், முதியோருக்கு இச் சத்து மிகவும் அவசியம். ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் கால்ஷியம் உதவுகிறது.
இரும்புச் சத்து :
தேன்,சுண்டைக்காய், கீரைகள், முழுத் தானியங்கள், பேரீச்சை உள்ளிட்ட பழங்கள், வெல்லச் சர்க்கரை, புளி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது
புரதத்துடன் சேர்ந்து உயிர் அணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதில் இரும்புச் சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து உறுதுணையாக இருந்து, ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கிறது.
பாஸ்பரஸ்:
உடலில் கால்ஷியம் பாஸ்பேட்டாக கால்ஷியம் சேமிக்கப்படுகிறது. எலும்பு, பற்களில் இவ்வாறு அது சேமிக்கப்படுகிறது.
பொட்டாஷியம்:
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாஷியம் உதவுகிறது. சீரான இதயத் துடிப்பு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுத்தல் ஆகியவற்றுக்கும் பொட்டாஷியச் சத்து உதவுகிறது.
அயோடின் :
அயோடின் கலந்த உப்பை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளிலும் இச் சத்து உள்ளது.
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதன் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் வரும். தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க இது தேவை
பிற சத்துக்கள்:
பீட்டா கேரடீன்-கீரைகள்.
இஸாபிளேவோன்ஸ்-சோயா
லைக்கோபீன்-தக்காளி
கர்க்குமின்-மஞ்சள் தூள்.
நார்ச்சத்து:
தானிய வகைகளில் காணப்படுகிறது.இது இரைப்பை-குடலின் இயல்பான செயல்தன்மைக்கு வழி வகுத்து மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
காய்கறிகளை இரும்புச் சத்து - நார்ச்சத்தைக் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், மாவுச் சத்தை அளிக்கக்கூடிய உருளை - சர்க்கரைவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், நார்ச் சத்தை அளிக்கக்கூடிய பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப் பிரித்துக் கொள்ளலாம். எனவே எந்தக் காயையும் உணவில் ஒதுக்கக்கூடாது.
வெண்ணெய், நெய், டால்டா, தாவர எண்ணெய்களிலிருந்து கொழுப்புச் சத்து மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், வைட்டமின் இ சத்தும் கிடைக்கிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்:
நம் உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உயிர் வேதியியல் மாற்றங்கள் நடக்கும் போது ‘‘free radicals’’ என்பவை உடலில் சேருகின்றன. இதை Oxidative Stress என்கிறோம். இந்த ப்ரீ ரேடிகல்ஸ் சர்க்கரை நோய், இதய நோய், கண் புரை, புற்று நோய் போன்ற நிலைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
நீர் சத்து:
நீர்ச் சத்தை அளிக்கக்கூடிய குடிநீர், இளநீர், மோர் ஆகியவற்றையும் மறந்து விடாதீர்கள். நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை.

யாருக்கு என்ன சாப்பிடலாம்?
பொதுவாக இந்தியர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகள்:
1. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2. ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, இ, மற்றும் பீட்டாகரோட்டின்.
3. ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4. இரும்பு, கால்ஷியம்.
5. இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள்.
அசைவ உணவில் தாவரங்களில் இருந்து கிடைக்கும் கரோட்டின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை.சைவ உணவிலும் முழுமையாகச் சத்துக்கள் கி்டைப்பதில்லை. முக்கியமான ஃபேட்டி அமிலங்கள் மீனிலிருந்துதான் கிடைக்கின்றன. எனவே இரு வகை உணவையும் கலந்து உண்பது தான் எல்லா சத்துக்களையும் பெறும் வழி.
முதல் தர புரதத்துடன் அனைத்து விதமான ஊட்டசத்தும் பாலில் உள்ளதால், குழந்தைகள்,இளம் பருவத்தினர் யாவரும் பால் சாப்பிடுவது மிக முக்கியம். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கோப்பை பால் அருந்துவது நல்லது. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை பால் கொடுப்பது நல்லது.அதிலும் குழந்தை பிறந்த உடன் சீம்பால் கொடுக்கத் தவறக் கூடாது. மிகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி சீம்பாலில் உள்ளது. உடல் பருமன், சர்கரை நோயுள்ளவர்கள் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பாலை அருந்தலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி பால் சாப்பிடலாம்.
தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் பிரச்னை ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில் நார்ச்சத்து, தாதுச் சத்து, வைட்டமின்கள் என நோய் எதிர்ப்புச் சக்தியை உள்ளடக்கிய இயற்கை "டானிக்' பழங்கள்தான். வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை ஆகியவை நல்லது. பச்சைக் காய்கறிகளில்,பழங்களில் தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் உள்ளன.
வெள்ளைப் பூண்டு இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், முருங்கைக் கீரை உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ் போன்றவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.

தினசரி உணவு
உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமதுஅன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.
காலை உணவு:
காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக தென்னிந்தியர்களின் பழக்கத்துக்கு ஏற்ப காலையில் இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிக அவசியம். எனவே காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப் படவேண்டும், ஏதாவது ஒன்று மட்டும் போதாது. சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியைப் பொருத்தவரை புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தக்காளி சட்னிகளில் வைட்டமின் சத்து கிடைக்கும்.சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்லது. இட்லி, பொங்கல், தோசை போன்வற்றில் ஏற்கெனவே பருப்பு சேர்க்கப்பட்டாலும் சம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு "டால்' சேர்த்துக் கொள்ளலாம். ரொட்டி என்றால் வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் காய்களைத் துண்டுகளாக ("சான்ட்விச்' ) வெட்டிச் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

காலை 11 மணி: மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ சாப்பிடக் கூடாது.

மதிய உணவு: மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர் ஆகியவையே சரிசமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப்பட்ட கூட்டு அவசியம். ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப்படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
சிப்ஸ், வடாம், அப்பளம் வேண்டாம்: இதனால்உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற்சொன்ன காய் பொரியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எவ்விதப் பலனையும் தராது. ரசத்தில் போதிய ஊட்டச்சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக்கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளிக்காய், வெங்காயம்) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.

தேநீர் நேரம்: தேநீர் நேரத்தில் (மாலை 4 மணி முதல் 5-க்குள்) தேநீருடன் ஏதாவது சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். முடிந்தால் அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதும் நல்லது. எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு: இரவு உணவு மதியச் சாப்பாடு போல இருக்கலாம் அல்லது டிபன் சாப்பிடலாம். இரவு சாப்பாத்தி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பருப்பு கலந்த கூட்டு அவசியம். எல்லாச் சத்துகளும் அடங்கிய உணவை என்றோ ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதாது. தினமும் சமவிகித ஊட்டச் சத்து அடங்கிய உணவில் அக்கறை செலுத்தவேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகையைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?:
இன்று சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடம் ரத்த சோகை 60 முதல் 78 சதவீதம் வரை காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் கருக் கலைந்து விடுதல், போதிய வளர்ச்சி இல்லாத சிறு குழந்தை, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி இடம் மாறியிருத்தல், பிரசவத்தின் போது தாய் இறத்தல், குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பொய்யாக பிரசவ வலி ஆகிய விளைவுகள் ஏற்படும்.மேலும் கருவில் வளரும் குழந்தையின் முதுகு எலும்பு வளர்ச்சிக்கும் நச்சுக் கொடி உருவாவதற்கும் ஃபோலிக் அமிலச் சத்து (இரும்புச் சத்து) அவசியம்.
ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவல், அருகம்புல் சாறு, வெல்லம், பேரீச்சம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.கர்ப்பம் தரித்த உடனேயே காபி, டீ குடிப்பதை கர்ப்பிணிகள் நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை கிரகிக்க முடியாமல் காபி - டீ-யும் தடுத்து விடுகின்றன. பால் குடியுங்கள்.

மிக முக்கியமான உறுப்பான மூளைக்கும் ரத்த ஓட்டம் இருந்தால்தான் செயலாற்ற முடியும். மூளை இருப்பது முக்கியமல்ல, அதை உபயோகிப்பதுதான் முக்கியம் என்பது தெரிந்தாலும், சரியான முறையில் சிந்தனையைச் செலுத்துவதும் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதையே நினைத்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

படபடப்பு, எரிச்சல், சோர்வு, ஏமாற்றம் - இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாததால் நிகழும் கேடு. ஆசையை தவிர்த்தால் நாமே கேட்டு வாங்கும் பல துன்பங்கள் வராது.தூக்கமின்மை, ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, மூட்டு வலி, தோல் நோய் சில வகையான புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, பால்வினை நோய்களுக்கு ஆசைதான் வித்து என்பதை மறந்து விடாதீர்கள்.

மேலும் அறிய:

உடல் பருமனா? உணவை மாற்றுங்கள்

Nutrition and Your Health:

Download As PDF

21 December 2008

சாலையில் சாகசம்

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் செப்பனிடப்பட்ட சாலைகள் எல்லாம் சமீபத்தில் பெய்த மழையில் வாய் பிளந்து உயிர்களை கபளீகரம் செய்ய காத்துக் கிடக்கிறது. இங்குள்ள சாலைகளில் டூ வீலரில் பயணம் செய்வதற்கு மரணக் கிணறில் சாகசம் செய்யும் திறமை வேண்டும். சாலைகள் எங்கும் அடுத்தடுத்து பெரும் பள்ளக்களில் தலை குப்புற விழுந்து உயிர் போகாமல் ஒழுங்காய் வீடு போய் சேர வேண்டுமானால், "பைக்கில் , உயரம்,நீளம் , ஆழம் எல்லம் தாண்ட தெரிந்திருக்க வேண்டும். இதனால் தான் இப்போதெல்லாம் மரணக்கிணறு, ராட்டினங்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் அலுத்து விட்டது.
இரவானால் பல இடங்களில் தெருவிளக்கு கூட இல்லாததால், வழியில் எமன் பாசக்கயிறுடன் காத்திருந்தாலும் கண் தெரியாமல் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது. கார்களை விட டூவீலர்களுக்கு ஹெட் லைட் வெளிச்சமும் குறைவு. இடுங்கிய ரோடுகளில் எதிரே வாகனம் வந்தால் நூலிடைவெளியில் பயணம் . ஒருபக்கம் பார லாறி மறுபக்கம் பாதாளம் எனுமளவு ரோடு விளிம்புகள். கடந்து விட்டால் அடுத்த பிறவி. இது போதாதென்று எந்த ரோடு சைனும் இல்லாமல் திடும் திடுமென ஹம்புகள். விழாமல் தப்பித்தாலும் நிறுத்தி எலும்புகளை அதன் சரியான இடத்தில் எடுத்தி பொருத்திவிட்டு ஓட்டுவது பொதுவாக நல்லது. வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது செல் போன் அவசரமாக அடிக்கும். எடுக்க வேண்டாம் . எடுத்தால் சில வேளை "இன்னும் உனக்கு இங்கெ வந்து சேர நேரம் வர வில்லையா ?" என்று ஏற்கனவே போய் சேர்ந்த முன்னோர்களின் அழைப்பாக இருக்கலாம். அதோடு அவர்களை நேரில் காணும் ப்ராப்தியும் கிடைக்கலாம்.

எவ்வளவுதான் நாம் கவனமாக போனாலும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப்படாத தற்கொலைப் படைகள் வாகனங்களை ஓட்டி வந்து என்னோடு வர்ரியா? கடவுளை பார்க்கலாம் என்று பயமுறுத்துகி்றார்கள். குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அதனால் எங்காவது போய் இடித்தாலும், உடனே எங்கே சாராயக்கடை என்று தேடி ஒரு ~புல் போட்டு விட்டு நிதானத்திற்கு வருகிறார்கள். இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கண்ட கண்ட இடங்களில் திடீரென ரோட்டின் குறுக்கே பாயும் பாத சாரிகள். அட இந்த முறை நீ தப்பித்தாய்! என்று நம்மை கிளித்தட்டு விளையாடுவார்கள். வேகமாக போனாலும் அவ்வளவு ஆபத்தில்லை, மெதுவாகப் போனால் நம்மை சர் சர்ரென ஒவர் டேக் செய்யும் வண்டிகள் போகிற போக்கில் தட்டி இழுத்துகொண்டுப் போய் விடுவார்கள். இண்டிகேட்டரை போடாமல் படக்கெனெ திரும்பும் வண்டிகள், நடு ரோட்டில் வண்டியை விட்டு டீ குடிக்கப்போகும் ட்ரைவர்கள், வளைவுகள் வண்டியை நிறுத்தி ஆளெடுக்கும் பேருந்துகள் என எத்தனை ஆபத்துகள் வழியில், யாருக்குப் பொறுப்பு?

தண்ணீர், குப்பை , மணல், ஜல்லி, கழிவுப்பொருள் என பாரங்கள் ஏற்றிக் கொண்டு ரோடு முழுக்க விசிறியடித்துக் கொண்டு முன்னால் செல்லும் வாகனங்கள், என்னேரமும் ரோட்டில் போவோர் தலையில் விழக்கூடிய நிலையில் கருங்கற்களை பாதுகாப்பின்றி ஏற்றிச்செல்லும் வண்டிகள். பிரேக் இட்டால் மூளையை கடந்து செல்லுமோ எனக்கருதும் வகையில் நீண்ட கூரிய கம்பிகளை ஏற்றிவரும் லோடு ஆட்டோக்கள். நிறை மாத கற்பிணி போல் பஸ்கள், மக்களை குலுக்கி குலுக்கி ஏற்றி அடைத்துக்கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து செல்வதைக் கண்டால் திருப்பத்தில் கவிழுமோ என மனம் பதைக்கும். ஒரு வகுப்புக்குத் தேவையான அளவு பள்ளிக் குழந்தைகளை நசுக்கி அடைத்துக்கொண்டு , இருபுறமும் இறக்கைகள போல் புத்தகப்பைகளுடன் ரோட்டை அளந்து கொண்டு பறக்கும் ஆட்டோக்களை யார் பார்க்கிறார்கள்?
கண்ணீர் புகை போல் பெரும் புகையை கருப்பாக விட்டுக்கொண்டு காற்றை மாசுபடுத்தும் வாகனங்கள் இவற்றால் குளித்து புத்தாடையணிந்து புறப்பட்ட நாம் போய் செரும் போது குண்டு வெடித்த இடம் போல் ஆகியிருப்போம்.
பெரும் ட்ராபிக் ஜாமை உண்டாக்கி கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்காமல் ரோட்டை அடைத்துகொண்டு மெதுவாய் ஊர்ந்து செல்லும் பார வண்டிகள். ஆடு , மாடுகள் கூட ஆட்டோக்களை போல தெருவில் திரிகின்றன. அது வரை காத்திருந்து டூ வீலரின் எதிரே படக்கென்று குறுக்கே பாயும் நாய்கள். நாயின் மீது வண்டியை ஏற்றியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார், வண்டியும் அஷ்ட கோணலாயிருக்கும். நாயோ வள் என்று ‘ஹாரன்’ அடித்து விட்டு டைவ் அடித்து கூலாக பறந்து விடும்.
கதவை திறந்து வைத்துகொண்டு படியில் ஸ்பைடர்மேனாகத் ஒரு" கிளி" (னர்) தொற்றிகொண்டு சாலையில் பறக்கும் மினி வேன்கள் நம்மை அறைந்து விடாமல் இருக்க ஒரு கண் நம் காதுக்கு அருகிலும் தேவை. வண்டியின் முன் விழுவதைப் போல் ஹேண்டிலை இப்படியும் அப்படியும் வெட்டித்திருப்பி ஹாயாக நடு ரோட்டில் பயணிக்கும் சைக்கிள் வீரர்கள். இரவில் ஹெட் லைட்டோ, பின்னால் ரிப்லெக்டரோ இல்லாமல் இருட்டில் திடீரென தோன்றும் சைக்கிள்கள், அவர்களுக்கென்ன பின்னால் வருபவர்கள் பார்த்து ஓட்டிக்கொள்வார்கள் என அவ்வளவு நம்பிக்கை. முழு இருட்டில் கருப்பு சட்டையணிந்து நடு ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் தெரிவதில்லை எதிரே வரும் வாகன வெளிசசத்தில் சிறிது நெரம் கண் குருடாகும் வாகன ஓட்டிகள் தன் விதியை எழுதிச்செல்லக் கூடுமென்று.

மாலை மயங்கும் வேளைகளில் ஹெல்மெட், அல்லது கண்ணாடி இல்லாமல் இரு சக்கரவாகனங்களில் செல்வது மிகுந்த ஆபத்து. சில வகை பூச்சிகள் வேகமாக கண்ணில் வந்து மோதி நிலை குலையச்செய்துவிடும். எல்லோரும் பிறருக்கு மட்டுமே விபத்து நடக்கும், நமக்கு ஒன்றும் ஆகாது என நினைத்துக்கொண்டிருந்தாலும் சில வேளை பல்வேறு காரணங்கால் நாம் விபத்துக்கு இரையாக நேர்ந்தால் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் அடி படாமல் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்களில் தலைக்காயங்கள் காரணம் தான் உயிரிழப்பு அதிகம்.
விபத்துக்கள் தன்னை திருத்திகொள்ள வாய்ப்பே தருவதில்லை. ஹெல்மெட் அணிவதில் சில் அசௌகரியங்கள் இருந்தாலும், தக்க சமயத்தில் உயிர் காக்க்கும். எனவே அலட்சியப்படுத்தாதீர்கள்.

எல்லா வண்டிகளிலும் ஒரு முதலுதவி கிட் இருக்கும், தேவையான நேரங்களில் அதை மறந்து தொலைக்காமல் சரியாக உபயோகப்படுத்த வேண்டும். முன்பே அதை எப்படி பயன் படுத்துவது என் தெரி்ந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இயற்கை கூட டூ வீலர்காரர்களை விட்டு வைப்பதில்லை. கொழுத்தும் வெயிலாகட்டும், புழுதிக்காற்றாகட்டும், திடீரென கொட்டும் மழை சிலவேளை ஒதுங்க இடம் தேடினால் கிடைத்தால் தானே. எல்லாவற்றையும் வெற்றிகரமாக திறமையாக தாண்டி வந்தால் நிறுத்து! என ட்ராபிக் கான்ஸ்டபிள். எல்லா பேப்பர்களுடன் பர்சையும் மறக்காமல் வைத்திருங்கள்.
ஒலிம்பிக்கில் இத்தனை சாகசங்களுடன் இது போன்ற போட்டியிருந்தால் இந்தியாவும் தங்கம் குவிக்கும். இத்தனை த்ரில்லும், விறுவிறுப்பும் சாகசமும் இருப்பதால் தான் இன்று மக்கள் டூ வீலரை அதிகம் விரும்புகிறார்களோ?

தரமற்ற ரோடுகளை இடுவதால் கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணாகிறது, சுருட்டப்படுகிறது. மோசமான ரோடுகளால் எவ்வளவு உயிர்சேதம், எத்தனை குடும்பங்கள் அனாதையாகிறது? எத்தனை வாகனங்கள் பழைய இரும்பாகின்றன? இதோடு ட்ராபிக் ஜாம் ஆகி தினமும் எவ்வளவு டீசலும் பெட்ரோலும் வீணாகிப் போகிறது? அதனால் காற்று மாசு படுகிறது. மக்களின் வேலை பார்க்கும் நேரம் குறைந்து பயன்படாத பயண நேரம் அதிகரிக்கிறது. எவ்வளவு மருந்துகள், மருத்துவச்செலவுகள்? எத்தனை ஊனமுற்றவர்களை உற்பத்திசெய்கிறது? இந்நிலைக்கு யார் காரணம், யார் இதை மாற்றுவது? அதுவரைக்கும் கடவுள்? நம்மைக் காக்கட்டும்.

Download As PDF

17 December 2008

உடல்நலக் குறிப்புகள்

 • உயிர் வளர்க்கத் தேவையான எல்லா சத்துக்களும் நிறைந்த சரியான உணவை அன்றாடம் தவறாமல் உண்பதே ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வை அடையும் வழி.
 • பழங்களையும், வேகவைத்த காய்கறிகளும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலின் எடையை அதிகரிக்கமலேயே உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் வழங்கி ஆரோக்கியம் காக்கிறது.
 • மன இறுக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். எரிச்சல், கோபம், டென்சன், மன இறுக்கம் யாவும் உடலில் கார்டிசோல் -எனப்படும் ஸ்டீராய்டைச் சுரக்க செய்து உடலின் வளர் சிதை மாற்றங்களை மந்தப்படுத்திவிடுகிறது. இதனால் உடல் எடை கூடிவிடும்.முக்கியமாக தொப்பையை உருவாக்கும்.
 • தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள கரோட்டினாயிடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதய நோய், மற்றும் புற்று நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. தக்காளியில் விட்டமின் சி எராளம் இருக்கிறது. ஆனால் இதை சமைக்கும்போது பெரும்பாலான விட்டமின்கள் அழிந்து விடுகிறது.
 • முட்டை, மற்றும், கேரட்டில் காணப்படும் விட்டமின் ஏ, தோல் உலர்ந்து போவதை தடுத்து முதுமை தோற்றத்தை தள்ளிப் போடுகிறது.
 • தினமும் எட்டு முதல் பன்னிரெண்டு கோப்பை தண்ணீர் அருந்துவது உடலில் தேங்கும் நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
 • பொரித்த உணவு வகைகள் உண்பதை கோடை காலங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிமான கொழுப்புணவு உடலை மேலும் சூடாக்கும்.
 • கோடை காலங்களில் சில்லென்ற குளிர் பானங்கள் அருந்துவது, உண்மையில் இரத்தக்குழய்களை சுருங்கச் செய்து ,தோல் வழியே வெப்பம் வெளியேறுவதை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பம் குறைவதில்லை.
 • காலை எழுந்ததும் ஒரு கோப்பை வெது வெதுப்பான தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்துங்கள்.இது உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதுடன் தோலையும் பளபளப்பாக்கும்.
 • டீ ,காபி போன்ற ஊக்க பானங்கள், உடலின் தண்ணீர் தேவையை அதிகரித்து தோலை வறட்சியடையச் செய்கிறது. இதற்குப் பதில் பழ ரசங்கள் அருந்தலாம். அதிக பட்சம் இரு கோப்பை டீ ஒரு நாளைக்குப் போதுமானது. அதிலும் சர்கரையின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
 • உடல் எடை குறைய ஸ்கிப்பிங் செய்வது உதவாது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. கொழுப்பை கரைப்பதற்குப்பதில் தண்ணீரையும், திசுக்களையும் தான் இழக்கச்செய்கிறது.
 • சர்க்கரை அதிகம் சாப்பிடுவது கண்ணொளி மங்கச்செய்கிறது. உணவு செரிக்கத்தேவையான என்சைம்களின் திறனைக் குறைக்கிறது. இது பான்கிரியாசுக்கு வேலைப்பளு உண்டாக்குகிறது. இரத்த்தில் சேரும் கொழுப்பின் அளவில் மாவுச்சத்திலிருந்து உண்டாகும் கொழுப்பின் அளவை விட 2 முதல் 5 மடங்கு சர்க்கரையிலிருந்து தான் உண்டாகிறது.
 • இரும்பு சத்துக் குறைபாடு கண்ணைச் சுற்றி கருவளையம் உண்டாக்கும்.
 • ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
 • வெங்காயம் மிகச்சிறந்த ஆன்றி ஆக்ஸிடன்ட் ஆனதால்அலர்ஜி மற்றும் வைரசுகளுக்கு எதிரான குணமுடையது.
 • நிலக்கடலை புற்று நோயை உருவாக்கக் கூடும். அதில் பூஞ்சைகளும், கிருமிநாசினிகளும் காணப்படலாம்.
 • வாழைப்பழம் -உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதில் அதிக அளவு பொட்டாஷியம், குறைந்த அளவு உப்பு உள்ளது.
 • பால் சேராத கருப்பு சாக்லேட்டுகளில் இரத்தக்குழாய்களை பாதுகாக்கும் ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது நல்லது. இது மாவு சத்து, குளுகோசாக மாற்றமடைவதை மட்டுப்படுத்துகிறது
 • தூங்கும்போது தலைக்கு இரண்டு தலையணை வைத்துக் கொள்ளாதீர்கள். முதலில் சுகமாக இருக்கும். காலப் போக்கில் கழுத்து வலி நிச்சயம். தலையணையே வைக்காமல் அல்லது மெலிதான தலையணை வைத்துக் கொண்டு படுப்பது நல்லது். மூளைக்கு ரத்தம் சீராகச் செல்லும். கழுத்துக்கும் நல்லது
 • மிருதுவான மெத்தை நல்லது அல்ல. கடினமான மெத்தையே முதுகுக்கு நல்லது.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்காதீர்கள். அவ்வப்போது எழுந்து நடக்கப் பழகுங்கள். உட்கார்ந்து வேலை செய்யும் போது நாற்காலியில் முதுகு ஒட்டியிருக்கட்டும். ஏனெனில் முதுகுக்கு ஆதரவு தேவை.
 • அதிக எடை உள்ள பொருள்களைத் தூக்கி முதுகுக்குக் கஷ்டம் கொடுக்காதீர்கள். அதிக எடை உள்ள பொருள்களை முன்னால்குனிந்து தூக்காதீர்கள். பொருளுக்கு நேராக உட்கார்ந்து தூக்குங்கள். இப்படிச் செய்தால் முதுகு, இடுப்புப் பிடிப்பைத் தவிர்க்கலாம்.
 • காதில் அழுக்கிருந்தால் ஊசி, ஹேர் பின், பென்சில், குச்சி ஆகியவற்றாலோ பஞ்சு சுற்றிய குச்சிகள் கொண்டோ அகற்ற முயற்சிக்கக் கூடாது. இவற்றால் செவிப்பறை கிழிந்து நிரந்தரக் காது கேளாமை நேரலாம். காதுகளைத் தினமும் சுத்தம் செய்யத் தேவையில்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதி இயற்கையாகவே காதுக்கு உள்ளது.
 • தோலில் வியர்வை உண்டாவதுபோல் காதில் எண்ணெய்ப் பசை கொண்ட குருமிகள் உள்ளன. இவ்வமைப்பு எறும்பு போன்ற சிறு
  பூச்சிகள் காதுகளில் நுழையாது தடுக்கின்றன. ஒருவேளை பூச்சிகள் நுழைந்துவிட்டால், சிறிது உப்பு கலந்த நீரைக் காதுக்குள் விட்டால் போதுமானது. பூச்சிகள் இறந்து மிதக்கும்.
 • தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி அணிந்து கொள்வது தலைவலியைப் போக்கப் பயன்படாது. மேலும் பார்வைத் திறனில்
  உள்ள குறைபாடு காரணமாகவே தலைவலி தோன்றுவதால் அக் குறை நீக்கத் தரப்படும் கண்ணாடியை வலி நிவாரணியாகக் கருதாமல், பார்வை மேம்பாட்டுச் சாதனமாகக் கொண்டு எப்போதும் அணிவது அவசியம்.
 • சர்க்கரை நோயாளிகளும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கண் சோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளிலும் பார்வைத் திரை ("ரெட்டினா') ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவேற்பட வாய்ப்பு உண்டு. இக்கசிவுகள் பார்வைக் குறைவையோ, பார்வையிழப்பையோ உண்டாக்கக் கூடுமாதலால் முன்னெச்சரிக்கை தேவை.
 • தூசு விழுந்த கண்ணைக் கசக்குவதோ, தேய்ப்பதோ கூடாது. கண்ணை மூடி ஐந்து நிமிஷம் இருந்தால் போதும். தூசு ஏற்படுத்தும் உறுத்தலால் பெருகும் கண்ணீர் வெள்ளம், அந்தத் தூசை வெளியே கொண்டு வந்து விடும். ஐந்து நிமிஷக் கண் மூடலுக்குப் பிறகும் தூசு இருப்பதாக உணர்ந்தால், கண் மருத்துவரிடம் சென்று தூசை அகற்றிக் கொள்ள வேண்டும்.
 • தோலில் வியர்வைத் துளைகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. அதனால் குளிக்கும்போது எதிர்ப்புறமாய், அதாவது மேல்நோக்கித் தேய்த்துக் குளிக்க வேண்டும். வழித்துவிட்டாற்போல் கீழ்த்தேய்ப்பு செய்து குளித்தால் பயன் ஏதுமில்லை. அடைத்திருக்கும் வியர்வைத் துளைகளைத் திறந்துவிட எதிர்த் தேய்ப்பு உதவும்.
 • உதடுகளிலும் வாயின் உட்புறத்திலும் ஏற்படும் குழிப் புண்கள், பி - காம்ப்ளெக்ஸ் சத்துக் குறைவாலும் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. இப் புண்கள் மரபு வழித் தொடர்புடையவை. அமைதியின்மை, மன இறுக்கம், ஓயாத சிந்தனை ஆகியவற்றைத் தவிர்த்து தியான முறைகளைப் பின்பற்றுவது தொடர் துன்பம் தவிர்க்கும். ஈஸ்டு சத்துள்ள மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.
 • குழந்தையின் கன்னம், காதுப் பகுதிகளில் அறைவது மிகவும் ஆபத்தானது. இத்தகு கோப அறைகள் காதிலுள்ள செவிப்பறை கிழியக் காரணமாகி விடுகின்றன. அடி பலமாக இருந்தால் காது நரம்பு முற்றிலுமாய்ப் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
 • மிக அதிகமாகப் புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் உடல் உறுப்புகளுள் நாக்கும் ஒன்று. நாட்பட்ட ஆறாத புண், நாக்கின் பக்கப் பகுதிகளிலோ அல்லது கீழ்ப் பகுதியிலோ ஏற்படும் கட்டிகள், வீக்கம் ஆகியவை ஆபத்தானவை. நாக்கில் ஏற்படும் சாதாரண புண்கள் 15 நாள்களுக்குள் ஆறாவிட்டால் மருத்துவரைப் பார்ப்பது பாதுகாப்பானது.
 • பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போது சரிவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்திக் காலைத் தாழ்த்தி வைத்தபடி கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும் போது காது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 • இமைக் கட்டிகள் "சூட்டால்' வருவனவல்ல. இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் தொற்றும் அடைப்புமே இத்தகு சீழ்க்கட்டிகளுக்குக் காரணிகள். பெரும்பாலான சீழ்க் கட்டிகளை மருந்திட்டுச் சரிப்படுத்தலாம். சீழ் இறுகிப் போகும் நிலையில் சில கட்டிகளை அறுவையால் மட்டுமே சரி செய்ய முடியும்.
 • தோலைப் பாதுகாக்க குளியல் சோப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதிகக் காரத்தன்மை கொண்ட சோப்புகளைப் பயன்படுத்துவதில் புத்துணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அது தோலைப் பாதிக்கும்.
 • சொறி, சிரங்கு, பூஞ்சை ஆகியவை பரவலாகக் காணப்படும் தோல் நோய்கள். குறுகிய இடங்களில் அதிகம் பேர் வசிப்பது, குளியலறை வசதியின்மை போன்றவையே சொறி நோய் ஏற்படக் காரணம். இந் நோயில் ஏற்படும் அரிப்பு இரவில் அதிகமாக இருக்கும். கந்தகம் கலந்த களிம்பு மூலம் இதைக் குணப்படுத்தலாம்.
 • ஒவ்வாமை காரணமாகத் தோல் நோய் உள்ளவர்கள், அமிலத் தன்மை வாய்ந்த தக்காளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, சர்க்கரை, குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 • நாக்குப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளில் ஒன்று புகையிலை. வாயில் புகையிலையை நெடு நேரம் அடக்கியிருப்பது கன்னப் புற்றையும், நாக்குப் புற்றையும் உண்டாக்கலாம். புகையிலையைப் போலவே, நாக்கில் உரசி அடிக்கடி புண்ணேற்படுத்தும் ஒழுங்கற்ற பற்களும் ஆபத்தானவை. பல் மருத்துவரிடம் காட்டி இத்தகு சீரற்ற பற்களைச் சீரமைத்துக் கொள்வது அவசியம்.

Download As PDF

16 December 2008

மருத்துவரை காணும் முன்.....

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக உள்ள நேரம் உடல் நலனைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. உடல் நலத்தை கெடுத்துக் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பின்னாளில் எல்லாவற்றையும் ஆஸ்பத்திரிகளுக்கு வாரிக் கொடுத்து ஓட்டாண்டிகளாகிப் போவதுண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்ககூடாது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அப்புறம் தான் மற்ற எல்லாம். எவ்வளவு பணம் கிடைப்பினும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வேலை செய்து சம்பாதிக்காதீர்கள். உடல் நலத்தை கெடுக்கும் எந்த பழக்கங்களுக்கும் பின்னாளில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
யாரிடம் போவது?
சின்ன உடல் நலக்குறைவுகளுக்குப் பெரிய மருத்துவமனைகளைத் தேடி ஓடாதீர்கள். குடும்ப மருத்துவர், அல்லது அரசு மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள். சாதாரண நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களைவிட பொது மருத்துவர்களே போதுமானது அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவம் செய்வது நலம் .

சரியான மருத்துவரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாவும், ஆய்வகங்கள், அவசர சிகிட்சைக்கான வசதிகள் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதா என பார்க்கவும். நியாயமான கூலி வசூலிக்கிறதா? இல்லை பணம் பிடுங்குவதையே பிரதானமாக கொண்டுள்ளதா?என பிறர் அபிப்பிராயத்தை கேட்டுக்கொள்ளுங்கள்.

மாற்று மருத்துவம்: எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் தான் சிறப்பு என்றில்லை. பல நோய்களுக்கு அதை விட சிறப்பான மாற்று மருத்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு மருத்துவர் இதற்கு ஆப்பரேசன் தான் தீர்வு என்றால் ஒரு மாற்று மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.
மற்ற மருத்துவங்களை விட அலோபதி வேகமாக பலன் தருவதால் உயிருக்கு ஆபத்தான நேரங்களில் அலோபதி தான் கை கொடுக்கும். ஆனால் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. அலோபதி மருந்துகள் பொதுவாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. நோய், மற்றும் நோய் குறிகளையே கவனிக்கிறது.
அறுவை சிகிட்சை, மற்றும் கிருமித் தாக்குதல்களுக்கு அலோபதியே வேகமாகவும் நம்பகத் தன்மையுடனும் செயல்படுகிறது. விபத்துக்கள் நேர்ந்தால் தகுந்த முதலுதவி செய்து முடிந்த அளவு வேகமாக எலும்பு முறிவு தலைக்காயம், போன்ற அவசர சிகிட்சை மையங்களுக்கு எடுத்து செல்லவும். விபத்துகளில் கை கால் முறிந்தவர்கள் சரியான எலும்பு முறிவு நிபுணர்களிடம் சிகிட்சை பெறாமல் லோக்கல் வைத்தியர்களிடம் போய் எலும்புகள் சரியாக பொருந்தாத நிலையில் மாவுக்கட்டுப் போட்டு நிரந்தர ஊனமுற்றவர்களாக பலர் நடமாடுவதை கிராமங்களில்காணலாம்.

ஹோமியோபதி மருந்துகள் நோய்க்கு கொடுப்பதில்லை நோயாளிகளின் தன்மையே நோய்க்குக் காரணம் என்று அதற்க்கேற்றவாறு நோயாளிக்குத்தான் மருந்து கொடுக்கிறது. எனவே பக்க விளவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் நீண்ட சி்கிட்சை தேவைப்படும்.

சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகள் மனிதன் தன் அனுபவத்தால் சேகரித்த அறிவு. பல நோய்களுக்கு எளிய மருந்துக்களை கொண்டுள்ளது. சரியான ஆராய்ச்சிகள் இல்லாததாலும் உடனடி நி்வாரணத்தை மக்கள் விரும்புவதாலும் நம் நாட்டில் தோன்றிய இந்த அரிய அறிவின் முழு வீச்சும் வெளிப்படாமல் புதைந்தே கிடக்கிறது. சித்த மருத்துவத்திலும் ஒரளவுக்கு பக்க விளைவுகள் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனாலும் இது இயற்கையோடு இணைந்த ஓர் மருத்துவ முறை.

அக்குபஞ்சர், அக்கு பிரசர்,வர்ம மருத்துவம் யாவும் நரம்பு மண்டலங்களைத் தூண்டி செயல்படும் மருத்துவ முறைகள்.

ஏமாறாதீர்கள்

பொதுவாக பல மாற்று மருத்துவங்கள் அனேகம் விஞ்ஞானத்தால் சரிபார்க்கப் படாதது, அது நிச்சயமான பலன் தரும் என நிரூபிக்கப்படாதது. இதனால் நிறைய போலி மருத்துவர்களும், போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளன. விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காதீர்கள். மொட்டைத் தலையில் முடி முளைக்கும் மருந்துகள். ஆண்மை பெருக காயகல்பங்கள், பஸ்பங்கள், லேகியங்கள். எய்ட்ஸ், மற்றும் புற்று நோய்க்கான மாற்று வைத்திய முறைகளில் பெரும்பாலானவை போலியானவை. மக்களின் அறியாமைய பயன்படுத்தி வெறும் மாவுகளை கொடுத்து விட்டு பெரும் பணத்தை கொள்ளை அடிக்கும் பல போலி லாட்ஜ் வைத்தியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.
மந்திரவாதிகள், பேயோட்டிகள், தோசம், பரிகாரம் என ஏதும் உங்கள் நோய் தீர்க்க நிச்சயம் உதவாது. இத்தகைய மோசடிகளில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். மோசடி செய்வதில் சில அலோபதி டாக்டர்களும் சரி மேல் நாட்டு கம்பனிகளும் சரி சளைத்தவர்கள் அல்ல. இன்னும் தொப்பை குறைக்கும் கருவி , சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம் , தவளை வைத்தியம், காந்த வைத்தியம், கரண்ட் வைத்தியம், எய்ட்ஸ் மூலிகை, என பல பொருட்கள் விளம்பரங்கள் மூலம் தலையில் கட்டிவிடுவார்கள்.
அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கடவுள் சித்தத்தால் இந்நோய் வந்தது அவரே தீர்க்கட்டும் என வெறும் பிரார்த்தனை மட்டும் செய்துவிட்டு எந்த மருத்துவமும் செய்யாதிருந்தால் கடவுளும் கண்டு கொள்ளமாட்டார். விரைவில் அவரைத் தேடிப்போக வேண்டிவரும்.
அதிகம் அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் உடம்பைப்பற்றியும் அது எப்படி நோயுறுகிறது என்பது பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்து கொள்வதே உங்ளுக்கு சிறந்த தற்காப்பு. மேலே நாடுகளில் மருத்துவத் துறைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் திருத்தங்களும் முன்னேற்றங்களும் இன்னும் பல மருத்துவர்களை அடைய வில்லை என்பதே உண்மை. அவர்களில் பலர் இன்னும் தவறான சிகிச்சையையும வெளிநாட்டில் கைவிடப்பட்ட, தடை செய்யப்பட்ட மருந்துகளையும் எழுதித்தரகூடும்.

இருதய நோயாளிகள், வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டு தொலைபேசி எண்கள், முகவரி, இரத்த க்ரூப் எல்லாம் தங்களுடன் எழுதி வைத்திருப்பது அவசர நேரங்களில் கை கொடுக்கும். பக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் மொபைல் எண் உங்கள் கைப்பேசியில் பதித்துக்கொள்ளுங்கள்.

நம்மைச்சுற்றி எங்கும் நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கிறது. அவற்றின் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க சுகாதாரமான சூழலில் வாழ வேண்டும். அதிக நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே தேவையான தடுப்பு மருந்துக்களை இட்டுக்கொள்ள வேண்டும். போலியோ,மஞ்சள் காமாலை, யானைக்கால், காச நோய்களை, வருமுன்னே தடுத்துவிடலாம்.
அலட்சியம், விழிப்புணர்வின்மை, பாதுகாப்பு முன்னெச்செரிக்கையற்ற சுற்று சூழல் யாவும் எமனின் வாகனங்கள். மித மிஞ்சிய உணவுப்பழக்கமும், உடல் இயக்கமின்மையும் பல சிக்கலான நோய்களுக்கு கதவை அகலத் திறந்து வரவேற்பு அளிக்கும். கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, இதய நோய் , சர்க்கரை நோய், பக்க வாதம், மூளை, கிட்னி, ஈரல் பாதிப்பு என ஒவ்வொன்றையும் சந்திக்க வேண்டி வரும்.
நீங்கள் 40 வயதை கடந்து செல்கிறீர்களா?, எந்த நோயும் இல்லையா? ஒருமுறை, கண்பார்வை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயம், கிட்னி, இரத்தம், புற்று நோய், போன்றவற்றுக்கான பொதுவான சோதனைகளை செய்து கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்து கொள்ளுங்கள். நடத்தல், யோகா போன்ற சிறிய உடற்பயிற்சி, மனப்பயிற்சிளில் ஈடுபடுங்கள்.

நோய்க் காரணங்கள் வேறு, நோய் அறிகுறிகள் வேறு. நோய்க் காரணங்களுக்குத்தான் சிகிட்சை தேவை. காரணங்களை கவனித்தால் நோய் அறிகுறிகள் தன்னாலே மறைந்து விடும். காய்ச்சல், ஜலதோசம், வலி, அரிப்பு, தடிப்பு என்பது நோய்க்கிருமிகளை உடம்பு எதிர்க்கும் போது உண்டாகும் அறிகுறியே. இதற்கு மருந்து கொடுத்து நோய் கிருமிகளுடன் உடல் போராடி அழிப்பதை தடுத்து விடக்கூடாது. நோய் உண்டாக்கும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திதான் போராடுகிறது. நாம் எடுக்கும் மருந்துகள். நோய்க்கிருமிகளை எதிர்க்க நம் உடலுக்குத் துணை செய்கிறது அவ்வளவுதான்.
காலில் ஒரு புண் ஏற்பட்டால் உடனே கவனிக்கிறோம். ஏனென்றால் அது வலிக்கிறது. நடக்க முடியவில்லை. ஆனால் அந்த அளவு முக்கியத்துவம், பல வலிக்காத உயிர் கொல்லிகளுக்கு கொடுப்பதில்லை. சர்க்கரை நோய் முற்றி கிட்னியை, கண்ணை, பாதிக்கும் நேரம் தான் அதை அறிகிறோம். ஒரு முறை இதயம் பாதிக்கப்படும்போது தான் ,உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பதை அறிகிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து உடனே உஷாராக வேண்டும்.

மனம் நோயுற்றால்?
அனேகம் பேருக்கு எந்த நோயும் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர்கள். நோய்களைப்பற்றிய அதிக முன் ஜாக்கிரதையும் கற்பனையான அச்சமும் காரணம் தன்னை நோயாளிகளாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். கவுரவத்திற்காகவும், பரிதாபத்தை சம்பாதிக்கவும் நோயாளியாக விரும்பாதீர்கள். சில மருத்துவர்கள் இவர்களுக்கென்றே பொய்யான மருந்துகளை கொடுத்து காசு சம்பாதிப்பதும் உண்டு. நோயாளி என்ற உணர்வே உண்மையாக அந்த நோயைக் கொண்டு சேர்த்து விடும். உடலில் கிருமிகள் புகுந்து நோயுண்டாக்குவது போல தேவையற்ற எண்ணங்களும் மூட நம்பிக்ககளும் கூட மனதை நோயுறச் செய்யும். உடல் நோயுற்றால் மனம் அதை குணப்படுத்த முயலும். மனம் நோயுற்றால் வாழ்கையே பாழாகிவிடும். எண்ணங்களை பகுத்தறிவு துணை கொண்டு சரியான திசையில் அமைத்துக்கொள்ளவும் பயிற்சி பெறவேண்டும். உடலுக்கு கேடு செய்யும் எல்லாமே நோய் தான். மனத்தின் கோணல் காரணம், புகை, மது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் நிச்சயம் நோய் தான்.
நாம் நோயுற்றிருக்கிறோம் என்று உணர்ந்த உடனே நாள் கிழமை பார்க்காமல் தாமதமின்றி சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள். நோய் முற்றும் வரை அலட்சியப்படுத்திவிட்டு, பெரும் பணத்தயும் இழந்து உயிருக்குப்போராட வேண்டாம்.
ஒரு டாக்டரை விட உங்களுக்குதான் உங்கள் உடம்பைப் பற்றித் தெரியும். வயிற்றுவலி என்றால் உடனே ஸ்கேன் எடுக்க ஓடும் முன்பு நேற்று ரயில்வே பிளாட் பாரத்தில் பஜ்ஜி வங்கி சாப்பிட்டீர்களா? என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தலைவலிக்கிறதா உடனே மூளையில் கட்டியோ என்று கற்பனையை ஓட விடாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்பாருங்கள். காஸ் ட்ரபிள் இருந்தாலும் நெஞ்சு வலிக்கும். அனேக நோய்கள் மருந்தில்லாமலேயே குணமாகும். பல நோய்கள் மிக எளிய வீட்டு மருத்துவத்திலேயே குணமாகும். சில வேளைகளில் உணவே மருந்தாகும். வெறும் தண்ணீர் மட்டுமே பல நோய்களை குணப்படுத்த வல்லது.
நோய் பற்றி டாக்டரிடம் கூறும்போது உள்ளது உள்ளபடி கூறுங்கள். நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்று மிகைப் படுத்திக் கூறாதீர்கள். நீங்களே உங்களுக்கு இன்ன நோயாக இருக்குமோ என்று கூறாதீர்கள். "ஒரு ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் டாக்டர்" "எக்ஸ் ரே எடுங்கள்" என்று நீங்களாக மருத்துவரிடம் கேட்காதீர்கள். தேவைப்பட்டால் அவரே சொல்லுவார். அது டாக்டரின் வேலை. பலர் டாக்டரிடம் காட்டுவதோடு சரி அவர் தரும் மருந்துகளை சொல்லும் கால அளவுக்கு சாப்பிடாமல் விட்டு விடுவார்கள். இது பூரணமாக நோய் குணமாவதை தடுக்கும். நோய்க்கிருமிகள் உடலில் எஞ்சியிருக்க வழி செய்யும். நோயின் கால அளவைக்கூட்டும்.

மருத்துவரை கேளுங்கள்
மருத்துவரை சந்திக்கும்போது. உங்களுக்கு என்ன நோய், எதனால் வந்தது. குணமாக என்ன முயற்சி எடுக்க வேண்டும். எத்தனை நாள் ட்ரீட்மென்ட் எடுக்க நேரிடும். உங்கள் பொருளாதார நிலமை தாங்குமா? போன்ற எல்லா கேள்விகளயும் தெளிவாகக் கேளுங்கள். அவர் பதில் தரக் கடமைப்பட்டவர். உங்கள் பொருளாதார நிலமைக்கு தக்கபடி விலை உயர்ந்த டானிக்குகளுக்குப் பதில் சில எளிய உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார். ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். நீங்கள் எடுக்கும் டெஸ்ட் ரிப்போர்டின் ஒரு நகலை உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் அந்த டெஸ்ட்? என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பாரா மருத்துவச்செலவை எதிர் கொள்ள வழியென்ன?
குடும்பம் முழுவதிற்கும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றித் திட்டமிடுங்கள். குழந்தளுக்கு குறைவாகத்தான் ஆகும். திடீரென் தாக்கும் பெரிய நோய்களால் குடும்பம் நடுதெருவுக்கு வராமல் காக்கும். மருத்துவச்செலவு செய்து கடனாளியானவர்கள் மிக அதிகம்.
நலமாய் வாழ
:
மேலும் விபரம் பெற
மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

Download As PDF

வெள்ளைக் கோட்டும் கொள்ளையர்களும்


கடந்த வாரம் எனது தம்பியின் 3 வயது குழந்தைக்கு லேசான காய்ச்சல் அடித்தது. உடனே நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். மருத்துவர் சோதித்து விட்டு "குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தொற்றி ஆபத்தான நிலையில் இருக்கிறது, சிறிது நேரம் போனால் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் வரும் "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி அட்மிட் செய்த்திருக்கிறார்கள். உடனே குளுகோஸ் ட்ரிப் போட்டு விட்டார்கள். தொடர்ந்து ஒரே நாளில் எக்ஸ்ரே, பல முறை குருதி சோதனை, ஸ்கேன், மலம், சிறுநீர் சோதனை, என கமிஷன் கிடைக்கும் எல்லா சோதனைகளும் செய்தார்கள். இதற்கு தூரத்திலுள்ள அவர்கள் பரிந்துரைத்த ஆய்வகத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. வெறும் காய்ச்லோடு வந்த குழந்தை பேச்சு மூச்சில்லாமல் மிகவும் தளர்ந்து விட்டது. பயம் ,அழுகை மற்றும் பரிதவிப்பில் தாய் மட்டுமே அருகில்.
தகவல்
அறிந்து நான் போய் பார்தேன். டெங்கு கிருமிகளுக்கான குருதி சோதனை ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தால் டெங்கு இல்லை என்று சொல்கிறது. பிலேட்லெட் எண்ணிக்கை நார்மல் என்று மற்றொரு ரிபோர்ட் சொல்கிறது ஆனால் மருத்துவரோ "ரிபோர்ட் சரியில்லை டெங்கு தான், ஆபத்தான நிலமை, இரத்தத்தில் பிலேட் லெட்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

காலையிலும் மாலையிலும் பதினந்து நிமிடம் மட்டுமே மருத்துவமனைக்கு மருத்துவரின் வருகை. பகலில் மருத்துவமனை போலிருந்தது இரவானதும் ஒரு விடுதி போல் தோன்றியது. மூன்று நிலை மருத்துவமனை முழுதும் வெறிச்சோடி எல்லா அறைகளிலும் பூட்டு தொங்கியது. இரண்டாம் தளத்தில் நம்மைத்தவிர இன்னும் ஒரு குழந்தையும் பெற்றோரும் மட்டுமே. அங்கேயும் இதே கதை தான். ஒரே ஒரு ட்யூட்டி நர்ஸ். இரவு 9 மணிக்கு வெளி கேட்டில் ஒரு பெரிய பூட்டு. உணவு வங்கக்கூட வெளியே செல்ல முடியாதபடி. முதல் நாளிலே அட்வான்ஸாக நாலாயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். ஒரு மருத்துவமனைக்கான எந்த ஒரு வசதியும் அங்கே இல்லை. இரவு குழந்தை சிறு நீர் கழிக்க எழுந்தான். உடனே ட்ரிப்புக்காக போடப்பட்ட ட்யூப் வழி இரத்தம் ரிவர்சில் வேகமாக வரத்தொடங்கியது. உதவிக்கு எந்த நர்சும் அங்கே இல்லை. எப்படியோ சமாளித்தேன். நடுக்காட்டில் மாட்டிக் கொண்டது போல் தோன்றியது. மருத்துவமனையும், மருத்துவரின் பேச்சும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மறு நாள் காலை முதல் வேலையாக கேட்ட பணத்தை கட்டி(எங்கே போய் முட்டிக்கொள்ள?), எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் கேட்டுவாங்கி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அட்மிட் செய்தேன். மருத்துவர் நன்றாக சோதித்துப் பார்த்துவிட்டு. குழந்தைக்கு சாதாரண வைரல் காய்ச்சல் தான் இத்தனை டெஸ்ட் எதுவும் தேவையில்லை. எல்லா டெஸ்டு ரிஸல்டும் நார்மல் தான். பார்த்தாலே தெரிகிறது. ஒரு நாள் ட்ரிப் போட்டால் போதும். பயப்பட வேண்டாம் என்றார். சொன்னபடி செய்து மறுநாள் குழந்தையை நலமாக வீட்டுக்கு கொண்டு வந்தோம்.

சில நல்ல மருத்துவர்களிடையே ஒநாய்கள் போல் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு சில மருத்துவமனைகள். வைரஸ்களை விட கொடியதாய் சில மருத்துவர்கள்.அலையில் தப்பி உலையில் விழுவதை போன்று கொள்ளை நோய்களிடமிருந்து தப்பிக்க கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
யார்
இதற்கு மருந்து கொடுப்பது? பொதுவாக முறைகேடாக சம்பாதிப்பவர்களிடம் கொள்ளை பணம் சேருகிறது. கொள்ளை பணம் இருப்பவர்களுக்கு மருத்துவப்படிப்பு எளிது. உயர் கல்விக்காக பெரும் பணம் செலவழிப்பவர்கள் மனசாட்சியை அடகு வைத்து அதைக்கொண்டு பெரும் பொருளீட்டவே விரும்புவார்கள். எனவே ஏழைகளும் , நடுத்தர மக்களும் இத்தகைய வியாபார நோக்கம் கொண்ட பெரிய மருத்துவ மனைகளை தவிர்த்து ஆரோக்கிய விஷயங்களில் போலி கவுரவத்தை விடுத்து சிறந்த மருத்துவர்களை கண்டறிந்து மருத்துவம் செய்வது நல்லது. அரசும், உலக ஆரோக்கிய மையமும் மக்களின் ஆரோக்கியம் காக்க எத்தனையோ கோடிகள் வாரி இறைத்தாலும் எத்தனையோ பேர் அதன் பலனை அனுபவிக்கும் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள் என்னாலானது இதுபோன்ற மோசடியை பதிவு செய்வது, யாராவது விழித்துக் கொள்ளட்டும்.

Download As PDF