25 August 2009

எண்ணிலே எழுத்து

Download As PDF

22 August 2009

சக்தியை சேமிப்போம் - தெர்மல் குக்கர்(Thermal cooker)

எரிபொருளை சேமிப்பதால் நம் காசும் சேமிக்கப்படுவதோடு நாம் வாழும் பூமிக்கும் பெரும் சேவை செய்தவர்களாவோம். எரிபொருளை சேமிக்க உதவும் அப்படியொரு பொருள் என் கண்ணில் பட்டதை ,வாங்கி பயன்பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதன் பெயர் தெர்மல் குக்கர்.

சாதாரண பானையிலோ, குக்கரிலோ நாம் சாதம் சமைக்கும் போது பெருமளவு வெப்பம் பாத்திரத்திலிருந்து ரேடியேஷன் ஆகி சுற்றியுள்ள காற்றை சூடுபடுத்தி வீணாகப் போகிறது. இதனால் சமைக்கும் பாத்திரம் சமைத்து முடியும் வரை அதிக நேரம் அடுப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. எரிபொருளும் அதிகம் செலவாகிறது. தெர்மல் குக்கர் இந்த எரிபொருள் விரயத்தை குறைக்கிறது .

இந்த தெர்மல் குக்கர் வேறொன்றுமில்லை உணவுப் பதார்த்தங்களை வெகு நேரம் சூடு ஆறாமல் வைக்கப் பயன் படுத்துவோம ஹாட் பாக்ஸ் (Hot Box) இதே போன்ற சற்று பெரிய பாத்திரம் தான். இதனுள்ளே உணவுப்பொருள் ஒட்டாமலிருக்க டெஃப்லான் (Teflon) பூசிய பாத்திரம் ஒன்று இருக்கும் அதற்கு வெளியே PUF எனப்படும் பாலியூரித்தேன் ஃபோம் இன்ஸுலேட்டர் கவர் ஆகி இருக்கும் இது உள்ளே இருக்கும் பாத்திரத்தின் வெப்பத்தை வெளியேற விடாது. அதற்கும் வெளியே அழகிய இன்னொரு வெளிப் பாத்திரம் இருக்கும். இதற்கான மூடியிலும் இதே போல் இன்சுலேட்டர் இருக்கும். சில குக்கர்களில் PUFக்கு பதில் வெற்றிடத்தை இன்சுலேட்டராக பயன் படுத்திருப்பார்கள்.

சாதம் சமைத்து முடியும் வரை அடுப்பில் வைத்து விட்டு இனி காத்திருக்கத் தேவையில்லை. பானையில் அரிசியை கழுவி தேவையான தண்ணீரும் விட்டு அடுப்பில் வைத்து ஒருமுறை கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, அந்த பானையை அப்படியே எடுத்து இந்த தெர்மல் குக்கர் பாத்திரத்திற்குள்ளே வைத்து மூடி விடவேண்டும். சுமார் முக்கால் மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் அருமையாக வெந்த சாதம் ரெடி. பானையில் ஏற்கனவே உள்ள நீராவியின் வெப்பம் வெளியேறாமல் இன்சுலேட்டருக்குள் சிறைபட அந்த வெப்பத்திலேயே சாதம் வெந்திருக்கும். அதிக வெப்பத்தால் உணவு கருகிப் போவதுமில்லை.

அவசரக்காரர்களுக்கு இது சரிப்படாது ஏனெனில் நேரடியான நெருப்பின்றி உள்ளே உள்ள நீராவியின் வெப்பத்தில் சாதம் வேகவேண்டியிருப்பதால் அதற்குரிய நேரம் நாம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அடுப்பின் உபயோகம் குறைவானாதால் அந்த நேரத்தில் அடுப்பில் மற்ற பொருட்களை சமைக்க முடிவதான் மொத்தத்தில் நேரம் மிச்சம் தான். வறுக்கவும் ,பொரிக்கவும் இது பயன்படாது. வேக வைக்கும் எல்லா வேலைகளையும் இதில் செய்யலாம்.

தெர்மல் குக்கரில் வைக்கப்பட்ட சமைத்த உணவும் அப்படியே 12 மணி நேரம் வரை சூடாக இருக்கும்.

உணவை சூடாக வைத்திருக்கும் பெரிய சைஸ் ஹாட் பாக்ஸ் ஆகவும் பயன் படுத்தலாம். பிக்னிக்குகள் போகும் போது உணவை கொண்டு செல்ல உப்யோகப்படும். ஐஸ் கட்டிகள் போட்டு குளிர் பானங்கள் அப்படியே குளிராக வைத்திருக்கவும் பயன் படும்.

இது சைனா பாட் என்றும் அறியப்படுகிறது. பல பிராண்டுகள் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த தரமான பிராண்ட் பார்த்து வாங்கவும். சில தரமற்ற பாத்திரங்கள் மோசமான இன்சுலேசன் காரணம் வெப்பம் தங்கி நிற்பதில்லை. நான் வாங்கியது ஒரு கிலோ கப்பாசிட்டி குக்கர் உள்ளே டெஃப்லான், லைட் வெயிட் , PUF இன்சுலேசன், மற்றும் மூடியுள்ள ஒரு ஸ்டீல் பானை எல்லாமாக சுமார் ஆயிரம் ரூபாய் ஆனது.

வேறென்ன சொல்ல எரிபொருளையும், பணத்தையும், மிச்சப்படுத்துவதில் உங்களுக்கும் ஆர்வம் தானே.

Download As PDF

21 August 2009

பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது

விஞ்ஞான வளர்ச்சியை பொறுப்பற்ற முறையில் பயன் படுத்தியதால் மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். ’குளொபல் வார்மிங்’(Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என விஞ்ஞானிகள் பீதி கொள்கிறார்கள். ஆனால் சராசரி மனிதனோ இதைப்பற்றிய எந்த கவலையும் விழிப்புணர்வும் இன்றி சொந்த வீடான பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசு படுத்தில் மனிதனுக்கு நிகர் எதுவும் இல்லை.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் இடையறாது காற்றில் உமிழப்பட்டுக்கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடுகள் போன்ற வாயுக்கள் நம் காற்று மண்டலத்தை விட்டு எங்கோ விண்வெளியில் ஒடிப்போய் விடாது. காற்று மண்டலத்தில் கலக்கும் இது ஒரு போர்வை போல் இது பூமியை சுற்றி மூடிக்கொண்டு மூச்சுத்திணர வைக்கும். பூமியின் வெப்பம் வெளியேறாமல் தடுக்கும் இந்தப் போர்வையால் பூமியின் வெப்ப அளவு அதிகரித்துக்கொண்டே போகிறதாம். மரங்கள் இந்த கார்பன் டை ஆக்ஸைடுகளை உட்கொண்டு நமக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. மரங்களை பெருமளவு வெட்டி சாய்ப்பதும் இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு காற்றில் அதிகரிக்கக் காரணம்.

ஒயாத யுத்தங்களால் பல நாடுகள் பற்றி எரிவதும் ,பல நாடுகளில் பெருங் காடுகள் பற்றி எரிவதும் , CFC போன்ற பொருட்கள் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படுவதும், அழுகிய உணவுப்பொருள் கழிவுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுக்களும், ரசாயன உரங்களால் வெளியாகும் N2O போன்றவையும் பூமி வெப்பத்திற்கு மற்ற முக்கிய காரணிகளாகும்.

அதிகரித்தால் அதிகரிக்கட்டும் நமக்குத்தான் ஏசி இருக்கிறதே? என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
 • புவி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விஷயம் இது.
 • இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது. அதிக வெப்பம் காரணம் பலரும் வெப்பத்தாக்குதலுக்குள்ளாகி மடிவதை பார்க்கிறோம்.
 • காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓஸோன் செறிவு அதிகரிக்கச்செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும் நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோய் மேலும் தீவிரமடையச்செய்யும்.
 • அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும் அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது. அதற்கும் கூட போட்டியாக மனிதனே விவசாய நிலங்களில் காங்கிரீட் போட்டு மூடி விடுகிறான்.
 • நீண்ட வறட்சியும் தண்ணீர் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படுத்தும்.
 • பாலங்கள் ரோடுகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அதன் பராமரிப்பு செலவு அதிகமாகி விடும். (இதற்கு லஞ்சம் வாங்கும் எஞ்சினீயர்களும் காரணம் என்பது வேறு விஷயம்)
 • கடல் மட்டம் உயரும். பெரும்பாலான பெரிய வியாபார நகரங்கள் எல்லாம் கடற்கரையிலே உள்ளன. கடல் மட்டம் உயர்வதால் இப்படிப்பட்ட பெரும் நகரங்கள் காணாமல் போகிவிடும் அபாயம் உள்ளது. (அதற்கென்ன கடலுக்குள் பெரும் நகரங்கள் கட்டுகிறார்களே -ஆர்க்கிமிடிஸ் இருந்தால் மட்டும் எதிர்த்திருப்பார்)
 • தினசரி பருவ நிலைகளை பாதிக்கும்.முக்கியமாக சில தினங்கள் மிக அதிக வெப்ப நிலையை எட்டுவதும் இதனால் தான். கால நிலையில் ஏற்படும் மாற்றம் எல்லா உயிர்களையும் பாதிக்கும்.
 • மழை பொய்க்கும். (வரும் ஆனா வராது)
 • துருவங்களின் பெரும் பனிக்கட்டிகள் உருகி மிகப் பெரும் வெள்ளச் சேதங்களையும், புவியியல் பாதிப்புகளையும் உருவாக்கும். அப்படி ஒரு அபாயம் இப்போது தலைக்கு மேல் கத்தியாக இருக்கிறதாம்.
எல்லாம் சரி இதற்கு தனிமனிதனான நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு,விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு,பொறுப்பான மக்களுக்கு
 • முடிந்த அளவு மரங்கள் நடுங்கள்.மரம் நடுவதை ஊக்குவியுங்கள்.
 • எரிபொருளை விரயம் செய்யாதீர்கள்.சக்தியை முடிந்த அளவு சேமியுங்கள்.
 • வீணான பொருட்களை ரீ சைக்ளிங் செய்யவும்.
 • சுற்று சூழல் மாசு படுத்தும் செயல்களை தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டும்.
 • பூமி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்தவும்.

Download As PDF

11 August 2009

பன்றிக் காய்ச்சல்(Swine flue) தெரிந்துகொள்ளுங்கள்

பத்திரிக்கைகளை திறந்தாலே "பன்றிக் காய்ச்சல்" என்று நல்லாவே பீதிய கிளப்புறாங்கய்யா. மனுசன் மனுசனையே கூட்டங் கூட்டமா கொன்னு குவிச்சாலும் அதெல்லாம் சகஜமப்பா என்று கண்டுக்காமல் விட்டு விடுகிறார்கள். Swine Influenza எனப்படும் பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதியை விட விழிப்புணர்வு தான் இன்றைக்கு தேவை. ஆனால் பெரும்பாலான பத்தி்ரிக்கைகள் மக்ளை கலவரப்டுத்தியே காசு பார்க்கிறார்ள். எனவே எனக்கு தெரிஞ்சதை உங்களோடு பகிர்ந்துக்கிறேன். தலைப்ப பார்த்துட்டு ஓடாதீங்க. பிளாக் மூலமா ஒன்ணும் பரவாது. தைரியமா படிங்க.

பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன?
Type A influenza viruses(H1N1 subtype) என்ற வைரசுகளால் பன்றிகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் ஜலதோசம் தான். அப்புறம் பன்றியோடு அதிகம் தொடர்பு வச்சுக்கிட்ட மனுசங்களுக்கும், அந்த மனுசங்களோட தொடர்பு வச்சுக் கிட்டவங்களுக்கும் சில வேளைகளில் பரவும்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன?
சாதாரண ஜலதோசக் காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் இருக்கும்.( அ..ஆச் ப்ர்ர்ர்ர்ர் ..க்கும் ..)
ஆனால் சாதா ஜலதோசம் , காய்ச்சல் எல்லாம் பன்றிக்காய்ச்சலும் அல்ல.
 • காய்ச்சல் 100°F அல்லது 37.8°C க்கும் அதிகமாக இருக்கும்.
 • தொண்டை வலி ,உடல் வலி ,தலை வலி,குளிர்,அசதி இருக்கும்.
 • இருமல், மூக்கு ஒழுகுதல் இருக்கும்
 • சிலருக்கு வயிற்றோட்டம் .வாந்தி கூட இருக்கலாம்.
சில குறிப்பிட்ட சோதனைகள் மூலம் இது சாதார காய்ச்சலா அல்லது பன்றிக் காய்ச்சலா என அறிய முடியும்.

ஆபத்தான அறிகுறிகள்:
குழந்தைகள் மேற்கண்ட அறிகுறிகளுடன் வேகமா சுவாசித்தாலோ, மூச்சு விட கஸ்டப்பட்டாலோ,தோல் நிறம் நீலமாக மாறினாலோ,போதுமான தண்ணீர் அருந்த முடியாவிட்டாலோ,கண்ணு முழிக்க முடியாமல் சோர்ந்து போய்
கிடந்தாலோ,உடலில் சின்ன சின்ன கொப்புளங்கள் வெளிப்பட்டாலோ உடனே மருத்துவ உதவி நாடவும்.
பெரியவர்களுக்கு சுவாசிக்க கஸ்டமாக இருந்தாலோ , நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வலி அல்லது அழுத்தம், திடீரென உடல் தளர்ந்து விடுதல், மனக்குழப்பம், இடைவிடாத வாந்தி காணப்பட்டால் உடனே மருத்துவ உதவி நாடவும்.

எப்படி பரவுகிறது?
ஜலதோசம் எப்படி பரவுகிறதோ அது போலத்தான் இருமல், மற்றும் சளி மூலம் தான் இந்த கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.ஒருவருக்கு இதன் அறிகுறிகள் வெளிப்பட ஒரு நாள் முன்னதாகவோ காய்ச்சல் வந்து ஏழு நாட்கள் வரை பிறருக்கு தொற்றக்கூடும்.

எப்படிங்க தடுக்கிறது?
 • மூக்கு ஒழுகுபவர்களை கண்டால் ரூட்டை மாற்றி எஸ்கேப் ஆகி விடுவது முன் ஜாக்கிரதை.
 • சும்மா சும்மா ஹாய் என்று கர்சீஃப் வைத்திருப்பவர்களிடம் கை கொடுக்காதீர்கள்.அப்படி கொடுத்தாலும் அந்தக் கையைக் கொண்டு கண்,மூககு,வாயைத் தொடாதீர்கள்.
 • கைகளை நன்றாக அடிக்கடி சோப் போட்டு கழுவுவது நல்லது.
 • நல்லா தூங்கி போதுமான ரெஸ்ட் எடுத்து நல்ல ஆரோக்கியத்தை பேணுங்க.
 • சுறுசுறுப்பா இருங்க.
 • டென்ஸன் , மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
 • சத்தான உணவு உணணுங்கள்.
 • அசுத்தமான இடங்களில் கை வைக்காதீர்கள்.
 • பன்றிப் பண்ணைகளுக்கு தேவையில்லாமல் போகாதீர்கள்.
 • நன்றாக வேகாத பன்றி இறைச்சி உண்பதால் பரவக்கூடும். பன்றி உணவை தவிர்த்தல் நலம். (ஆச்சரியம்! இஸ்லாம் பன்றிகளை தவிர்க்க அன்றே அறிவுறுத்தியிருக்கிறது)
தடுப்பு மருந்து இருக்கிறதா?
இந்த வகை வைரசுகள் தங்கள் அடையாளத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு புதிய வகை வைரசுகளாக மாறுவதால் குறிப்பிட்ட வைரசுக்கான தடுப்பு மருந்து உருவாக்குவதில் சிரமமிருக்கிறது. முயற்சி வெற்றி பெறும்

என்ன மருந்துகள் உள்ளன?
ஃப்ளு காய்ச்சலுக்கான பொதுவான ஆன்டி வைரல் மருந்துகள்.சில நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. அவற்றில் இரு வகைகள் உள்ளன 1) adamantanes 2) inhibitors of influenza neuraminidase(oseltamivir and zanamivir)
பன்றிக் காய்ச்சலுக்கு சிகிட்சையும் மருந்தும் தாராளமாக இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் வந்தால் யாவரும் கண்டிப்பாக இறந்து விடுவதாகப் பயப்பட வேண்டாம். சமயத்தில் சிகிட்சையின்றி மோசமாக பாதிக்கப்பட்டாலே மரணத்தை நோக்கி தள்ளப்படுவார்கள்.

இந்த பதிவால் எதாவது பிரயோசனம் உண்டு என்றால் முகத்திலிருந்து மாஸ்க் எடுத்து விட்டு எதாவது சொல்லிட்டுப் போங்க

Related Articles:
கிருமிகள்- கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்
காய்ச்சல்-ஒரு நோய் அல்ல
மருத்துவரை காணும் முன்.....
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

Links For More Info:
http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic

Global Alert and Response (GAR)

பன்றி காய்ச்சல் நோய் குறித்துத் தகவல் மற்றும் உதவிக்கு:-044 - 2432 1569 ( சென்னை )

Download As PDF

10 August 2009

எப்படி வேணா கட்டிக்குங்க!

டை கட்டத் தெரியாமல் திரு திருவென முழிக்கும் புது மாப்பிள்ளைகளுக்கு. உங்கள் "டை " உங்க கழுத்து . எப்படி வேணா கட்டிக்குங்க. ஆனா அதிகமா இறுக்கிடாதீங்க.அட இப்படியெல்லாம் கட்டலாமா?
ஆமா " டை " ஏன் கட்டுறாங்க? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

Download As PDF

08 August 2009

உயிர் காக்கும் உடற்பயிற்சி


நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் , கான்சர்,எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இதை தான் சொல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.

இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். வருமுன்னே காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு முன் இடப்பட்ட துரும்பாய் பொசுங்கிப் போகும் என்பது பொய்யா மொழி. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள் பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும். உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியதும் கூட.
உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இலலை,என்னால முடியலப்பா என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற் பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை. நீங்க ரெடியா?

என்ன பயிற்சி செய்யலாம்?
சுறுசுறுப்பாக நடத்தல். நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். என்ன முடியும் தானே? அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

எப்போது உடற்பயிற்சி செய்யலாம்?
அதிகாலையில் , வெறும் வயிற்றில் இந்த எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.

எவ்வளவு தீவிரப் பயிற்சிகள் செய்யலாம்?
நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் விளைவாக உங்கள் இதயத்துடிப்பானது உங்கள் அதிக பட்ச துடிப்பின் அளவில் 60 முதல் 80 சதவீதம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் எட்டி இருக்க வேண்டும்.
அதிக பட்ச துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் ? இதை தெரிந்து கொள்ள 220 லிருந்து உங்கள் வயதை கழிக்க வேண்டும்.
உதாரணம்: உங்கள் வய்து 40 என்றால், 220-40= 180 என்பது உங்கள் அதிக பட்ச இதயத்துடிப்பு.
இதன் 60 % முதல் 80% என்பது நிமிடத்திற்கு 108 முதல் 144 துடிப்புகள் வரை உடற்பயிற்சிக்கு பின் சுமார் 30 நிமிடங்களாவது எட்டியிருக்க வேண்டும். இன்னிலையில் உங்கள் சுவாசம் தெளிவாக கேட்கும்படி இருக்கும்.பேசும் போது சிறிது மூச்சு வாங்கும்.
பயிற்சியை சற்று தீவிரப்படுத்த நடப்பதற்கு மலைப் பாதையை தேர்வு செய்யலாம். பழு தூக்கலாம். கைகளை இதயத்துக்கு மேல் தூக்கி பயிற்சி செய்வதும் இதயத்துடிப்பை அதிகரிக்கும்.

தசைகளுக்குப் பயிற்சி:வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பழு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன் படுத்துதல் இதற்கு உதவும். வாரம் 3முதல் 4 முறை அரை மணி நேரம் இத்தகைய பயிற்சிகளுக்கு ஒதுக்கலாம். இத்தகைய தசைப்பயிற்சிகளுக்கு பின் தரமான புரத உணவு பானங்கள் அருந்துவது தசைகள் வலுவடைய சிறப்பாக உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. leucine என்ற புரத சத்து தசைகளை பழுது பார்த்து நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. பயிற்சியின் போதும் அதன் பின்னும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

தினமும் 5முதல் 10 நிமிடங்கள் கை ,கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது . மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து செகன்டுகள் அப்படியே வைத்திருக்கவும்.

உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைகப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்ததில் சர்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.

எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைபிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள்.

நீங்க என்ன சொன்னாலும் சரி எனக்கு தனியாக உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. பொழப்ப பார்ப்பனா கைய கால தூக்கிகிட்டு எக்சர்சைசு செய்யணுமா? என்று சொல்லக்கூடியவர் நீங்கள் என்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.
 • *வீட்டு வேலைகளை ,தோட்டம் பராமரித்தலை உடலுக்கு நன்மை தருவது எனக் கருதி ஒரு பயிற்சி போல் செய்யலாம்.
 • லிஃப்ட் இருந்தாலும் மாடிப்படி ஏறி செல்லுங்கள்.
 • வேலை இடைவேளையில் ஒரு பொடி நடை பழகுங்கள்.
 • கடை கண்ணிக்கு போக சைக்கிள் பயன்படுத்துங்கள்
 • வாகனத்தை முடிந்த அளவு தவிர்த்து நடக்க உதவும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 • வீட்டை சுத்தப்படுத்துவது ,காரை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளில் ஆர்வமாய் ஈடுபடுங்கள்.
இது கூட முடியாதவர்கள் ஒரு மெடிகல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நலம்.

வீட்டுக்குள்ளே நடைப்பயிற்சி செய்ய விலை உயர்ந்த Tread mill எதற்கு எளிய வழி இங்கே இருக்கு http://www.youtube.com/watch?v=-gANf_FejZk

Body Building பற்றிய விளக்கப் படங்கள் அடங்கிய புத்தகம் "Mens Health" Total Body work out . படித்து பயன் பெறுக.

Download As PDF

05 August 2009

உடல் பருமனா? உணவை மாற்றுங்கள்


உடல் பருமன் குறிப்பாக குழந்தைப் பருவம் மற்றும் வளர் இளம் பருவ ஆண், பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்கு சிறு வயதிலேயே ஆளாகிறார்கள். இதற்குக் காரணம் உணவுக்கு ஏற்ற உழைப்பு இல்லாமை, அளவுக்கு அதிக உணவு, கொழுப்புச் சத்து மிகுந்த தின்பண்டங்கள், பொரித்த உணவு, சிப்ஸ், பப்ஸ் போன்றவை சாப்பிடுவதே.
இளம் வயதில் உடல் வளர்ச்சி பெற அதிக உணவு தேவைப்படுகிறது .ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வளர மறுத்து, அபரிமிதமான உணவை நஞ்சு என்று கருதும். உடலின் தேவைக்கு மட்டும் உண்ணப் பழக வேண்டும்.
உடல் உழைப்பு மிகுந்தவர்கள் அதற்கேற்றவாறு அதிகப்படியான கலோரி சாப்பிட வேண்டும். உடலுழைப்பு குறைவாக வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக கலோரி தரும் உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைக்கு அதிகமான உணவை நீங்கள் சாப்பிட்டு, அது கலோரியாக செலவிடப்படாத நிலையில், உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது; விளைவு உடலின் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உடல் பருமன் பிரச்னையாக மாறுகிறது.சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல நோய்கள் வந்துவிடும்.

எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று பலர் தினமும் காலை உணவை கட் செய்து விடுகின்றனர் இது தவறு என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.இரவு உண்ட உணவு செரித்து  உடல் சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான உணவு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலைஉணவை   அதிக அளவில் உண்ணாமல் ஜூஸ், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.

உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள் கூடாது என எண்ணி அனைத்து கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்ப்பதும்  தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது.  புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கொழுப்புச் சத்து நிறைந்த பால்-தயிர்-சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து, பருப்பு, மஞ்சள் கரு இல்லாத முட்டை, சோயா போன்ற புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடத் தொடங்குங்கள்.

 உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம்.  மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
 உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கில் கணக்கின்றி  சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நொறுக்கு தீனிக்கு பதில் திராடச்சை பழங்கள்  சாப்பிடுவது உடலுக்கு நல்லது

நகர வாழ்க்கையில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நமது உணவுப் பழக்க வழக்கங்களையும் அதுபோல் மாற்றிக்கொள்ளவேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாத நிலையில் 6 இட்லி சாப்பிடுபவர்கள் அதை 4-ஆகக் குறைத்துக் கொள்ளலாம்.இட்லியின் எண்ணிக்கையைக் குறைத்தால் அடுத்த வேளை முன்கூட்டியே பசி எடுக்கும். அதை ஈடுகட்ட சாம்பார், சட்னியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். சத்துகளை மட்டுமே தந்து எடையை அதிகரிக்காது என்பதால் பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம். அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிடுகிற இட்லி, சாதம் போன்றவற்றைக் குறைத்து அதை ஈடு கட்ட சாம்பார், கூட்டு, பொறியல் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.இப்படி நோய் வராமல் தடுக்க நம் உணவு முறைகளை மாற்றி பயன் பெறலாம்.
பசி எடுத்தவுடன் இஷ்டம்போல் சாப்பிடாமல், சிந்தித்து சத்தான சமச்சீரான உணவுகளை சிறு வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும். நோய் வந்தாலும் உணவு பாதி, மருந்து பாதி என பிரச்னைகளை நாமே எளிதாக தீர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியத்தின் மற்றொரு பெரிய அம்சம் உடற்பயிற்சி..உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள், மாத்திரைகள் போன்றவைகள்  எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது .சின்னச் சின்ன விஷயங்களைக் கூட உடல் உறுப்புகளுக்கு அசைவு கொடுத்து நாம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும் நிலையில் தசைகள் வலுப்படும்; எலும்புகள் உறுதிப்படும். "தண்ணீர் கொண்டு வா! ஃபேனை போடு, லைட்டை அணைத்து விடு! என்றெல்லாம் மற்றவருக்கு கட்டளையிடாமல் அன்றாட வேலைகளை நாமே செய்யலாம். பக்கத்தில் மார்க்கெட் போக முடிந்த அளவு மோட்டார் பைக்கை தவிர்த்து நடந்தே போகலாம்.உடற்பயிற்சியினால் ரத்த ஓட்டம் சீர்பட்டு, உடம்பின் உறுப்புகளைச் செம்மையாக செயல்பட வைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்:
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
என்ன சாப்பிடலாம்?
மூட்டுவலி (Arthritis)
உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
நடக்கலாம் வாருங்கள்?
உடற் பயிற்சி - சில உண்மைகள்

Download As PDF

03 August 2009

எங்கிருந்து வந்தாயடா?

வீட்டில் ,ஆபீசில் ஏன் இதயத்தில் கூட இடமில்லை இடமில்லை என்று சொல்பவர்கள் இருக்கிற பொருட்களை கொஞ்சம் இடம் மாற்றி வைத்தாலே போதும் கொஞ்சூண்டு இடம் கிடைக்கும். எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித் தான்.

Download As PDF

01 August 2009

பத்துக்கு பத்து விபத்து

" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா! "- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது. அவன் குரல் உடைந்திருந்தது . உடனே புறப்பட்டு விட்டேன்

கோபாலைப் பற்றி உங்களுக்கு தெரியாதே! ஆள் நல்ல சிவப்பா வாட்ட சாட்டமா இருப்பான். இளகிய மனது, வாக்கு சுத்தம். அவன் தந்தை சேர்த்து வைத்த சொத்து அவனுக்கு உட்கார்ந்து சாப்பிட போதுமானது. ஆனாலும் அவன் ட்ரை பண்ணாத தொழில் இல்லை. சோப்பு கம்பனி போட்டான் வழுக்கி கொண்டு விட்டது. ட்ராவல் ஏஜென்ஸி, இன்சூரன்ஸ் என்று எல்லாம் முற்ச்சித்து விட்டான்.கொஞ்ச நாளைக்கு முன் ஏதோ MLM கம்பனி பற்றி என்னிடம் சொன்னான். அதில் சேருகிறாயா? நிறைய பணம் கிடைக்கும் என்று சொன்ன போது மறுத்து விட்டேன். "ஈசி மணியெல்லாம் வேண்டாம்"என்று சொன்ன என்னை ஏளனமாக பார்த்த அவன் பைக் புதிதாக இருந்தது. கழுத்தில் டை ஏறியிருந்தது. முழுக்கை சட்டை போட்டு இன் செய்தி்ருந்தான்.

ரொம்ப நாள் கழித்து கடந்த வாரம் அவனைப் பார்த்த போது புதிய சிவப்பு கார் வைத்திருந்தான். மீசை தாடி சுத்தமாக ஷேவ் செய்து கண்ணில் கூல் கிளாஸ் போட்டிருந்தான். நகரின் மத்தியில் புதிதாக வீடு வாங்கியதாக சொன்னான். "உன்னையும் கோடீசுவரனாக்கலாம் என்றால் நீ சம்மதிக்க மாட்டாயே" . தினம் பத்து லட்சம் சம்பாதிப்பதாக சொல்லி சிரித்துக் கொண்டே சென்றான் . திடீரென்ற அவனிடம் கொழித்த அபரிமிதமான பணம் எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. இல்லீகலாக எதாவது செய்கிறானோ? அவனிடம் இது பற்றிகேட்டு விட வேண்டும்.

நாங்கள் முன்பு அடிக்கடி வரும் கடற்கரைக்கு வந்து அவனைத் தேடிய போது காணவில்லை. முகம் முழுவது தாடி வைத்த மெலிந்த மனிதர் ஒருவர் என்னை நோக்கி வருவதை உற்றுப் பார்த்தேன் . கடவுளே! இது கோபால் அல்லவா என்ன இது ஏழை நோயாளி போலாகி விட்டான். என்ன நேர்ந்தது இவனுக்கு? தினம் பத்து லட்சம் சம்பாதித்தவனா இப்படி?
" என்னாச்சு உனக்கு உன் கார் எங்கே கோபால்?"

"அதை ஏன் கேக்கிற எல்லாம் போயிடுச்சுடா? "என்றான் விரக்தியுடன்.

நான் அதிர்ச்சியுடன் "என்னாச்சுடா எதாவது இல்லீகல் பிசினஸ் செய்து மாட்டிக்கொண்டாயா? எதாவது மருத்துவச் செலவு ஆப்பரேசன்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா எல்லாம் லீகலாய் செய்ததால் வந்த வினை தான். ஒரு கோடீசுவரருடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம் காரணம் இந்நிலைக்கு ஆளாகி விட்டேன்.

"ஒப்பந்தமா ?புதிர் போடாதே விஷயத்துக்கு வா? "
"சொல்கிறேன் இரு".என்று சொல்லத்தொடங்கினான்.

"இரண்டு வாரத்திற்கு முன் ஒரு பாரில் வைத்து தான் பழக்கமானார் அந்த மனிதர்.
"என்ன நீ தண்ணி போடுவியா எப்பலேந்து?" இடைமறித்தேன்.

"அப்படி பார்க்காதே எப்பவாவது தான். அங்கே தான் "பெரிய மனிதர்கள்" அதிகம் உலவுகிறார்கள். என்று கோபால் தன் கதையை தொடர்ந்தான்.
ஒரு நாள்அப்படி ஒரு பணக்காரப் பெரிய ஜென்டில் மேன் என் எதிரே வந்து உட்கார்ந்து தண்ணியடிக்கத் தொடங்கினார். நான் தவளையல்லவா வாயை கொடுத்த அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் ஒரு பெரீய்ய கோடீசுவரராம்."மனைவி பிள்ளைகள் யாரும் இல்லை. தினமும் தன்னிடம் வந்து சேரும் கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அளவுக்கு அதிகமான அந்தப் பணத்தால் தனக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
"அப்படியானால அதில் எனக்கு கொஞ்சம் கொடுங்கள் ஹஹ்ஹா "என ஜோக் அடித்தேன்.
" யாருக்கும் தானமாக கொடுத்து புண்ணியம் பெறுவதில் நம்பிக்கை இல்லை. நான் ஒரு பிஸினஸ் மேன் யாரிடமாவது பிஸினஸ் செய்து நஷ்டப்படவேண்டும். ஆனால் நான் செய்யும் எந்த தொழிலிலும் நஷ்டம் இல்லாமல் லாபம் தான் கொள்ளை கொள்ளையாக வருகிறது. என்ன செய்ய?"
"என்ன இது அருணாச்சலம் கதை போல இருக்கிறது?அவர் தானோ இது? அல்லது ஏதாவது லூசிடம் மாட்டிக் கொண்டேனோ? எங்கே அவர் தண்ணியடித்த காசை நான் கொடுக்க வேண்டி வருமோ?" என நழுவ நினைத்தேன்.

நான் மனதில் நினைத்தது எப்படி அவருக்கு கேட்டதோ.
"இரு நீ தமாசுக்கு கேட்டாயோ? என தெரியாது ஆனால் உண்மையில் நான் உனக்கு கொஞ்சம் பணம் தர நினைக்கிறேன். அதுவும் லட்சக் கணக்கில் . ஆனால் சும்மா தர மாட்டேன். ஒரு பிஸினஸ் மாதிரி தருவேன். எனக்கு நஷ்டம் உனக்கு லாபமான பிஸினஸ். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதுய்யா ? என்ன சொல்கிறாய்?
பேரர் இவரது பில்லையும் என் கணக்கிலேயே சேர்த்து விடு" என்று கேட்டு பில் பணம் மொத்தமும் அவரே கொடுத்து விட்டார் . ஆயிரம் ரூபாய் கத்தையிலிருந்து கையில் கிடைத்ததை எண்ணிப் பார்க்காமலேயே கொடுத்து விட்டு மிச்சத்தை எடுத்து கொள்ளும் படி பேரரிடம் கொடுத்து விட்டார். இன்னும் அவரிடம் நிறைய கட்டுகள் இது போல் இருந்தது.
எனக்கு ஒன்றும் புரியாம்ல் "ஙே" என்று முழித்தேன். அவர் தொடர்ந்தார்
"நாளையிலிருந்து நான் உனக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மாதம் அதாவது சரியாக 30 நாட்கள் தருவேன். ஆனால் ஒரு கண்டிசன்."
ஒரு லட்சமா? தினமுமா? அதற்கு நான் என்ன தரவேண்டும் ?
"முதல் நாள் நான் தரும் லட்ச ரூபாய்க்கு பதில் நீ எனக்கு பத்து காசு தந்தால் போதும்."
"பத்து காசுக்கு நான் எங்கே போவது வேண்டுமானால் பத்து ரூபாய் தருகிறேன் என்ன? "என்று நான் தமாசாய் சிரித்தேன்.
"நோ ஜோக்ஸ் . பத்து காசு என்றால் பத்து காசு தான் அதிகமாக ஒரு நயா பைசா வேண்டாம் . பிஸின்ஸ் இஸ் பிஸினஸ். வாக்கு தவறக்கூடாது.
இரண்டாம் நாள் இன்னும் ஒரு லட்சம் தருகிறேன், ஆனாம் இம்முறை இருபது காசுகள தர வேண்டும்.
மூன்றாம் நாள் இன்னும் ஒரு லட்சம் நான் தரும்போது முதல் நாள் தந்ததை போல் இரு மடங்கு அதாவது நாற்பது காசுகள் தரவேண்டும் இப்படி ஒவ்வொரு நாளும் நான் தரும் லட்சங்களுக்கு நீ முந்தய நாள் எனக்கு தந்ததை விட இருமடங்கு தந்தால் போதும்."

"என்ன இந்த மனிதன் உண்மையிலேயே மறை கழண்ட கேசா? . சில சில்லறை காசுகளை பெற்றுக்கொண்டு லட்சங்களை அதுவும் தினமும் தருகிறேன் என்கிறார்.ஒரு வேளை அதிகமாக ஏற்றிக்கொண்டு விட்டாரோ என அதிர்ச்சியிலும் யோசனையிலும் ஆழ்ந்தேன்.
நான் யோசிப்பதை தவறாக புரிந்து கொண்ட அவர், "பரவாயில்லை ஒரு லட்சம் என்பது குறைவாக இருந்தால் மன்னிக்கவும் தினம் ஐந்து லட்சம் தருகிறேன் என்று அவர் சொன்னதும் அதிர்ந்து போய்"அய்ய்யோ அப்படி யொன்றும் இல்லை" என்று நான் சொல்வதற்குள் மீண்டும் அவரே குறுக்கிட்டு "சே என்ன ஒரு மனிதன் நான் பேரம் பேசுகிறேன் . ஐந்து என்ன தினம் பத்து லட்சம் வீதம் தருகிறேன. நீங்கள் முதல் நாள் அதே பத்து காசு தந்தால் போதும் ஒகே யா? என்ன மகிழ்சி தானே? என்னிடம் உள்ள எராள பணத்தை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறேன். என் பணம் விரைவில் தீர்ந்து விட்டால் போதும் எனக்கு நிம்மதியாக இருக்கும்"
நான் போட்டிருந்தது சுத்தமாக இறங்கி விட்டது. "இப்படியும் மனிதர்களா?"
" நான் சொல்வதை நம்பவில்லையா? நான் லூசும் இல்லை,போதை மப்பில் பேசவும் இல்லை. நான் செய்வது ஒரு பிசினஸ் இதில் என் பணத்தை இழக்கப் விரும்புகிறேன். முதலில் இது பற்றி தெளிவாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நாளை நீயோ நானோ மனம் மாறி விடக்கூடாது அல்லவா? ஒப்பந்தத்தை இடையில் முறிக்கக் கூடாது

சரி ..கொடுக்கிற தெய்வம் கூரையைய் பொத்துகிட்டு கொடுக்கும் என் விஷயத்தில் தெய்வம் இன்னும் கருணை காட்டி என் கூரயை கூட பிய்க்காமல் இந்த மனிதன் மூலமாக எனக்கு செல்வத்தை கொடுக்க விரும்புகிறது. இந்த அபூர்வ வாய்ப்பை நான் தவற விட விரும்ப வில்லை. போனால் எனக்கென்ன நஷ்டம் சில்லறை காசுகள். கிடைப்பதோ?...என்னால் அவ்வளவு பணத்தை எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை..
இன்றே ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் . என்று அன்றே பத்திரத்தில் ஒப்பந்தத்தை தெளிவாக எழுதி இருவரும் கையெழுத்திட்டு பதிவும் செய்து கொண்டோம்.
அவர் ஒன்று பைத்தியக்காராக இருக்க வேண்டும் அல்லது சன்னியாசியாயிருக்க வேண்டும்.
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை எங்கேயெல்லாம் அலைந்து சில பத்து காசுகளை சேகரித்து வைத்திருந்தேன். என் அவசரத்தை உணர்ந்து ஐம்பது ரூபாய் அதற்கு பிடுங்கி விட்டார்கள். இப்படியும் சில மனிதர்கள்.உலகை நினைத்தால் வினோதமாக இருந்தது.

கோபால் சொல்லிக்கொண்டிருக்கும் போது சட்டென எனக்கு நம்ம பதிவர் நண்பர் அபூஅஃப்ஸரின் ஒரு பதிவில் இப்படித்தான் ஜிம்பாப்வே நாட்டினர் மூன்று முட்டைக்கு 100 பில்லியன் கொடுத்து வாங்குவார்கள் என படித்தது ஞாபகம் வந்தது. "கோபால் நீ சந்தித்தது ஒரு ஜிம்பாப்வே மனிதரையா? உன் பத்து காசை வாங்கி கொண்டு அவரது பணத்தில் பத்து லட்சம் தந்து ஏமாற்றி விட்டார் சரிதானே?"

"இல்லை அவர் ஏமாற்று காரர் இல்லை அதெல்லாம் ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதியிருந்தேன். சொன்ன படி மறு நாள் அதி காலையில் கையில் ஒரு சூட் கேசுடன் காரில் வந்திறங்கி விட்டார். என்னிடம் கொடுத்து எண்ணிப் பார்க்க சொன்னார். எல்லாம் ஒரிஜினல் ரூபாய்கள் தான் சரியாக பத்து லட்சம் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு வெறும் பத்து காசு கொடுக்க எனக்கு என்னாவோ போல் தான் இருந்தது. ஒப்பந்தம் அப்படி தானே எழுதிக் கொண்டோம். நான் கொடுத்த பத்து காசை பொற்காசு போல எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு மறு பேச்சின்றி கிளம்பி விட்டார். என்னால் எதையும் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் நெஞ்சு வலி வந்து விடக்கூடாதே என்ற கவலை வேறு.

நான் வாய் பிளந்த படி கேட்டுக்கொண்டிருந்தேன். கோபால் கதை விடுகிறானோ?

"மறு நாளும் இதே போல அதி காலை வந்து இன்னொரு பத்து லட்சம் தந்து விட்டுப் போனார். இம்முறை ஒப்பந்தப்படி இருபது காசுகள் வாங்கிச்சென்றார். மூன்றாம் நாளும் பத்து லட்சம் கொண்டு தந்து நாற்பது காசுகள் வாங்கி சென்றார்.
அவரது பயம் நியாய மானது தான் இப்போடு முப்பது லட்ச ரூபாய் சேர்ந்த உடனே யாராது திருடர் வந்து கொள்ளையடித்து சென்று வடுவார்களோ என்ற பயம் எனக்கே ஏற்பட்டு விட்டது."

"ஜாக் பாட் கூட இப்படி அடிக்காதே! நீ உண்மையிலேயே பெரும் அதிர்ஷ்டக்காரண்டா? பின் என்னடா அறிவு கெட்டவனே சோகத்தில் இருக்கிறாய்? லைஃபை நல்லா என்ஜாய் பண்ண வேண்டியது தானே? மொத்தம் முப்பது நாளில் ஒப்பந்தம் முடிந்து விடும் அதற்கு பிறகு பணம் வராது என்ற கவலையா?"

அட நீ வேறு அந்த எழவு ஒப்பந்தம் இப்போதே தீர்ந்து விடக்கடாதா? அல்லது என் உயிர் போய்விடாதா? என கவலையாயிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் நினைத்து போல் அல்ல இப்போதெல்லாம் பொழுது விடிவதே உயிரை அறுக்கத்தான் என்பது போல் வருகிறது. தினமும் அவன் கொண்டு வரும் பத்து லட்ச சூட்கேஸ் அளவு அப்படியயே தான் இருக்கிறது. ஆனால் கொண்டு போகும் பெட்டிதான் இப்போதெல்லாம் பெரிதாகி கொண்டிருக்கிறது. கொடூரமான இந்த ஒப்பந்ததில் கையெழுத்து போட்டதில் என் வீடு.என் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தெல்லாம் போய் விட்டது.அந்த ஒப்பந்தம் மட்டும் இன்னும் பாக்கியிருக்கிறது. என் வீட்டை அவசரமாக விற்பது பற்றி ஆலோசனை கேட்கத்தான் உன்னைஅழைத்தேன்.

கடற்கரையின் தூண்டில் வளைவில் ஒருவன் தூண்டிலில் ஒரு புழுவை வைத்துக் கடலில் எறிகிறான் சிறிது நேரத்தில் ஒரு கொழுத்த மீனை எடுத்து கரையில் போட்டான் .
நான் குழப்பமாக கோபாலை பார்தேன்.
"என்ன சொல்கிறாய்?. தினம் பத்து லட்சம் கிடைத்துமா இன்நிலை. நம்ப முடியவில்லையே? சரி இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது ஒப்பந்தம் முடிய சமாளிக்க முடியாதா?"
"அதற்குள் நான் முடிந்து விடுவேன் போலிருக்கிறது" என கோபால் கடலை வெறித்துப் பார்த்தான்.
கோபால் இன்னும் கொடுக்க வேண்டிய தொகையை கடற்கரை மணலில் கூட்டிப் பார்த்தேன். என் தலை கிறு கிறுத்தது. முதலில் கோபாலை கடற்கரையிலிருந்து தூரமாக கொண்டு செல்ல வேண்டும். கோபாலின் இப்போதைய நிலைக்கு என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. அப்புறம் யோசிக்கலாம்.என்ன நண்பர்களே! கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டரை ஒப்பன் பண்ணி ஒப்பந்த படி கோபால் முப்பதாவது நாள் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு? மொத்தம் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு? மொத்தம் பெற்றுக் கொண்டது எவ்வளவு? ஒரு சின்ன லாப நட்ட கணக்கு போட்டு பாருங்கள். (கால்குலேட்டரில் 1 **2 என க்ளிக் பண்ணிவிட்டு = பொத்தானை மட்டும் மீண்டும் மீண்டும் க்ளிக் பண்ண முந்தைய எண்ணின் இரு மடங்கு காட்டும்.) அதை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு கோபாலிடம் சொல்லி அந்த கோடீஸ்வரரை உங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்கிறேன். தினம் பத்து லட்சம் கிடைக்கும்.
எனக்கு அதிக பணம் தேவை இல்லை. ஒரு பத்து நாள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டு சொல்ல சொல்லியிருக்கிறேன்.

Download As PDF