13 April 2009

சூட்டு வாத்தியாரும் சூ மந்திரக் காளியும்

எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒரு சில சிறந்த ஆசிரியர்களை சந்தித்தாலும் மற்ற பலரும் தங்கள் கடமைகளில் அலட்சியமுடையவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், குரூர மனம் கொண்டவர்களாயும் இருந்து எத்தனையோ பேர்களின் வாழ்வை நாசம் செய்த மன்னிக்க முடியாத குற்றவாளிகள்.
ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் ஆகியவர்களை தேர்வு செய்வதில், பணியில் அமர்த்துவதில் அரசு அவர்களது திறமை, நடத்தை பற்றி மிக மிக கண்டிப்பாக இருப்பது நல்லது. என் சிறு வயது நினைவுகளிலிருந்து சில வடுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இது கதையல்ல.

புது உடுப்பு புது சிலேட்டு பலப்பம் என அப்பாவின் தோளில் தொங்கிக் கொண்டு சந்தோசமாக எனது முதல் பள்ளிப் பயணம். சீக்கிரம் வளர்ந்து விடுவேன் என்று சொல்லி பெரிதாக தைத்ததால் நிக்கர் , பேன்ட் போலிருந்தது. பள்ளியில் சேர்க்கும் போது சிரித்த ஹெட் மாஸ்டரின் பொக்கை வாயும், என் செவிக்கருகே கண கணவென்று அவர் ஆட்டிய மணியின் ஒலியில் காதைப் பொத்தியதும் அப்படியே நினைவில் இருக்கிறது.

என் முதல் வகுப்பில் பாட்டி வடை சுட உட்கார்ந்து விட்டாள். அழகான டீச்சர், அவர் சொல்லும் கதைகளும் அப்படியே. முதல் நாளே ஜொள்ளு!அட வடை தான் காரணம். ஒன்றாம் வகுப்பு கதையும் பாட்டுமாக நன்றாகத்தான் இருந்தது. டீச்சர் கையில் பிரம்பு இருந்தாலும் அது எப்போதாவது தரையில் அடித்து சப்தம் உண்டாக்க மட்டும் தான். ஆனால் பாடங்களை கவனிக்க முடியாமல் இடையூறாக பக்கத்தில் கொல்லன் பட்டறையிலிருந்து வரும் சம்மட்டி சத்தம்.

கொல்லன் பட்டறை என்பது பக்கத்திலிருந்த இரண்டாங் கிளாஸ். இரண்டாங்கிளாசில் சூட்டு வாத்தியார் மாணவர்களை போட்டு அடிக்கும் மாட்டு அடி சத்தத்தை தான் அப்படி சொன்னேன். சூட்டு வாத்தியாரின் உண்மையான பெயர் எது வென எனக்குத் தெரியாது. யாரிடமும் கேட்கவும் தைரியமில்லை. ஆனால் இந்த பக்கம் இருந்த மூன்றாம் வகுப்பு மிஸ்ஸின் வகுப்பில் வன்முறை இல்லை. இதனால் அதுவரை ஒழுங்காக பள்ளி சென்ற நான் முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் பள்ளி செல்ல அஞ்சி நடுங்கி பள்ளி செல்லாமல் அடம் பிடித்தேன்.

அப்பா என்னை ஒரு போதும் செல்லமாய் கூட அடித்ததில்லை.அதனால் தானோ என்னவோ பள்ளியில் என்னைப் போன்ற குழந்தைகளுக்கும் தரும் கொடூர தண்டனைகளை பார்த்து பயமாக இருந்தது. அப்பாவுக்கு என்னை படிக்க வைத்து டாக்டராக்கும் எண்ணம். என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தார்(அப்பா தட்சணை அதிகமாக கொடுத்தாரோ என்னவோ).

நான் அலறி அழுவதையும் பொருட்படுத்தாமல் என்னை தூக்கிகொண்டு பள்ளிக்கு செல்லும் அப்பாவின் முதுகை ரத்தம் வரும்படி நகத்தால் கீறி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறேன். காரணம் சூட்டு வாத்தியார். பின்னாளில் அந்த தளும்புகளை பார்க்கும் போது எனக்கு வலித்திருக்கிறது. "என்னை அடிக்க மாட்டேன் "என்று சூட்டு வாத்தியார் என் அப்பாவிடம் உறுதியளித்தபின் தான் இரண்டாம் வகுப்பில் ஆஜர் ஆனேன். இரண்டாம் வகுப்பில் நான் கற்றது எதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் என்னைத்தவிர அப்பாவி குழந்தைகளை அப் "பாவி" ஆசிரியர் மேஜைக்கடியில் நுளைய விட்டு பின்புறத்தை அடித்து நொறுக்கும் காட்சி தினமும் கண்டு இரண்டாம் வகுப்பு முழுவதும் பள்ளிக்கூடம் செல்லவே எனக்கு விருப்பமில்லை. குறுகிய மேஜையின் கால்களுக்கிடையே நூறு முறை முட்டி தேய தவழ்ந்து வருவது. பிளாக் போர்டின் கால்களுக்கிடையே போக வைத்து அடிப்பது. சுவரில் பல்லி போல ஏறச்சொல்லி படீர் படீரென அடிப்பது என பல வெரைட்டிகளில் தண்டனை வைத்திருப்பார். சின்னக் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே உண்டான குறும்பும் பரபரப்பும் போய் வகுப்பில் எல்லோரும் மிரட்சியுடன் பிடித்து வைத்த களிமண் சிலை போல அசையாமல் வைத்திருப்பது என்ன கொடுமை. மேலே கூரையும் இல்லை. கீழே சிமென்டும் இல்லை. நான்கு பக்கமும் சுவர் மட்டுமே. புலிக்கூண்டில் முயல் குட்டிகள். சில குழந்தைகள் பயத்தில் ஒன்றுக்கு இரண்டுக்கெல்லாம் போய் அப்படியே மறைத்துக் கொள்வதுண்டு.

என் பயத்தின் காரணம் புரியாமல் தினமும் அப்பா வலுக்கட்டாயமாக என்னைப் பள்ளிக்கு தூக்கிக் கொண்டு செல்வார். எனக்கு படிப்பில் நாட்டமுண்டாக்கும் முகமாக யாரோ ஒருவர் ஒரு மந்திரவாதியை அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனது பள்ளிக்கூட வெறுப்புக்கு காரணம் பேய் தான் எனவும் அதை ஓட்டித் தருவதாகவும் கூறிய மந்திரவாதி என் மீதிருந்த பேயை ஓட்ட நாள் குறித்தான். கோடை விடு முறையில் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந்த என்னைப் பிடித்து நாற்காலியில் துணியால் கட்டி வைத்து என்னைச்சுற்றி பல கோடுகள் வரைந்து எதிரே அந்த மந்திர வாதி மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பித்தான். உடலெங்கும் திரு நீர் பூசிக்கொண்டும் பட்டைகள் தீட்டிக்கொண்டும், நீண்ட கூந்தலுடன் பயங்கரமாக தோன்றிய அவனது கையில் வேப்பிலை கொத்து ஒன்று வைத்துக் கொண்டு என் மீது அடித்து பேய் ஓட்ட ஆரம்பித்தான். ஆனாலும் மந்திர வாதி சூட்டு சார் அளவுக்கு ஒன்றும் மோசமில்லை. அவனது மந்திர உச்சாடனங்களும் என்னைப் பேயாக கருதி என்னிடம் ஓடிப்போகச்சொன்னதும் எனக்கு மிரட்சியாக இருந்தது. அழுவதற்கும் பயமாக இருந்தது. கடைசியாக மந்திரவாதி "ஸ்கூல் திறந்ததும் உங்கள் மகன் தானாகவே பள்ளிக்கு செல்வான். அவன் மீதிருந்த துஸ்ட தேவதை ஓடி விட்டது" என்று பணம் வாங்கி சென்றான்.

அடுத்தது பள்ளி திறந்ததும் மூன்றாம் வகுப்பில் சூட்டு சார் இல்லையாதலால் மந்திரவாதி சொன்னது போல் மனம் மாறி பயமின்றி நானாகவே சந்தோசமாக பள்ளிக்கூடம் சென்றேன்.

பேயைத் தாண்டி அடுத்த வகுப்புக்கு வந்துட்டோம்ல.

Download As PDF

6 comments:

Rajeswari said...

நீங்கள் கூறுவதுபோல ஒரு மாட்டு ஆசிரியர்(தமிழ் எடுப்பவர்) நான் வேலை செய்த பள்ளியிலும் இருந்தார்..

பார்க்கவே வெறுப்பாய் இருக்கும்..வீட்டில் உள்ள பிரச்சனையை குழந்தைகளிடம்(+1 பசங்க) காண்பிப்பார்.

Rajeswari said...

//கடைசியாக மந்திரவாதி "ஸ்கூல் திறந்ததும் உங்கள் மகன் தானாகவே பள்ளிக்கு செல்வான். அவன் மீதிருந்த துஸ்ட தேவதை ஓடி விட்டது" என்று பணம் வாங்கி சென்றான்.//

அப்படியே அந்த மந்திரவாதிய கூப்புட்டு போய் சூட்டு வாத்தியாருக்கும் துஷ்ட தேவதைய ஓட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்

சாதிக் அலி said...

//அப்படியே அந்த மந்திரவாதிய கூப்புட்டு போய் சூட்டு வாத்தியாருக்கும் துஷ்ட தேவதைய ஓட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்//
ஹ ..ஹா ..சரியாக சொன்னீர்கள் ராஜேஸ்வரி.அதோடு சூட்டு வாத்தியாரை விட்டு மந்திர வாதிக்கும் பின் பக்கம் தட்சணை கொடுத்திருக்கலாம்.

அபுஅஃப்ஸர் said...

//எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் ஒரு சில சிறந்த ஆசிரியர்களை சந்தித்தாலும் மற்ற பலரும் தங்கள் கடமைகளில் அலட்சியமுடையவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், குரூர மனம் கொண்டவர்களாயும் இருந்து எத்தனையோ பேர்களின் வாழ்வை நாசம் செய்த மன்னிக்க முடியாத குற்றவாளிகள்///

எல்லோரு வாழ்விலும் இது மாதிரி இருக்குங்க.. என்னோட நண்பர்கள் ஒரு சில ஆசிரியர்களின் அட்டகாசத்துக்கு பயந்து பள்ளியை விட்டு ஓடிய சம்பவமெல்லாம் இருக்கு, இப்போ படிப்பை தொடராமல் கூலி வேலைப்பார்க்கும் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு

அபுஅஃப்ஸர் said...

//அழகான டீச்சர், அவர் சொல்லும் கதைகளும் அப்படியே. முதல் நாளே ஜொள்ளு!//

5 வயசுலேயேவா... என்ன கொடுமைசார் இது

ஹி ஹி இது எனக்கும் இருந்தது நண்பரே

ரோஸ்லினு ஒரு டீச்சர் (பார்க்க ரோஸ் மாதிரியே இருப்பாங்க) முதல் 5 வகுப்பு பட்ட ஆசை வாழ்க்கையில் மறவா..

அபுஅஃப்ஸர் said...

//அப்பாவுக்கு என்னை படிக்க வைத்து டாக்டராக்கும் எண்ணம். என் ஜாதகத்தை கணித்த ஜோதிடர் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தார்(அப்பா தட்சணை அதிகமாக கொடுத்தாரோ என்னவோ).//

ஹா ஹா ஹா ரசித்தேன்