29 March 2009

வண்ணமில்லா வானவில்

இந்த உலகம் எவ்வளவு அழகானது. நீலக் கடல், பச்சை வயல்வெளி, அந்திச் சிவப்பு, ரோஜா மலர், ஆரஞ்சுப் பழம், கோதுமை நிறப் பெண்கள், பளீர் வெள்ளை புன்னகை என எவ்வளவு வண்ணங்களை இயற்கை அள்ளித் தெளித்திருக்கிறது. நேற்றுவரை நான் இப்படித்தான் இயற்கையை வியந்து கொண்டிருந்தேன்.

நேற்று என் மூன்று வயதுடைய மகன்"அப்பா! இந்த செடி ஏன் பச்சையாக இருக்கிறது ?" எனக் கேட்டான். "அதில் chlorophil என்ற பச்சையம் இருக்கிறது அதனால் தான்" என்று சொல்ல வாயெடுத்தேன். யோசித்தேன் உடனே அவனது அடுத்த கேள்வி பச்சையம் ஏன் பச்சையாக..? என்று வரும். அது எளிதான கேள்வி இல்லை எனவே நான் யோசித்து பிறகு சொல்கிறேன் என்று நிறங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

யோசிக்க யோசிக்க என்னைச் சுற்றி இருந்த அழகான வண்ண மயமான உலகம் இருண்டு போனது.

இந்த உலகம் முழுவதையும் வண்ணம் தீட்டுவதற்கான பெயின்டை சூரியன் தான் உற்பத்தி செய்கிறது. சூரியன் எனும் பிரம்மாண்ட சக்தி ஊற்றிலிருந்து பலவித  சக்தி அலைகள் வெளிப்பட்ட வண்ணமிருக்க்கிறது.  ஆனால் நமது கண்கள்  அதில் மிக சொற்பமான அலைகளைகளையே உணர்ந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. அந்த ஒரு குறிப்பிட்ட Bandwidth ல் உள்ள அலைகளையே ஒளி (visible light) என்கிறோம்.

சூரியன் அல்லாமல் மெழு வர்த்தி, பாட்டரி, CFL Bulb,என உலகின் எல்லா ஒளி மூலமும் கூட முன்னொரு நாள் சூரியனிடமிருந்து கடன் வாங்கிய சக்தி தான். கண்னால் பார்க்க முடிகிற இந்த ஒளி கற்றைகளில் வெவ்வேறு அலை நீளமுடைய அலைகள் இருக்கின்றன அவை தான் வண்ணங்களாக கண்ணால் உணரப்படுகிறது. வெள்ளை ஒளியில் உள்ள இந்த நிறங்கள் தான் வான வில்லில் தெரிவது. மற்ற படி ஏழு நிறங்கள் எல்லாம் நாம் நமது சௌகரியத்திற்கு வைத்துக்கொண்டது தான்.

உதாரணமாக சூரியனிலிருந்து வெளிப்படும் அலைகளை ஒரு ஆயிரம் பெட்டிகளை உடைய ரயில் வண்டி நம் ஸ்டேசனுக்கு வருவதாகக் கொண்டால். அதில் ஒரு பெட்டி தான் நம் கண்களுக்குத் தெரியும். அதில் இருந்து இறங்கி வரும் பயணிகளை மட்டும் தான் நம்மால் பார்க்க முடிகிறது. அதில் உள்ள எல்லோரும் பயணிகள் என்ற visible light என்றாலும் அதில் ஒரு குழந்தை,ஒரு பெரியவர்,ஒரு இளைஞன், ஒரு யுவதி, ஒரு பாட்டி என பலர் இருக்கிறார்கள். இது போல் தான் ஒளி பல வண்ணங்களில் தெரிகிறது. ஒளியை தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதே இல்லை

ஒளி நேர் கோட்டில் தான் செல்லும் . ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட் ஆசாமி. அதன் பாதையின் எதிரே நம் கண்ணை கொண்டு வைத்தால் தான் தெரியும். பூமியில் ஒளியை சிதறடிக்க பல ஊடகங்கள் இருப்பதால் உலகத்தில் பகலில் வெயில் கண்ணைக் கூசுது. கடன் காரர்கள் பார்த்தும் பாராதது போல் போவார்களே அது போல விண்வெளியில் எவ்வளவு ஒளி நமக்கு முன்னே கடந்து சென்றாலும் சுற்றியுள்ள வெளி எப்போதும் இருண்டு தான் இருக்கும்.

ஒளிக்கு எந்த நிறமும் இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஒரு அலை மட்டுமே. அனால் அதன் நேர் பாதையில் நம் கண்ணை வைத்தால் தான் விழித்திரையில் படுகிறது. அங்கே Rods எனும் செல்கள் ஒளியின் intensity யை உணர்ந்து மின் சிக்னல்களாக பார்வைநரம்புகள் வழி மூளைக்கு தகவல் அனுப்புகிறது. அதே போல Conesஎனும் உணர் செல்கள் ஒளியில் உள்ள அலை நீள வேறு பாட்டை உணர்ந்து நிறங்கள் பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. நாம் உணரும் நிறத்தை தூண்டுவது தான் இந்த அலை நீளம் மற்றபடி இந்த அலை நீளத்துக்கும் நிறத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நமது மூளையில் தான் நமது முன்னோர்களிடமிருந்து கிடைத்த ஒரு புரோகிராம் இருக்கிறது. கண்ணில் இருந்து வரும் சிக்னல்களையும் மூளையில் ஏற்கனவே உள்ள தகவலையும் வைத்து மூளையின் இந்த புரோகிராம் தான் "பச்சை நிறமே பச்சை நிறமே... "மஞ்ச கலரு ஜிங்கிசான் ,சிவப்பு கலரு ஜிங்கிசான் என நமக்கு ஃபி்லிம் காட்டுவது. நாம் கண்ணைத் திறந்து  பார்க்கும் போது தெரியும் வெளிச்சம் ,நிறம்  எதுவும் வெளியில் இல்லை.மூளையில் தான் உருவாகிறது

ஒளியெல்லாம் சரி இலை ஏன் பச்சையாக இருக்கிறது? எதிரே இருக்கும் சுடிதார் ஏன் சிவப்பு நிறத்தில் கண்ணை உறுத்துது? அதை சொல்லுங்க?

சரி சரி... உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் பல அணுக்களின் இணைப்புகள். இப்படிப்பட்ட எல்லா மூலக்கூறுகளிலும் சக்தி சமனாக இருப்பதில்லை. சில பொருட்கள் மீது ஒளி படும் போது அதன் மூலக்கூறுகள் அந்த ஒளியின் சில அலை நீள ஒளிகளின் சக்தியை கிரகித்து விடுகிறது. மற்ற வற்றை விட்டு விடுகிறது. இந்த எஞ்சிய அலைகள் எதிரொளித்து அதற்கேற்ப நம் விழிகளை தூண்டி குறிப்பிட்ட வண்ணங்களை தோன்ற செய்கிறது. உதாரணமாக மேற்குறிப்பிட்ட சிவப்பு சுடிதாருக்கு அந்த வண்ணம் இல்லை. அதன் மீது படும் ஒளியிலுள்ள, ஒரு குறிப்பட்ட அலைநீளமுடய அலைகள் சிவப்பு நிறத்தை நம் மூளை உணருமாமாறு விழித்திரையில் தூண்டும். மற்ற அலைநீளங்களை அந்த துணியின் நூலில் பூசப்பட்ட ரசாயன மூலக்கூறுகள், கிரகித்து விடுகிறது.இதனால் சுடிதார் சிவப்பாக தெரிகிறது.

இதையே ஸோடியம் வேப்பர் லாம்ப் வெளிச்சதில் பார்த்தால் கறுப்பாக தெரியலாம். ஏனென்றால் சோடியம் விளக்கிலிருந்து ஒரே நிற ஒளி தான் வருகிறது. அதையும் சிவப்பு துணி கிரகித்து விட்டால் எஞ்சுவது கறுப்பு தான். இப்படி தான் பல அம்மணிகள் ஜவுளிக்கடை விளக்கு வெளிச்சத்தில் துணியெடுத்துவிட்டு வந்து பகல் வெளிச்சத்தில் பார்த்து கன்னத்தில் கை வைத்து உட்காருவது.

சூரிய ஒளியில் சில நிறங்களை உணரக் காரணமான் அலை நீளங்கள்  இல்லாவிட்டால்...., உலகின் எல்லா மூலக்கூறுகளும் எல்லா அலைகளையும் கிரகித்தால்......, கண்களால் இன்னும் வேறு பல அலைகளை உணர முடிந்தால்....... மூளையின் புரோகிராமில் மாற்றம் செய்தால்....., நாம் காணும் உலகம் நிச்சயம் இப்படி இருக்காது.

இதனால் தான் முதலில் சொன்னேன் இவ்வளவு யோசித்ததில் என்னை சுற்றி இருந்த எல்லா நிறமும் பொய்யாகி விட்டது. என் மூளை தீர்மானிப்பது தான் நிறம். பெண் பார்க்க செல்லும் போது பெண் கொஞ்சம் நிறம் குறைவு என்று இனி மேல் சொல்லாதீர்கள். சூரியன் ஆஃப் ஆனால் ஐஸ்வர்யா ராயும் கறுப்பு தான். ரோட்டில் முன்னால் பைக்கில் யாராவது பச்சை சேலை போனால் பின் தொடர வேண்டாம். சிவப்பு சிக்னலை தவற விட்டு பச்சை தானே இருந்தது என மூளை தவறு செய்யலாம். ட்ராபிக் காண்ஸ்டபிளுக்கு சொன்னால் புரியவா போகிறது.

என் மகன் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. இவ்வளவு பெரிய பதிலை புரிந்து கொள்ள அவன் இன்னும் கொஞ்சம் வளரட்டும். அதுவரை அவனது உலகம் வண்ண மயமானதாகவே இருக்கட்டும்.

மூளைக்கு ஒரு சின்ன வேலை: ஒரு ரோஜாப்பூவின் நிறத்தை நீங்களும் நானும் ரோஸ் என்றே சொல்லிக்கொள்கிறோம் .ஆனாலும் நாம் அதை உண்மையில் நீங்களும் நானும் வெவ்வேறு நிறமாக உணரும் சாத்தியமிருக்கிறதா?

Download As PDF

21 March 2009

கணினி எனக்கொரு போதிமரம்

ஒரு கணினி எப்படி வேலை செய்கிறது? என்று உற்று கவனித்தால் சிருஷ்டியின் பல அற்புதங்களை உணர முடியும்.

பிரபஞ்சத்தில் தொடர்ச்சியான மாற்றம் ஒன்றே தனித்த மாறாத விஷயம். மற்றவை எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தது தான். மாற்றம் முடிவிலாப் பரிமாணங்களில் ஏற்படுகிறது. ஒவ்வொரு பரிமாணத்திலும் நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாற்றம் ஒரு சுழலாகவோ, அலையாகவோ, ஒரு கயிற்றின் பிரிகள் போலவோ, ஏற்படுகிறது. இதில் ஒரு பரிமாணம் தான் மனித மனம். இது போன்ற வேறு பரிமாணங்களின் அலைகள் மனதின் அலையுடன் வெட்டிக்கொள்ளும் போது மனம் மாயப்பிரபஞ்சத்தை உணர்கிறது . இது நிஜப் பிரபஞ்சதின் மிக மிக சொற்பமான விளைவு. உண்மைப் பொருள் நம்மால் உணர முடியாத் தன்மை உடையது.

ஒரு போஸ்ட்மேன் தினசரி எத்தனையோ வீடுகளுக்கு கடிதம் கொண்டு கொடுக்கிறான். அது அவன் வேலை. அவன் உலகம். அனால் இன்று உங்களுக்கு அவன் கொண்டு தந்த அப்பாயின்ட் மென்ற் ஆர்டர் உங்கள் வாழ்க்கையே மாற்றி விடுமளவு முக்கியமானது. போஸ்ட் மேன் கையில் இருக்கும் கடிதங்கள் போல எத்தனையோ பிரபஞ்ச இயக்கங்கள் இருக்கின்றன. அதன் ஒரு கடிதம் உங்களால் மிக முக்கியமாக உணரப்படுவதை போல உங்கள் மனம் உணரும் உலகம் இருக்கிறது. உங்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர். ஆனால் போஸ்ட்மேனுக்கு சாதாரண கடிதம். இரண்டும் ஒன்றல்ல.

மேலே சொன்ன அலை வடிவ மாற்றங்கள் தான் ஒரு கணினியின் ஹார்ட் டிஸ்க்கிலும் இருக்கிறது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பாட்டும் படமும் இணையமும் எதுவும் அதற்கு தெரியாது. ஹார்ட் டிஸ்க் சுழலும் போது வெறும் அலைகளைத்தான் ப்ராசசர் வாசிக்கிறது. அந்த அலைகளில் பல pattern இருக்கிறது. வாசிக்கப்படும் அலைகளின் patternகள் ஃபைல்களாக கருதப்படுகிறது. kernal என்ற ஃபைல் (மனிதனின் ஜீனுக்கு ஒப்பிடலாம் ) லோட் ஆகிறது. அது ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தை மெமரியில் லோட் செய்கிறது். ஆப்பரேட்டிங் சிஸ்டம் , மெமொரி, ப்ராசசர் எல்லம் சேர்ந்து ஒரு மூளைக்கு ஒப்பிடலாம். ரெஜிஸ்ட்ரி என்ற மனதை விர்ச்சுவலாக உருவாக்குகிறது. இந்த ரெஜிஸ்ட்ரி தான் எந்த ஃபைல்களை பாடலாக ஒலிக்க வேண்டும் எந்த ஃபைலை படமாக காட்ட வேண்டும், இணையம் வழி வரும் அலைகளை இணைய பக்கங்களாகக் காட்டுவது. தொலை பேசுவது எல்லாம்.

மனிதனுக்கு ஐந்து "ஃபைல் அசோசியேசன்" தான் ஐம்புலன்கள். வெளியுலகிலிருந்து புலன்கள் பெறும் எந்தத் தூண்டுதல்களை எப்படி நம்மை உணரச் செய்யவேண்டும் என்ற புரொகிராம் ஜீன்கள் வழி பிறப்பிலிருந்தே நாம் பெறுகிறோம் நாம் வளர வளர அது தான் மனமாக மாறுகிறது.

கணினிக்கு எத்தனையோ புலன்கள். விழி மற்றும் செவியுணரும் தூண்டல்களை கணினியில் உருவாக்குவது போல் ஏனைய புலன்களையும் ஏமாற்றும் கணினி நுட்பம் நாளை வளரலாம். ஸ்க்ரீனில் காணும் ஐஸ்க்ரீமை வெனிலாவின் மணத்தோடு ஜில்லென்று சுவைத்துப் பார்க்கலாம். நடிகையின் இடுப்பைக் கிள்ளிப் பார்க்கலாம். விளம்பரங்கள் "அய்யா வாங்க அம்மா வாங்க" என்று கையைப் பிடித்து இழுக்கலாம். பலான சைட்டுக்கு போனால் பாப் அப் போல இணைய போலீஸ் முகத்தில் கும்மென்று குத்து விடலாம்.

சரி இனி இடம் என்ற கருத்தை கணினியை கொண்டு உணரவைக்க முடியுமா? வென பார்க்கிறேன்.

உங்கள் கணினியின் டெஸ்க் டாப்பில் Universe என்றொரு Folder உருவாக்கவும். அதனுள் Solar system/Earth/India/ your name என ஒன்றுக்குள் ஒன்று இருக்கும் படி பல Folderகளை உருவாக்கவும்.
உங்கள் கணினியின் C:\Documents and Settings\User என்ற முகவரியில் Desktop என்றொரு ஃபோல்டர் இருக்கும் அதன் ஷார்ட் கட் ஒன்றை மேலே உருவாக்கிய your name Folderக்குள் போடவும்.

இப்ப நீங்க யாரு?- "your name" . எங்க இருக்கீங்க ?-"India"வுக்குள்ளே ."India" எங்கே இருக்கு? -"Earth"திலே. அப்படி பின்னோக்கி கிளிக் பண்ணி Desktop வந்ததும் இதுக்கு மேலே இடம் இல்லை இது தான் பிரபஞ்சத்தின் எல்லைன்னு விஞ்ஞானியப்போல் மலைச்சு நிக்கிறீங்க . அப்புறம் ஆன்மிகமும் விஞ்ஞனமும் ஒண்ணாயிடறது. ஆன்மீக வாதிகள் DOS மோடில் C:\Documents and Settings\User\desktop\Univers\solar system\Earth \India\your name என்ற முகவரியை தெரிந்து கொண்டு எதற்கு இத்தனை ஃபோல்டர்கள் எல்லாம் வெறும் பைனரி தானே. Your Nameம் பைனரி தான் Universம் பைனரி தான் Desk top ம் அதே தான் எனவே "நானே கடவுள் "என அகம் பிரம்மாஸ்மி யாகி விடுவார்கள்.

விஞ்ஞானிகள் window மோடில் எப்படியாவது my computer Icon ஐ கண்டு பிடித்து அதற்கு worm hole கருந்துளை என்றோ பெயரிட்டு சூட்சும் பயணம் செய்து explorer view ல் எந்த Folderக்கும் டைரக்டாக போகலாம் . அல்லது C:\Documents and Settings\User\desktop\Universe\solar system\Earth \India\your name என்று போய் சுத்தி சுத்தி வரலாம்.

சாதரண ஜனங்கள் desktop\Univers\solar system\Earth \India\your name என்று கிளிக்கிக் கொண்டு Your Nameல் உள்ள desktop Short cut வழி மீண்டும் Univers\solar system\Earth \India\your name என்று "கிளிக்" கி்க்கொண்டிருப்பர்கள். சரியான தனது முகவரி தெரியும் வரை இப்படி "கிளிக்"குவதை தான் "பிறவிப் பெருங்கடல்" நீந்துவதாக வள்ளுவர் சொன்னாரோ? Desk top shortcut ஐ கிளிக் செய்யும் போது Folderக்குள் தெரியும் Icon களை பார்ப்பது போலத் தான் அண்டத்தில் உள்ள சுழற்சியை அணுவிலும் காண்பதை "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது" என்றார்கள்.

இங்கே இருப்பது பைனரி(Binary) ஒன்றே உண்மை. அதை மனம் folder view ல் பார்ப்பது மாயை. ஒன்றுக்குள் ஒன்று எத்தனை Folder இருந்தாலும் கிளிக் செய்யும் போது எல்லாம் ஒரே folder தான் வேறு வேறு முகவரிகளில் தெரிவது. எனவே இடம் என்பதும் இந்த Folder களைப் போல் ஒரு எல்லை கோடுடைய கற்பனை தான். சூட்சும நிலையில் எல்லாம் பைனரி என்பதை போல எல்லா பொருட்களும் ஒன்று தான்.

காலம் , இடம் , இயக்கம் , பயணம் , பொருள் , சக்தி இது போல் நாம் உணரும் எல்லாமே ஒன்றுக்கொன்று சார்பானது. ஒன்று இன்னொன்றை பாதிக்கும். explorer லும் , start menuவிலும், adress bar வழியும், DOS மோடிலும்,search செய்தும் அடைவதைப் போல இருப்பதை பலவாறாக உணருகிறோம்.

பருப் பொருள் போக முடியாத இடத்தை சூட்சும பொருளான அலைகள் எளிதில் அடைவதைப் போல explorer view ல் எந்த இடத்தையும் எளிதில் சூட்சும நிலையில் அல்லது வேறு பரிமாணங்களில் அடைய முடியும். அப்படிப்பட்ட வேறு பரிமாணங்களை(Dimension) உணர மேலும் நுட்பப் புலன்கள் தேவை. அப்படி ஆறாவது ஏழாவது புலனுணர்வை பெறவும் முடியும். ஏன் என்றால் நம்மிடம் இருக்கும் ஐந்து புலன்களும் அப்படி உருவானது தான் . எல்லாம் ஒரு புலனில் இருந்து பரிணாம (Evolution)வளர்ச்சி பெற்றது தான். மேலதிக புலனுணர்வு வேண்டுமானால் அதற்கு கடுமையான தேவை ஏற்பட வேண்டும். அப்போது தான் உடல் அந்த திறனை பெறுவதில் முனைப்பு காட்டும். இதற்குத்தான் யோகிகள் உடல் வருத்தி கடுமையாகத் தவம் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஹீராக் குகையிலும், புத்தர் போதி மரத்தடியிலும் பண்டைய சித்தர்கள் பலர் காட்டிலும் பெற்றது இந்த அதிகப்படியான புலனுணர்வைத் தான். அதனால் அவர்களின் உலகம் மாறியது. சாதாரண மனிதன் உணர முடியாததை உணர்ந்தார்கள். இறைவனை தீவிரமாக தேடுபவர்களுக்கும், தீவிரமான நாத்திகர்களுக்கும் கிடைக்கும். தீவிரமாக எதையும் முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் தேடுவது எதுவானாலும் கிடைக்கும். ஆனால் அவர்கள் பிரபஞ்ச உண்மையை தெளிவாக புரிந்து கொண்டாலும் அதை ஐந்து புலன்களின் மாயையில் சிக்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு சொல்லுவது சிரமம். கதைகள் உதாரணங்கள் மூலமாகத்தான் சொல்ல முடியும். அதை தவறாக புரிந்து கொள்ளும் அரைகுறை மதவாதிகள் இருக்கிற senseஐயும் இழந்து nonsense ஆக நடமாடுவதே நிதர்சனம்.

Download As PDF

19 March 2009

சுத்தி சுத்தி வந்தீக

சின்ன வயதில் என் வீடு தான் எனக்கு உலகம். அப்பாவின் கையைப் பிடித்து தெருவுக்கு வரத்தொடங்கிய போது கடைகள், சாலை என என் உலகம் பெரிதாகி விட்டது. அப்போது இந்த கார்கள் எல்லாம் சின்னதாக சாலையில் ஒரு பக்கம் தோன்றி பெரிதாகி மீண்டும் சின்னதாக மறுபக்கம் எங்கே போகிறது என்று புரியாமலிருந்தது. இடத்தைப் பற்றிய என் கருத்துக்களில் அருகே உள்ள இடம் எனக்கு பெரிதாக தெளிவாக இருக்கும் ஆனால் எல்லைகள் எப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. வானத்தை வெள்ளை பெயின்ட் அடித்த கூரையாகவே கருதியிருந்தேன். நட்சத்திரங்கள் கூரையிலுள்ள ஓட்டைகளாகவும், நிலவை பெரிய குண்டு பல்ப் என்பதாகவும் தான் எண்னியிருந்தேன்.

ஆறாம் வகுப்புக்கு மூன்று மைல் தூரமுள்ள ஸ்கூலுக்கு நடந்து போகும் போது என் உலகம் மேலும் பெரிதானது. இப்போது பயணம், தூரம் பற்றி தெரியவந்தது. ஸ்கூலுக்கு எவ்வளவு துரம் என்பதை வழியில் மின் கம்பங்களை எண்ணி தெரிந்து கொள்வேன். பின்னர் அடி, மைல், மீட்டர், கிலோ மீட்டர் எல்லாம் பள்ளியில் தெரிந்து கொண்டேன். பின்னாளில் வெளிநாடுகள் போன போதும் விமானப்பயணத்திலும், எனது பூமியறிவு மேலும் விஸ்தாரமானது. ஆனால் டெல்லிக்கு ட்ரெய்னில் போன போது தான் தூரத்திற்கும் நேரத்திற்குமுள்ள தொடார்பைப்  பற்றி புரிந்து கொண்டேன்.

Download As PDF

17 March 2009

பொய் சொல்லும் புலன்கள்

இந்த பூமி எவ்வளவு அழகானது. பிரம்மாண்டமானது, சூட்சுமமானது. எவ்வளவு பொருட்கள், எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருப்பதை உணர்கிறோம். முன்பு இருந்த டைனோசரஸ் இப்போது இல்லை. முன்பு இல்லாத கணினி இப்போது இருக்கிறது. மலை, மரம், மலர், மழை, மழலை இப்படி நாம் உணரும் எல்லாப் பொருட்களும் என்ன? நாம் உணர்வது தான் இவற்றின் உண்மையான வடிவமா? பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆன்மீகவியலாளர்கள் தேடி உணர்ந்த விஷயத்தை விஞ்ஞானம் இப்போது தேடுகிறது.

புத்தருக்கு பிறகு நியூட்டனுக்கு மரத்தடியில் ஞானம் கிடைத்தது. இன்றைக்கு பல பவுதீக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி சாலைகளையும், நுண்ணோக்கிகளையும் துறந்து நிஷ்டையில் ஆழ்ந்து பிரபஞ்சத்தை ஆராய்கிறார்கள். விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒன்றைத்தான் தேடுகிறது. பிரபஞ்சத்தின் ஏக மூலப்பொருளை. இப்படி விஞ்ஞானத்தின் அடித்தளத்தைப் பெயர்த்தெடுத்தும் அதன் முகத்தை திருப்பி விட்ட பெருமை ஐன்ஸ்டீனுக்குத்தான் உண்டு. விஞ்ஞானம் இதுவரை நாம் உணரும் பவுதீக உலகைப் பற்றித்தான் ஆராயந்து கொண்டிருந்தது. இப்போது தான் தெரிகிறது உள்ளது வேறு உணர்வது வேறு என்று.

ஒரு பொருளைப் பற்றிய அறிவு நமக்கு எப்படி கிடைக்கிறது? நமது மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐந்து புலனுறுப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் தொடர்புடைய பொருளின் தன்மையைக் கொண்டும் மூளை ஒரு மாதிரி ஐடியா பண்ணிக்கொள்ளும். வெளியெ உள்ள உலகத்தின் பொருட்களுக்கு ஐம்பதாயிரம் குணங்கள் இருக்கலாம். நம்மால் கற்பனை செய்ய முடியாத தோற்றத்தில் இருக்கலாம். அனால் நாம் அதிலிருந்து வெறும் ஐந்தே ஐந்து தனமைகளை மட்டும் புலன்கள் வழி கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப அதற்கு மூளையில் ஒரு வடிவம் கொடுக்கிறோம். அது எப்படி உண்மையானதைக் காட்டும்? உண்மையில் இருப்பதை அல்ல நாம் உணர்வது. உணர்வதை மட்டும் இருப்பதாக நம்புகிறோம் அவ்வளவே. ஏன் இந்த ஐந்து புலனகள்? நாம் உயிர்வாழ இந்த ஐந்து புலன்கள் போதும் என நமது பரிணாமம் நினைத்திருக்கலாம்.

நாய்களுக்கு கொஞ்சம் மோப்ப சக்தி அதிகமாக போனதால் திருடனை பிடித்து விடுகிறது. போலீஸின் மூக்கிற்கு இந்த பவர் பத்தாது. சில பிராணிகள் நிலநடுக்கத்தை முன்னமே உணரக் காரணம் அதன் உயிர் வாழ்க்கைத் தேவை. மனிதன் எல்லாவற்றிற்கும் கருவியை நம்பத் தொடங்கியதால் புலன்கள் இதற்கு மேல் டெவலப் ஆக வில்லை. யார் கண்டார்கள் வருங்காலத்தில் SMS அனுப்பினால் நேராக மூளையில் சேவ் ஆகி விடலாம்.

இரு கண்ணுக்கு பதில் ஒரு கண் மட்டும் இருந்தால் ஊசியில் நூல் கோர்பது எப்படியாம்? கண்ணே இல்லாத மனிதர்களின் உலகத்தில் எனக்கு மட்டும் கண் இருந்து ஐயா அதோ பாருங்கள் வெளிச்சமாய் சூரியன், என்று சொன்னால் "போடாங்கொய்யாலே" என்று சொல்வார்கள். அவர்களுக்கு வெளிச்சம் இருட்டு எல்லாம் கிடையாது எல்லமே தடவல் தான் தடவி தடவி கையில் கிடைப்பதை வாயில் போட்டு உலகத்தை வேறு விதமாய் உணர்வார்கள். பச்சை இலைகள் , நிலவைப் பற்றிய கவிதைகள், டெலிவிசன்கள, கிரகங்கள், சினிமா, ஒபாமா, தாஜ்மஹால், ஷ்ரேயா எல்லாம் வேறொன்றாய் மாறி விடும். அல்லது இல்லாததாய் ஆகி விடும். கண் கொஞ்சம் மாறு கண்ணாயிருந்து லேடீஸ் காலேஜ் பக்கம் போனாலே பெண் போலீஸ் வந்து நேராக்கி விடுவார்கள். சரி கண் கொஞ்சம் டெவலப் ஆகி X- ray பார்வை கிடைத்தால் ரோட்டில் மறைத்துக்கொண்டு மானமாக நடமாட முடியுமா? கடன் காரனிடம் அய்யோ இப்ப தான் ஒருத்தனுக்கு கொடுத்தேன் என்று பதுக்க முடியுமா?

மூக்கு கொஞ்சம் பவர் கூடிப் போனால் ராத்திரி மனைவி மோந்து பார்த்து விட்டு "இன்னிக்கு பூரா வனஜாவோட சுத்தினீங்களா அவ ஸ்மெல் அடிக்குது. அவளோடு ஐஸ் கிரீம் வேறு சாப்பிட்டிருக்கிறீகள் "என பிரச்சனைகள் உருவாகும். மோப்ப சக்தி குறைந்தால் சோப்புக் கம்பனிகள் முதலில் இழுத்து மூடும். ட்றெஸ் சாக்ஸ் எல்லாம் ஒரு மாதத்திற்கு மேல் அப்படியே உபயோகிக்கலாம். நாக்கில் சுவை மொட்டுக்களையெல்லாம் சுரண்டி எடுத்து விட்டால் மளிகை லிஸ்டில் நிறையப் பொருட்கள் குறையும். அப்புறம் உப்பில்லை, புளியில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள்.

சிலருக்கு "தொலி கட்டி" என்று சொல்வது அவர்களை சுரணையற்றவர்கள் அல்லது தன்மானமற்றவர்கள் என்ற பொருளில் தான். உண்மையில் தொடு உணர்வு குறைவாயிருந்தால் அப்பளக் கட்டை அடியெல்லாம் சிரித்துக்கொண்டே சமாளிக்கலாம். "எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான் ரொம்ப நல்லவன்" என்று பாராட்டு பெறலாம். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் தேவையான புலன்கள் தேவையான உணர் திறனில் இருப்பதால் மட்டுமே நம் உலகம் இப்படி நமக்கு ஏற்றதாக இருக்கிறது. ஒரு பாக்டீரியாவின் உலகம் வேறு நம் உலகம் வேறு. ஐம் புலன்களை தவிர்த்து வேறு புலன்களும் உண்டு. கீழே விழுந்து விடாமல் உடம்பு பேலன்ஸ் செய்து கொள்வதற்கு காதில் உள்ள ஒரு திரவமே காரணம். மேலும் ஒரு சென்ஸ் கூடும் போது இப்போது காணும் உலகத்தோற்றம் அப்படியே மாறி விடும்.

உண்மையில் இந்த ஐம்புலன்களும் வெவ்வேறு ரேஞ்சுகளில் உள்ள சக்தியின் தொடுதல்களை உணரும் தொடு புலன்களே. ஃபோட்டான்கள் எனும் நிலையில் சக்தி தொடும் போது கண் உணருகிறது, ரசாயனத் தொடுதல்களை மூக்கும் நாக்கும் உணர்கிறது. காற்றின் தொடுதல்களில் உள்ள மெல்லிய வேறு பாட்டை ஒலியாக காது உணருகிறது. பொருளின் தொடுதலை உடல் உணர்கிறது. கண் ஒளியை உணர்வது போல அகச்சிவப்பு கதிர்களை கொண்ட வெப்ப சக்தியை தோல் உணர்கிறது. பாம்புக்கு செவி கிடையாது. உடலாலே மகுடியின் அதிர்வுகளை உணர்கிறது.

நம் கண் பார்ப்பதும் மூளை உணர்வதும் ஒரு காமிரா போல அல்லது ஒரு ஸ்கேனர் போல பதிவதில்லை. அதை நமது OCR, அல்லது Voice Reconition டெக்னாலஜி போல சொல்லலாம். அதாவது புலன் வழி பெறும் தகவலை மூளை ஏற்கனவே உள்ள மற்ற டேட்டா பேசுடன் ஒப்பிட்டு தான் அதைப் பற்றி உணர்கிறது. அதாவது உங்கள் வீட்டுக்கு யூனிபார்மில் அடிக்கடி வந்து லெட்டர் கொடுக்கும் போஸ்ட் மேன். உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஒருநாள் அவரை வேறு ஒரு உடையில் வேறு நாட்டில் காண நேர்ந்தால் உங்களால் அவரை அடையாளம் காண முடியாது. சிலருக்கு பணம் வந்தால் சொந்த பந்தங்களை தெரியாமல் போவது வேறு காரணம்.

ஐந்து புலன்களும் ஐந்து வடி கட்டிகள். யானைய தொட்டுப்பார்த்து சொன்ன ஐந்து குருடர்கள். யானையின் உண்மையான வடிவை ஐந்து குருடர்களும் ஐந்து பொருளாகத்தான் ஒப்புமைப் படுத்துவார்கள் அன்றி அவற்றை சேர்த்து முழு யானையாய் உணரமாட்டார்கள். காரணம் முழு யானைய அவர்கள் இதற்கு முன் பார்த்த தில்லை. இதனால் தான் முழு பிரபஞ்சத்தின் Unified தன்மையை உணர முடியால் நாம் இப்போது குறை பட்ட புலனறிவால் வெவ்வேறாக உணருகிறோம். நாம் காண்பது, கற்பது, கருதுவது எல்லாமே நமக்கு இந்த புலன்கள் தந்தது. உலக இன்பமும் துன்பமும் இந்த புலன்கள் நமக்குக் காட்டுவது. புலன்களுக்கு அப்பாற்பட்டு இருப்பது நாம் வெவ்வறாக உணரும் எல்லாம் சேர்ந்த கலவை. காலம், இடம், பொருள், என்று ஒன்றில் நின்று கொண்டு இன்னொன்றை அளக்கிறோம். உலகத்தின் எல்லாமும் ஒன்றை ஒன்று சார்ந்தது. எல்லாம் சேர்ந்ததுதான் அந்த தனித்தது.

யோகிகள் புலனடக்கத்தை சொல்வதற்கு காரணம் புலன்களை அடக்கும் போது அல்லது அறிந்து தெளியும் போது புலன்களால் உண்டாகும் பொய் உலகமும் அடங்கி விடும். பிரபஞ்ச உண்மையின் பேரொளி துலங்கும் அதன் பின் எந்த கேள்வியும் எஞ்சியிருக்காது. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

தெளிவாக குழப்புகிறேன் என்று தோன்றினால் எல்லா அப்ளிகேசன்களயும் குளோஸ் செய்து விட்டு நிதானமாக ஒரு முறை படித்து விட்டு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். அப்புறம் ஓட்டு போடுவது பின்னூட்டம் இடுவது உங்க இஸ்டம்.

தொடர்புடைய பதிவு : கண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா?

Download As PDF

13 March 2009

இதயத்திலே ஓர் இசைத்தட்டு சுழலுது

எங்கள் கிராமத்தில் முதன் முதலில் என் அப்பாவிடம் தான் கிராம ஃபோன் பெட்டி இருந்தாம் . கீ கொடுத்தால் ஸ்பிரிங் உதவியுடன் சுழலும் தட்டு அதில் ரிக்கார்ட் பிளேட்டுகளை வைத்து அதன் மேல் குழாய் ஸ்பீக்கருடன் இணைந்த ஊசியை வைக்கும் போது குழாயில் பாட்டு கேட்குமாம். அதில் எம் கே தியாராஜ பாகவதர் பாட்டு மற்றும் இந்திபட பாடல்களை கேட்க ஒரு கூட்டம் கூடி இருக்குமாம். அதன் பெருமைகள் அப்பா சொல்வதை சுவாரசியமாகக் கேட்பேன். ஒவ்வொரு பாட்டுக்கும் கீ கொடுக்க வேண்டும், பாடல் முடியும் போது ஸ்ப்ரிங் டென்ஸன் குறைந்து பாடல் சுருதி குறைந்து விடும். அடிக்கடி ஊசி மாற்ற வேண்டும். இந்த கிராம போனை நான் பார்த்ததில்லை. அதன் ரிக்கார்டுகளை தான் பார்த்திருக்கிறேன் கருப்பாக கனமாக தோசைக் கல் சைசில்.கீழே போட்டால் உடையும் என்றும் ஒருமுறை கற்றுக்கொண்டேன்.

கிராம ஃபோன் பெட்டியின் மின் பதிப்பு தான் ரிகார்ட் பிளேயர். கையால் சுற்றுவதை மோட்டர் சுற்றும். பிளேட்டில் பதிந்துள்ள அதிர்வுகளை மின்சார அலைகளாக மாற்ற ஒரு பிக் அப் காயில் இருக்கும்.

ரிக்கார்ட் பிளேயரை முதலில் பார்த்தது மம்மேலியின் சாயாக்கடையில் தான். தினமும் அதிகாலை என் அப்பா தவறாமல் சாயாக் கடைக்கு அழைத்து சென்று புட்டும் பழமும் வாங்கி விரவி ஊட்டுவார். சிறு பையனான என் கண் முழுதும் எதிரே இருக்கும் ரிக்கார்ட் பிளேயரில். ஒரு நடன மங்கையை போல் சுழலும் இசைத்தட்டிலும் அதன் மேல் நிரடிசெல்லும் ஊசியிலும். ஸ்பீக்கரில் வழியும் பாடலிலும் மனம் லயித்திருக்கும். ஊரில் எங்கு மைக் செட் காரர்கள் கடை விரித்திருந்தாலும் என்னை ரிக்கார்ட் பிளேயருக்கு அருகே காணலாம்.

ஒருநாள் எனக்கும் அது போல் ஒரு பிளேயர் வாங்கிக் கேட்டு உண்ணாவிரதம் இருந்து தூங்கிப் போனேன். மறுநாள் கண்விழித்த போது புத்தம் புதிய பிலிப்ஸ் ப்ளேயர் என் தலை மாட்டில். அன்புள்ள அப்பா. கூடவே கொஞ்சம் எம்ஜியார் பட ரிக்கர்ட் பிளேட்டுகள். ப்ளேயரை வால்வ் ரேடியோவுடன் இணைத்து இசைத்தட்டை இட்டு சுழலச்செய்து ஸ்டைலஸை மெதுவாக தட்டின் விளிம்பில் வைத்ததும் கரகர என்று விட்டு "பாடும்போது நான் தென்றல் காற்று" என்று எஸ் பி பி பாடுவதை கேட்பது அருமை. ரேடியோவில் அப்போதெல்லாம் கேட்கும் கடா முடா இரைச்சல் இன்றி இசைத்தட்டில் தெளிவாக ஒலிப்பது பேரானந்தம். இசைத்தட்டில் ஊசி நெருடும் போது ஸ்பீக்கரின்றி பாடல் சத்தம் கிரு கிரு வென கேட்கும். அதை காதை அருகே வைத்து கேட்பேன்.

அதன் பின் மோனோ ட்ராக் எல்லாம் போய் பாடல்கள் ஸ்டீரியோ வந்தது."ஙோ"என்று ஒலிக்கும் குழாய் ஒலிபெருக்கி போய் "சில்" என்று ஒலிக்கும் பாக்ஸ் ஸ்பீக்கர் வந்தன. அப்புறம் புதிய மாடல் பிளேயர் வந்தது. ஆட்டோ மேட்டிக்காக ஸ்டைலஸ் நகர்ந்து இசைத்தட்டில் உட்காரும் பாடல் முடிந்தது பழைய இடத்துக்கு வந்து விடும்.

நான்கு பாடல் உள்ள சிறிய இசைத்தட்டு முதல் பதினெட்டு பாடல்கள் உள்ள பெரிய இசைத்தட்டு வரை வெளியாயின. கொலம்பஸ், எச் எம் வி இவைதான் இசை தட்டு கம்பனிகள். ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையே கோடுகளால் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு வகைத் தட்டுக்கும் ஒரு வேகம் இருக்கும். அதற்குரிய வேகத்தில் சுழலச் செய்ய குமிழ் இருக்கும். சில வேளை அந்த குமிழைத் திருகி வேகம் கூட்டும் போது எஸ் பி பி மழலையாக மாறி விடுவார். அவசரம் அவசரமாக பாடுவது கேட்க ஜாலியாக இருக்கும். பிறகு நிறைய இசைதட்டுகளை அடுக்கி வைத்து ஒவ்வொன்றாக தானியக்கும் பிளேயர்களும் வந்தன. அப்போதெல்லாம் என்னிடம் ஒரு பெட்டி நிறைய அருமையான பாடல்கள் கொண்ட ரிக்கார்ட்கள் சேர்ந்து விட்டது. ரிக்கார்ட் பிளேட்டுகளில் பிரச்சனை என்பது கீறல் அல்லது கோடுகள் விழுவது தான். இதனால் சில வேளை பாடகர் சொன்னதையே திருப்பி சொல்லி கடுப்பேற்றுவார்.

ஒரு சுப முகூர்த்தத்தில் நேசனல் பானசோனிக்கின் ஒரு அழகிய டேப் ரிக்கார்டர் அப்பா வாங்கித் தந்தார். இதில் புதிய டெக்னாலஜியாக இரும்பு ஆக்ஸைட் பூசப்பட்ட ஃபிலிம் நாடாக்களில் மின் காந்த முறையில் பாடல்கள் பதிவானது. இதற்கான காசட்டுகள் 40 நிமிடம் முதல் ஒரு மணிவரை ஓடக்கூடிய அளவுகளில் கிடைத்தன. இசை நல்ல ஒலித்தரத்துடன் இருந்தது. இதன் விசேசம் நம்மால் ஒலிப்பதிவும் செய்ய முடியும் என்பதே. முதன் முதலில் அதன் மைக்கில் பாடி என் குரலைப் பதிவு செய்து கேட்டபோது வேறு யார் குரல் போலவோ இருந்தது. ஆனால் மற்றவர்கள் குரல் சரியாக கேட்டது. அப்போது தான் உணர்ந்தேன் நான் அதுவரை என் குரல் என்று நினைத்துக் கொண்டிருந்தது எனக்கு மட்டுமே கேட்கும் குரல். பிறர் என் குரலை வேறு மாதிரி தான் கேட்கிறார்கள் என்று.

ஒருமுறை சமையலறைப் பாத்திரங்கள், வாளி, குடம் எல்லாம் வைத்து இசை அமைத்து பாடி பதிவு செய்தேன். அந்த சின்ன வயதுக்கு நன்றாகவே இருந்தது அந்த பதிவு. எங்கு பாட்டுக் கச்சேரி நடந்தாலும் அதை தூக்கிகொண்டு போய் ரெக்கார்ட் பொத்தானை அழுத்துவது வழக்கம். பாட்டியின் கதை, யாசகனின் தாளப் பாட்டு, எம்ஜியார், கலைஞர் மேடைப் பேச்சு, தம்பியின் அழுகை என நிறைய சுவாரசியமான பதிவுகள் செய்திருந்தேன். மறக்காமல் என்னிடம் இருந்த எல்லா ரிக்கர்ட் பிளேட்டுகளையும் காசட்டுகளாக்கி விட்டேன். புதிய மொந்தையில் பழய கள்ளு.

காசட்டுகள் குழந்தைகள் கையில் கிடைத்தால் அத்தனை ஃபிலிமையும் வெளியே இழுத்துப் போட்டு விடுவார்கள். நாடா அறுந்து விடுவது சிக்கிக்கி கொள்வது போன்ற பிரச்சனைகளோடு, காசட்டில் ஒரு பாடலைத் தேடுவது சிரமம் தான். சிறிய வாக்மேன் களை இடுப்பில் கட்டிக் கொண்டு நடக்கும் ஃபேஷனும் வந்தது


சிடி பிளேயர் வந்த போது அதன் ஒலித்தரம் மிக அருமையாக இருந்தது. அதே கிராம்ஃபோன் டெக்னாலஜி என்றாலும் இதில் அனலாக் முறைக்குப் பதில் டிஜிடல் முறையில் பதிவு செய்யப்பட்டது. ஊசிக்கு பதில் லேசர் ஒளி இதனால் உராய்வில்லை. ஆரம்பத்தில் இந்த டெக்னாலஜிக்கு மிக அதிக விலை கொடுக்கப்பட்டது. இன்று காசட்டை விட சிடி மலிவு. சிடி பிளேயரும் மலிந்து விட்டது. MP3 என்ற பாடலைக் குறுக்கும் முறையில் 150 க்கும் மேற்பட்ட பாடல்களை 700Mb CD யில் பதிவு செய்ய முடிந்தது. அப்புறம் 4.7 GB,9 GB கொள்ளளவில் DVD வந்தது.கிராமஃபோனின் மற்றொரு அவதாரம் ஹார்ட் டிஸ்க். அதே சுழலும் தட்டுகள்.ஆனால் பதிவது டேப்பில் உள்ளது போல் மின் காந்த பதிவு. சிடியில் உள்ளதை போல் டிஜிடல் முறை. உராய்வில்லை.
ஒருவழியாக இந்த தட்டின் சுழற்சியை நிறுத்தியது ப்ளாஷ் மெமரி தான். பென் ட்ரைவ், மெமரி கார்ட், தம்ப் டிரைவ், MP3 Player என்றெல்லாம் அறியப்படும் இதில் எதுவும் சுழல்வதில்லை. முழுவதும் மின்னணு முறையில் பாடல் பதிவு செய்யப்பட்டு மீட்கப்படுகிறது. இன்று பாடல்கள் ஃபைல்களாகி, இணையத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது. இசைப் பதிவை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய முடிகிறது. இசைகருவிகள் வயோதிகர்களாக லொக் லொக் என்று இருமிக் கொண்டிருக்க ம்யூசிக் சிந்தசைசர்களில் ரெடிமேடாக இசை. பழைய இசைக்கருவிகள் கோவில் திருவிழாக்களுக்கு போய்விட்டன. கலைவாணியின் வீணை, பெண்பார்ப்பு நிகழ்சியிலும் பொதிகை டிவியிலும் அவ்வப்போது காணலாம்.

எல்லாம் மாறிப்போய்விட்டன ஆனால் என் ஃபிளாஷ் மெமரியில் ஒரு ஃபோல்டருக்குள் எனது பழைய '70,'80 களின் கலெக்சன் பத்திரமாய் சட்டைப்பைக்குள் இருக்கிறது. டேப், காசட் எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன். இன்று ரீ மிக்ஸ் என்ற பெயரில் பாட்டிக்கு மீண்டும் ஃபிராக் உடுத்தி அழகு பார்க்கிறார்கள். எதுவும் ரசிக்கும் படி இல்லை. பழைய பாடல் அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறேன்.

சமீபத்தில் வீட்டில் பரணில் கிடந்த ஒரு இசைத்தட்டை என் மகன் எடுத்துவந்து அது என்னது? என்று கேட்டான். இது தான் அந்த கால சிடி என்றேன். இதில் என்ன பாட்டு இருக்கிறது என்று கேட்டான். எனக்கும் தான் அந்த கேள்வி. அதன் நடுவில் இருந்த எழுத்துக்கள் ஒன்றும் தெரியும்படி இல்லை. ஒரு பேப்பரை எடுத்து கோன் போல செய்து அதன் முனையிலொரு குண்டூசியை செருகிக்கொண்டேன் பழைய இசை தட்டை கழுவி சுத்தப்படுத்தி ஒரு குச்சியில் மாட்டி சுழலச்செய்து காகித கோனின் குண்டூசி முனையை அதில் வைத்து பிடித்ததும் "தழுவிடும் இனங்களில் மானினம், தமிழும் அவளும் ஓரினம்" என்று எஸ் பி பி கீச்சுக்குரலில் பாடியதை மெய் மறந்து கேட்டேன். என் மகன் என்னைப்பற்றி என்ன நினைத்தானோ I pod ன் ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு காலரை தூக்கி விட்டு  கை கால்களை உதைத்தபடி நடையைக் கட்டினான். அதில் "ஆடுங்கடா என்ன சுத்தி அய்யனாரு வெட்டுகத்தி "என கசிந்து கொண்டிருந்தது.

Download As PDF

10 March 2009

தொலைந்த புத்தகம்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழில் நுட்பப் புரட்சிகளும், சமுதாய கலாச்சார மாற்றங்களும் வேகமாக நம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிக் கொண்டிருக்கிறது. என் வாழ்வில் நான் கண்ட மாற்றங்களை அசை போட்டுப் பார்கிறேன். முதலில் எனக்கு பிடித்த "புத்தகம்" எனும் பொருள் தன் அடையாளம் இழப்பதைக் காண்கிறேன்.

சின்ன வயதில் சுவாரசியமான கதைகள் கேட்பதில் எந்த குழந்தைக்குத்தான் ஆர்வமிருக்காது. உணவு உண்ணும் போது அம்மா சொல்லும் புலி மச்சான் கதையும் காக்கை குருவி கதையும் தூங்கும் போது பாட்டி சொல்லும் பேய் கதைகளும் இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. அப்புறம் முதல் வகுப்பில் பாட்டி வடை சுட்ட படக்கதை. அப்புறம் காமிக்ஸ் புத்தகங்கள். எந்திரக்கை மனிதன் ,வேதாளர்,மந்திர வாதி மாண்ட்ரேக், ஸ்பைடர் மேன் போன்ற படக்கதைகள் பாதாள பைரவி போன்ற சூனியக்கிழவிக் கதைகளில் மூழ்கி இருந்த பையன் பிராயம். இது போன்ற புத்தகங்களை நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஃபைல் ஷேரிங் நெட் வொர்க் அப்போதே உண்டு.

அப்புறம் வளர வளர ஆனந்த விகடன், கல்கி,குமுதம், ராணி போன்ற பத்திரிகைகளின் ஜனரஞ்சகம், ஜெயகாந்தன் ,கல்கி அப்புறம் மர்மமாக எழுதும் தமிழ்வாணன், விஞ்ஞானத்திற்கு சுஜாதா, சஸ்பென்ஸ் த்ரில்லுக்கு ராஜேஸ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார், புஸ்பாதங்கதுரை, பேய்க்கதைக்கு பி டி சாமி, குடும்பக்கதைக்கு லட்சுமி, சிவ சங்கரி , பால குமாரன், வரலாற்றுக்கு சாண்டில்யன் என இன்னும் எத்தனை எழுத்து வடிவங்கள் இருந்தன. இன்றைக்கு எனக்கு எழுத உதவுவது அவர்கள் தான் . அன்றைக்கு எப்படித்தான் சாண்டில்யனின் கடல் புறா பைபிள் சைஸ் புத்தகங்கள் படித்தேனோ. மஞ்சள் அழகி ரொம்ப நாள் கனவில் தொல்லை கொடுத்தாள். இன்று அதெல்லாம் படிக்க (ஹா...வ்) பொறுமை இல்லை . கடிகார வேகம் கூடி விட்டது.

புத்தகக் கடையை கண்டால் கள்ளுக்கடையை கண்ட குடிகாரன் போல் ஆகி விடுவேன் . புத்தகங்களைப் பார்க்கும் போது எனக்கு குழந்தைகளுடன் இருப்பது போல் சிலிர்ப்பாக இருக்கும். விடலைப் பருவத்தில் கூட பெண்பிள்ளைகளை விட புத்தகங்களைத் தான் அதிகம் ஆர்வமாய் பார்ப்பேன். பஸ் யாத்திரைகளில் ஒரு புத்தகத்தை பிரித்தால் அது சுகமான யாத்திரை. என்ன கண்ணுக்கு கொஞ்சம் கேடு

இன்றைய இளைய தலை முறை இதை எல்லாம் இழந்து விட்டது. காசு கொடுத்து யார் புத்தகம் வாங்குகிறார்கள்? யாருக்கு படிக்க நேரம் இருக்கிறது?

இன்று அதன் இடத்தை வீடியோ கேம்கள், டெலிவிஷன் ஆக்கிரமித்து இருக்கிறது. இதனால் இன்றைய குழந்தைகள் வாசிப்புத்திறனை இழந்து விட்டார்கள். காமிக்ஸ் கதைகள் இன்று ஹாலிவுட் க்ராபிக்ஸ் வடிவம் பெற்று ஸ்பைடர் மேன் போன்ற படங்களாக வருகிறது. குழந்தைகள் செய்ய வேண்டிய கற்பனைகளை எல்லாம் கிராபிக்ஸே செய்து விடுவதால் கற்பனை சக்தியும் வளர்வதில்லை. எழுத்து திறமை என்பது போய் விட்டது. பேசுவதை அப்படியே எழுதுவது என்று மாறி விட்டது. பல புதிய வாக்கிய அமைப்புகள் புதிய வார்த்தைகள் தோன்றி விட்டது. தமிழ் இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. ஒரு தமிழன் பேசுவதை மற்றொரு தமிழனால் கூட புரிந்து கொள்ள முடிய வில்லை. மற்றெந்த மொழிக்காரர்களை விடவும் தமிழர்கள் தான் அதிக ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். வரும் சந்ததிகள் இப்படி தமிழில் பேச வெட்கப்படக்கூடிய சூழல் உருவாக முதல் காரணம் ஆங்கில மோகமும் UKG,LKG என பால் பருவத்திலிருந்தே ஆங்கில மீடியம் ஸ்கூல்களில் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான்.

தொடர்கதைகள் இன்று டிவி சீரியல்களாகி விட்டது. ஆனால் எல்லா நாவல்களையும் படமாக்க முடியாது . பால குமாரன் போன்றவர்களது எழுத்தில் கதாபாத்திரங்களின் மனசு பேசுவதை கேட்க முடியும் . எண்ண ஓட்டங்களை காட்சிப்படுத்தும் திறமை கதையாரியரின் எழுத்துக்கு இருக்கும். இது காட்சிகளையும் வசனங்களையும் மட்டுமே பதிவு செய்ய முடிகிற காமிராவுக்கு இல்லை. சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள மெல்லிய நகைசுவை கலந்த வர்ணனையை அவரது கதையில் உருவான படங்களில் காண முடியாது. சுஜாதாவின் "ப்ரியா" கதையில் உள்ள விறு விறுப்பு ரஜினியின் ப்ரியா படத்தில் இல்லை. சுஜாவின் கணேஷ் வசந்த் கதாபாத்திரங்களாக ரஜினி, ஒய் ஜி யை பார்த்த போது சப்பென்று இருந்தது.

கவிதைப் புத்தகங்கள் புதுக்கவிதைக்கு மாறி ஹைக்கூவாகி இன்று எது கவிதை என்றே குழப்பமாக இருக்கிறது. சில கவிதைகள் ஜோக்குகள் போல துணுக்குகள் போல பிரித்து பிரித்து போட்ட வாக்கியமாகவும் சில வேளை தெரிகிறது. மளிகைக் கடை பில் கூட சில வேளை கவிதை போல் தெரிகிறது. கவிஞர்கள் பெரும் பாலும் பெண்ணையும், காதலையும், புரட்சியை மட்டும் சிலாகித்து கற்பனை உலகில் திரிவார்கள். கவிதை என்றால் ந்ச் என்று இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த "நச்"கவிதைப் புத்தகம் திருக்குறள்தான். மேற்குடி மக்கள் மட்டும் ரசித்திருந்த கவியை பாமரர்களிடம் கொண்டு சென்ற புண்ணியம் சினிமாவுக்குத்தான். மட்டமான ரசனயுள்ளவர்களுக்கு மட்டமான பாடல்களை தருவதற்கும் சினிமா கவிஞர்கள் தயங்கியதில்லை. கவிஞர்கள் சினிமாப் பாட்டு எழுதப்போனதால் காசு கொடுத்து கவிதை நூல்கள் படிப்பதில்லை

சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் படிக்கும் போது காபி குடித்தது போல் தெம்பாக இருக்கும் அப்புறம் பழைய கதை தான்.

டெக்னாலஜி பற்றிய புத்தகங்கள் வந்து சூடு ஆறுவதற்குள் வேறு டெக்னாலஜி வந்து பிரபலமாவதால் அவற்றின் ஆயுள் கம்மி. மீர் பதிப்பகத்தார்கள் பல நல்ல அறிவியல் புத்தகங்கள் (ரஷிய மொழிபெயர்ப்பு) குறைந்த விலையில் இட்டிருந்தார்கள். தமிழில் அறிவியலை சுஜாதா தான் கம்ப்யூட்டர், சிலிகான் என்று சிறிது முயற்சி செய்தார். ஆழ்ந்த அறிவியல் தமிழில் அதிகம் எட்டிப் பார்க்க வில்லை.அறிவியலும் ,எழுத்தும் சேர்ந்து அறிந்தவர்கள் தமிழில் குறைவு. புத்தகங்கள் பொது ஜனத்தை அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்திற்கு உட்பட்டது. அதற்கானவிளம்பரமும் குறைவு, புத்தகக் கண்காட்சி நடத்தி தான் விளம்பரம் செய்ய முடியும்.

இணையமும் கூகிளும் புத்தகங்களின் தேவையை வெகுவாக குறைத்து விட்டது. புத்தகங்கள் இடத்தை அடைத்துக் கொள்வதாலும் பாதுகாப்பதில் பிரச்சனைகளாலும் என்னிடம் இருந்த நல்ல புத்தகங்களையெல்லாம் pdf ஃபைல்களாக்கி CD யில் பதித்து வைத்திருக்கிறேன். நண்பர்கள் நல்ல புத்தகங்களை இரவல் வாங்கி லவட்டி விடுவது மற்றொரு காரணம். புதிதாக புத்தகம் வாங்குவது மிக குறைந்து விட்டது. அனேக புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கிறது. நவீன மொபைல் ஃபோன்களிலும் I pod களிலும் இதனை பதிவிறக்கி வாசிக்கலாம். தகவலை பெறுவது இன்று சுலபமாகி விட்டது. எல்லா தகவலும் விரல் நுனியில் ஒரு "க்ளிக்" தூரத்தில் தான்.

வலைப்பதிவு என்பது எழுதுபவர்களின் இன்றைய அவதாரங்களில் ஒன்று. எழுத்து ஒரு வேலை என்பது போய் உணர்வுகளுக்கு வடிகால் என்ற நிலைக்கு போய் விட்டது. வலைப்பதியும் தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து இருப்பதால் எழுத்துக்களின் தோற்றங்களும் அடையாளங்களும் பன் முகத்தில் இருக்கிறது. சில பதிவுகள் அரட்டையாக இருக்கிறது சில பேனா யுத்தங்கள், தனிமனித தாக்குதல் என இருந்தாலும் அருமையான இலக்கிய பதிவுகளும் பதியத்தான் செய்கிறது.

எத்தனையோ மாற்றங்கள் இன்று வந்தாலும் சில வடிவங்கள் மாறவில்லை. தினசரிகள் வாரப்பத்திரிக்கைகள் அதே வடிவத்தில் மாறாமல் இருக்கின்றன. படங்கள் மட்டும் கலராகி இருக்கிறது. கன்னித்தீவு தொடர்ந்து கொணடுதான் இருக்கிறது. விபச்சார அழகிகள் கைது. போலீஸ் வலை வீசித்தேடுவது, விளம்பரங்கள் எதுவும் மாறவில்லை. ஜோதிடமும் ஆன்மீகமும் அரசியலும், சினிமாவும் தான் அச்சு உலகிலும் சரி தமிழரின் மற்ற மீடியாக்களிலும் நிறைந்து நிற்கிறது. அறிவுலமும் அறிவியலும் துணுக்குச் செய்திகள் தான். இந்நிலை மாறினால் தான் தமிழன் உருப்படுவான்.

Download As PDF

08 March 2009

பணிவு:வாழ்வை உயர்த்தும் பண்பு

சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.

மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.

பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது , எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது. இன்சூரன்ஸ் ஏஜென்டுகள் போல எல்லாப் பக்கமிருந்தும் நீங்கள் கேட்காமலே உதவி தேடி வரும். மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.

அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?

இறைவன் இருக்கிறான் என நம்புவதும் இல்லை என்று நம்புவது அவரவர் நம்பிக்கை. அவரவர் நிலை பாடு .இரண்டுமே சரிதான். அது இறைவன் என்று கொண்டாலும் சரி நம்மை சுற்றியுள்ள உலகம் என்று கொண்டாலும் அந்த மாபெரும் சக்திக்கு நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த சக்தியிடம் பணிவு காண்பிக்க வேண்டும். இந்த செல்வமும் புகழும் இறைவன் தந்தது அது இறைவனுக்கே சொந்தம் என்பது பணிவின் சின்னம். சந்தோசத்தை, வெற்றியை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இதில் இறைவன் என்பது நான் நீங்கலாக உள்ள உலகம் எனவும் பொருள் கொள்லலாம். இப்படி தன்னை சுற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் தன்னடக்கமான உள்ளம் ஜொலிக்கும் . காரணம் தன்னை சுற்றியுள்ள உலகத்தின் பிரதிபலிப்பு தான் "தான்" என்பது.

எல்லா மதங்களும் முதலில் பணிவை, கீழ் படிதலை அல்லது அகந்தை அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டிய முதன்மை பண்பு இது தான்.இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாதவர் வாழ்க்கைப் பயணம் மிக கஸ்டமான பாதையில் .

Download As PDF

05 March 2009

நிஜமாவே பேய் இருக்கா? இல்லையா?

சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.

பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம். சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?

பேய் என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம் வெள்ளை புகை போல கால்களின்றி. இந்த கற்பனை உருவம் ஓவியர்கள் புகையிலிருந்து உருவாக்கியது. காரணம் இறந்தவர்களின் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ ஒன்று பிரிந்து போவதாக நினைப்பது. அமைதி கிடைக்காத ஆத்மா பேயாக அங்குமிங்கும் அலைவது போன்ற கருத்து தான்.

ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.

அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?
அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது, கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது, காதில்லை. நம்மைத் தாக்க முடியாது, ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை , காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.

இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.

ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.

சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.

முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.

பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.

உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல், ஆவேசமாக அட்டகாசம் புரிதல், அசுர பலத்துடன் செயல்படுதல், எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல், தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றிருப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.

இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். நிலவில் பாட்டி நூல் நூற்பதை கண்டுபிடித்த நமக்கு மரத்தின் நிழல் பேயாக தெரிவதில் என்ன அதிசயம். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காரணம். எங்கேயாவது ஒரு பேய் புரளி கிளம்பி விட்டால் ஆளாளுக்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து கதை சொல்வார்கள். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது. ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால் குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.

எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.

சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே

இனி தைரியமாக இருட்டில் போவீர்கள் தானே. பேய் போகும் போது குடம் உடைத்து விட்டு போகுமாம் அது போல உங்களுக்கு பேய் பயம் தீர்ந்தால் தைரியமாக தமிழ்ஷில் குத்திவிட்டு போங்கள்.

Download As PDF

04 March 2009

பூமியில் வேற்றுலக வாசிகள்

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.
வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்
  • கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?
  • பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.
  • கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா.
  • இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம்
  • தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்
  • புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
  • அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
  • ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
  • வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.
பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

காலையில் ஒரு எறும்பு வரிசையை பார்த்தேன். சில எறும்புகள் தலையில் ஓர் அரிசியுடன் போய்க் கொண்டிருந்தது. இந்த எறும்பெல்லாம் எங்கே போய் வருகிறதென்று உற்று பார்த்த போது தான் தெரிந்தது கலைஞர் படத்துடன் ஒரு அரிசி ஒரு ரூபாய் போர்டுடன் சிறிய ரேசன் கடை

Download As PDF

03 March 2009

இறைவனைக் காண முடியுமா?

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கேட்கப்பட்டு இன்றுவரை சற்றும் அசராமல் நிலைத்திருக்கும் கேள்வி இது. இறைவனை பற்றி சிந்திக்காத மனிதர்கள் இருப்பது சந்தேகமே.

ஒவ்வொரு மனிதனும் "தன்னையும்" "தன்னைச்சுற்றியுள்ள உலகத்தையும்" "உணர்கிறான்". இது" என்ன?", "ஏன்?" , "எப்படி வந்தது?" என்ற கேள்வியால் தோன்றியது தான். " இறைவன் " என்ற சொல். இந்த சொல்லுக்கு உரிய பரம் பொருள், கண்ணால் காணவோ, அறிவால் உணர்த்தவோ முடியாத தன்மயுடையது. ஆனால் உணரமுடியும். உணர முடிந்த ஒரு சிலராலும் பிறருக்கு விளக்கமுடியாத தன்மை உடையது. அறிவை விளக்கலாம். உணர்வை அப்படி முடியாது. ஏன் இந்த சிக்கல். அறிவின் அடிப்படத்தகராறு இது. ஒன்றை புதிதாக அறிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வெவ்வேறு தன்மைகளை கொண்ட குறைந்தபட்சம் வேறு இரு பொருட்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒன்றை பற்றிய அறிவை எப்பொதும் இன்னொன்றை தொடர்பு படுத்தியே பெற முடியும். அது மட்டுமல்ல அறிவை வெளிப்படுத்துபவர் மட்டுமின்றி பெறுபவரையும் பொறுத்து தான் பெறப்படும் அறிவு அமைகிறது.

 அறிவு என்பது சார்பானது . சார்பான ஒன்றால் ஒருபோதும் முழுமயான பரம் பொருளை விளக்க முடியாது "ரோஜா மாம்பழம்" என்றதும் என்ன அறிந்து கொள்வீர்கள். இதற்கு முன் "ரோஜாப்பூ நிறம்"" மற்றும்"மாம்பழம்" உங்களுக்கு தெரிந்திருந்தால் ரோஜா நிறமுள்ள மாம்பழம் என்று அறிந்து விடுவீர்கள். மாம்பழ ரோஜா என்றால் அது வேறு அர்த்தம். நீங்கள் ரோஜா அல்லது மாம்பழத்தை இதற்கு முன் அறிந்திருக்காவிட்டால் "ரோஜா மாம்பழத்தை உங்களுக்கு விளக்கவே முடியாது. ஒன்று இன்னொரு ரோஜா என்றோ அல்லது இன்னொரு மாம்பழம் என்று தான் அறிந்திருப்பீர்கள். மட்டுமல்ல நீங்கள் மஞ்சள் நிற ரோஜாப்பூ மட்டுமே இதற்கு முன் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நான் ரோஜா மாம்பழம் என்று சொன்னதை மஞ்சள் மாம்பழமாகவே அறிவீர்கள். பிறவியிலேயே  பார்வையற்றவ்ரிடம் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என்று பாடினால் எப்படி பொருள் கொள்ளுவார்.

அன்பு, காதல் இதெல்லாம் உணர்வது. அறிவது அல்ல. எல்லோரும் இதை தனிதனியாக உணர்ந்திருந்தாலும், ஒருவருடையா அன்பை , காதலை பிறருக்கு சொல்வதில் எவ்வளவு கஸ்டம்.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியானியானியின் சுவை சமையல்காரரை பொறுத்துத்து மட்டுமல்ல .சாப்பிடுபவரின் பசியையும் பொறுத்தது

இறைவனை பற்றி, பரம்பொருளை பற்றி எவரிடமும், எந்த வேதங்களிலும், எந்த மஹான்களிடமும் கேட்காதீர்கள், அப்படி அறிய முடியாது அறிவித்து கொடுக்கவும் அவர்களால் முடியாது. இந்த கேள்வி எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே கேளுங்கள். கேட்டு உங்களால் அறிய முடியாது என்றாலும் உணர முடியும்.

மெய்ஞான அறிவு என்பது விண்ணிலிருந்து பூமியை பார்ப்பது போல் என்றால் மனிதனின் சாதாரண பவுதீக அறிவு என்பது ஒரு இடுங்கிய 14 " டீ வி யில் உலகக் காட்சிகள் பார்ப்பது போன்றது. இங்கே காட்டப்படுவதை தான் பார்க்கிறோம். உள்ளதை உள்ள படி அறிவதில்லை.  காட்சிகளுக்கு எல்லை உண்டு..நாம் உண்மை என்று உணரும் எல்லாமே மற்றொரு உண்மை நம் கருத்தில் உண்டாக்கும் விளைவுகளேயே..  இந்தகைய காட்சிப் பிழைக்கு காரணம் நம் புலன்களின் குறைபாடே, முனனே  இருக்கும் கண்ணாடி போன்றது உணமை அதை உணராமல் அதன் பிதிபலிப்பு  எனும் விளைவால் தெரியும் காட்சி தான் நாம் உண்மையென்று உணருவது.மனம் இந்த மயக்கத்திலிருந்து  மீளும் போது அதுவரை தெரிந்த காட்சிகள் மறைந்து கண்ணாடி மட்டுமே தெரி்யும்.

ஒரு நாத்திகன் தன் வீட்டு வாசலில் GOD is No where என்று எழுதி வைத்தானாம். அதைப் பார்த்து ஒரு துறவி அந்த வீட்டுக்குள் வந்து எங்கே கடவுள் என்று தேடினான். நாத்திகனோ துறவியிடம் ஏன் "நீ வாசலில் போர்டை சரியாகப் படிக் வில்லையா? என்றானாம். அதற்கு அந்த துறவி சொன்னார் "படித்தேன் God is now here என்றிருந்தது அதனால் தான் வந்தேன் . பார்வைகள் பல விதம்.

ஒன்றைத் தேடும் முன் எதை தேடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
உதாரணமாக கூகிளில் ஒன்றைத் தேடும் போது எதைப் பற்றி தேடுகிறோம் என்பதை டைப் செய்தால் தான் தேட முடியும். இதுவரை எந்த டிக்ஸ்னரியிலும் காணப்படாத ஒன்றை dfdoaiuetjhzdckldsditekl என்று தேடினால் என்ன கிடைக்கும்.

இறைவன் என்று நம்மால் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே இறைவன் படைத்ததாக நம்பப்படும் இந்த பூமியில் நம் மூளை உணரக்கூடிய உருவங்களை மட்டும் தான் . படைத்தவனும் படைப்பும் ஒன்றாகாது..இந்த உலகத்தின் காட்சிகளை ,பண்புகளை மனம் தான் உருவாக்கி அறிந்து கொள்கிறது,எனவே இறைவனை இந்த உலகத்தில் தேடுவது அபத்தம்

எத்தனை மனங்கள் இருக்கிறதோ அத்தனை விதமாக.மனிதர்கள் இறைவனை கற்பனை செய்கிறார்கள். இறைவன் உருவமற்றவன் என்று சொன்னாலும் கூட இறைவனை ஏதாவது மனித அடையாளங்களில் தான் உள்ளத்தில் உருவகப்படுத்துகிறார்கள். அதுவே அந்த இறைவனுக்கு இணை வைக்கும் ஒன்றாகி விடுகிறது..ஒரு தலைவரை  நாம் பார்த்ததிலை. ஆனால் நம்மை அவர் எப்போதும் அருகிலிருந்து கவனிக்கிறார். என்று வைத்துகொள்வோம்..அவரை கவுரவிக்க விரும்புகிறோம் .தலைர் எப்படியிருப்பார் என்று தெரியாது என்பதற்காக   தெரிந்த இன்னொருவரை  அல்லது  ஒரு அடையாளத்தை அவர் முன்னிலையிலே கவுரவித்து மாலையிட்டால் அது தலைவரை அவமதிப்பதாகாதா?

மனித அறிவால் உணர்ந்து கொள்ள முடியாததை எப்படி உருவகப்படுத்தி வணங்குவது. எல்லோரும் அவரவருக்கு தோன்றிய உருவகத்தில் இறைவனை நம்புகிறார்கள். அனால் அந்த இறைவனுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம். இதில் உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு உயிரை விடுகிறார்கள். ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே இறைவனையா நம்புகிறார்கள். இல்லை அவர்களது கடவுளின் பெயர் தான் ஒன்றாக இருக்கும். கடவுளைப் பற்றிய அகக் காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் உண்டு என்று ஆத்திகனும் கடவுள் இல்லை என்று நாத்திகனும் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்டு என்றும் இல்லையென்றும் கூறும் முன் அந்தக் கடவுள் எது என்பதில் ஒத்த கருத்து கொள்கிறார்களா? இல்லை. ராமசாமி ஆணா? பெண்ணா? என்று விவாதிக்கலாம். ஆடு கத்துவதை எந்த மொழி என்று வகைப்படுத்துவது. இறைவன் உண்டு என்பதும் உண்மை தான் இல்லை என்பதும் உண்மை தான் . இறைவன் என்பதற்கு நாம் கொள்ளும் பொருளைப் பொறுத்தது அது.

இறைவன் எப்படி இருக்க முடியும் என்று சிந்திப்பது நம் அறிவால் அமைத்துப் பார்க்க முடியாத விஷயம் . ஆனால் இறைவன் எப்படியெல்லாம் இருக்க முடியாது என்று கூடவா அறிவுக்கு எட்டாது.  அறிவுக்கும்  முரண் பாடாக தெரிந்தும் பிடிவாதமாக மனித குணாதிசயங்களுடன் மனிதச் சாயலாகவே கடவுளை உருவகப்படுத்துவது  பகுத்தறிவல்ல

Download As PDF