25 December 2009

பதிவுத் திருட்டு பரவி வரும் அநாகரீகம்


கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இந்த வலைப்பதிவை துவங்கி ஒரு வருடத்தில் இது வரை 95 பதிவுகளும் இட்டு விட்டேன். தமிழிஷில் 45 பதிவுகள் பிரமலமானது . பல பதிவுகள் யூத்ஃபுல் விகடனில் தேர்வு பெற்றது. உங்கள் ஒரு வரி பின்னூட்டம் தரும் உற்சாகம் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைப்பது. எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

நேற்று இணையவலம் வந்த போது எனது பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஈகரை தமிழ் கழஞ்சியம் என்ற தளத்தில் இட்டிருப்பதை கண்டு அதிர்சியுற்றேன். பிறனில் விழையாமை சொன்ன வள்ளுவரை வேறு அங்கே அநியாயத்துக்கு சாட்சியாக்கி வைத்திருக்கிறார்கள். என் பதிவிலிருந்த படம் கூட ஹாட் லிங் செய்திருக்கிறார்கள். ஆனால் என்பெயரையோ இணைய முகவரியோ இல்லாமல் கவனமாக அழித்து விட்டு வேறு பெயரில் இட்டு கொண்டாடியிருக்கிறார்கள்.
" இப்படி எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க? "என்ற அதிர்ச்சியுடன் கூகிள் சல்லடையால் தமிழ் பதிவுலகை சலித்தபோது ஏகப்பட்ட புழுக்களும் வண்டுகளும் கண்டு ஆச்சரியம். ஒன்றிரண்டல்ல நூற்றுக்கு மேல் என் பதிவுகளின் காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள் இணையத்தில் உலவுகிறது. என் தளத்தில் கூட அத்தனை பதிவுகள் இல்லை. எனது பிரபலமான பதிவுகள் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டாய் மேற்கண்ட தளத்திலேயே நகலெடுத்து தொங்க விட்டுள்ளார்கள்.

என் பதிவுகளை பாக்கட்டிலா வைத்திருக்கிறேன்.பிக் பாக்கட் அடிக்க? எல்லோரும் பார்க்க இணையவீதியில் தானே விட்டிருகிறேன்? நான் மாய்ந்து மாய்ந்து எழுதுவதை நானே படித்து முடிக்குமுன் காபி பேஸ்ட் செய்து அவர்கள் தளங்களில் அவர்கள் பெயரில் போட்டுவிடுகிறர்கள். தங்களுடைய புகைப்படத்தையும் இட்டு பின்னூட்டங்களில் வரும் உண்மையான பாராட்டுகளை தனக்கு கிடைத்ததாக கருதி மகிழும் திரு பதிவர்களை என்ன சொல்வது? இவர்கள் நோக்கம் தான் என்ன? இதனால் அவர்கள் உலகப்புகழ் , கோடிபணம் சம்பாதிக்க போகிறார்களா? அடுத்தவன் செருப்பைத் திருடிக் காலில் போட்டுக்கொண்டு நடப்பவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம். திருடர்களுக்காவது ஆதாயம் இருக்கும். இப்படி காப்பி பேஸ்ட் செய்வதை விடுத்து என் பதிவுகளுக்கு இணைப்பு கொடுக்கலாமே ஏன் என் பதிவின் சாரத்தையோ கொடுத்து இணைப்பு கொடுத்தால் கூட என் எழுத்துக்கு கிடைத்த மரியாதை என நன்றியோடு இருப்பேன். பிறரது உண்மையான படைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கதெரியாத இவர்கள் தங்கள் போலிப்பதிவு புகழ் தருமென நம்புவதேன்.

எனக்கு இதில் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என் பதிவுகள் வெளியானதும் கூகிழும் தமிழிஷும் என் பக்கத்திலே எப்போதும் உட்கார்ந்திருக்கும் நண்பர்களும் பத்திரப்படுத்திக் கொள்ளுவார்கள். ஒருவகையில் என் பதிவுகள் பிடித்துப் போனதனாலே தானே பாசக்காரங்க அவர்கள் தளத்தில் என் பதிவை பத்திரப்படுத்துகிறார்கள் என்று அவர்கள் மேல் கோபத்திற்கு பதில் அனுதாபமும் வருகிறது. ஆனாலும் அந்த செயலை அங்கீகரிக்க முடியவில்லை.இந்த கேவலத்துக்கு பதில் நன்றி என்ற ஓர் வார்த்தையுடன் ஒரு இணைப்பு கொடுத்தால் கவுரமான பதிவராக இருக்கலாமே.

நன்றி என்பது நாம் கேட்டுப் பெறுவதல்ல. நன்றி காட்ட விரும்பாதவர்களுடைய நன்றி யாருக்கு வேண்டும். என் பதிவை தனதாக காட்டிக்கொண்டால் தனக்கு மதிப்பு கிட்டும் என கருதுபவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். அதுவும் என் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம் தான். ஆனால் அவர்கள் செயல் சுயமரியாதை கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு எல்லாம் பேசிவரும் தமிழர்கள் கலாச்சாரமாகி விடக்கூடாது என்ற கவலை தான்.

இந்தப் பதிவையும் அவர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் பார்த்துவிட்டு தவறை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கிறேன். என் தளத்துக்கு முறையாக இணைப்பு கொடுத்தால் போதும். தவறுதலாக செய்த மனசாட்சியுடைய பதிவர்கள் திருத்திக்கொள்வார்கள்.

என் பதிவை திருடி விட்டார்கள் என்று புலம்புவதற்காக இதை எழுதவில்லை. என்னை விட அருமையாக எழுதும் ஒவ்வொரு பதிவரும் தங்கள் கடின உழைப்பு இப்படிப்பட்ட திருவாளர்களால் திருடப்படுகிறதா என தங்கள் சிறந்த பதிவுகளை கூகிளிலும் http://www.copyscape.com/ தளத்திலும் போட்டு அலசிப்பாருங்கள். இணையத்தில் உலவும் பல களைகள் அதை தன் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டிருப்பதை காண்பீர்கள்.

இப்படிப்பட்ட களைகளை,கொசுக்களை என்ன செய்யலாம் என தங்கள் அரிய நேரத்தையும் சிந்தனையும் செலவு செய்து பதிவெழுதும் என் நண்பர்களின் கருத்தை கேட்க விரும்புகிறேன். அவர்கள் அனுபவத்தையும் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் இது என் பிரச்சனை மட்டுமல்ல நம் எல்லோரது பிரச்சினை. மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.

Download As PDF

20 December 2009

நம் உணவுப் பழக்கம் சரிதானா?


மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான். இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கிறது. மனித வரலாற்றில் மிக சமீப காலத்தில் தான் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான் மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.

உளவியல் ரீதியாகவும் நாகரீகத்திலும்,தொழில் நுட்பத்திலும் குறுகிய காலத்தில் நாம் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்தாலும் அவ்வளவு வேகத்தில் மாறிய உணவுப்பழக்கத்திற்கேற்ப நம் பிஸியாலஜியோ அதை நிர்ணயிக்கும் மரபணுக்களோ மாறவில்லை என்பதே உண்மை. தற்கால உணவுப் பழக்கத்தால் உடலில் அதிகப்படியாக சேரும் மாவு சத்தை எப்படிக் கையாள்வது என உடலின் பழமையான ஜீரண நிர்வாகம் திணறுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த சத்தான உணவுகளை மண்ணிலிருந்து நேரடியாக உண்டார்கள். ஆனால் இன்று நாம் உண்பது 90% உணவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தியது. அரிசி கூட அதன் நல்ல சத்துகள் நிறைந்த தோல் தீட்டப்பட்டே கிடைக்கிறது.தொழில் நுட்ப சாத்தியமும் வியாபாரக் கண்னோட்டமுமே நமது தற்போதைய உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கிறது. எது உடலுக்கு தேவையான உணவு என்பதை விடுத்து எது சுவையானது என்று பார்த்து அதை மட்டுமே பெருமளவு உற்பத்தி செய்தும் உண்டு வருகிறோம். சுவையான எல்லாப் பொருட்களிலும் கொழுப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது. இன்று சூப்பர் மார்கட்டில் கிடைக்கும் எந்த பொருளுமே அதிக கலோரி தரும் மாவு, கொழுப்பு, இனிப்பு பொருட்களாகவே நிறைந்து கிடக்கிறது. அனேக உணவுப்பொருட்களுக்கு பால் ,கோதுமை அடிப்படை பொருளாக இருக்கிறது. நம் உடல் தேவைக்கும் அதிகமாக மாவுசத்தை உள்ளே தள்ளுகிறோம். போதாக்குறைக்கு வெறும் கலோரி மட்டுமே தரக்கூடிய சர்க்கரையை வித விதமான வடிவத்தில் விழுங்குகிறோம்.

USDA Food pyramid பரிந்துரைக்கும் தினமும் 6-11servings மாவுப்பொருள் உணவுத்திட்டம் கூட தவறானது.இது நம் தேவைக்குமிகவும் அதிகமானது. அதிகப்படியான மாவுசத்து, இனிப்பு சத்து திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்கரை நோயாளியாக்கி விடுகிறது. அதிக சர்கரை ரத்த வெள்ளையணுக்களை பாதிக்கிறது.இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் தொற்று நோய்களால் தாக்கப்படுகிறோம்.

இரத்தத்தில் திடீரென மாவு சத்தும், இனிப்பு சத்தும் அதிகரிக்கும் போது பாங்க்ரியாஸ் இ ரத்தத்தில் இன்சுலினை சுரந்து அதிகப்படியான இனிப்பை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. பின்னொரு சமயம் மனிதன் பட்டினி கிடக்க நேர்ந்தால் சேமிக்கப்பட்ட இந்த கொழுப்பு மீண்டும் சக்தியாக மாற்றப்படும்.இது பல்லயிரம் ஆண்டுகளாக மனிதனின் உணவுப்பகக்கத்தை ஒட்டி உடலில் பரிணாமம் பெற்ற ஒரு பாது காப்பு அமைப்பு. ஆனால் இன்றைய நிலை வேறு. இல்லாதவனுக்கு சேமிப்பதற்கு எந்த உணவும் இல்லை. இருப்பவனுக்கு உணவுக்கு பஞ்சமும் இல்லை. எல்லா உணவும் அவனுக்கு கொழுப்பு உணவாகிப்போனால் எவ்வளவுதான் உடல் சேமிக்கும். அது எப்போது செலவளியும்.

நாகரீக மனிதன் உடல் இயக்கத்தை தொழில் நுட்பதால் குறைத்துக் கொண்டான். ரிமோட் கண்ட்ரோலில் எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்து இயக்கலாம். உட்கார்ந்தே வேலை பார்க்கும் அலுவலகங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், கை பேசிகள், இணையம் என எவ்வளவோ முடியுமோ அவ்வளவு தசைகளுக்கு வேலை குறைந்து விட்டது. சாப்பிடும் போது கூட உணவை மென்று கஷ்டபடக்கூடாது என்று வேக வைத்து சாப்பிட்டு பார்த்தான் . இப்போதெல்லாம் அநேக உணவுகள் மென்மையாக , ப்ரெட், ஐஸ்க்ரீம் , பிட்ஸா என்று வாய்க்கு கூட வேலை வைப்பதில்லை. இதன் விளைவு உடல் பருமன், மூட்டுவலி, கொலஸ்ட்ரால், சர்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம் ,டென்சன்.......
மாமிசம் மற்றும் இயற்கையான தாவர உணவை குறைத்து வெறும் மாவு சத்து மட்டும் நிறைந்த தானிய உணவு பெருமளவு உட்கொள்ளத்தொடங்கிய பின் சராசரி மனித ஆயுள் குறைந்து விட்டது. சிசுமரணம், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் தொற்று நோய்களால் பாதிக்கபடுவது அதிகரித்து விட்டது.

ட்யூக் யுனிவர்சிடியின் ஆராய்ச்சிக் குறிப்புகளில் ஒன்று அதிகமான மாவு சத்து உண்பது புற்று நோயை ஊக்குவிப்பதாக தெரிவிக்கிறது.

தேவைக்கு மட்டும் உண்பதும் அதிகமான கொழுப்பை வேலை செய்தும் நோன்பிருந்து குறைத்தும் சமநிலையில் வைக்கவேண்டும். முடிந்த அளவு இயற்கையான உரத்தில் விளைந்த இயற்கையான தாவர உணவுகளை ஃப்ரெஸ்ஷாக உண்ணவும். மாமிச உணவும் உடலுக்கு இயைந்ததே, தேவையானதும் கூட. மாவு,கொழுப்பு சர்க்கரை சத்துகள் தேவைக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். தேவையான உப்பு நாம் உண்ணும் உணவிலேயே கிடைப்பதால் உப்பு தனியாக தேவையில்லை.

அனேக சுவை உணவுகளில் பால் சேருகிறது. பசுவின் பால் அதன் கன்றுக்குட்டியின் தேவைக்காக இயற்கை அளித்தது. பசு புல் தானே தின்னுகிறது. மனிதன் மட்டும் அதன் பாலை அளவுக்கு அதிகம் உணவில் பயன்படுத்துவது மனித உடல் தேவைக்கு மாறானது. ரத்தத்தில் கொழுப்பு சத்தை அதிகரிக்கச்செய்கிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர உணவுகளை உண்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்பதை உடனே அறிய முடியாது. பிற்காலங்களில் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டி வரலாம்.

ரசாயனகூடங்களில் இருக்க வேண்டிய எவ்வளவோ பொருட்கள் இன்று உணவு மேஜைக்கு வந்து விட்டது. உணவு உற்பத்தி என்பது விவசாயிகள் கையை விட்டுப் போய் விஞ்ஞானிகள் கைக்கும் அதை இயக்கும் பெரும் வியாபார நிறுவனங்களின் தந்திர மூளைக்கும் போய்விட்டது. வியாபாரப் போட்டியில் இருக்கும் இவர்களுக்கு வருங்கால மக்கள் நலனை பற்றியா கவலை? மரத்திலிருந்து பறித்து உண்ணும் மாம்பழத்தை விட ரசாயனங்களால் செய்த மாம்பழச்சாறு போன்ற திரவத்தை சிறந்ததாக மக்களிடம் பரிந்துரைக்கிறார்கள். ஒரு பழத்தில் இருக்கும் இயற்கையான ரசாயனப் பொருளுக்கும் ,குழந்தை உணவுகளில் அதிகமாக சேர்க்கும் செயற்கையான ரசாயன தாதுக்களுக்கும் வேறுபாடு உண்டு. குழந்தைகளை குறி வைத்து எவ்வளவு போலி சத்துணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மருந்துகள் என்ற பெயரில் எவ்வளவோ பொருட்கள் உணவுக்கு சமமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பின் விளைவுகள் முழுதும் தெரிந்து தான் பயன் படுத்துகிறார்களா?

பரிணாமத்தின் பல்வேறு கால கட்டங்களில் திடீரென உண்டாகும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தான் டைனோசர் போன்ற பல்வேறு உயிரினங்கள் பழங்கதைகளாகிப் போயின. இன்றைய காலங்களில் ஏற்படும் வேகமான மாற்றங்கள் , இயற்கையை விட்டு நீங்கிய உணவுப்பழக்கம் மனித வரலாற்றை அழித்து விடக்கூடாது.

சர்க்கரையை பற்றிய கசப்பான உண்மைகள் கானொளியில்
 Download As PDF

10 December 2009

ADHD:கவனமற்ற பிள்ளைகளை கனிவுடன் கவனியுங்கள்

உங்கள் பையன் பள்ளிக்கூடத்தில் எப்போதும் குறைந்த மதிப்பெண் வாங்கிக் கொண்டு வருகிறானா?
எப்போதும் சுட்டித்தனம் மிகுந்து, சொல் பேச்சு கேட்காமல் இருக்கிறானா?
பிரம்பு வைத்திருக்கும் பெற்றோர்களே அவசியம் மேலே படியுங்கள்.

Attention-deficit hyperactivity disorder (ADHD) என்பது 4% முதல் 12% வரை பள்ளிப் பருவ பிள்ளைகளைப் பாதிக்கும் ஒரு உளவியல் பிரச்சனை. குறிப்பாக ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். வளர்ந்து பெரியவர்களானாலும் இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

வயதுக்கு மீறிய மூளையின் தீவிர செயல் தூண்டல் காரணம் அவர்களால் பள்ளியில் பாடங்களை பொறுமையாக கவனிக்க முடிவதில்லை. வீட்டில் , பள்ளியில் இவ்வாறு கவனமின்றி இருப்பது அவர்களது கல்வியையும் பிறருடனான நல்லுறவையும் பாதிக்கிறது. ADHD குழந்தைகள் அநேகமாக பெற்றோராலும் ஆசிரியர்களாலும் நண்பர்களாலும் வசையும் அடியும் வாங்கி பிறரால் இகழப்பட்டு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். வளர வளர இப்பாதிப்புகள் அவனை மேலும் மோசமான நிலக்கு இட்டுச் செல்கிறது.

ADHD இருக்கிறதா என தெரிந்து கொள்வது எப்படி?
ADHD உள்ள குழந்தைகள்
 • நாம் சொல்லுவதை ஒழுங்காக கேட்டு அதன் படி நடக்க மாட்டார்கள்.
 • வகுப்பில் பாடங்களை கவனிப்பதிலும் ,வேலை செய்யும் போதும் விளையாடும் போதும் அவர்கள் கவனம் நிலத்திருக்காது.
 • பள்ளிக் கூடத்தில் பென்சில்,பேனா, ரப்பர்,ஸ்கேல் என்று நாளும் தொலைத்து விட்டு வருவார்கள்.
 • ஏதாவது சொன்னால் மண்டையில் ஏறாதது போல் நிற்பார்கள்.
 • நுட்பமான விபரங்களை தெரிந்து கொள்ளவோ தெளிவாக விளங்கிக் கொள்ளவோ ஆர்வமிருக்காது.
 • நன்றாக யோசித்து செய்ய வேண்டிய செயல்களை செய்வதற்கு சிரமப்படுவார்கள்.
 • செயல்பாடுகளில் ஒரு ஒழுங்கு இருக்காது.
 • ஞாபக மறதி அதிகம் இருக்கும்.
 • எப்போதும் துறு துறுவென்று இருப்பார்கள்
 • ஓடுவது,குதிப்பது,மரங்களில் ஏறுவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.
 • அமைதியாக விளையாடமாட்டார்கள்.
 • முந்திரிக் கொட்டை போல் பதில் சொவார்கள்
 • பிறருக்கு தொல்லைகள் தருவார்கள்
 • ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார மாட்டார்கள்.
 • அதிகம் பேசுவார்கள்.
 • தன் முறை வரும் வரை பொறுமை காக்க மாட்டார்கள்.
 • யோசிக்காமல் செயல் படுவார்கள்.ஆபத்தாக செயல் படுவார்கள்
 • கவனமின்றி சாலையை கடப்பார்கள் .
 • யோசிக்காமல் சட்டென எதையாவது கூறி விடுவது.
 • கவனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
 • சிலவற்றை செய்ய அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்
 • தூங்குவதில் சாப்பிடுவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
 • பயம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.
 • சக நண்பர்களோடு அடிக்கடி ஒத்துப் போகாது.
ADHD உள்ள பெரியவர்கள்
 • ADHD உள்ள குழந்தைகள் சரியாக கவனிக்கப்படாமல் ADHDயுடனே வளர்கிறர்கள்.
 • கோபம் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறர்கள்.
 • கவனக்குறைவாக இருக்கிறார்கள்.
 • பிறருடன் சண்டை சச்சரவு ஒத்துப் போகாத தன்மை.
 • அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவது.
 • புகைப் பழக்கம் ,போதைப் பழக்கத்துக்கு அடிமை யாவது.
 • அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பது.
 • பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாவது.
 • ரிலாக்ஸாக இல்லாமல் பரபரப்புடன் இருப்பது.
 • செய்யும் வேலையில் கவனமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திட்டமிட்டு முடிப்பதும்முடியாமல் போவது.
 • தினசரி அலுவல்களில் கவனக்குறைவு
 • காது ,தொண்டை தொற்றுகள் காணப்படும்
ADHD எதனால் வருகிறது?
மூளையில் சிந்தனையை நிர்வாகிக்கும் பகுதியில் சில இடங்களில் போதுமான ரசாயன மாற்றங்கள் சரியாக நடைபெறாததே இதற்கு காரணம். ADHD உள்ள சிலரை Brain Scan செய்து பார்த்த போது frontal lobe செயல் பாடு குறைவாக இருப்பது தெரிந்தது. திட்டமிடுதல் , ஒழுங்கு படுத்துதல், கவனித்தல், போன்றவற்றிற்கு frontal lobe ன் செயல் பாடுதான் காரணம்.
 • நெருங்கிய உறவினர்களுக்கு ADHD இருந்தாலும் பிள்ளைகளுக்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
 • கர்ப்பிணிகள் புகை பிடிப்பதாலும், புகை பிடிக்கும் கணவன் அருகிலிருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்க காரணமாகலாம் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
 • கருவுற்ற தாய்மார்கள் போதிய சத்துணவு உண்ணாவிட்டாலும், பிரசவ நேரத்தில் சிக்கல் இருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்கலாம்.
 • போதிய சத்துணவு இல்லாததாலும், விஷப்பொருட்கள், பதனப்பொருட்கள், Lead , Mercury போன்ற கன உலோக தாதுக்கள் உண்பதாலும் அடிக்கடி ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்வதாலும் குழந்தைகளுக்கு ADHD வரும்.
 • தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல . ஆனால் சரியான வளர்ப்பு முறை அதை மேலும் மோசமாகாமல் பாது காக்கும்.
சிகிட்சை என்ன?
மேல் கண்ட குறைபாடுடைய குழந்தகளுக்கு ADHD இருக்கிறதா என ஒரு மனோ தத்துவ மருத்துவர் உதவியுடன் கண்டறிய வேண்டும். கண்பார்வை குறைவு , காது கேளாமை போன்ற வேறு காரணங்கள் இருக்கிறதா? என்றும் ஆராயப்பட வேண்டும். குறைப்பாடுள்ள குழந்தைகளை குற்றம் சாட்டுவது தண்டிப்பதும் கூடாது. சில குழந்தகளுக்கு நல்ல மனோ தத்துவ ஆலோசனை தேவைப்படலாம். அல்லது மருத்துவ சிகிட்சை தேவைப்படும். psychostimulant மருந்துகள் பயன் படுத்துவது நோய்குறியை மிதப்படுத்தினாலும் நோயை குணப்படுத்துவதில்லை. மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தக்கூடியது.

பொதுவாக ADHDக்கு methylphenidate,dextroamphetamine ,pemoline,atomoxetine,Adderall போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தால் பயன் படுத்தலாம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
 • நேரக்கட்டுப்பாடு: காலையில் எழுவது,சாப்பிடுவது,பள்ளிக்கூடம் போவது , விளையாடுவது, வீட்டுப்பாடங்கள் செய்வது, படிப்பது, டிவி பார்ப்பது, தூங்கப் போவது போன்ற தினசரி செயல்களை அதற்குரிய நேரத்தில் செய்யும் படி அட்டவணை இட்டு அவர்கள் கண்ணில் படும் இடத்தில் பெரிதாக ஒட்டி வைத்திருக்க வேண்டும் அதன்படி நடக்க செய்ய வேண்டும்.
 • உடல் தசை இயக்கப் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டீவி, வீடீயோ கேம், கம்ப்யூட்டர் முன் உட்காரும் நேரத்தை இரண்டு மணி நேரத்திற்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு சிறு விதிகளை உருவாக்கி அதை சரியாக கடை பிடிக்க செய்து பழக்க வேண்டும்.
 • குழந்தைகளிடம் பேசும் போது நேராக தெளிவாக அமைதியாக மென்மையாக சொல்ல வேண்டியதை சொல்லி அதை அவர்கள் புரி்ந்து கொண்டதையும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • குழந்தைகள் சரியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டி உற்சாகப்படுத்த தவறாதீர்கள்.
 • அவர்களை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருங்கள் ஏடாகூடமாக எதையாவது செய்துவிடும் அபாயம் எப்போதும் உள்ளது.
 • நண்பர்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனியுங்கள்.
 • டிவி ,விருந்தினர் வருகை போன்றவற்றால் கவனம் சிதறாமல் இருக்க ஏற்ற இடத்தை படிப்பதற்கு வசதியாக அமைத்துக் கொடுக்கவும்.
 • எப்போதும் படி படி என்று கட்டாயப்படுத்தாமல் சின்ன சின்ன இடைவெளி விட்டு ஹோம் வொர்க் செய்ய அனுமதிக்க வேண்டும்.
 • எதற்கும் அவர்களை அவசரப்படுத்தாதீர்கள்
 • அவர்கள் மதிப்பெண்களை மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களுடன் ஒப்புமைப் படுத்தி மட்டம் தட்டாமல்.மேலும் அதிக மாதிப்பெண் எடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தி பாராட்டுங்கள்.
 • பள்ளியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்து பேசி அவர்கள் முன்னேற்றத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
 • வகுப்பறையில் முன் இருக்கைகளில் இடம்பெற செய்வது அடிக்கடி கவனம் கலைவதை தடுக்கும்.
ADHD உள்ள குழந்தைகள் என்ன சாப்பிடலாம்?
சத்தான சமச்சீரான உணவு தேவை. சில குழந்தகளுக்கு சில உணவு ஒவ்வாமை ஏற்படுத்தி நிலமையை மோசமாக்க கூடும். கோதுமை, ஈஸ்ட், பால், சோளம், சோயா, உணவு பதப்படுத்திகள், உணவுச் சாயங்கள் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள். இந்நிலையில் இவற்றை கண்டறிந்து தவிர்ப்பது நலம்.

உணவில் சேர்க்க வேண்டியவை:
 • மோர், தயிர் போண்றவற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குடல் நலத்தை பாதுகாத்து, நோயெதிர்ப்பு சக்தி்யை வளர்த்து, விஷப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது
 • இயற்கை உரத்தில் வளர்ந்த பழங்கள் காய்கறிகள் ,பட்டை தீட்டாத அரிசி,ஓட்ஸ்.
 • புரத சத்து தேவைக்காக நாடன் கோழி, மீன்கள், அவரை, கடலை, பருப்பு வகைகள்.
 • சமையலுக்கு தேங்காய் எண்ணெய், சுத்தமான நெய்.
 • மீன் எண்ணெயில் காணப்படும் omega-3 fatty acids EPA மற்றும் DHA மூளைக்கு நல்லது.
 • விட்டாமின் B,விட்டமின் C,மக்னீசியம்,செலினியம்,இரும்பு சத்து ,துத்த நாகம் போன்ற சத்துக்கள் மூளையின் செயல் பாட்டுக்கு முக்கியமானவை.
 • கிரீன் டீ யில் உள்ள L-theanine என்ற அமினோ அமிலம் டென்ஸனை குறைத்து நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது ADHD பாதிப்பை குறைக்கிறது.
உணவில் தவிர்க்க வேண்டியவை:
ஃபாஸ்ட் ஃபுட்,நொறுக்கு தீனிகள், பர்கர்கள், இனிப்பு வகைகள், மிட்டாய்கள் பதனப் பொருட்கள், சுவையூட்டிகள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்ற எல்லா விளம்பர பொருட்களையும் தவிர்த்தல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களால் உருவாகும் தொல்லைகளால் எரிச்சலடையாமல் அவர்களிடம் கனிவாக பாசமாக நடந்து கொள்வது அவர்களை நல்ல மன நலம் உடையவர்களாக வளர உதவும்.

Related Links:
http://en.wikipedia.org/wiki/Attention-deficit_hyperactivity_disorder
மூளை வளர என்ன சாப்பிடலாம்?
பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை
குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்
வலிப்பு நோய் (epilepsy)
10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்

Download As PDF