20 April 2009

உயிர் நிலை

பழைய சூனியக் கிழவி கதைகளில் அரக்கனின் உயிர்நிலை எழு கடல் தாண்டி எழு மலை தாண்டி ஏதோ ஒரு வனத்தில் ஒரு கிளியின் உடலுக்குள் இருப்பதாக வரும். கிளியை கொன்றால் தான் அரக்கன் சாவான். அது சரி மனிதனின் உயிர் நிலை எங்கே இருக்கிறது. எதை இழப்பதால் ஒருவன் மண்டையை போடுகிறான். அதோ மூக்கில் பஞ்சு வைத்துகொண்டு சுற்றி நடக்கும் ஒப்பாரி எதையும் கண்டு கொள்ளாமல் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறதே அதற்குள் இருந்த அவர் எங்கே போனார். "போனவாரம் எங்கிட்ட வந்து பத்தாயிரம் கடன் வாங்கிட்டு போனியே" என்று பொய்யாக கதறும் பக்கத்து வீட்டுக்காரனை கழுத்தைப் பிடித்து இறுக்காமல் ஆமோதித்த படி இவரை கிடத்தியது எது. விலை உயர்ந்த காரிலும் ஏசியிலும் பழக்கப்பட்ட உடலை பிறர் மண்ணுக்குள் தள்ளுவதை பார்த்தும் அடக்கமாக இருந்து அடக்கமாகிப் போவது எதை இழந்ததால்?

சாதாரணமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வியர்க்கிறார் சரிகிறார். ஒருவர் வந்து மூக்கில் கைவைத்து பார்க்கிறார். சுவாசம் இல்லை. நெஞ்சில் துடிப்பு இல்லை . உடனே ஒப்பாரி துவங்குகிறது. ஃபோன் கால்கள் பறக்கிறது. குளிர்ந்த தண்னீரில் உடலை நனைத்தெடுத்து மிச்சமிருக்கிற உயிரையும் நடுங்க வைத்து ஓட்டி விட்டு,ஒரு வேளை சுவாசம் திரும்பி உயிர் பிழைத்துவிட கூடும் என்று மூக்கில் பஞ்சை வைத்து அதையும் அடைத்து விடுகிறார்கள். அப்படியும் உயிர் திரும்பி தப்பி ஓடி விடாதிருக்க பெருவிரல்களை சேர்த்து கட்டி விடுகிறார்கள். இதயம் மீண்டும் துடிக்காதிருக்க கனத்த மலர் வளையத்தை நெஞ்சில் வைத்து விட்டு தங்கள் சம்பிரதாயங்களை முடித்துகொண்டு உயிலைப்பற்றி விவாதிக்கிறார்கள்.

இந்த மனிதர் யார் இவர் உண்மையில் எப்போது இறந்தார்? என்று யோசித்தோமானால் இவரது பிறப்புக்கு முன்னே அவரது இறப்பு தொடங்கி விட்டது. ஆனால் மண்னுக்குக்குள் புதைத்தபின்னும் அவர் உடலில் உயிர் கொஞ்ச நேரம் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என உணரலாம்.

உடல் என்பது பூமியின் தனிமங்களால் ஆக்கப்பட்டது என்றால் உயிர் என்பது தன்னுணர்வு. இங்கே கட்டையாக கிடப்பவர் பெயர் உதாரணமாக "கட்டை துரை" என்று வைத்துக் கொள்வோம். இந்த கட்டைதுரை யார்? முதலில் இந்த கட்டைதுரை என்பது பல இமேஜ் களின் கூட்டுதொகுப்பு. அவர் ஒரு அரசியல் தலைவராக இருக்கலாம். படைப்பாளியாக இருக்கலாம். கணவனாக தந்தையாக, மகனாக, அண்ணனாக என எத்தனையோ விதமாக பிறரது உள்ளங்களில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அதே போல அவரது உள்ளத்தில் அவரைப்பற்றி கொண்டுள்ள கருத்து தான் அவரது மனம்.

முன்பெல்லாம் இந்த மனம் என்பது இதயத்தில் இருக்கிறது என நம்பினார்கள். ஆனால் மனம் என்பது மூளையின் ஒரு விளைவு. ஆனால் காதலர்களுக்கு என்னவோ இன்னும் மனம் இதயத்தில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிப்பவர்களுக்கு மூளை இருப்பதில்லையோ என்னவோ?

மூளை இரண்டு வித செயல்களை செய்கிறது.
  1. உடலை,உடலின் அடிப்படை செயல்களை நிர்வகிப்பது.
  2. புலன்கள் வழி வெளியுலகைப்புரிந்து கொள்வது,நினைவில் வைப்பது,தன்னை உணர்வது.
மூளையும் உடலின் எல்லா பாகங்களும் செல்களால் ஆனது. தாயின் கருவில் ஒற்றை செல்லாக இருந்த போதே தன்னிடமிருந்து உருவாகப்போகும் மனிதனின் சகல புளூ பிரிண்டும் ஜீன்களாக வைத்திருக்கிறது. இது பெற்றோரிடமிருந்து பெற்றது. ஒரு செல் என்பதே ஒரு தனித்த உயிரினம் தான். அதற்கு தன்னுணர்வு உண்டு, வெளியிலிருந்து உணவைப் பெறவும், கழிவை வெளியேற்றவும் செய்யும். தூண்டலை எதிர்க்கும். வளரும். புதிய செல்களை உருவாக்கும். இறந்து போகும். பல கோடி செல்கள் சேர்ந்து உருவாகும் மனிதனிலும் இதே பண்புகள் தான் காணப்படுகிறது. ஒரு மரத்தின் தண்டு கிளைகள் போல் ஒரு இலையிலும் நரம்புகள் இருக்கிறது அல்லவா?

செல்லின் நடுவே உள்ள நியூக்கிளியஸுக்குள் குரோமசோம் எனும் இழைகள் காணப்படுகிறது. இந்த இழைகளுக்குள் இருக்கும் ஜீன்களில் தான் செல் பற்றிய தகவல்களும், அவை எப்படி பிரிய வேண்டும் பிரிந்த செல்கள் அணி சேர்ந்து எப்படி ஒரு மனிதனை உருவாக்கவேண்டும். என்னென்ன வகை செல்கள் எப்போது உருவாகி எப்படி ஒவ்வோர் உறுப்புகளாக வேண்டும் ஒவ்வொரு செல்களும் ஆயுள் எவ்வளவு ஒவ்வொரு செல்லும் எத்தனை முறை பிரிந்து புதிய செல்களை உருவாக்கலாம் ,தோலின் நிறம் என்ன ,உயரம்,சராசரி ஆயுள், போன்ற எல்லா தகவல்களும் அதில் இருக்கும். இந்த தகவல்களை படித்து அப்படியே செல்படுத்துவது செல்லின் தன்னுணர்வு எனும் உயிர் சக்தி தான்.

செல்கள் மூலக்கூறுகளால் ஆனது . மூலக்கூறுகள் அணுக்களால் ஆனது, அணுக்கள் இன்னும் பல சக்தி துணுக்குகளால் ஆனது என உயிரின் அடிப்படை இயக்கம் இடம் பொருளைக் கடந்த பிரபஞ்ச அலையாக மாறி விடுகிறது. அந்த நிலையில் உலகின் எல்லா உயிரும் ஒன்றே. பிரபஞ்சத்தின் உயிர் சக்தி வெளி எனப்படும் புலன்களுக்கு புலப்படா நிலையிலிருந்து புலப்படும் பொருள் நிலைக்கு வர அணு, மூலக்கூறு, செல்கள் என மாற்றமடையும் போது தன்னை இந்த பவுதீகப்பொருட்களுடன் பந்தபடுத்தி கொள்வதால் தன்னை பவுதீக உலகின் புதிய வேறொரு பொருளாக உணர்கிறது. இந்த உணர்வு தான் தன்னுணர்வு.

இது புது உலகத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளவும் தன்னை இன்னும் பலம் மிக்கதாக ஆக்கிகொள்ளவும் முயல்கிறது. அதன் காரணமாக ஒரு செல் சுற்றுபுறத்திலிருந்து தேவையான சக்தியை எடுத்துக்கொண்டு வளர்ந்து இரண்டாக பின் நான்கு, எட்டு எனப் பிரிகிறது. செல்கள் தான் திசுக்கள், எலும்புகள், நரம்புகள் பல வடிவம் பெற்று உடலாக மாறுகிறது. நரம்பு செல்கள் சேர்ந்து மூளையாக பரிணமிக்கிறது. உடலின் எல்லா செல்களும் மூளையுடன் நரம்புகள் வழி மின் சிக்னல்களை அனுப்பியும் பெற்றும் தொடர்பு கொள்கின்றன.இதனால் மூளை உடல் முழுவதும் உள்ள தனித்தனி செல்களை ஒரே உடலின் பாகமாக இணைத்து ஒர் தனி உயிராக நினைக்கிறது. உண்மையில் மூளையால் உணரப்படும் தன்னுணர்வு ஒட்டு மொத்த செல்களின் உணர்வு. வாழும்போதே கோடிக்கனக்கான செல்கள் இறந்து போவது கோடிக்கணக்கான செல்கள் உற்பத்தியாவது நிகழ்கின்றன. ஆனால் மூளையின் ஞாபகம் தொடர்ச்சியாக பிரதி எடுத்துக்கொண்டே இருக்கப்படுவதால் நாம் தினமும் இறப்பதும் பிறப்பதும் நமக்கு தெரிவதில்லை. சிறு வயதில் உள்ள நமது உடல் அல்ல இப்போது நாம் கொண்டிருப்பது. செல்கள் இப்படி பிரதி எடுக்கப்படுவது ஜீன்களில் எழுதப்பட்ட விதிப்படி ஒரு கட்டத்தில் குறைந்து விடுவதால் உடலில் முதுமை ,தளர்ச்சி தோன்றி விடுகிறது.

புதிய செல்கள் உற்பத்தி குறையத்தொடங்கும் போது உணவுத்தேவையும் குறையும் ஆனால் மேலே கூறிய கட்டதுரைக்கு அது தெரியாததால் இளமையில் சாப்பிட்ட அதே அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் தேவைக்கு மிஞ்சிய சக்தி கொழுப்பாக உடலி தேங்கி ரத்தக்குழய்களில் படிந்தது. நாளடைவில் கொழுப்பு காரணம் ரத்தக்குழாய் அடைபட்டு இதயத்துக்கு தேவையான இரத்தம் பாயவில்லை. இதனால் இரத்தத்தை மூளைக்கு பம்ப் செய்து செலுத்தும் சக்தி இதயத் திசுக்களுக்கு கிடைக்காமல் இதயம திணறியது. இதனால் மூளைக்கு தேவையான சக்தியும் பிராணவாயுவும் கிடைக்காததால் மூளையின் செல்கள் கூட்டம் கூட்டமாக மடியதொடங்கின. எனவே மூளை இதயம் , நுரை ஈரல், கை கால் என ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் இழந்து தான் சேமித்து வைத்த நினைவுகளையும் இழக்கதொடங்கும். மூளை இறக்கும் முன் தான் மூளை வலியெல்லாம் உணரும். மூளை இறக்கதொடங்கினால் மரணம் வலிக்காது. தான் பிழைக்கக் கூடும் எனும் நிலையில் தான் மனம் உயிர் பிழக்கப் போராடும். இனி பிழைக்க மாட்டோம் என உணரும் மனம் சரணாகதி அடைந்து உலகின் தேவைகளை இழந்து, புலன் இன்ப ஆசை இழந்து அமைதியாகி மரணத்தை ஏற்றுக்கொள்ள பக்குவப்படும்.

மூச்சு நின்று போனவர்களுக்கு தக்க சமயத்தில் செயற்கை சுவாசம் கொடுத்தால் உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கிறது. இதயம் நின்றால் கூட தக்க முதலுதவி செய்து மீண்டும் இதயம் துடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் டேமேஜ் ஆகி கோமா நிலைக்கு சென்று மீண்டவர்களும் இருகிறார்கள். மூளை முழுவது இறப்பதற்கு சில சமயம் எடுக்கும். அந்நேரம் இறந்தவரை சுற்றி ஒப்பாரி இடுவது கூட அவருக்கு கேட்டுக்கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. மூளை இறந்த பின் கூட வெகு நேரம் உடலின் மற்ற செல்கள் இறக்காமல் இருக்கும்.உடலின் செல்கள் எப்போது தங்கள் சக்தி இழக்கிறதோ அப்போதே உடலில் சாதாரணமாகவே சூழ்ந்திருக்கும் கிருமிகள் அதனை அழிக்கத் தொடங்குகின்றன. உடலின் மூலக்கூறுகளும் உயிரின் மூலமும் இயற்கையோடு கலந்து தன் அடையாளத்தை முழுவதும் இழந்து விடுகிறது. மீண்டும் இயற்கையிலிருந்து வேறொரு வடிவம் பெறலாம்.

உடலும் உயிரும் இப்படி இயற்கையிலிருந்து தோன்றி மறைவது இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனாலும் அழகான இந்த உலகத்தையும் வாழ்வையும் பிரிவதென்றால் கஸ்டமான காரியம் தான். இல்லையா?

நிஜம் என்னவென்றால் இந்த கட்டத்துரையின் மனம் உணரும் அழகிய உலகம் அவன் மனது கொஞ்சம் கொஞ்சமாக பிறப்பிலிருந்தே உருவாக்கியது தான். சிரமப்பட்டு உருவாக்கியதை இழக்க மனம் விரும்பாததன் காரணம் தன்னை தனது உலகத்தின் மையமாக கொண்டு தான் கட்டியது மணல் வீடு என உணராதது தான். மனிதனது வாழ்வும் அவனது உலகமும் பெரும்பாலும் அவனது புலனின்பத்திற்காக உருவாக்கப்பட்டதே. மனது என்பதே தன்னுணர்வின் ஒரு விளைவு தான். இந்த தன்னுணர்வு பொருளின் இயக்கத்தை காலமாக கருதத்தொடங்கியது தான் இது வரை சொல்லப்பட்ட எல்லா நிகழ்வுக்கும் காரணம். தன்னுணர்வின் பார்வையில் அல்லாமல் பிரபஞ்சத்தின் வேறு எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு சம்பவமே இல்லை.

கட்டத்துரை என்பது ஒரு விளைவு அன்றி ஒரு பொருள் அல்ல. கட்டத்துரை என்பது அவனது மனம் மட்டும் தான். மூளையின் ஞாபகம் அழிவதோடு அவனது ஐடென்டிடி அழிகிறது.
அது சொர்க்கம் நரகம் போய் சேருவதில்லை,
மறுபிறவி எடுப்பதில்லை,
பூர்வஜென்ம ஞாபகமும் இருப்பதில்லை.
இதெல்லாம் மதங்கள் சில விஷயங்களை எளிதாக சொல்ல முயன்றஉவமைகள்.
ஆனால் உயிர் அல்லது தன்னுணர்வின் ஆதாரம் அழிவதில்லை. அழிக்க முடியாதது. நிரந்தரமானது. ஒரு மரத்தின் இலை தோன்றி வளர்ந்து முதிர்ந்து கீழே சருகாய் விழுந்து எருவாகி மீண்டும் வேராகி,மரமாகி,வேறு இலையாகி...தொடர்ந்து கொண்டிருக்கும். பார்க்கும் நம் அறிவுதான் அதன் பல நிலைகளை உணர்கிறது. அறிவைக் கடந்த உண்மையில் இலையின் அணு் நிலையும் மண்ணின் அணு நிலையும் ஒன்று தான். இலை எப்போது இறந்தது?

Download As PDF

3 comments:

Rajeswari said...

ஆனால் காதலர்களுக்கு என்னவோ இன்னும் மனம் இதயத்தில் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிப்பவர்களுக்கு மூளை இருப்பதில்லையோ என்னவோ?//

உண்மைதான்..ஆனால் ஏதாவது ஒரு பிரச்சனையென்றால்,மனம் கஷ்டப்படும் போது,மூளை வலிக்கவில்லையே..இதய்ம் தான் வலிக்கிறது..ரொம்ப நாட்களாக புரியாத புதிராய் எனக்குள் இருக்கும் கேள்வி இது

Rajeswari said...

அறிவியலையும்,ஆன்மிகத்தையும் இணைத்த அருமையான பதிவு.

சாதிக் அலி said...

நன்றி ராஜேஸ்வரி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
உடலின் மற்ற வலிகளை மூளை தான் உணர்கிறது. ஆனால் மூளையை வெட்டினாலும் மூளைக்கு வலிக்காது என்று எங்கோ படித்த நினைவு.டெஸ்ட் பண்ணி பார்க்க வேண்டாம் நம்புவோம்.கணினியில் புரோகிராமில் பிழையிருந்தால் பிழைசெய்தி காட்டும்.புராசசரில் பிழை இருந்தால் என்ன செய்தி காட்டும்.

இதயம் வலிக்க காரணம் பிரச்சனைகள் வரும்போது மூளை அதிகம் வேலை செய்வதால் அதிகமாக இரத்ததை இதயம் மூளைக்கு பம்ப் செய்கிறது.இதனால் வரும் ஒவர் லோடு தான் இதய வலிக்கு காரணம்.