ADHD:கவனமற்ற பிள்ளைகளை கனிவுடன் கவனியுங்கள்


உங்கள் பையன் பள்ளிக்கூடத்தில் எப்போதும் குறைந்த மதிப்பெண் வாங்கிக் கொண்டு வருகிறானா?
எப்போதும் சுட்டித்தனம் மிகுந்து, சொல் பேச்சு கேட்காமல் இருக்கிறானா?
பிரம்பு வைத்திருக்கும் பெற்றோர்களே அவசியம் மேலே படியுங்கள்.

Attention-deficit hyperactivity disorder (ADHD) என்பது 4% முதல் 12% வரை பள்ளிப் பருவ பிள்ளைகளைப் பாதிக்கும் ஒரு உளவியல் பிரச்சனை. குறிப்பாக ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். வளர்ந்து பெரியவர்களானாலும் இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

வயதுக்கு மீறிய மூளையின் தீவிர செயல் தூண்டல் காரணம் அவர்களால் பள்ளியில் பாடங்களை பொறுமையாக கவனிக்க முடிவதில்லை. வீட்டில் , பள்ளியில் இவ்வாறு கவனமின்றி இருப்பது அவர்களது கல்வியையும் பிறருடனான நல்லுறவையும் பாதிக்கிறது. ADHD குழந்தைகள் அநேகமாக பெற்றோராலும் ஆசிரியர்களாலும் நண்பர்களாலும் வசையும் அடியும் வாங்கி பிறரால் இகழப்பட்டு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். வளர வளர இப்பாதிப்புகள் அவனை மேலும் மோசமான நிலக்கு இட்டுச் செல்கிறது.

ADHD இருக்கிறதா என தெரிந்து கொள்வது எப்படி?
ADHD உள்ள குழந்தைகள்
  • நாம் சொல்லுவதை ஒழுங்காக கேட்டு அதன் படி நடக்க மாட்டார்கள்.
  • வகுப்பில் பாடங்களை கவனிப்பதிலும் ,வேலை செய்யும் போதும் விளையாடும் போதும் அவர்கள் கவனம் நிலத்திருக்காது.
  • பள்ளிக் கூடத்தில் பென்சில்,பேனா, ரப்பர்,ஸ்கேல் என்று நாளும் தொலைத்து விட்டு வருவார்கள்.
  • ஏதாவது சொன்னால் மண்டையில் ஏறாதது போல் நிற்பார்கள்.
  • நுட்பமான விபரங்களை தெரிந்து கொள்ளவோ தெளிவாக விளங்கிக் கொள்ளவோ ஆர்வமிருக்காது.
  • நன்றாக யோசித்து செய்ய வேண்டிய செயல்களை செய்வதற்கு சிரமப்படுவார்கள்.
  • செயல்பாடுகளில் ஒரு ஒழுங்கு இருக்காது.
  • ஞாபக மறதி அதிகம் இருக்கும்.
  • எப்போதும் துறு துறுவென்று இருப்பார்கள்
  • ஓடுவது,குதிப்பது,மரங்களில் ஏறுவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.
  • அமைதியாக விளையாடமாட்டார்கள்.
  • முந்திரிக் கொட்டை போல் பதில் சொவார்கள்
  • பிறருக்கு தொல்லைகள் தருவார்கள்
  • ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார மாட்டார்கள்.
  • அதிகம் பேசுவார்கள்.
  • தன் முறை வரும் வரை பொறுமை காக்க மாட்டார்கள்.
  • யோசிக்காமல் செயல் படுவார்கள்.ஆபத்தாக செயல் படுவார்கள்
  • கவனமின்றி சாலையை கடப்பார்கள் .
  • யோசிக்காமல் சட்டென எதையாவது கூறி விடுவது.
  • கவனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
  • சிலவற்றை செய்ய அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்
  • தூங்குவதில் சாப்பிடுவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • பயம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.
  • சக நண்பர்களோடு அடிக்கடி ஒத்துப் போகாது.
ADHD உள்ள பெரியவர்கள்
  • ADHD உள்ள குழந்தைகள் சரியாக கவனிக்கப்படாமல் ADHDயுடனே வளர்கிறர்கள்.
  • கோபம் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறர்கள்.
  • கவனக்குறைவாக இருக்கிறார்கள்.
  • பிறருடன் சண்டை சச்சரவு ஒத்துப் போகாத தன்மை.
  • அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாவது.
  • புகைப் பழக்கம் ,போதைப் பழக்கத்துக்கு அடிமை யாவது.
  • அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பது.
  • பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாவது.
  • ரிலாக்ஸாக இல்லாமல் பரபரப்புடன் இருப்பது.
  • செய்யும் வேலையில் கவனமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் திட்டமிட்டு முடிப்பதும்முடியாமல் போவது.
  • தினசரி அலுவல்களில் கவனக்குறைவு
  • காது ,தொண்டை தொற்றுகள் காணப்படும்
ADHD எதனால் வருகிறது?
மூளையில் சிந்தனையை நிர்வாகிக்கும் பகுதியில் சில இடங்களில் போதுமான ரசாயன மாற்றங்கள் சரியாக நடைபெறாததே இதற்கு காரணம். ADHD உள்ள சிலரை Brain Scan செய்து பார்த்த போது frontal lobe செயல் பாடு குறைவாக இருப்பது தெரிந்தது. திட்டமிடுதல் , ஒழுங்கு படுத்துதல், கவனித்தல், போன்றவற்றிற்கு frontal lobe ன் செயல் பாடுதான் காரணம்.
  • நெருங்கிய உறவினர்களுக்கு ADHD இருந்தாலும் பிள்ளைகளுக்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
  • கர்ப்பிணிகள் புகை பிடிப்பதாலும், புகை பிடிக்கும் கணவன் அருகிலிருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்க காரணமாகலாம் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
  • கருவுற்ற தாய்மார்கள் போதிய சத்துணவு உண்ணாவிட்டாலும், பிரசவ நேரத்தில் சிக்கல் இருந்தாலும் பிறக்கும் குழந்தை ADHDயுடன் பிறக்கலாம்.
  • போதிய சத்துணவு இல்லாததாலும், விஷப்பொருட்கள், பதனப்பொருட்கள், Lead , Mercury போன்ற கன உலோக தாதுக்கள் உண்பதாலும் அடிக்கடி ஆன்டி பயாட்டிக் எடுத்துக் கொள்வதாலும் குழந்தைகளுக்கு ADHD வரும்.
  • தவறான வளர்ப்பு முறையால் இது வருவதல்ல . ஆனால் சரியான வளர்ப்பு முறை அதை மேலும் மோசமாகாமல் பாது காக்கும்.
சிகிட்சை என்ன?
மேல் கண்ட குறைபாடுடைய குழந்தகளுக்கு ADHD இருக்கிறதா என ஒரு மனோ தத்துவ மருத்துவர் உதவியுடன் கண்டறிய வேண்டும். கண்பார்வை குறைவு , காது கேளாமை போன்ற வேறு காரணங்கள் இருக்கிறதா? என்றும் ஆராயப்பட வேண்டும். குறைப்பாடுள்ள குழந்தைகளை குற்றம் சாட்டுவது தண்டிப்பதும் கூடாது. சில குழந்தகளுக்கு நல்ல மனோ தத்துவ ஆலோசனை தேவைப்படலாம். அல்லது மருத்துவ சிகிட்சை தேவைப்படும். psychostimulant மருந்துகள் பயன் படுத்துவது நோய்குறியை மிதப்படுத்தினாலும் நோயை குணப்படுத்துவதில்லை. மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தக்கூடியது.

பொதுவாக ADHDக்கு methylphenidate,dextroamphetamine ,pemoline,atomoxetine,Adderall போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தால் பயன் படுத்தலாம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
  • நேரக்கட்டுப்பாடு: காலையில் எழுவது,சாப்பிடுவது,பள்ளிக்கூடம் போவது , விளையாடுவது, வீட்டுப்பாடங்கள் செய்வது, படிப்பது, டிவி பார்ப்பது, தூங்கப் போவது போன்ற தினசரி செயல்களை அதற்குரிய நேரத்தில் செய்யும் படி அட்டவணை இட்டு அவர்கள் கண்ணில் படும் இடத்தில் பெரிதாக ஒட்டி வைத்திருக்க வேண்டும் அதன்படி நடக்க செய்ய வேண்டும்.
  • உடல் தசை இயக்கப் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டீவி, வீடீயோ கேம், கம்ப்யூட்டர் முன் உட்காரும் நேரத்தை இரண்டு மணி நேரத்திற்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு சிறு விதிகளை உருவாக்கி அதை சரியாக கடை பிடிக்க செய்து பழக்க வேண்டும்.
  • குழந்தைகளிடம் பேசும் போது நேராக தெளிவாக அமைதியாக மென்மையாக சொல்ல வேண்டியதை சொல்லி அதை அவர்கள் புரி்ந்து கொண்டதையும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் சரியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டி உற்சாகப்படுத்த தவறாதீர்கள்.
  • அவர்களை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருங்கள் ஏடாகூடமாக எதையாவது செய்துவிடும் அபாயம் எப்போதும் உள்ளது.
  • நண்பர்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கவனியுங்கள்.
  • டிவி ,விருந்தினர் வருகை போன்றவற்றால் கவனம் சிதறாமல் இருக்க ஏற்ற இடத்தை படிப்பதற்கு வசதியாக அமைத்துக் கொடுக்கவும்.
  • எப்போதும் படி படி என்று கட்டாயப்படுத்தாமல் சின்ன சின்ன இடைவெளி விட்டு ஹோம் வொர்க் செய்ய அனுமதிக்க வேண்டும்.
  • எதற்கும் அவர்களை அவசரப்படுத்தாதீர்கள்
  • அவர்கள் மதிப்பெண்களை மற்ற பிள்ளைகளின் மதிப்பெண்களுடன் ஒப்புமைப் படுத்தி மட்டம் தட்டாமல்.மேலும் அதிக மாதிப்பெண் எடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்தி பாராட்டுங்கள்.
  • பள்ளியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி பள்ளி ஆசிரியர்களுடன் கலந்து பேசி அவர்கள் முன்னேற்றத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  • வகுப்பறையில் முன் இருக்கைகளில் இடம்பெற செய்வது அடிக்கடி கவனம் கலைவதை தடுக்கும்.
ADHD உள்ள குழந்தைகள் என்ன சாப்பிடலாம்?
சத்தான சமச்சீரான உணவு தேவை. சில குழந்தகளுக்கு சில உணவு ஒவ்வாமை ஏற்படுத்தி நிலமையை மோசமாக்க கூடும். கோதுமை, ஈஸ்ட், பால், சோளம், சோயா, உணவு பதப்படுத்திகள், உணவுச் சாயங்கள் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள். இந்நிலையில் இவற்றை கண்டறிந்து தவிர்ப்பது நலம்.

உணவில் சேர்க்க வேண்டியவை:
  • மோர், தயிர் போண்றவற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் குடல் நலத்தை பாதுகாத்து, நோயெதிர்ப்பு சக்தி்யை வளர்த்து, விஷப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது
  • இயற்கை உரத்தில் வளர்ந்த பழங்கள் காய்கறிகள் ,பட்டை தீட்டாத அரிசி,ஓட்ஸ்.
  • புரத சத்து தேவைக்காக நாடன் கோழி, மீன்கள், அவரை, கடலை, பருப்பு வகைகள்.
  • சமையலுக்கு தேங்காய் எண்ணெய், சுத்தமான நெய்.
  • மீன் எண்ணெயில் காணப்படும் omega-3 fatty acids EPA மற்றும் DHA மூளைக்கு நல்லது.
  • விட்டாமின் B,விட்டமின் C,மக்னீசியம்,செலினியம்,இரும்பு சத்து ,துத்த நாகம் போன்ற சத்துக்கள் மூளையின் செயல் பாட்டுக்கு முக்கியமானவை.
  • கிரீன் டீ யில் உள்ள L-theanine என்ற அமினோ அமிலம் டென்ஸனை குறைத்து நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது ADHD பாதிப்பை குறைக்கிறது.
உணவில் தவிர்க்க வேண்டியவை:
ஃபாஸ்ட் ஃபுட்,நொறுக்கு தீனிகள், பர்கர்கள், இனிப்பு வகைகள், மிட்டாய்கள் பதனப் பொருட்கள், சுவையூட்டிகள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்ற எல்லா விளம்பர பொருட்களையும் தவிர்த்தல் வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களால் உருவாகும் தொல்லைகளால் எரிச்சலடையாமல் அவர்களிடம் கனிவாக பாசமாக நடந்து கொள்வது அவர்களை நல்ல மன நலம் உடையவர்களாக வளர உதவும்.

Related Links:
http://en.wikipedia.org/wiki/Attention-deficit_hyperactivity_disorder
மூளை வளர என்ன சாப்பிடலாம்?
பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை
குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்
வலிப்பு நோய் (epilepsy)
10 ஆயிரம் மணி நேரம் போதும் மேதையாகலாம்

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்.இருங்க படிச்சிட்டு வர்ரேன்..
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் பயனுள்ள பதிவு..நன்றி..
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
சாதிக் அலி நீண்ட நாட்களூக்குப்பிறகு ஒரு அர்த்தமுள்ள இடுக்கை..

எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்

இப்படி பயமுறுத்திருக்கீங்க, நிச்சயம் குழந்தைகளின் வளர்ச்சியில் நம் கவனம் மிக மிக முக்கிய தேவை ஒன்று

தெளிவான விளக்கம்

தொடர்ந்து எழுதுங்க‌
வால்பையன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள கட்டுரை, மிக்க நன்றி!
RAMYA இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் !!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ராஜேஸ்வரி,அபு அஃப்ஸர் ,வால்பையன்.நன்றி.எல்லோரும் எப்படியிருக்கீங்க?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Really useful article. Many Parents in India do not even know about this disorder for their children. Please write about ADD also and their difference with ADHD. It is also common disorder. Good job Keep it up
-Nithy-
HK Arun இவ்வாறு கூறியுள்ளார்…
தரமானதும் பயன்மிக்கதுமான ஒரு இடுகை சாதிக் அலி. மிக்க மகிழ்ச்சி!

நன்றிகள்
HAMEEM இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்ல பதிவு
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ஹாவர்டு கார்னர் எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதனை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐ.க்யூ டெஸ்ட்டில் மிகவும் பின் தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சில வற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறி வாற்றல் (Naturalistic intelligence), இசை அறிவாற்றல் (Musical intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematical-logical intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (interpersonal intelligence), நடன உடலசைவுகுறித்த அறிவாற்றல் (Body kinesthetic intelligence), மொழி அறிவாற்றல் (linguistic intelligence), உளவியல் அறிவாற்றல் (intrapersonal intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். இவற்றில் எவை ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு /அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பிராய்லர் கோழிகளைப் போலப் பிள்ளை களைக் கையாளும் பள்ளிகளுக்கு நேரம் கிடையாது. அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது.