மருத்துவரை காணும் முன்.....

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக உள்ள நேரம் உடல் நலனைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. உடல் நலத்தை கெடுத்துக் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பின்னாளில் எல்லாவற்றையும் ஆஸ்பத்திரிகளுக்கு வாரிக் கொடுத்து ஓட்டாண்டிகளாகிப் போவதுண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்ககூடாது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அப்புறம் தான் மற்ற எல்லாம். எவ்வளவு பணம் கிடைப்பினும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வேலை செய்து சம்பாதிக்காதீர்கள். உடல் நலத்தை கெடுக்கும் எந்த பழக்கங்களுக்கும் பின்னாளில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
யாரிடம் போவது?
சின்ன உடல் நலக்குறைவுகளுக்குப் பெரிய மருத்துவமனைகளைத் தேடி ஓடாதீர்கள். குடும்ப மருத்துவர், அல்லது அரசு மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள். சாதாரண நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களைவிட பொது மருத்துவர்களே போதுமானது அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவம் செய்வது நலம் .

சரியான மருத்துவரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாவும், ஆய்வகங்கள், அவசர சிகிட்சைக்கான வசதிகள் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதா என பார்க்கவும். நியாயமான கூலி வசூலிக்கிறதா? இல்லை பணம் பிடுங்குவதையே பிரதானமாக கொண்டுள்ளதா?என பிறர் அபிப்பிராயத்தை கேட்டுக்கொள்ளுங்கள்.

மாற்று மருத்துவம்: எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் தான் சிறப்பு என்றில்லை. பல நோய்களுக்கு அதை விட சிறப்பான மாற்று மருத்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு மருத்துவர் இதற்கு ஆப்பரேசன் தான் தீர்வு என்றால் ஒரு மாற்று மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.
மற்ற மருத்துவங்களை விட அலோபதி வேகமாக பலன் தருவதால் உயிருக்கு ஆபத்தான நேரங்களில் அலோபதி தான் கை கொடுக்கும். ஆனால் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. அலோபதி மருந்துகள் பொதுவாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. நோய், மற்றும் நோய் குறிகளையே கவனிக்கிறது.
அறுவை சிகிட்சை, மற்றும் கிருமித் தாக்குதல்களுக்கு அலோபதியே வேகமாகவும் நம்பகத் தன்மையுடனும் செயல்படுகிறது. விபத்துக்கள் நேர்ந்தால் தகுந்த முதலுதவி செய்து முடிந்த அளவு வேகமாக எலும்பு முறிவு தலைக்காயம், போன்ற அவசர சிகிட்சை மையங்களுக்கு எடுத்து செல்லவும். விபத்துகளில் கை கால் முறிந்தவர்கள் சரியான எலும்பு முறிவு நிபுணர்களிடம் சிகிட்சை பெறாமல் லோக்கல் வைத்தியர்களிடம் போய் எலும்புகள் சரியாக பொருந்தாத நிலையில் மாவுக்கட்டுப் போட்டு நிரந்தர ஊனமுற்றவர்களாக பலர் நடமாடுவதை கிராமங்களில்காணலாம்.

ஹோமியோபதி மருந்துகள் நோய்க்கு கொடுப்பதில்லை நோயாளிகளின் தன்மையே நோய்க்குக் காரணம் என்று அதற்க்கேற்றவாறு நோயாளிக்குத்தான் மருந்து கொடுக்கிறது. எனவே பக்க விளவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் நீண்ட சி்கிட்சை தேவைப்படும்.

சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகள் மனிதன் தன் அனுபவத்தால் சேகரித்த அறிவு. பல நோய்களுக்கு எளிய மருந்துக்களை கொண்டுள்ளது. சரியான ஆராய்ச்சிகள் இல்லாததாலும் உடனடி நி்வாரணத்தை மக்கள் விரும்புவதாலும் நம் நாட்டில் தோன்றிய இந்த அரிய அறிவின் முழு வீச்சும் வெளிப்படாமல் புதைந்தே கிடக்கிறது. சித்த மருத்துவத்திலும் ஒரளவுக்கு பக்க விளைவுகள் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனாலும் இது இயற்கையோடு இணைந்த ஓர் மருத்துவ முறை.

அக்குபஞ்சர், அக்கு பிரசர்,வர்ம மருத்துவம் யாவும் நரம்பு மண்டலங்களைத் தூண்டி செயல்படும் மருத்துவ முறைகள்.

ஏமாறாதீர்கள்

பொதுவாக பல மாற்று மருத்துவங்கள் அனேகம் விஞ்ஞானத்தால் சரிபார்க்கப் படாதது, அது நிச்சயமான பலன் தரும் என நிரூபிக்கப்படாதது. இதனால் நிறைய போலி மருத்துவர்களும், போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளன. விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காதீர்கள். மொட்டைத் தலையில் முடி முளைக்கும் மருந்துகள். ஆண்மை பெருக காயகல்பங்கள், பஸ்பங்கள், லேகியங்கள். எய்ட்ஸ், மற்றும் புற்று நோய்க்கான மாற்று வைத்திய முறைகளில் பெரும்பாலானவை போலியானவை. மக்களின் அறியாமைய பயன்படுத்தி வெறும் மாவுகளை கொடுத்து விட்டு பெரும் பணத்தை கொள்ளை அடிக்கும் பல போலி லாட்ஜ் வைத்தியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.
மந்திரவாதிகள், பேயோட்டிகள், தோசம், பரிகாரம் என ஏதும் உங்கள் நோய் தீர்க்க நிச்சயம் உதவாது. இத்தகைய மோசடிகளில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். மோசடி செய்வதில் சில அலோபதி டாக்டர்களும் சரி மேல் நாட்டு கம்பனிகளும் சரி சளைத்தவர்கள் அல்ல. இன்னும் தொப்பை குறைக்கும் கருவி , சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம் , தவளை வைத்தியம், காந்த வைத்தியம், கரண்ட் வைத்தியம், எய்ட்ஸ் மூலிகை, என பல பொருட்கள் விளம்பரங்கள் மூலம் தலையில் கட்டிவிடுவார்கள்.
அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கடவுள் சித்தத்தால் இந்நோய் வந்தது அவரே தீர்க்கட்டும் என வெறும் பிரார்த்தனை மட்டும் செய்துவிட்டு எந்த மருத்துவமும் செய்யாதிருந்தால் கடவுளும் கண்டு கொள்ளமாட்டார். விரைவில் அவரைத் தேடிப்போக வேண்டிவரும்.
அதிகம் அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் உடம்பைப்பற்றியும் அது எப்படி நோயுறுகிறது என்பது பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்து கொள்வதே உங்ளுக்கு சிறந்த தற்காப்பு. மேலே நாடுகளில் மருத்துவத் துறைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் திருத்தங்களும் முன்னேற்றங்களும் இன்னும் பல மருத்துவர்களை அடைய வில்லை என்பதே உண்மை. அவர்களில் பலர் இன்னும் தவறான சிகிச்சையையும வெளிநாட்டில் கைவிடப்பட்ட, தடை செய்யப்பட்ட மருந்துகளையும் எழுதித்தரகூடும்.

இருதய நோயாளிகள், வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டு தொலைபேசி எண்கள், முகவரி, இரத்த க்ரூப் எல்லாம் தங்களுடன் எழுதி வைத்திருப்பது அவசர நேரங்களில் கை கொடுக்கும். பக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் மொபைல் எண் உங்கள் கைப்பேசியில் பதித்துக்கொள்ளுங்கள்.

நம்மைச்சுற்றி எங்கும் நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கிறது. அவற்றின் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க சுகாதாரமான சூழலில் வாழ வேண்டும். அதிக நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே தேவையான தடுப்பு மருந்துக்களை இட்டுக்கொள்ள வேண்டும். போலியோ,மஞ்சள் காமாலை, யானைக்கால், காச நோய்களை, வருமுன்னே தடுத்துவிடலாம்.
அலட்சியம், விழிப்புணர்வின்மை, பாதுகாப்பு முன்னெச்செரிக்கையற்ற சுற்று சூழல் யாவும் எமனின் வாகனங்கள். மித மிஞ்சிய உணவுப்பழக்கமும், உடல் இயக்கமின்மையும் பல சிக்கலான நோய்களுக்கு கதவை அகலத் திறந்து வரவேற்பு அளிக்கும். கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, இதய நோய் , சர்க்கரை நோய், பக்க வாதம், மூளை, கிட்னி, ஈரல் பாதிப்பு என ஒவ்வொன்றையும் சந்திக்க வேண்டி வரும்.
நீங்கள் 40 வயதை கடந்து செல்கிறீர்களா?, எந்த நோயும் இல்லையா? ஒருமுறை, கண்பார்வை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயம், கிட்னி, இரத்தம், புற்று நோய், போன்றவற்றுக்கான பொதுவான சோதனைகளை செய்து கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்து கொள்ளுங்கள். நடத்தல், யோகா போன்ற சிறிய உடற்பயிற்சி, மனப்பயிற்சிளில் ஈடுபடுங்கள்.

நோய்க் காரணங்கள் வேறு, நோய் அறிகுறிகள் வேறு. நோய்க் காரணங்களுக்குத்தான் சிகிட்சை தேவை. காரணங்களை கவனித்தால் நோய் அறிகுறிகள் தன்னாலே மறைந்து விடும். காய்ச்சல், ஜலதோசம், வலி, அரிப்பு, தடிப்பு என்பது நோய்க்கிருமிகளை உடம்பு எதிர்க்கும் போது உண்டாகும் அறிகுறியே. இதற்கு மருந்து கொடுத்து நோய் கிருமிகளுடன் உடல் போராடி அழிப்பதை தடுத்து விடக்கூடாது. நோய் உண்டாக்கும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திதான் போராடுகிறது. நாம் எடுக்கும் மருந்துகள். நோய்க்கிருமிகளை எதிர்க்க நம் உடலுக்குத் துணை செய்கிறது அவ்வளவுதான்.
காலில் ஒரு புண் ஏற்பட்டால் உடனே கவனிக்கிறோம். ஏனென்றால் அது வலிக்கிறது. நடக்க முடியவில்லை. ஆனால் அந்த அளவு முக்கியத்துவம், பல வலிக்காத உயிர் கொல்லிகளுக்கு கொடுப்பதில்லை. சர்க்கரை நோய் முற்றி கிட்னியை, கண்ணை, பாதிக்கும் நேரம் தான் அதை அறிகிறோம். ஒரு முறை இதயம் பாதிக்கப்படும்போது தான் ,உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பதை அறிகிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து உடனே உஷாராக வேண்டும்.

மனம் நோயுற்றால்?
அனேகம் பேருக்கு எந்த நோயும் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர்கள். நோய்களைப்பற்றிய அதிக முன் ஜாக்கிரதையும் கற்பனையான அச்சமும் காரணம் தன்னை நோயாளிகளாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். கவுரவத்திற்காகவும், பரிதாபத்தை சம்பாதிக்கவும் நோயாளியாக விரும்பாதீர்கள். சில மருத்துவர்கள் இவர்களுக்கென்றே பொய்யான மருந்துகளை கொடுத்து காசு சம்பாதிப்பதும் உண்டு. நோயாளி என்ற உணர்வே உண்மையாக அந்த நோயைக் கொண்டு சேர்த்து விடும். உடலில் கிருமிகள் புகுந்து நோயுண்டாக்குவது போல தேவையற்ற எண்ணங்களும் மூட நம்பிக்ககளும் கூட மனதை நோயுறச் செய்யும். உடல் நோயுற்றால் மனம் அதை குணப்படுத்த முயலும். மனம் நோயுற்றால் வாழ்கையே பாழாகிவிடும். எண்ணங்களை பகுத்தறிவு துணை கொண்டு சரியான திசையில் அமைத்துக்கொள்ளவும் பயிற்சி பெறவேண்டும். உடலுக்கு கேடு செய்யும் எல்லாமே நோய் தான். மனத்தின் கோணல் காரணம், புகை, மது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் நிச்சயம் நோய் தான்.
நாம் நோயுற்றிருக்கிறோம் என்று உணர்ந்த உடனே நாள் கிழமை பார்க்காமல் தாமதமின்றி சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள். நோய் முற்றும் வரை அலட்சியப்படுத்திவிட்டு, பெரும் பணத்தயும் இழந்து உயிருக்குப்போராட வேண்டாம்.
ஒரு டாக்டரை விட உங்களுக்குதான் உங்கள் உடம்பைப் பற்றித் தெரியும். வயிற்றுவலி என்றால் உடனே ஸ்கேன் எடுக்க ஓடும் முன்பு நேற்று ரயில்வே பிளாட் பாரத்தில் பஜ்ஜி வங்கி சாப்பிட்டீர்களா? என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தலைவலிக்கிறதா உடனே மூளையில் கட்டியோ என்று கற்பனையை ஓட விடாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்பாருங்கள். காஸ் ட்ரபிள் இருந்தாலும் நெஞ்சு வலிக்கும். அனேக நோய்கள் மருந்தில்லாமலேயே குணமாகும். பல நோய்கள் மிக எளிய வீட்டு மருத்துவத்திலேயே குணமாகும். சில வேளைகளில் உணவே மருந்தாகும். வெறும் தண்ணீர் மட்டுமே பல நோய்களை குணப்படுத்த வல்லது.
நோய் பற்றி டாக்டரிடம் கூறும்போது உள்ளது உள்ளபடி கூறுங்கள். நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்று மிகைப் படுத்திக் கூறாதீர்கள். நீங்களே உங்களுக்கு இன்ன நோயாக இருக்குமோ என்று கூறாதீர்கள். "ஒரு ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் டாக்டர்" "எக்ஸ் ரே எடுங்கள்" என்று நீங்களாக மருத்துவரிடம் கேட்காதீர்கள். தேவைப்பட்டால் அவரே சொல்லுவார். அது டாக்டரின் வேலை. பலர் டாக்டரிடம் காட்டுவதோடு சரி அவர் தரும் மருந்துகளை சொல்லும் கால அளவுக்கு சாப்பிடாமல் விட்டு விடுவார்கள். இது பூரணமாக நோய் குணமாவதை தடுக்கும். நோய்க்கிருமிகள் உடலில் எஞ்சியிருக்க வழி செய்யும். நோயின் கால அளவைக்கூட்டும்.

மருத்துவரை கேளுங்கள்
மருத்துவரை சந்திக்கும்போது. உங்களுக்கு என்ன நோய், எதனால் வந்தது. குணமாக என்ன முயற்சி எடுக்க வேண்டும். எத்தனை நாள் ட்ரீட்மென்ட் எடுக்க நேரிடும். உங்கள் பொருளாதார நிலமை தாங்குமா? போன்ற எல்லா கேள்விகளயும் தெளிவாகக் கேளுங்கள். அவர் பதில் தரக் கடமைப்பட்டவர். உங்கள் பொருளாதார நிலமைக்கு தக்கபடி விலை உயர்ந்த டானிக்குகளுக்குப் பதில் சில எளிய உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார். ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். நீங்கள் எடுக்கும் டெஸ்ட் ரிப்போர்டின் ஒரு நகலை உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் அந்த டெஸ்ட்? என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பாரா மருத்துவச்செலவை எதிர் கொள்ள வழியென்ன?
குடும்பம் முழுவதிற்கும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றித் திட்டமிடுங்கள். குழந்தளுக்கு குறைவாகத்தான் ஆகும். திடீரென் தாக்கும் பெரிய நோய்களால் குடும்பம் நடுதெருவுக்கு வராமல் காக்கும். மருத்துவச்செலவு செய்து கடனாளியானவர்கள் மிக அதிகம்.
நலமாய் வாழ
:
மேலும் விபரம் பெற
மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்

கருத்துகள்

RAMASUBRAMANIA SHARMA இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு...மிகவும் பயன் தரக்கூடிய தகவல்கள்...மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு...கருத்துக்களை பதிவிடுகிறேன்...நன்றி...
RAMASUBRAMANIA SHARMA இவ்வாறு கூறியுள்ளார்…
பின் தடமறிதல் கருத்துக்களை...மின்னஞ்சல் செய்யவும்
malar இவ்வாறு கூறியுள்ளார்…
////////நோய் பற்றி டாக்டரிடம் கூறும்போது உள்ளது உள்ளபடி கூறுங்கள். நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்று மிகைப் படுத்திக் கூறாதீர்கள். நீங்களே உங்களுக்கு இன்ன நோயாக இருக்குமோ என்று கூறாதீர்கள்./////

நன்றாக சொனிர்கள் அருமையான பதிவு ....பொறுமையாக படிக்கவேண்டிய பதிவு ........
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பெண்களே! பிரசவத்தின் போது மிகவும் கவனமாக இருங்கள். சுக பிரசவம் இல்லாமல், சிசேரியன் செய்யப்பட வேண்டும் என மருத்துவர் கூறினால் அதற்கான காரணத்தை கேளுங்கள்.

1) சிசேரியன் செய்வதற்கான காரணம் என்ன?

2) சிசேரியன் செய்யாமல் இன்னும் சில நாட்கள் சுக பிரசவத்திற்காக காத்திருப்பதால்ஏற்படும் பாதகங்கள் என்ன?

3) வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனிற்காக சிசேரியன் செய்யப்படுகிறதுஎன்றால், குழந்தையின் தற்போதைய நிலை என்ன ?

4) சிசேரியன் செய்யாமல், சுக பிரசவத்திற்கு எதிர்பார்த்தால்குழந்தைக்கு ஏற்படும் பாதகங்கள் என்ன?

போன்றவற்றை தெளிவாக மருத்துவர்களிடம் கேளுங்கள். காரணமின்றி சிசேரியன் செய்யப்படுவதை தவிர்க்க பெண்களும், ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதைப் போலவே, கர்ப்ப காலத்தின் போதே சுக பிரசவத்திற்கான வழிமுறைகளை மருத்துவர்களின்ஆலோசனையுடன் பெண்கள் தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் சிசேரியன் தவிர்க்கலாம்.

மேலும் பல மருத்துவமனைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சைக்கு முனைவதை காண்கிறோம்.