உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?
  1. நாம் உண்ணும் உணவின் தன்மை.
  2. மன அழுத்தம்.
  3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
  4. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
  5. உடல் எடை அதிகரித்தல்
  6. ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
  7. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
  8. உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
  9. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
  10. பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.

பக்கவாதம் (Stroke)
இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.

பார்வை பறிபோகுதல்(Blindrers)
விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
இரத்தக் கொதிப்பு இருப்பதே தெரியாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.

நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை

(1) சிஸ்டாலிக் அழுத்தம் - இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.
(2) டயஸ்டாலிக் அழுத்தம் - இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.

140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)

இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
சிஸ்டாலிக் 140 - 159
டயஸ்டாலிக் 90 - 99

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2
சிஸ்டாலிக் 160 - 179
டயஸ்டாலிக் 100 - 109

இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3
சிஸ்டாலிக் 180 - க்கு மேல்
டயஸ்டாலிக் 110 - க்கு மேல்

இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
மருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:
உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்
அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:
தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்
இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:
நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

மேலதிக விபரத்திற்கு ,National Heart ,Lung and Blood Institute

கருத்துகள்

எனது கவிதைகள்... இவ்வாறு கூறியுள்ளார்…
அவசியம் அனைவரும் தெறிந்துகொள்ளக்கூடிய பதிவு வாழ்த்துக்கள் !


உண்மைவிரும்பி.
மும்பை.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்றாலும் வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பீட்ரூட் -உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது தெரிய வந்தது.ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன்
தெரிவித்துள்ளது.

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து
ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது.
அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன்
மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது.

தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் எனவும், இதனால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக்
கொள்ள முடியும் எனவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம்,
ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள்
நிறைந்துள்ளது.