பிக் பிளாங்க் 7

 

பரிமாணம் என்று நான் குறிப்பிடுவது Dimension. பரிணாமம் என்பது Evolution டார்வின் சித்தாந்தம் அது வேறு விஷயம் இரண்டையும் குழப்ப வேண்டாம். நாம் நம் இருப்பை உணரும் தளம் தான் நமது பரிமாணம். நாம் இப்போது இடத்தில் இருக்கிறோம், ஒரு பொருளாக உணர்கிறோம், காலத்தில் இயங்குகிறோம், இந்த முப்பரிமாண அனுபவத்தில் தான் நாம் இருக்கிறோம். இது தவிர வேறு பரிமாணங்கள் இருக்க முடியுமா? இந்த இடம், காலம், பொருள் கூட சீராக இல்லை.வளைவு நெளிவுகளும் துளைகளும் உள்ளது.
 
உதாரணமாக நாம் ஒரு ஹை வேயில் போய் கொண்டிருக்கிறோம். நம் அனுபவம் என்னவாக இருக்கும்? ரவுண்ட் அபவுட், சிக்னல், வெள்ளை கோடுகளிட்ட நெடிய சாலைகள், சுற்றி விண்ணை முட்டும் கட்டிடங்கள். நம் எண்ணம் நாம் போய் சேரவேண்டிய இடத்தில் இருக்கும், ட்ராபிக் ரூல்களுக்கு கட்டுப்பட்டிருப்போம். சட்டென பசி உணர்வு தோன்றுகிறது. ஒரு சண்ட்விச் சாப்பிடலாம் என்றால் வண்டியை ஓரம் கட்டி பக்கவாட்டு சாலையில் திரும்பி நிறுத்தி விட்டு இறங்கி குறுக்கு ரோட்டுக்குள் நுழைந்தால் விதவிதமான போர்டுகள், கடைகள், வாசனைகள், மனிதர்கள், சப்தங்கள் நிறைந்த புது அனுபவத்திற்குள் நுழைகிறீர்கள். அங்கே ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது அந்த தெருவில் இருக்கும் நண்பன் நினைவு வருகிறது. நிறைய அடுக்கு மாடி கட்டிடங்கள் அதில் குறிப்பிட்ட கட்டிடத்தை முகவரி தேடி கண்டு பிடிக்கிறீர்கள். அதனுள் ஏணிப்படியும் இருக்கிறது ஒரு லிஃப்டும் இருக்கிறது. லிப்ஃடை தெரிவு செய்கிறீர்கள். அதில் எண்களிட்ட பட்டன்கள் இருக்கிறது, அதில் எந்த மாடிக்கு போக வேண்டுமோ அதற்கான எண்ணை அழுத்தி குறிப்பிட்ட மாடியை எளிதில் அடைகிறீர்கள். ஒவ்வொரு மாடியிலும் நிறைய ப்ளாட்கள் இருக்கிறது. உங்கள் மாடியில் ஒவ்வொன்றாக பார்த்து ஒரு குறிப்பிட்ட எண்ணிட்ட கதவில் காலிங் பெல் அடிக்கிறீர்கள். இப்படி உங்கள் சூழல், தற்காலிக நோக்கம், நிரந்தர நோக்கம் அனுபவம்,அந்தந்த இடத்துக்கான விதிகள் மாறிக் கொண்டே கடந்து வருகிறீர்கள். ப்ளாட்டுக்குள் சென்றதும் வேறு அனுபவம். அங்கு நண்பன், சோபா, ஏசி, டிவி எல்லாம் இருக்கிறது. இது ஒரு அனுபவம். டிவியில் புதிய சினிமா ஓடிக்கொண்டிருப்பதை கவனிக்கிறீகள். சிறிது நேரம் அந்த சினிமாவின் கதையில் மூழ்கி விடுகிறீர்கள். அடுத்து ஞாபகம் வந்து அது போல் திரும்பி விடுகிறீர்கள் அல்லது..வெளியே வந்து காரை எங்கே விட்டோம் என தேடுகிறீர்கள். அங்கு சுற்றிலும், அடுத்தும் மற்ற மாடிகள், இது போல் பல ப்ளாட்டுகள், அதற்குள் பல மனிதர்கள், பல கட்டிடங்கள், பல ரோடுகளில் பல அனுபவங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது எதுவும் நாம் அதை அடையாதவரை தெரிவதில்லை. நீங்கள் அந்த ப்ளாட்டுக்குள் நுழையுமுன் பக்கத்தில் நிறைய ப்ளாட்டுகள் உள்ளதை உணர முடிந்தது.ஆனால் கதவை திறந்து பிளாட்டுக்குள் நுழைந்ததும் மற்ற ப்ளாட்டுகளோ கட்டிடமோ தெருவோ பார்வையில் மறைந்து விடும்..
 
இப்படி நம் கான்சியஸ் ஏதோ ஒரு அனுபவத்தில் சிக்கி மாட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை நாம் போக வேண்டிய இடமல்லாது வழி தவறியும் மாட்டி கொண்டிருக்கலாம். ஒரு வேளை அப்போது பசி எடுக்கா விட்டால் அந்த ப்ளாட்டுக்குள் போயிருக்க மாட்டோம். அந்த TV சினிமாவில் மூழ்கி நாம் போக வேண்டிய இடத்தை காரை மறந்து விடவும் வாய்ப்பு உண்டு.காலத்திலும் இப்படி மாட்டிக் கொள்வோம். உதாரணமாக இந்த பதிவை நீங்கள் படிக்கும் நேரம்.உங்கள் காலத்தை வாசிப்பு எடுத்துக் கொண்டது. ஒரு அழகான காதலி அருகில் இருந்தால் காலம் போவதே தெரியாது. நம் காலம் நின்று விடும்.ஃபோன் பேசும் காதலர்களுக்கு தெரியும்.30 வருடம் கோமாவில் கிடந்து எழுந்தவருக்கு பக்கத்தில் இருப்பது மாமியார் அல்ல மனைவிதான் என்று புரியவைக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.
 
இப்படி நீங்கள் ஒரு பரிமாணத்தை அனுபவப்படும் போது அதற்குரிய விதிகள் செயல் படும். அதில் நாம் கட்டுப்பட வேண்டியிருக்கும். நம் கான்சியஸ் மாறும் போது நம்மை சுற்றி உள்ளவையும் மாறும். நம் அனுபவமும் மாறும், புதிய உலகம் புதிய விதிகள்,நம்மைப்போல் அதை அனுபவிக்கும் புதிய மற்றவர்கள், புதிய பிரபஞ்சம் இப்படி நிறைய பரிமாணங்கள் இருக்கிறது, கணித ரீதியாக 26 மாடல் கள் இருந்தாலும் நம் கான்சியசுக்கு 11 டைமன்சன்களை உணர முடியுமாம். இடம் ,காலம், வெளி, பரிமாணங்களில் நகர நிறைய சுருக்குப் பாதைகள் போர்டல்கள், வொர்ம் ஹோல்கள் இருக்கலாம். ப்ளாக் ஹோல்களுக்குள் நுழையும் நட்சத்திரங்கள் லிஃப்டுக்குள் ஏறியவையாக கூட இருக்கலாம். எண்ணிலா போர்டல்கள் இந்த பூமியில், பிரபஞ்சத்தில், ஏன் உங்கள் ஆழ் மனதில் கூட இருக்கிறது.மூளையின் நரம்பு செல்கள் எப்படி தொடர்புகளை உருவாக்குகிறதோஅது போல. ஒரு இணைய தொடர்பு போல
முன் சொன்ன உதாரணத்தில் நண்பனிடம் பேச அவன் ப்ளாட்டுக்குக்கு போகாமல் ஒரு வீடியோ கான்பரன்சிங் மூலம் சூட்சுமமாக தொடர்பு கொள்ள முடியும். ரியாலிட்டி எப்படி உருவாகிறது? என நன்கு அறிந்தவர் அத்கையை போர்டல்களை உருவாக்கவும் முடியும். புதிய வெளிகளை அதில் புதிய படைப்புகளை விர்சுவலாக உருவாக்க முடியும், அதில் தொடர்பு கொள்ள முடியும். மணல் வெளியில் ஒரு ஹைப்பர் மார்க்கட் உருவாக்குவது போல மன வெளியில் உருவாக்க முடியும், இந்த பத்தி அறிவியலின் விளிம்பில் அது மெட்டா பிசிக்ஸ் பரிமாணத்துக்குள் வருகிறது.எனவே இதை அப்புறம் பார்க்கலாம்.இப்போதைக்கு அறிவியல் சொல்வதை ஆராய்வோம்.
 
முக்கியமான ஒரு கேள்வி,பிரபஞ்ச உணர்வு நம் மூளையில் விர்சுவலாக தோன்றுவது தான் எனில் நாம் இந்த பிரபஞ்சத்தின் மையமாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் இவ்வளவு பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணிய துகளான மில்கி வேயில் அதனில் மிக மிக நுண்ணிய சூரிய மண்டலத்தின் எத்தனையோ கோள்களில் ஒன்றான பூமியில் அற்பமாக நம்மை காண்கிறோம்? 
 
Yes . நம் கான்சியஸ் இப்போது ஹை வேயில் இல்லை, ஏதோ ஒரு தெருவில் ஏதோ ஒரு கட்டிடத்தின் ஏதோ ஒரு ப்ளாட்டில் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் மாயைக்குள் மாயைக்குள் என எண்ணற்ற மாயைக்குள் சிக்கி இருக்கிறோம். நம்மை விட உயர் நிலைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும், நம் ப்ளாட்டை பார்க்க முடிகிற, நம் கட்டிடத்தை பார்க்க முடிகிற, நம் தெருவை பார்க்க முடிகிற பரிமாணங்களில் நம்மை விட உயர் நிலைகளில் நிச்சயம் யார் யாரோ எதுவோ இன்டெலிஜென்ஸ் சிஸ்டம் அல்லது படைப்புகள் இருக்கலாம் , அது நமக்கு தெரியாமல் நம் ப்ளாட்டின் சுவர் தடுத்துக் கொண்டிருக்கிறது, ஜன்னலையாவது திறந்து பாருங்கள் நெடுஞ்சாலை தெரிகிறதா என. இன்னும் இந்த அறைக்குள் நாமாக வந்து சிக்கினோமா? இல்லை யாராவது உள்ளே தள்ளி கதவை சாத்தினார்களா? நாம் மெயின் சாலைக்கு வர எத்தனை வாசல்களை கடக்க வேண்டும்? மரணித்தாலும் ஏதாவது மாயையில் மாட்டிக் கொண்டு தானா இருப்போமா? என்ன தான் இந்த கான்சியஸ்? நம்மை தடுத்துக் கொண்டிருக்கும் இந்த சுவர் எது? கையிலிருக்கும் கார் சாவி தெருவில் விட்ட காரை நினைவு படுத்துகிறதா? வந்த வழி நினைவில் இல்லை எப்படி வெளியேறுவது? காலத்தின் வழியாக நாம் கடந்து வந்த பாதையை இருக்கும் இடத்தை நம் நினைவகம் வெளியே பிரபஞ்சமாக ஒரு மேப் போல புரஜக்ட் பண்ணி வைத்திருக்கிறது.




கருத்துகள்