பிக் ப்ளாங்க் 13

 


ஒவ்வொரு லேயராக உரித்துப் பார்த்தாலும் ஓயாத புதிர்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது பிரபஞ்ச வெங்காயம். அதன் ரகசியம் விளங்க விளங்க நம் பார்வை விரிவடைந்து நாமும் மாறிவிடுகிறோம். பழைய கேள்விகள் இருந்த இடத்தில் புதிய கேள்விகள். தட்டையாக இருந்த பூமி உருண்டு சூரிய மண்டலத்தில் பால்வீதியில் சிக்கி சுழலத் தொடங்கியது , நட்சத்திரங்கள் எங்கிருந்தோ  வெடித்து சிதறி எங்கோ விரைந்தோடியது. காலம் சாட்சியாக நிற்கிறது. சில நிலையில் இடம், காலம் பொருள் எல்லாம்  ஒன்றில் ஒன்று மயங்கி முயங்கி கிடக்கிறது. பொருட்கள், இடங்கள் , காலங்கள்  ஸ்தூலமாய் பிரிந்தும் சூட்சுமமாய் இணைந்தும் இருக்கிறது.  பல பரிமாணங்கள் , பல ரியாலிட்டிகள் , பாரல்லல் யூனிவர்ஸ் , போர்டல்கள், வொர்ம் ஹோல்கள் எனும்  சுருக்குப் பாதைகள், அயலுயிரிகள்  என  எத்தனையோ சாத்தியங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம்  முழுவதும் அறிதலின் ஒரு கட்டத்தில் மூளையில் தோன்றும் விர்ச்சுவல் அனுபவம்  என்ற உண்மை நடு மண்டைக்குள் ஆணியாய் இறங்குகிறது. கூடவே இன்னும் புதிய கேள்விகள்.. 

உடல்  மாயை மூளையும் மாயை என்றால் இந்த பிரபஞ்ச அனுபவம் அனுபவிப்பது எது ? யார் ? யார் இந்த நான்?  என் உலகத்தில் பூனையும் , பூனையின் உலகத்தில் நானும் இருப்பதெப்படி?  நானும் என்னைப்போலிருக்கும் மற்றவர்களும் ஒரே உலக அனுபவத்தை ஷேர் செய்வது எப்படி? நான் யார் ? அவர்கள் யார்?  இப்போது  நாம் அனுபவங்களை விட்டு அனுபவிப்பவனை ஆராயும் போது அங்கே ஒருவர் ஆஜராகிறார். அது தன்னுணர்வு (Consiousness).  பிரபஞ்சம் எவ்வளவு சிக்கலானதோ அது போல இந்த  தன்னுணர்வை ஆராய்வதும். காரணம் தன்னுணர்வு என்பது தன் இருப்பை பற்றிய விழிப்புணர்வு. நாம் தன்னுணர்வே  தன் உணர்வை ஆராய்வதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அதன் நதி மூலத்தை அறிய முடியாது.  இப்போது  நாம்  மனிதனாக உணரும்  தன்னுணர்வு மனித நினைவுப் பதிவுகளில் பிணைக்கப் பட்டிருக்கிறது. நம் ஆதி உணர்வு அனுபவங்களை உருவாக்கி அதை நினைவில் தொகுத்து அதைக் கொண்டு தனக்கொரு ஐடென்டியை உருவாக்கி வளர்கிறது. ஒரு மரம் பலகோடி கிளைகளாய் கிளைத்து வளர்வதைப்போல் ஒரு சூப்பர் கான்சியஸ் தன் நினைவுத் தொடர்புகளுக்கு ஏற்ப  கிளை பரப்பி நிற்கிறது. இதில் மனித கான்சியஸ் ஒரு கிளை நாம் ஒவ்வொருவரும் அதன் இலைகள். அணுவின் கான்சியலிருந்து நான் என்ற என் கான்சியஸ் வரை காலம் என்ற ஏட்டில் நினைவுகளாக என் வரலாறு இருக்கிறது. இந்த நினைவகம்  இன்னொரு பரிமாணமாக இருக்கிறது.  நம் தன்னுணர்வு அதை நினைவை மேயும் ஆடுகள் போல அனுபவித்து தான் எனும் ஈகோவை வளர்க்கிறது.
இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முயல்கிறேன். 

நான்  ஒரு இணைய தளத்தை பார்க்கிறேன் .இந்த அனுபவம் தன் உணர்வு. அந்த பக்கத்தை வாசிக்கும் போது ஒரு ஹைப்பர் லிங் வருகிறது . இப்போது நான் அந்த லிங்கை க்ளிக் செய்யலாம். இல்லாமல் தொடர்ந்து வாசிக்கலாம் . இதில் எனக்கு தேர்வு செய்யும் உரிமை உள்ளது போல் தெரிகிறது .  ஆனால் இந்த இடத்தில் நான் ஷ்ரோடிங்கர் பூனை போல இரண்டாக பிரிந்து விடுகிறேன். ஒரு  நான் க்ளிக் செய்கிறேன் அடுத்த பக்கம்   செல்கிறேன். அந்த கர்மாவிற்கு ஏற்ப அதன் consequence  என் ரியாலிட்டியை மாற்றுகிறது. இன்னொரு நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அல்லது அதில் இன்னொரு லிங்கை க்ளிக் செய்து இன்னும் இரண்டாக பிரிந்து போகிறேன். இதில் ஒவ்வொன்றும் நான் தான் என்றாலும் வித்தியசமான வாசிப்பு அனுபவம் காரணம் நாம் வேறு வேறு ஐடென்டிடி உணர்கிறோம். இதில் எந்த நமது அனுபவத்தை தொடர்கிறோமோ அதுவே நம் பவுதிகமாகவும் அனுபவப்படுகிறது. மற்ற மனிதர்கள் என்பதும் நம் கான்சியஸ் கிளையின் மற்ற நாம் தான். வேறு பக்கம் க்ளிக் செய்த நாம். அவர்கள் அனுபவம் நம் அனுபவம் ஒரு நிலைவரை ஒன்று தான் . அந்த நிலையில் ஒரே மெமரி தான் ஷேர் செய்கிறோம். அதனாலேயை அவர்கள் இருப்பை உணர முடிகிறது. தொடர்பு கொள்ள முடிகிறது.  ஃபேஸ்புக் ப்ரவுஸ் செய்யும் நான்  இன்ஸ்டாகிராமில் மேய்ந்து கொண்டிருக்கும் மற்றொரு நானுக்கு மெசேஜ் அனுப்புகிறேன். அவன் வாசித்து பதில் அனுப்புகிறான். தன்னுணர்வு இப்படி கணந்தோறும் புதிய அனுபவ நினைவுகளால் பிரிந்து கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது. நாம் வாசிக்கும் பக்கங்களில் உள்ள அறிவு நம்மை மாற்றி விடுகிறது. நாம் இப்படி பல காலமாக பல பிரதியாகும் போது பல நாம்கள் நம் மறதிக்குள் காணாமல் போயிருப்பார்கள் .அவர்கள் டார்க் வெப்பில் . ஆபாச தளங்களில் , ஆராய்சி தளங்களில், ஆன்மீக தளங்களில், வியாபார தளங்களில் ஆக்டிவாக நம் அறிவில் படாமல் அயலுயிரியாய் இயங்கிக் கொண்டிருக்கூடும். அவர்கள் மெசஞசரில் அனுப்பும் ஏதோ ஒரு லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நாம் அவர்கள் தளத்திற்கு ஹைஜாக் செய்யப் படலாம். அது நம்மை மாற்றி விடும். இப்போது நம் கான்சியஸ் ஹைஜாக் செய்யப் பட்டுள்ளதா தெரியாது?
நம் நம்பிக்கைகளை கவனமாக யோசித்து தேர்வு செய்தோமா? சரியான கேள்விகளை சரியான சமயத்தில் கேட்டுக் கொண்டோமா? சரியான லிங்குகளைத்தான் ஃபாலோ செய்தோமா?  முந்தய நிலைக்கு திரும்ப back பட்டன் இருக்கிறதா?  வெளியேற × பட்டன் இருக்கிறதா? நாம் சுதந்திரமாக வாசிக்கிறோமா? இல்லை காட்டப்படுவதை வாசிக்கும் நிர்பந்தத்திலிருக்கிறோமா? நாம் வாசிக்கும் பக்கங்களில் உண்மை இருக்கிறதா? யாரோ எழுதிய கட்டுக்கதையை வாசிக்கிறோமா? நம் ரியாலிடி யாரோ உருவாக்கியதோ? இல்லை நாம் எழுதுகிறோமா? பிரபஞ்சமாக நம் கான்சியசில் விரியும்  டேட்டா அதிர்வுகள் எது ? எங்கிருந்து வருகிறது , யார் எழுதியது நம் வாழ்வு எனும் புத்தக பக்கங்களை? நாம் பின்னால் வாசிக்கப் போகும் பக்கத்தை யாரோ முன்னமே வாசித்து கடந்திருக்கார்களா? யாரோ எழுதிச் செல்கிறார்களா? 

கருத்துகள்