நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 7

 


இதயம் நமது ஆதி உறுப்பு. ஆழ்மனதின் அடிப்படை அதிர்விலிருந்து தான் நம் இதயத்துடிப்பின்  எண்ணிக்கையும் இருக்கிறது.  நம் மூளை, உடல் இதயம் மனம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஒன்றின் இயக்கம் மற்றதை சார்ந்து இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள், குணாதிசயங்கள், மன நலக் கோளாறுகள் இதயத்தையும் இரத்த ஓட்ட மண்டலத்தையும் மோசமாக தாக்குகிறது, மாறாக நல்ல அமைதியான மன நிலை இதய நோய்களையும், திடீர் மரணங்களையும் தள்ளிப் போடுகிறது என ஆராய்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உணர்வுகளுக்கும் உடலின் சுரக்கும் ரசயானங்களுக்கும் அதன் வேதி வினை மாற்றங்களுக்கும் தொடர்பு உண்டு. மகிழ்சியான சூழல் , நன்றிஉணர்வு ,முறையான ஆரோக்கியமான தாம்பத்தியம்  என்டார்பின் என்ற ரசாயனத்தை உடலில் சுரக்க செய்து உடலை, இதயத்தை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாறாக எதிர்மறை எண்ணங்கள், மனச்சோர்வு , மன அழுத்தம், எரிச்சல், கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, திருப்தி இன்மை, குற்ற உணர்வு, பொருளாதார நெருக்கடி   உடலில் அட்ரீனலின் ,மற்றும் கார்டிசோல்  போன்ற ரசாயனங்களை சுரந்து  மோசமான விளைவுளை உருவாக்கும். அதனால்  இதயதுடிப்பு சீர் கெடும். ஜீரண கோளாறு, உயர் ரத்த அழுத்தம், உடல் வீக்கம், இதயத்துக்கு போதுமான இரத்தம் செல்லாமை போன்ற விளைவுகள் ஏற்பட்டு இதய பாதிப்பு, ஸ்ட்ரோக் ஏற்படும்.

பொதுவாக ஹார்ட் அட்டாக் ,ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கும் இரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு தான் காரணம், இரத்தக்குழாயில் கெட்ட கொழுப்பு ,கால்சியம்  போன்றவை படிவதால் அடைப்பு ஏற்படுகிறது, கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு சத்து உடலுக்கு மிக தேவையான பொருள் தான்.  நம் மூளையே கொழுப்பினால் தான் ஆனது. செல் சுவர்களை உருவாக்கவும் ரிப்பேர் செய்யவும் கொழுப்பு மிக அவசியம், ஆனால் நாம் உணவில்  தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் கொழுப்பில் கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கிறது, LDL (Low density Lipo protien)என்பது கெட்ட கொலஸ்ட்ரால். HDL (High Density Lipoproien என்பது நல்ல கொலஸ்ட்ரால் .

எப்போதுமே எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் உணவு பழக்கத்தால் தேவைக்கு அதிகமான கலோரிகள் உடலில் ட்ரை கிளிசரைடுகள் எனும் கொழுப்பாக  சேமித்து வைக்கப்படுகிறது,  இந்த ட்ரை கிளிசரைடுகளுடன்  கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும் நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருந்தால் அது இரத்த குழாய் சுவர்களில் படிந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. டிரை கிளிசரைடுகள் குறைவாக இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை விட நல்ல கொலஸ்ட்ட்ரால் விகிதம் அதிகமாக இருந்தால் இந்த நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத குழாயில் படிந்த கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து க்ளீன் செய்து விடும்.

ஆலிவ் எண்ணை, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்னெய், பாதாம் ,முந்திரி, கொக்கோ, வால்நட், அவகடோ, மீன், போன்றவற்றில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது, அதிக வெப்பத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் மார்காரின் சேர்த்த கேக் பிஸ்கட்டுகள், ரெட் மீட் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கிறது. உணவில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பது நலம். சாதாரணமாக இரத்த குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுத்துவதற்கு பல காலம் ஆகும். மன நலம் சீராக இருந்தால்  ஹை வேயில் ஒரே வேகத்தில் செல்லும் வாகனம் அலுங்காமல் செல்லுமோ அது போல எவ்வளவு கொழுப்பும்  இரத்தக்குழாயில் தங்காமல் ஓடிக்கொண்டிருக்கும்,
 
சமீப காலத்தில் நிறைய பேர் இதய நோயால்  தாக்கப்பட்டு  திடீரென இறந்து போய் விடுகிறார்கள். காரணம் நம் விர்சுவல் உலகத்தின் வேகம் அதிகரித்து விட்டது. பரபரப்பான வாழ்க்கை முறையால் வரும் அதீத மன அழுத்தங்களுக்கு  சாதாரண மனிதனின் இதயம் ஈடு கொடுக்க வில்லை. இளம் வயது திடீர் மரணங்களுக்கு காரணம் கெட்ட கொழுப்பு மட்டுமல்ல, இரத்தத்தில் அதிகமான சர்கரை ரத்தக்குழாய் சுவர்களில் ஒட்டி ஒரு வித ரத்த ஓட்ட எதிர்ப்பு கொடுக்கிறது, அதோடு தீடீர்  பதற்றம் மன அழுத்தம் அடிக்கடி ரத்தக் குழாய்களை சுருங்கி விரிய செய்கிறது. இதய துடிப்பை அதிகமாக்கி அதிக இரத்த அழுத்தத்தை இரத்த குழாய் சுவர்களில் செலுத்துகிறது.மோசமான ரோட்டில் பயணிப்பதை போல மாறுபடும் ரத்த ஓட்ட வேகத்தாலும் தமனிகள் சுருங்கி விரிவதாலும் தமனி சுவர்களில் விரிசல் காயங்கள் உண்டாகிறது, பின் அந்த காயங்கள் குணமடையும் போது அதன்  தழும்புகளில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. மிக அதிகமான ஸ்ட்ரெஸ் ,அதிர்ச்சி ரத்த உறைதலையும் உண்டாக்கி அடைப்பு ஏற்படுத்துகிறது.

உடலில் நோய் இருந்தாலும் இதயத்துடிப்பு அதிகமாகி அது மூளையில் மன அழுத்தம் உருவாக்கும். புகை பிடித்தல், உடல் பயிற்சி இன்மை,உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் கூட  மனக்கோளாறால் வருவது. மன அழுத்ததால் தான் ஒருவர் புகை பிடிக்கிறார், மன அழுத்தத்தால் தான் இதய அடைப்பு ஏற்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு மன அழுத்தம் நீங்க உளவியல் சிகிட்சை தருவதற்கு பதில் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார். இதய நோய் சிகிட்சைக்கு செலவிடும்  பணமே கூட மன அழுத்தத்தை அதிகமாகி விடும். அடிக்கடி உணர்ச்சி வசப்படாத சீரான மனநிலையே  இதயமும் இரத்த ஓட்டமும் சீராக இயங்க மிக முக்கியமான காரணம்.

கருத்துகள்