காலச்சுழலும் சோழன் மகளும்

என் மனைவியும் பிள்ளைகளும் அவளது சொந்தத்தில் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்குக் போயிருந்தார்கள். எனக்கு இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் விருப்பமில்லையாதலால் நான் போகவில்லை.
"வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டில் இரு நாளை நான் வந்து கூட்டி வருவேன் "என்று சொல்லியிருந்தேன்.

இரவு தனிமையில் வீட்டில் இருக்க என்னவோ போலத்தான் இருந்தது. பயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக்கொண்டாலு்ம் பிள்ளைகளின் கலகலப்பும் சத்தமும் இல்லாததால் நிசப்தமாக இருந்த வீடு முதன் முதலாக எனக்கு லேசாக கிலி ஏற்படுத்தியது உண்மை தான். சீலிங் ஃபேனிலிருந்து கிடுகிடு சத்தம் இதற்கு முன் கேட்டதில்லை. பேசாமல் படத்துக்கு போகலாம் என்றால் பக்கத்து தியேட்டரில் "யாவரும் நலம் "ஓடிக்கொண்டிருக்கிறது. பதிவெழுதலாம் என்று உட்கார்ந்தால், நிஜமாகவே பேய் இருக்கிறதா? என்ற எனது பதிவுக்கு கோப்பெருஞ்சோழன், கென்னடி, லிங்கன் எல்லாம் பின்னூட்டம் எழுதியிருந்ததால் அப்பீட் ஆகி விட்டேன். டீவியை போட்டால் ஜக்கம்ம்மா..தாயம்மா என்று அருந்ததி விளம்பரம். எல்லாம் சேர்ந்து என் உள்ளுணர்வில் ஏதோ ஒன்று உறுத்தவே டீவியை ஆஃப் செய்து விட்டு மேஜை மேல் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத்தொடங்கினேன்.


வெளியே லேசாக மழைச்சாரல் இட தொடங்கியது. ஆனால் காற்று பலமாக வீசியது. ஜன்னல் திரைச்சிலையும், கதவும் படபட வென அடித்ததால் ஜன்னலை இழுத்து அடைக்கப் போனேன். பளிச்சென ஒரு மின்னல், தொடர்ந்து மின்சாரம் போய்விட்டது. பயங்கர இடியோசையத்தொடர்ந்து சோ...வென பேய் மழை தொடங்கியது. கும்மிருட்டு.

"டார்ச் லைட் எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே,அலமாரியின் மேல் தட்டில் வைத்தேனோ?" என்று இருட்டில் துழாவிய போது ...

"ஹே..இங்கிருந்த அலமாரி எங்கே? "
ஆச்சரியத்தை பயம் முந்திக்கொண்டது. பயத்தில் இரண்டடி எடுத்து வைத்ததும் எதிலோ போய் முட்டிக்கொண்டேன் .அது ஒரு ஸ்டூல் போல இருந்தது.
"என் வீட்டில் ஏது ஸ்டூல்? "
யோசிக்கும் முன் நான் போய் இடித்ததில் ஸ்டூல் தடக்கென சரிந்து விழவும் அதன் மேல் நின்று கொண்டிருந்த யாரோ என் மேல் சாய்ந்தது போல தோன்றியது. பயத்தில் எனக்கு இதயம் வாய்வெளியே வெளியே வந்து விடும் போல் இருந்தது.இதயம் துடிக்கும் ஓசை செல்போன் ஒலிப்பது போல் கேட்டது.

"ஆ.. செல் போன்! "
பாக்கட்டில் இருந்த செல்போன் ஞாபகம் வந்ததும், அதை எடுத்து வெளிச்சம் உண்டாக்கி பார்த்தேன். அதிர்ச்சியின் உச்சகட்டம் என்பார்களே அது இது தான். என் மேல் சரிந்து தொங்கிகொண்டிருந்தது ஒரு பெண். ஆம் "தொங்கிக் கொண்டிருந்தது."

கழுத்தில் முறுக்கப்பட்ட சேலையின் ஒரு நுனி. மறு புறம் உத்தரத்தில்.

"ஐயோ தூக்கு மாட்டிக்கொண்டிருக்கிறாள்! யாரிந்த பெண் ?"

யோசிக்கும் முன் தாங்கிப் பிடித்து விட்டு ஸ்டூலை நிமிர்த்தி மெல்ல கழுத்து சுருக்கை விடுவித்தேன்.நல்ல வேளை உயிர் போகவில்லை. "கக் ,கக் "கென்று இருமிவிட்டு மலங்க மலங்க விழித்தபடி திகிலாய் பார்த்துக்கொண்டிருந்த மிக அழகான அந்த பெண்ணை இதற்கு முன் நான் எந்த விளம்பரப் படத்திலும் பார்த்ததே இல்லை. அதுவும் "எப்படி பூட்டியிருந்த என் வீட்டுக்குள்?"

"என் வீடு.!...." மங்கிய மொபைல் வெளிச்சத்தில் பார்த்த போது என் வீட்டின் தோற்றம் வெகுவாக மாறித்தோன்றியது. கல் சுவரும் மர வேலைப்பாடுகளும் மிகுந்த அரண்மனை மாளிகை போல் இருந்த்தது. ஏதோ புராதன கலைப்பொருள் கண்காட்சி போன்ற அறை. அங்கே இருந்த எந்த பொருளும் எனக்கு பரிச்சயமில்லை. அந்த அழகு மங்கை உட்பட. எதோ சரித்திர நாடக மேடை போல் இருந்தது.அவளும் இளவரசி வேடத்தில்.

எனக்கு தலை சுற்றியது போல் அவளுக்கும் சுற்றியிருக்க வேண்டும்.

"என்ன எழில் நம்பி எப்படி உயிர் பிழைத்தீர்கள்? இது என்ன உடை? உடை வாளுக்குப் பதில் இதென்ன ஒளிப் பேழை?" முதன் முதலாய் பவள வாய் திறந்தாள்.

எவ்வளவு தடவை தான் அதிர்சி அடைவது ஒரு விவஸ்தை இல்லையா? மெல்லமாக அவளிடம் பேச்சுக்கொடுத்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களின் சாராம்சம் இது தான்.

இப்போது நான் இருப்பது பதினொராம் நூற்றாண்டாம். அந்த பெண், நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் மகளாம் பெயர் கலையரசியாம். டான்ஸ் மாஸ்டர் எழில் நம்பியோடு காதல் . விஷயம் நலங்கிள்ளிக்கு தெரிந்தால் தலை கிள்ளி விடுவான். ஒரு நாள் இரவு ஊரை விட்டு ஓடிப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய திட்டம். கலையரசி மேக் அப் போட்டு வருவதற்கு தாமதமாகி விட்டது. அந்தப்புரத்துக்கு அருகே குதிரையுடன் பதுங்கியிருந்த எழில் நம்பியை ராசாவின் போலீஸ் சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்து விசாரித்ததில் குட்டு உடைந்து எழில் நம்பியை, நம்பிக்கை துரோகத்திற்காக அரசர் மேலே டிக்கெட் கொடுத்து அனுப்பி விட்டார். மகளுக்கு வீட்டுச்சிறை. அழுது புலம்பிய அவள் கடைசியில் காதலனைச்சேர சேலையில் கழுத்தை மாட்டிய போது தான் எனது என்ட்ரி. இதில் நான் வேறு அழகாக இருந்ததால் நான் தான் எழில் நம்பி என்றும் அவளை அழைத்துப் போகவே வந்திருப்பதாகவும் நம்பிக் கொண்டு இருக்கிறது இந்த பேதை

சரி நான் எப்படி பத்து நூற்றாண்டுகள் ஸ்லிப் ஆகி பேக் அடித்து இங்கு நிற்கிறேன்? கழிந்த வாரம் யூ ட்யூபில் பார்த்த காலத்தைப் பற்றிய ஒரு டாகுமென்ட்ரியிலிருந்து நான் அனுமானித்தது இது .

காலம் என்பது மூளையால் உணரப்படும் ஒரு தோற்றம் தானாம். ஊட்டி மலையின் வளைந்த ரோடு போல காலம் போய்கிட்டே இருந்தாலும், சில வொர்ம் ஹோல் வழி ஒரு வளைவில் இருந்து சுற்றாமல் சறுக்கி ஷார்ட் கட்டில் முந்திய வளைவுக்கு போவது போல போகக் முடியுமாம். அப்படி ஒரு காலத்துளைக்குள் விழுந்து பத்து நூற்றாண்டுகள் முன்பு அதே இடத்தில் இருந்த ஒரு அரண்மனை அந்த புரத்திற்குள் வந்து விட்டேன் போலிருக்கிறது.

அது சரி! வெளியே காவலாளிகளின் காலடி சத்தம் கேக்குது.
"அரண்மனை அந்த புரத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நீ உன் வூட்டுக்கு எப்படி போவாய்? சங்கு தான் மவனே! "என உள்ளுக்குள் உடுக்கை ஒலி கேட்டது

நினைத்தாலே முதுகுத்தண்டு ஜில்லாகி விட்டது.
"ஃபோன் செய்து போலீஸ் உதவி கேட்டால் ?...வேண்டாம் ரெய்டு செய்து வேறு கேசில் உள்ளே தள்ளி விடுவார்கள்".
"மனைவிக்கு ஃபோன் செய்தால், அதுக்கு ராஜாவே பெட்டர்."
பக்கத்து வீட்டு முருகேசுக்கு போன் செய்து நிலைமையை சொல்லலாம் என்றால் ஃபோனில் டயல் டோனே கேட்க வில்லை.ஆனால் கதவை யாரோ தட்டும் ஓசை தெளிவாக கேட்டது. காவலாளிகள் குரலும் "ஹலோ"என்று அழைப்பது போல் கேட்டது.

என்ன செய்ய? இப்படி வந்து வசமாக மாட்டிக் கொண்டேனே! உயிர் அப்போதே பெட்டி படுக்கை யெல்லாம் தயாராக கையில் எடுத்துக்கொண்டது.
"வேறு வழியில்லை அன்பே அந்த சேலையை மீண்டும் உத்தரத்தில் கட்டுங்கள்.நாம் இருவரும் ஒன்றாக போய் விடலாம்"என்று அவள்.

"ஏய் பைத்தியம் . என் பெண்டாட்டி புள்ளைக்கு என்ன பதில் சொல்வேன். செத்தாலும் அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டேன்"

கதவு இப்போது முன்னை விட பலமாக தட்டப்பட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன? கண்ணை மூடிக்கொண்டு பீதியில் உறைந்து நின்றேன். அதில் அவளும் பயத்தில் என்னை கட்டிக்கொண்டு நின்றதை ரசிக்கும் மனநிலையில்லை.

திடீரென ஒரு மின்னல் .தொடர்ந்து இடிசத்தம். கண் திறந்து பார்த்தால் காலம் நிகழ் காலமாகியிருந்தது .இடம் என் வீடு. அட கலையரசி கூட என்னுடன் இங்கே வந்து விட்டாள். CFL பல்பு ஒளியில் அவள் அழகு ஜொலித்தது. முக்கியமாக அவள் ஒரு நகை கடை போலிருந்தாள். ஒரு பெரிய ஜூவல்லரி திறப்பது பற்றிய யோசனையில் நான் இருந்த போது

கதவு தட்டப் பட்டது. வெளியே எந்த நூற்றாண்டு என்று கன்ஃபுயூசன் தான். எதுவானாலும் மின்னலும் இடியும் உறுதி. எனக்கு மயக்கமே வரும் போலாகி விட்டது.இப்படி நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் கதை மிக சுவாரசியமாக போய்க் கொண்டிருந்த நேரம் காலிங் பெல் அடித்தது. புத்தகத்தை மனமில்லமல் கீழே வைத்து விட்டு கதவைத்திறந்தால் மனைவியும் பிள்ளைகளும்.

"ஏன்! நாளை வந்தால் போதுமென்று தானே சொல்லியிருந்தேன்"

"உங்களை இங்கு தனியே விட்டு விட்டு நான் நிம்மதியாக இருக்க முடியுமா? அதான் வந்துவிட்டேன். இதென்ன கண்றாவி புக் சரித்திர கதையா சயின்ஸ் பிக்ஸனா? இதெல்லாம் படிச்சுட்டு நடு ஜாமத்திலே அலறியடிச்சுகிட்டு எழுந்து உட்காரணும், அந்த குப்பையை தூக்கிப் போட்டுவிட்டு தூங்குங்கள் ".

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
கதை நல்லா இருக்கு
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
இப்போது நான் இருப்பது பதினொராம் நூற்றாண்டாம். அந்த பெண் நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் மகளாம் பெயர் கலையரசியாம். டான்ஸ் மாஸ்டர் எழில் நம்பியோடு காதல் . விஷயம் நலங்கிள்ளிக்கு தெரிந்தால் தலை கிள்ளி விடுவான். ஒரு நாள் இரவு ஊரை விட்டு ஓடிப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய திட்டம். ............ இதில் நான் வேறு அழகாக இருந்ததால் நான் தான் எழில் நம்பி என்றும் அவளை அழைத்துப் போகவே வந்திருப்பதாகவும் நம்பிக் கொண்டு இருக்கிறது இந்த பேதை//

எனக்கு ஒரு சிறு சந்தேகம்...ஒருவேளை இது தங்களுடைய நிறைவேறாத ஆசையோ?...அப்பாடா.. ஏதோ என்னால் முடிந்த அளவு ,உங்க வீட்டு தங்கமணியிடம் உங்களை மாட்டிக்கொடுத்துவிட்டேன்..
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
எவனோ போக்கத்தவன் எழுதின சினிமாக் கதைய படிச்சது குத்தமா? நல்லா இருக்கே மாட்டி விடறது?