கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி3)

நேற்று கடவுளுடன் எனது சாட்டிங் கட் ஆனதிலிருந்து மனசே சரியில்லாமல் இருந்தது. "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்..." ஆடியோ கேசட்டை ஐந்தாவது முறையாக ரிவைன்ட் செய்து போட்டும் எதையோ இழந்ததைப் போல் இருந்தது. ஆறாவது முறையாக போட்ட போது அதில் அதுவரை நல்ல விதமாக ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தவர் கடுப்பாகி உனக்கு இத்தனை முறை சொல்லியும் ஏறவில்லை. இனி நான் வாசிக்கப் போவது உனக்காக அல்ல எனக்காக! என்று கூறிவிட்டு வாசிக்கத் தொடங்கினார். என்ன இது ஏப்ரல் ஒன்று தான் முடிந்து விட்டதே, இந்த மாதம் பூரா இப்படித்தானோ? யாஹூ மெசெஞ்சரில் கடவுள் ஐகான் வழக்கத்திற்கு மாறாக உர்ரென்று சிவப்பாக இருந்தது. என்ன கோபமோ? கடவுள் வரும் வரை ஒரு காயத்ரி ஆன்லைனில் இருந்தாலாவது கடலை போடலாம். எனவே இறைவனைக் காண முடியுமா? , நெருங்கியவர்கள் இழப்பு துன்பம் தருவதேன்? ஆகிய எனது முந்தய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக Rajeswari அக்கா அவரது பெயரை கடவுளுக்கு அறிமுகப்படுத்தியதால் நெகிழ்ந்தோ என்னவோ ஒரு பட்டாம் பூச்சி விருது தந்து கவுரவித்தார். கைநிறைய சாக்கோ பாரும் ஐஸ் கிரீமும் கிடைத்த குழந்தையை போல மனம் புன்னகைத்தது. எனினும் அந்த புகழை கடவுளிடம் ஒப்படைத்ததால் கடவுளின் கோபம் பறந்து. கடவுள் ஐகான் மெள்ள மஞ்சளாகி பின் பச்சையானது. "நீ என்னைய வச்சு காமடி கீமடி ஒண்னும் பண்ணலையே" என்றார் கடவுள் சீரியசாக. "ஒரு போதும் இல்லை கடவுளே. கவர்ச்சியான போட்டோக்கள் எதுவும் உன்னைப்பற்றிய பதிவில் போட முடியாது. அப்படியே போட்டாலும் அதை புனிதப்படுத்தி கொண்டாடிவிடுவார்கள். எனவே படங்கள் போடவில்லை. பதிவில் சின்னதாக நகைச்சுவையும் இல்லாவிட்டால் படிப்பவர்களுக்கு சலூன் சேரில் இருப்பது போல் கண் செருகிக்கொண்டு போகும். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" "சரி சரி எப்படியெல்லாம் பேசக்கூடாது? இந்த பதிவை நீ தானே எழுதினாய்?" "ஆமாம் கடவுளே! எதாவது தப்பாக பேசி விட்டேனா?" "பின் என்ன? நேற்று என்னிடம் நீ கேட்ட குண்டக்க மண்டக்க கேள்விக்கு நான் என்னத்த பதில் சொல்ல? எப்படி பதில் சொன்னாலும் லாஜிகல் எர்ரர் வரும் கேள்வி இனி கேட்காதே? இதனால் தான் எந்த வம்புக்கும் போகாமல் மவுனமாக இருப்பது" எல்லா கேள்விக்கும் என்னிடம் பதில் இருந்தாலும் சில கேள்விக்கு பதிலை நேரடியாக சொல்ல முடியாது? கேட்பவரின் புரிந்து கொள்ளும் திறனைப் பொறுத்தே பதிலின் விளக்கம் இருக்கும். புரிஞ்சுதா?" உண்மை தான் கடவுளே. டிவியில் "புரிஞ்சவன் தான் பிஸ்தா" விளம்பரத்தை என்ன விளம்பரம் என்று என் சின்ன மகன் கேட்ட போது பிஸ்தா விளம்பரம் என சொல்லி தான் சமாளித்தேன். அவன் வளர்ந்தபின் தானாகவே பிஸ்தாவாகட்டும்(அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருந்தா தர்ம சங்கடத்தை தவிர்த்திருக்கலாமே என யாரும் Pin ஊட்ட வேண்டாம்.) "சரி கடவுளே நீ ஒரே கடவுள் தானே பிறகு ஏன் பல கடவுள்களாக அறியப்படுகிறாய்?" "அது ஜனங்களின் அறியாமை. வீடு முழுவதும் ஒரே மின்சாரம் தான் ஓடுகிறது. ஆனால் மின்சாரம் இருப்பதை தொட்டுப்பார்க்கும் தைரியமில்லாதவர்களால் எந்த மின்கருவியும் இன்றி அறிய முடியாது. விளக்கு எரிந்தால், ஃபேன் சுற்றினால் கரண்ட் இருப்பதை உணரலாம். ஆனால் ஒரு விளக்கையும், ஃபேனையும் மின்சாரம் என எண்ணும் பேதைகள் தான் கடவுளை பல வடிவங்களில் பார்ப்பது. கடவுள் ஒன்றே." "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? எங்காவது ஒர் இடத்தில் இருக்கிறாரா?" "இரண்டும் தவறு. இடம் என்பது கடவுளுக்கில்லை. இடமும் எல்லாமுமாக இருப்பது தான் கடவுள்" "கடவுளுக்கு தொடக்கமும் முடிவும் உண்டா?" "இல்லை. உலகில் உள்ள எந்தப் பொருளும் தொடர்ச்சியான மாற்றத்தின் பகுதியே. உதாரணமாக ஒரு பூ அரும்பாக தோன்றுவதும் மலர்வதும் உதிர்வதும் மனதால் உணரப்படும் உணர்வு தான். உண்மையில் தொடர்ச்சியான மாற்றத்தின் கட்டங்கள் தான் இவைகள். பிறப்பதும் வயதாவதும் இறப்பதும் எல்லாம் தொடரும் மாற்றம் தான் அது பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் கூட ஒரே போல் முடிவிலாது தொடர்கிறது. பார்க்கும் நம் அறிவு தான் சூரியன் உதிக்கிறது மறைகிறது என்பது போல் மயங்கி நிற்கிறது. "கடவுளுக்கு பிறப்பு, மூப்பு, இறப்பு, குடும்பம், பெற்றோர்கள், மனைவி, மக்கள், உறவுகள் எதுவும் இருக்க முடியாது. இருந்தால் அது கடவுளல்ல. இவை எல்லாம் மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உரியவை." "கடவுளின் காதல் லீலைகள் என்று எழுதி வைத்திருக்கிறார்களே?" "கடவுளை கேவலப்படுத்தும் குப்பைகள் அவை. மனிதர்கள் தங்கள் லீலைகளுக்கு கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். கடவுளுக்கு ஹார்மோன் சுரப்பதில்லை." "அச்சம், விருப்பு, வெறுப்பு, கோபம், காதல் போன்ற மனித குணங்கள் எதுவும் கடவுளுக்கு இல்லை. "என்ன கடவுளுக்கு கோபம் வராதா? கடவுளுக்கு சினம் தானே பிரசித்தமான குணம்." "கோபம் எதனால் வருகிறது? நம் எதிர்பார்ப்புக்கு மாறாக பிறர் நடக்கும் போது கோபம் வருகிறது. கடவுளுக்கு கோபம் என்றால் கடவுள் சித்தப்படி எதுவோ நடக்கவில்லை என்று தானே பொருள்? எல்லாம் வல்ல கடவுளுக்கு கோபம் வந்தால் அதன் பெயர் இயலாமை அல்லவா?." "அப்போ என்மீது உனக்கு கோபம் இல்லையா?" "இல்லை உன்னை அப்படி கேள்வி கேட்க வைப்பதே நான் தான்." "அப்படியானால் யாராவது அநியாயம் செய்து விட்டு கடவுள் சித்தம் அது என்று கூற மாட்டார்களா?" "அநியாயம் செய்பவர்களை நான் தண்டிக்கத் தேவையில்லை. அவர்கள் செய்த அநியாயமே அவர்களை தண்டிக்கும் படி தான் விதி எழுதி வைத்துள்ளேன்." "அது என்ன விதி" "ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் உண்டு" நான் தான் ஐசக் நியூட்டனிடம் சொல்லி அனுப்பி்யிருந்தேனே சொல்லவில்லயா? "அப்படியானால் நீ ஏன் உலகில் தீமைகளை படைக்க வேண்டும்?" "நன்மையும் தீமையும் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்டது. கெட்டதை உருவாக்கி நல்லதையும், நல்லதிலிருந்து கெட்டதையும் புரிந்து கொள்கிறார்கள். அது ஒரு உணர்வு பொருள் தான். உண்மையில் என்னைப் பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாம் ஒன்று தான்." "இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்ல கடவுளே. உன் கோபத்தையும் தண்டனைப் பற்றிய பயமும் இல்லாவிட்டால் உலகில் குற்றங்கள் பெருகும். தவறு செய்துவிட்டு மற்றவர்கள் கண்ணில் மண்ணைதூவி நல்லவர்களாக நடிப்பவருக்கு யார் தண்டனை தருவது? மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலர்களை கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்தெடுக்க வேண்டாமா?" "எவ்வளவோ செய்தோம் இதை செய்ய மாட்டோமா? அதை பற்றி நாளை பேசலாம் " "சுனாமி ,பூகம்பம் என அனுப்பி ஒரு பாவமும் அறியாதவர்களை அள்ளிகொண்டு போகும் விதியை ஏன் ஏற்படுத்தினாய் கடவுளே? இதில் யாரை தண்டிப்பது?" கடவுள் இப்போது ஆஃப் லைனாகி விட்டார். இந்த கடவுளை விடக்கூடாது கேட்க வேண்டிய கேள்விகளை பின்னூட்டமிடுங்கள்.
 
(தொடரும்) 
 
கடவுளுடன் ஒரு சாட்டிங் : மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
"சுனாமி ,பூகம்பம் என அனுப்பி ஒரு பாவமும் அறியாதவர்களை அள்ளிகொண்டு போகும் விதியை ஏன் ஏற்படுத்தினாய் கடவுளே? இதில் யாரை தண்டிப்பது?"

கடவுள் இப்போது ஆஃப் லைனாகி விட்டார்.//
கடவுள் மாட்டிக்கிட்டாரா??
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
திருவிளையாடல் சிவாஜியும் ,தமிழ்க்குருவியும் பேசிகிராப்புல இருக்கு
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கம்...

எதையோ சொல்லவாறீங்க அதை மறைமுகமா மற்றவர்களுக்கு புரியும்படி விளக்கியுள்ளது அருமை சாதிக்
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//வீடு முழுவதும் ஒரே மின்சாரம் தான் ஓடுகிறது. ஆனால் மின்சாரம் இருப்பதை தொட்டுப்பார்க்கும் தைரியமில்லாதவர்களால் எந்த மின்கருவியும் இன்றி அறிய முடியாது. விளக்கு எரிந்தால், ஃபேன் சுற்றினால் கரண்ட் இருப்பதை உணரலாம். ஆனால் ஒரு விளக்கையும், ஃபேனையும் மின்சாரம் என எண்ணும் பேதைகள் தான் கடவுளை பல வடிவங்களில் பார்ப்பது. கடவுள் ஒன்றே."
///

அருமையான தெளிவான விளக்கம்