மிகவும் நெருங்கியவர்கள் நேசமானவர்களின் இழப்பை ஏன் தாங்கிக் கொள்ள முடியாமல் இதயம் உடைந்து போகிறோம். வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்குட்டி செத்தால் கூட மனம் உடைந்து போவோர் எத்தனை? உண்மையில் நெருங்கியவர்கள் மரணம் நம்மை எப்படி பாதிக்கிறது ? எதை நாம் இழக்கிறோம் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை சுயநல வாதியா நாம்?
எது நம்மை வருந்த செய்கிறது?: ஓர் உயிர் போய் விட்டதே என்ற வருத்தமா? இல்லை. தினமும் எவ்வளோ உயிர்கள் போய்கொண்டும் வந்து கொண்டும் தான் இருக்கிறது. தினம் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மீன், ஆடு, மாடு, கோழி அடித்து சாப்பிடுகிறோம். இயற்கையின் நியதியிலே உயிர்கள் உணவுக்காக மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது குற்றமாக எழுதப்படவில்லை. மனித உயிர் மதிப்பு மிக்கது என்பதால் சோகம் அதிகமாக இருக்கிறதா?
யாருடைய மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது?: இது நாள் வரை வீட்டில் எரிந்து கொண்டிருந்த பல்ப் ப்யூஸ் ஆகி விட்டது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை தூக்கிப் போட்டு விட்டு வேறொன்றை எடுத்து மாட்டிக் கொள்வோம். ஒரு பல்பின் சாவு நம்மை அதிகம் பாதிக்காததற்கு காரணம் 1) பல்பு உயிரற்ற பொருள் 2)அதற்கும் நம் இனத்தோடும் அதிக பந்தமில்லை அதாவது ஒரு பல்போடு நம்மை அதிகம் பிணைத்துக் கொள்வதில்லை.3)மலிவானது4)அதற்கு பதில் இன்னொரு பல்ப் அதே வேலையை செய்யும்.
ஆனால் சில உயிரற்ற சில பொருட்களோடு நாம் அதிகம் உறவாடுகிறோம் . பந்தப்படுத்திக் கொள்கிறோம் அவற்றின் இழப்பு நம்மைப் பாதிக்கும். உதரணமாக நம் பல வருடம் காலில் கிடந்த செருப்பு வார் அறுந்து விட்டது, எனக்கு பிடித்த சட்டை கிழிந்து விட்டது, எனக்கு பழகிய மொபைல் தொலைந்து விட்டது. பல வருடம் உபயோகப்பட்ட வாகனம் தீப்பிடித்து விட்டது. ஆசையாய் கட்டிய வீடு பூகம்பத்தில் இடிந்து விட்டது என்றால் கவலை தானே. தாத்தா காலத்து சேர்,பூர்வீக வீடு என்று ஞாபகங்களை அழியாமல் பாதுகாக்கிறோமில்லையா. இப்படிப் பட்ட பொருட்கள் நமக்கு பயன்பட்டு நம் ஞாபகங்களிலும் நிறைந்திருப்பதால் அதன் முற்றுப் புள்ளியை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகம் வருகிறது. காருக்கும் செருப்பு வாருக்கும் ஒரு உயிர் இருந்ததே அது போய் விட்டதே அது சாகும் போது அதற்க்கு வலித்திருக்குமே என்று கவைப்படுவதில்லை. இவ்வளவு நாள் நமக்கு பழக்கமாக இருந்து பட்ட பயன் முடிந்து விட்டதே என்ற நினைப்பு தான் சோகத்துக்கு காரணம்.
வீட்டில் எப்போதும் நம்மைச்சுற்றி வந்து வாலாட்டிய நாய் குட்டி செத்துப் போனால் அதிக சோகம் இருக்கும் ஆனால் மட்டன் பிரியானி சாப்பிடும் போது பிரியானியான ஆட்டைப் பற்றி சோகம் வருவதில்லை. தூரத்து நாடுகளில் மனித உயிர்கள் கொத்து கொத்தாக செத்தால் அது செய்தி. அதுவே பக்கத்து தெரு பாண்டி செத்தால் இரண்டு நாள். அடுத்த வீட்டில் மண்டயைப் போட்டால் ஒரு வாரம். நண்பன் செத்தால் பெரும் சோகம் எதிரி செத்தால் களிப்பு. இந்திரியதுளியில் எததனையோ உயிர்கள் இருக்கிறது. அது எவ்வளவு வேஸ்ட் ஆனாலும் கவலையில்லை அதுவே கருவாகி கலைந்தால் கொஞ்சம் சோகம் பிள்ளையாக பிறந்து வளர்ந்து உள்ளத்தில் பல நினைவுக்ளை எழுதி விட்டு பிரிந்து போனால், பயங்கர சோகம். மகனை வைத்து எவ்வளவோ கற்பனைகள் வளர்த்து வைத்திருப்பார்க்கள். வயதான பெற்றோர்களை இழப்பதை விட சோகம். ரொம்ப வயதான தாத்தா பாட்டி இறந்தால் சிலர் சந்தோசக் கூத்தாடுவார்கள். ஏனென்றால் அவர்களால் இனி பயன் இல்லை எப்படா கட்டில் ஒழியுமென்று காத்து கிடப்பார்கள். சம்பாதிக்கும் நிலையிலுள்ள மகன், குடும்பத்தை கட்டிக் காக்கும் கணவன், சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொண்ட மனைவி, நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், இறந்தால் கடும் துக்கம் தான்.
தனி உலகங்கள்:
நாம் காணும் இந்த உலகம் ஒரே உலகமல்ல. ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம். உங்கள் உலகம் வேறு என் பார்வையில் உலகம் வேறு.எனக்கு முக்கியமாகப்படுவது உங்கள்ல் உலகத்தில் அற்பமானதாக இருக்கலாம்.என் உலகத்தை உருவாகுவது நான் அதை என்னை சுற்றியுள்ள பொருட்கள் மனிதர்கள், விஷயங்கள், உறவுகள் . அதில் என் தேவைகள் அடங்கியிருக்கின்றன. என் மதம் ,என் மொழி, என் நாடு இவையெல்லாம் சேர்ந்தது தான் நான். இவை என்னை பாதிக்கின்றன, நான் அவற்றைப் பாதிக்கிறேன். எதைக் கொண்டு என் உலகத்தை அமைத்துக்கொண்டேனோ அவற்றில் உண்டாகும் மாற்றங்கள் என் உலகத்தில் மாற்றம் உண்டாகிறது. சாதிக் அலி என்ற என் பெயரை இழந்தால் நான் யாராக அறியப்படுவேன்.எனவே நெருங்கியவர்கள் மரணம் என் உலகில் ஒர் காலி இடத்தை உருவாக்கும். அந்த வெறுமை என்பது யாரை இழந்தேனோ அவரால் அனுபவித்த பயனின் இழப்பு தான். அந்த இடம் சிறியதாக இருந்தாலோ. எளிதில் அந்த இடத்தை நிரப்பும் வேறொன்றுடன் உள்ளம் பந்தம் கொண்டலோ அந்த வெறுமை நீங்கி விடும்.
சிலர் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளாமலேயே பிடிவாதமாக இருப்பதால் தங்கள் உலகத்தில் ஏற்பட்ட வெறுமை நிரப்பப் படாமல் இருக்கும். அவர்கள் அப்படி தங்களையே ஏமாற்றக்காரணம். அவர்களது உலகத்தின் பெரும்பகுதி , இழந்து போன அந்த உறவால் ஏற்பட்ட நினவுகளால் அமைத்தது தான் காரணம். இது தான் டிப்ரெசன் போன்ற நிலமை. அவர்களது மொத்த உலகமும் சிதைந்து தன்னுணர்வே ஆட்டம் கண்டிருக்கும். எவ்வளவு சீக்கிரம் வெறுமைகளை புதிய பந்தங்களால் செப்பனிடுகிறாரோ அவ்வளவு சீக்கிரம் சோகத்திலிருந்து மீண்டு வர முடியும். நெருங்கியவர் மரணம், காதல் தோல்வி, திருமண முறிவு எல்லவற்றுக்கும் இது பொருந்தும். இந்த சோகத்திற்கு காரணம் நிச்சயம் சுயநலம் தான்.
ஒரு நாணயத்தை கண்ணுக்கு மிக அருகே வைத்துப் பார்த்தால் அது உலகத்தை மறைக்கும். தூரவைத்துப் பார்த்தால் நம் அழகிய உலகில் அது ஒரு புள்ளி மட்டுமே சோகங்களும் அப்படித்தான்.
ஞானிகளை பொறுத்தவரை இந்த உலகமும் அதன் பந்தங்களும் மாயை என்று தங்களை அதோடு பிணைத்துக் கொள்ள மாட்டர்கள. இழப்பும் அவர்களுக்கு இல்லை. இயற்கையை பொறுத்தவரை உயிர் அனந்தம். உயிர் அழிவதில்லை, அழிக்கவும் முடியாது என்பார்கள்
இனி மரணத்திற்கான காரணங்கள் தான் சிலருக்கு வலி தருமே ஒழிய மரணம் என்பது உண்மையிலேயே மரணிப்பவருக்கு எந்த வித துன்பமும் தருவதில்லை. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பது என்னொரு பதிவு விஷயம்.
-----------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
\\
எதிர்பார்க்கின்றோம் விரைவில் ...
thing and reply by blogs and send it to me
cdhurai@gmail.com
முகவரி:http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=1224:-09-&catid=9:parvai&Itemid=10