இதயத்திலே ஓர் இசைத்தட்டு சுழலுது

எங்கள் கிராமத்தில் முதன் முதலில் என் அப்பாவிடம் தான் கிராம ஃபோன் பெட்டி இருந்தாம் . கீ கொடுத்தால் ஸ்பிரிங் உதவியுடன் சுழலும் தட்டு அதில் ரிக்கார்ட் பிளேட்டுகளை வைத்து அதன் மேல் குழாய் ஸ்பீக்கருடன் இணைந்த ஊசியை வைக்கும் போது குழாயில் பாட்டு கேட்குமாம். அதில் எம் கே தியாராஜ பாகவதர் பாட்டு மற்றும் இந்திபட பாடல்களை கேட்க ஒரு கூட்டம் கூடி இருக்குமாம். அதன் பெருமைகள் அப்பா சொல்வதை சுவாரசியமாகக் கேட்பேன். ஒவ்வொரு பாட்டுக்கும் கீ கொடுக்க வேண்டும், பாடல் முடியும் போது ஸ்ப்ரிங் டென்ஸன் குறைந்து பாடல் சுருதி குறைந்து விடும். அடிக்கடி ஊசி மாற்ற வேண்டும். இந்த கிராம போனை நான் பார்த்ததில்லை. அதன் ரிக்கார்டுகளை தான் பார்த்திருக்கிறேன் கருப்பாக கனமாக தோசைக் கல் சைசில்.கீழே போட்டால் உடையும் என்றும் ஒருமுறை கற்றுக்கொண்டேன்.

கிராம ஃபோன் பெட்டியின் மின் பதிப்பு தான் ரிகார்ட் பிளேயர். கையால் சுற்றுவதை மோட்டர் சுற்றும். பிளேட்டில் பதிந்துள்ள அதிர்வுகளை மின்சார அலைகளாக மாற்ற ஒரு பிக் அப் காயில் இருக்கும்.

ரிக்கார்ட் பிளேயரை முதலில் பார்த்தது மம்மேலியின் சாயாக்கடையில் தான். தினமும் அதிகாலை என் அப்பா தவறாமல் சாயாக் கடைக்கு அழைத்து சென்று புட்டும் பழமும் வாங்கி விரவி ஊட்டுவார். சிறு பையனான என் கண் முழுதும் எதிரே இருக்கும் ரிக்கார்ட் பிளேயரில். ஒரு நடன மங்கையை போல் சுழலும் இசைத்தட்டிலும் அதன் மேல் நிரடிசெல்லும் ஊசியிலும். ஸ்பீக்கரில் வழியும் பாடலிலும் மனம் லயித்திருக்கும். ஊரில் எங்கு மைக் செட் காரர்கள் கடை விரித்திருந்தாலும் என்னை ரிக்கார்ட் பிளேயருக்கு அருகே காணலாம்.

ஒருநாள் எனக்கும் அது போல் ஒரு பிளேயர் வாங்கிக் கேட்டு உண்ணாவிரதம் இருந்து தூங்கிப் போனேன். மறுநாள் கண்விழித்த போது புத்தம் புதிய பிலிப்ஸ் ப்ளேயர் என் தலை மாட்டில். அன்புள்ள அப்பா. கூடவே கொஞ்சம் எம்ஜியார் பட ரிக்கர்ட் பிளேட்டுகள். ப்ளேயரை வால்வ் ரேடியோவுடன் இணைத்து இசைத்தட்டை இட்டு சுழலச்செய்து ஸ்டைலஸை மெதுவாக தட்டின் விளிம்பில் வைத்ததும் கரகர என்று விட்டு "பாடும்போது நான் தென்றல் காற்று" என்று எஸ் பி பி பாடுவதை கேட்பது அருமை. ரேடியோவில் அப்போதெல்லாம் கேட்கும் கடா முடா இரைச்சல் இன்றி இசைத்தட்டில் தெளிவாக ஒலிப்பது பேரானந்தம். இசைத்தட்டில் ஊசி நெருடும் போது ஸ்பீக்கரின்றி பாடல் சத்தம் கிரு கிரு வென கேட்கும். அதை காதை அருகே வைத்து கேட்பேன்.

அதன் பின் மோனோ ட்ராக் எல்லாம் போய் பாடல்கள் ஸ்டீரியோ வந்தது."ஙோ"என்று ஒலிக்கும் குழாய் ஒலிபெருக்கி போய் "சில்" என்று ஒலிக்கும் பாக்ஸ் ஸ்பீக்கர் வந்தன. அப்புறம் புதிய மாடல் பிளேயர் வந்தது. ஆட்டோ மேட்டிக்காக ஸ்டைலஸ் நகர்ந்து இசைத்தட்டில் உட்காரும் பாடல் முடிந்தது பழைய இடத்துக்கு வந்து விடும்.

நான்கு பாடல் உள்ள சிறிய இசைத்தட்டு முதல் பதினெட்டு பாடல்கள் உள்ள பெரிய இசைத்தட்டு வரை வெளியாயின. கொலம்பஸ், எச் எம் வி இவைதான் இசை தட்டு கம்பனிகள். ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையே கோடுகளால் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு வகைத் தட்டுக்கும் ஒரு வேகம் இருக்கும். அதற்குரிய வேகத்தில் சுழலச் செய்ய குமிழ் இருக்கும். சில வேளை அந்த குமிழைத் திருகி வேகம் கூட்டும் போது எஸ் பி பி மழலையாக மாறி விடுவார். அவசரம் அவசரமாக பாடுவது கேட்க ஜாலியாக இருக்கும். பிறகு நிறைய இசைதட்டுகளை அடுக்கி வைத்து ஒவ்வொன்றாக தானியக்கும் பிளேயர்களும் வந்தன. அப்போதெல்லாம் என்னிடம் ஒரு பெட்டி நிறைய அருமையான பாடல்கள் கொண்ட ரிக்கார்ட்கள் சேர்ந்து விட்டது. ரிக்கார்ட் பிளேட்டுகளில் பிரச்சனை என்பது கீறல் அல்லது கோடுகள் விழுவது தான். இதனால் சில வேளை பாடகர் சொன்னதையே திருப்பி சொல்லி கடுப்பேற்றுவார்.

ஒரு சுப முகூர்த்தத்தில் நேசனல் பானசோனிக்கின் ஒரு அழகிய டேப் ரிக்கார்டர் அப்பா வாங்கித் தந்தார். இதில் புதிய டெக்னாலஜியாக இரும்பு ஆக்ஸைட் பூசப்பட்ட ஃபிலிம் நாடாக்களில் மின் காந்த முறையில் பாடல்கள் பதிவானது. இதற்கான காசட்டுகள் 40 நிமிடம் முதல் ஒரு மணிவரை ஓடக்கூடிய அளவுகளில் கிடைத்தன. இசை நல்ல ஒலித்தரத்துடன் இருந்தது. இதன் விசேசம் நம்மால் ஒலிப்பதிவும் செய்ய முடியும் என்பதே. முதன் முதலில் அதன் மைக்கில் பாடி என் குரலைப் பதிவு செய்து கேட்டபோது வேறு யார் குரல் போலவோ இருந்தது. ஆனால் மற்றவர்கள் குரல் சரியாக கேட்டது. அப்போது தான் உணர்ந்தேன் நான் அதுவரை என் குரல் என்று நினைத்துக் கொண்டிருந்தது எனக்கு மட்டுமே கேட்கும் குரல். பிறர் என் குரலை வேறு மாதிரி தான் கேட்கிறார்கள் என்று.

ஒருமுறை சமையலறைப் பாத்திரங்கள், வாளி, குடம் எல்லாம் வைத்து இசை அமைத்து பாடி பதிவு செய்தேன். அந்த சின்ன வயதுக்கு நன்றாகவே இருந்தது அந்த பதிவு. எங்கு பாட்டுக் கச்சேரி நடந்தாலும் அதை தூக்கிகொண்டு போய் ரெக்கார்ட் பொத்தானை அழுத்துவது வழக்கம். பாட்டியின் கதை, யாசகனின் தாளப் பாட்டு, எம்ஜியார், கலைஞர் மேடைப் பேச்சு, தம்பியின் அழுகை என நிறைய சுவாரசியமான பதிவுகள் செய்திருந்தேன். மறக்காமல் என்னிடம் இருந்த எல்லா ரிக்கர்ட் பிளேட்டுகளையும் காசட்டுகளாக்கி விட்டேன். புதிய மொந்தையில் பழய கள்ளு.

காசட்டுகள் குழந்தைகள் கையில் கிடைத்தால் அத்தனை ஃபிலிமையும் வெளியே இழுத்துப் போட்டு விடுவார்கள். நாடா அறுந்து விடுவது சிக்கிக்கி கொள்வது போன்ற பிரச்சனைகளோடு, காசட்டில் ஒரு பாடலைத் தேடுவது சிரமம் தான். சிறிய வாக்மேன் களை இடுப்பில் கட்டிக் கொண்டு நடக்கும் ஃபேஷனும் வந்தது


சிடி பிளேயர் வந்த போது அதன் ஒலித்தரம் மிக அருமையாக இருந்தது. அதே கிராம்ஃபோன் டெக்னாலஜி என்றாலும் இதில் அனலாக் முறைக்குப் பதில் டிஜிடல் முறையில் பதிவு செய்யப்பட்டது. ஊசிக்கு பதில் லேசர் ஒளி இதனால் உராய்வில்லை. ஆரம்பத்தில் இந்த டெக்னாலஜிக்கு மிக அதிக விலை கொடுக்கப்பட்டது. இன்று காசட்டை விட சிடி மலிவு. சிடி பிளேயரும் மலிந்து விட்டது. MP3 என்ற பாடலைக் குறுக்கும் முறையில் 150 க்கும் மேற்பட்ட பாடல்களை 700Mb CD யில் பதிவு செய்ய முடிந்தது. அப்புறம் 4.7 GB,9 GB கொள்ளளவில் DVD வந்தது.



கிராமஃபோனின் மற்றொரு அவதாரம் ஹார்ட் டிஸ்க். அதே சுழலும் தட்டுகள்.ஆனால் பதிவது டேப்பில் உள்ளது போல் மின் காந்த பதிவு. சிடியில் உள்ளதை போல் டிஜிடல் முறை. உராய்வில்லை.




ஒருவழியாக இந்த தட்டின் சுழற்சியை நிறுத்தியது ப்ளாஷ் மெமரி தான். பென் ட்ரைவ், மெமரி கார்ட், தம்ப் டிரைவ், MP3 Player என்றெல்லாம் அறியப்படும் இதில் எதுவும் சுழல்வதில்லை. முழுவதும் மின்னணு முறையில் பாடல் பதிவு செய்யப்பட்டு மீட்கப்படுகிறது. இன்று பாடல்கள் ஃபைல்களாகி, இணையத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது. இசைப் பதிவை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய முடிகிறது. இசைகருவிகள் வயோதிகர்களாக லொக் லொக் என்று இருமிக் கொண்டிருக்க ம்யூசிக் சிந்தசைசர்களில் ரெடிமேடாக இசை. பழைய இசைக்கருவிகள் கோவில் திருவிழாக்களுக்கு போய்விட்டன. கலைவாணியின் வீணை, பெண்பார்ப்பு நிகழ்சியிலும் பொதிகை டிவியிலும் அவ்வப்போது காணலாம்.

எல்லாம் மாறிப்போய்விட்டன ஆனால் என் ஃபிளாஷ் மெமரியில் ஒரு ஃபோல்டருக்குள் எனது பழைய '70,'80 களின் கலெக்சன் பத்திரமாய் சட்டைப்பைக்குள் இருக்கிறது. டேப், காசட் எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன். இன்று ரீ மிக்ஸ் என்ற பெயரில் பாட்டிக்கு மீண்டும் ஃபிராக் உடுத்தி அழகு பார்க்கிறார்கள். எதுவும் ரசிக்கும் படி இல்லை. பழைய பாடல் அவமதிக்கும் செயலாகவே பார்க்கிறேன்.

சமீபத்தில் வீட்டில் பரணில் கிடந்த ஒரு இசைத்தட்டை என் மகன் எடுத்துவந்து அது என்னது? என்று கேட்டான். இது தான் அந்த கால சிடி என்றேன்.

இதில் என்ன பாட்டு இருக்கிறது என்று கேட்டான். எனக்கும் தான் அந்த கேள்வி. அதன் நடுவில் இருந்த எழுத்துக்கள் ஒன்றும் தெரியும்படி இல்லை. ஒரு பேப்பரை எடுத்து கோன் போல செய்து அதன் முனையிலொரு குண்டூசியை செருகிக்கொண்டேன் பழைய இசை தட்டை கழுவி சுத்தப்படுத்தி ஒரு குச்சியில் மாட்டி சுழலச்செய்து காகித கோனின் குண்டூசி முனையை அதில் வைத்து பிடித்ததும் "தழுவிடும் இனங்களில் மானினம், தமிழும் அவளும் ஓரினம்" என்று எஸ் பி பி கீச்சுக்குரலில் பாடியதை மெய் மறந்து கேட்டேன். என் மகன் என்னைப்பற்றி என்ன நினைத்தானோ I pod ன் ஹெட் ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு காலரை தூக்கி விட்டு  கை கால்களை உதைத்தபடி நடையைக் கட்டினான். அதில் "ஆடுங்கடா என்ன சுத்தி அய்யனாரு வெட்டுகத்தி "என கசிந்து கொண்டிருந்தது.

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
அடடடா

அழகான தலைப்பிட்டு

நல்ல அலசல்

எனக்குள்ளும் ஓர் இசைத்தட்டு சுழலுது
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
//என் அப்பா தவறாமல் சாயாக் கடைக்கு அழைத்து சென்று புட்டும் பழமும் வாங்கி விரவி ஊட்டுவார்.//

விரவி என்றால் என்ன?
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு இசை பிரளயமே கண் முன் வந்து போனது.நன்றாக இருந்தது..எனக்கும் கிராம ஃபோன்இல் இசை கேட்க வேண்டு என்று ஆசை
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி ராஜேஸ்வரி."விரவி" என்றால் பிசைந்து. சரியா?
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
இளமை விகடன் பரிந்துரை பார்த்து நுழைந்தேன். வெகு அருமையாக விவரித்திருக்கிறீர்கள். சின்ன வயதில் எங்கள் வீட்டில் ரெக்கார்ட் ப்ளேயரும் ஏராளமான ரெக்கார்டுகளும் உண்டு. சொன்னதையே சொல்பவர்களை ‘கீறல் விழுந்த ரெகார்டு’ எனத் திட்டுவது சகஜம்:)! அப்புறம் ரெக்கார்ட் சுழற்சியின் ஸ்பீடைக் கூட்டிக் குறைத்து விளையாட்டுப் பண்ணுவதும் வழக்கம்.

ம்ம்ம், அதெல்லாம் ஒரு காலம். அந்தக் கடைசிப் பத்திதான் இன்றைய காலம்:)!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இசைத்தட்டை யூத்ஃபுல் விகடனில் சுழலச்செய்த விகடன் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதற்கு முன் விகடனில் இடம்பெற்ற எனது முந்தைய இரு கட்டுரைகள் "என்ன சாப்பிடலாம்?" மற்றும் "ஆறுதல் சொல்வது எப்படி?". எல்லாவற்றிற்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். கருத்துரைகள் இட்டு ஊக்கம் தரும் எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி..