"இந்த பிரபஞ்சம் எப்படி, எப்போதுதோன்றியது?" என்ற கேள்விக்கு ஆத்திகர்கள் வைத்திருக்கும் ஒரு பதில் இறைவன் ஒரு நாள் இதை படைக்க வேண்டும் என நினைத்தார் . அப்புறம் ஆறு நாளில் ஒவ்வொன்றாக படைத்தார். பிறகு ஓய்வெடுக்கிறார். என்ற ரீதியில் இருக்கும். பல சமய விளக்கங்களில் வித்தியாசம் இருந்தாலும் பொதுவாக கடவுள் என்ற சக்தி வாய்ந்த ஒருவர் அவருக்கு நேரம் போகமால் இருந்த போது சும்மா இந்த பர்ணிச்சர்களை செய்து பார்ப்போமே என்று செய்து விட்டு தூங்கப்போய் விட்டார். என்பது தான் அது .
இதையே நாத்திகர்களிடம் கேட்டால் பல கோடி கோடி வருசங்களுக்கு முன் ஒன்றுமில்லாத நிலையில் ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்து எல்லாம் தானாக உண்டானது என்று சொல்லி கடவுளை கழற்றி விட்டு விடுவார்கள். இந்த இரண்டுக்கும் எனக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.. ரெண்டும் அவரவர் நம்பிக்கை. இருக்கட்டும் ஆனால் இந்த இருவரும் தங்கள் நம்பிக்கைகளை ஏன் கேள்வி கேட்பதில்லை? ஏன் அப்டேட் செய்வதில்லை.
இறைவன் படைத்தான் என்றால் ஏன் அதை காலத்தில் படைத்தான்?
இறைவன் என்றால் என்ன ?
இறைவனுக்கு காலமிருக்கிறதா என்ன? படைக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தான்? படைத்தபின் என்ன செய்கிறான்?
எதிலிருந்து படைத்தான்?
எங்கே இருந்து படைத்தான்?
ஏன் படைத்தான்?
பிரபஞ்சத்தை படைக்க இறைவன் தேவைப்படுமெனில் இறைவனை படைத்தது யார்? எது?
இறைவன் படைத்துக் கொண்டே இருக்கிறானா?
ம்... ஹூம் இந்த மாரி கேள்வியெல்லாம் இறைவன பத்தி கேட்கக்கூடாது தெய்வ குற்றம்.அப்படித்தான் சொல்லியிருக்கு அப்படியே நம்பிக்கொள். சிந்திக்காதே. எனக்கு பள்ளிக்கு அல்லது கோயிலுக்கு நேரமாச்சி அப்புறம் பாக்கலாம் என்று நழுவி விடுவார்கள்,
அறிவியல் கிட்ட கேட்டாலும் இதான் கதை
ஏன் பா பெருவெடிப்பு எங்கே,எப்போது நிகழ்ந்தது?
- இடம் காலம் எல்லாம் அப்போது தான் தோன்றியது.
சரி ஏன் நிகழ்ந்தது? எது அந்நிகழ்வுக்கு காரணமாக இருந்தது?
ஒரு பலூன் வெடிக்கிறதென்றால் யாரோ அதை ஊதுகிறார்கள் என தெரியும் சும்மா ஒரு ப்லூன் தானாக ஊதி வெடித்து செத்துப் போவதில்லை.
-பிரபஞ்சம் வெடித்து விரிந்து கொண்டிருக்கிறது .
சரி எதுவரை அது விரியும்?
அது ஒரு குறிப்பிட்ட காலம் அதன் சக்தி தீரும் வரை விரிந்து அப்புறம் சுருங்கும் அப்புறம் வெடிக்கும்..
சரி இருக்கட்டும் அதெல்லாம் இப்படி வெடிச்சு வெடிச்சு விளையாடுறது நீ பார்கிறதால தானே தெரியுது. நீயும்தானே அது கூட தோன்றி மறைகிறாய்..
நீ பார்க்காவிட்டால் .ஆராயாமல் விட்டால் பிரபஞ்சம் வெடிக்குமா?
இந்த வெடித்தல் உன் அறிவில் நிகழ்ந்ததா? விண்வெளியிலா?
விண்வெளி எங்கே இருக்கிறது?
பெருவெடிப்புக்கு காலம் இடம் இல்லை எனில் நிகழ்வு எப்படி நிகழ்ந்தது?
சிந்தனையில்லாத வெடி பொருளில் இருந்து, உயிரற்ற தனிமங்களிலிருந்து உயிரும் சிந்தனையும் எப்படி தோன்றியது? சிந்தனையை உருவாக்கி இப்படி ஒரு நாள் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்ற நிலைக்கு பரிணாமத்தால் நம்மை செதுக்கும் தன் முனைப்பு எங்கிருந்து எப்போது தோன்றியது?ஏன் தோன்றியது?
நாம் வெறும் ரசாயன கலவை தானே? உயிர்கள் தோற்றம் என்பது தற்செயலாய் ஏற்பட்ட ஆக்சிடென்ட் எனில் ஏன் சாவை கண்டு அஞ்சுகிறோம்? காயம் ஏற்பட்டால் அதை குணப்படுத்த ஏன் உடம்பு முயல்கிறது.
இதெல்லாம் நம்ம சிலபஸ்ல இல்லையே ...சாரி எனக்கு அர்ஜென்டா வேலையிருக்கு... கடவுள மறுப்புக்கு தேவையான அளவுக்குத்தான் அறிவியல் தெரியும்.ஆத்திகர்களை எதிர்க்கிறது தான் நாத்திகம். அறிவியல் கூட நாங்க அதிகம் படிக்கிறதில்லை. என நாத்திகர்களும் நழுவி விடுவார்கள்.
மேற்கண்ட ரென்டு க்ரூப்பும் கண்டுகொள்ளாத ஒரு முக்கியமான விக்டிம் இதை படைப்பை உணர்கிற நாம் தான்.உண்மைகளை நாம் நம்மை விடுத்து வெளியே தேட முயல்வதால் தான் விடை கிடக்காதது. அப்படியானால் இதன் உண்மையை எப்படி தான் விளங்குவது ? உண்மை நம் அறிவுக்கு அப்பால் உள்ளதால் அதை அறிவால் அடையவே முடியாது .ஆனால் சரியான கேள்வி கேட்டு விளங்கி கொண்டால் இன்னும் தெளிவான பதில் கிடைக்கும்.ஆனால் படைப்பின் தோற்றத்தை விளங்க ,விளக்க முயல்வது மிக மிக சிக்கலானது. உங்கள் அனுபவத்தை அறிந்தவற்றை எல்லாம் குப்புற கவிழ்த்து கொட்டி விடும். நீங்கள் தயாரென்றால் இன்னும் ஆழமாக தேடலாம்.விடுபட்ட கேள்விகள் இருந்தால் கமென்றில் ஒரு வரி எழுதிப்போடுங்கள்.
கருத்துகள்