முடிவிலாப் பயணம்

மெல்ல நான் உணர்வு பெற்றதும் எங்கே இருக்கிறேன் என யோசித்தேன்.

விழிகள் பூடடிக்கொண்டதோ  வெளிச்சத்தை அறியவில்லையோ இருப்பது இருள் மட்டும் தான் என்பதையும் இனங்காணவில்லை. மூச்சையும் பழகவில்லை  சூழ்ந்திருந்த தண்ணீரின் ஸ்பரிசம் தொலைவில் கேட்கும்  ஒலிகள் மட்டுமே என் அறிவு.எவ்வளவு காலம் நான் இங்கே இப்படி இருக்கிறேன் என்றும் அறியவில்லை.ஆனால் உணர்வை பெற்றதும் கூடவே காலமும் என்னை துரத்ததுடங்கியது.நான் நகர்ந்தாக வேண்டும்.எதோ ஒன்று என்னை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்கிறது.

என் உலகத்தை விட்டு நழுவி போய் விழுந்தேன் ஒரு புதிய உலகத்தில்.யாரோ என்னை ஏந்திகொண்டார்கள. விழிகளை அறிந்தேன்  அதுவரை என் உலகத்தில் ஒட்டியிருந்த இருந்த இருட்டை விரட்டி விட்டு வெளிச்சமாய் பாய்ந்தது புது உலகம். அதில் என்னைப் பார்க்க முடிந்தது என்னைப்போல் சக மனிதர்களையும் பார்த்தேன்.அவர்கள் மொழியை கற்றுத்தந்தார்கள். மொழி எல்லாம் கற்றுத் தந்தது.

 நாம் யார்?  எங்கே இருக்கிறோம்? ஏன் இருக்கிறோம் ? என்று மட்டும்  அங்கே யாருக்கும்  தெரியவில்லை.அதை அறிய வாழவேண்டும் வாழ்வதற்கு  உணவு  வேண்டும். உணவு தயாரிப்பதில் கேள்விகளை தொலைத்து விட்டார்கள். இங்கே யாருக்கும் கேள்வியில்லை வயிறார உணவு போதும். சிலருக்கு பிரியானி சிலருக்கு நெய்சோறு வேண்டும்.  இட்லிக்கு சட்னியா? சாம்பரா? இது போன்ற விவாதமும் வேன்டும்..பக்கத்து அறையிலோ மதுவும் மாமிசம்  மற்றொரு அறையிலோ  மரக்கறிகள் மட்டுமே . எனக்கு சில பழங்கள் போதும். இந்த மனிதர்கள் ஏன் கூட்டம் கூட்டமாக தனித்தனி அறைகளில் சுயமாகவே சிறை வைத்துகொண்டு கிடக்கிறார்கள்?

நான் மெதுவாக வெளியே வந்தேன்,ஆனாலும் அந்த அறைகளுக்கு வெளியேயும் யாரும் தப்பிச்செல்ல முடியாதபடி ஜெயில் காம்பவுண்ட் போல் எல்லா பக்கமும் அடைபட்டு தான் கிடந்தது . வெளியே வேறு உலகம் இருக்கிறதா? .தேடும் ஆவல் பிறந்தது ,தனியாகத் தேடினேன். எல்லா பக்கமும் இடைவிடாமல் . அதோ அங்கே ஓர்  இடுங்கிய வாசல் தெரிகிறதே. மெல்ல அதன் அருகே சென்று எட்டிப்பார்த்தேன் . வாவ்!

வெளியே இதென்ன அதிசயம் காணும் தொலைவு எங்குமே சுற்றிலும் நீல நிற கடல் மட்டும் தெரிகிறதே அதுவரை நான் இருந்த  உலகம் வெறும் கப்பல் தானா? இதற்கு வெளியே இருப்பது தான் உலகமா? இதை உடனே கப்பலில் மற்றவ்ர்களிடம் சொல்ல வேண்டுமே.திரும்பச் சென்று பார்த்தபோது எல்லாரும் கதவை உட்பக்கமாக் தாளிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிரியானி, நண்பர்கள் சிறைவாசம் வேண்டுமா? விடுதலை வேண்டுமா?விடுதலையை தீர்மானித்து வாசலைக் கடந்தேன்.அங்கே தென்பட்ட படிக்கட்டில் ஏறி கப்பலின் மேல் தளத்தை அடைந்து சுற்றிலும் பார்த்தபோது எல்லையே இல்லாமல் விரிந்திருந்த கடல் மட்டுமே தெரிந்தது.கப்பல் அசைவதால் அது எங்கிருந்தோதோ எங்கோ பயணிக்கிறது என உணர்ந்தேன்.

ஆனாலும் அங்கே காட்சிகள் ஏதும் மாறாது இருந்ததால் மனதில் ஓர் குழப்பம் அங்கே காலம் என்பது இல்லையோ?. கடலுக்கு நான் ஆதாரமா ? எனக்கு கடல் ஆதாரமா? நானே கடலோ ?இல்லை கடலில் நான் ஒரு துளியோ? என்னையும் கடலையும் தவிர ஏதும் தெரியவில்லை?

இங்கே சிறிது பழகியதும் மனிதர்கள் அடைபட்டுக் கிடக்கும் அறைகள்  பிரியானி வாசம் எல்லாம் மறந்து விட்டது பசிக்கவில்லை சுத்தமான காற்று இங்கே இருப்பதால் சுவாசம் மட்டும் போதும். அப்படியானால் எனக்கிங்கே என்ன வேலை ? கடலில் குதித்து கலந்து விடவா? இல்லை இது  போல் இன்னும் போக வேண்டிய பாதை இருக்கும். தேடவேண்டும்.

அதோ கப்பலின் மேல் தளத்தில் ஒரு ராக்கெட் போல்  இருக்கிறதே? அதில் ஏறிப்பார்த்தால் என்ன? ஏறி உட்கார்ந்தேன் இது என்ன விசை?.இழுத்ததும் என்னை ஜிவ்வென்று விண்ணில் கொண்டு செல்கிறதே?.எட்டிப் பார்தேன் வாவ்! எங்கே இருக்கிறேன்? பரந்த கடல் இப்போது சுருண்டு பந்தாகிவிட்டதே .நான் பயணம் செய்த கப்பல் என்னை விட்டு தூரத்தில்  புள்ளியாய் நீங்குகிறது.  என்ன சுற்றி  இப்போது நீலமில்லை . கருப்பு மட்டுமே . தூரத்தில் பல ஒளிச்சுடர்கள். நின்று கொண்டிருந்த பூமி நீலமாய் கடலை போர்த்திக்கொண்டு  சுற்றுகிறதே,. இந்த புது உலகத்தில்   சுற்றிக் கொண்டிருப்பது தான் சுவாசிப்பதாம் . இங்கே எழுதப்பட்ட விதி இது தான். கைகளை கோர்த்துக்கொண்டு ஒரு மாபெரும் ரங்க ராட்டினம். அதன் ஏதோ ஒரு நுனியைப் பற்றிக்கொண்டு நான்.

சட்டென எங்கோ தூக்கி எறியப்பட்து போல் விழுந்தேன்..எஸ்கியூஸ்மி சார்! யாரோ தட்டி உணர்த்தியதில் தூக்கம் கலைந்து எழுந்தேன். கண்டதெல்லாம் கனவா ? எங்கே இருக்கிறேன் மீண்டும் மீண்டும் இதே கேள்வி என்னில் மிச்சமிருக்கிறது .என்னைப்போல் சிலர்  எனக்கு முன்னும் பின்னும் இருக்கிறார்கள் எல்லோரும் இடுப்பில்  கட்டப்பட்டு அவரவர் இருக்கையில் அசைவின்றி இருந்தார்கள் ஏன் இப்படி இருக்கிறோம் ? என்னைப்போல் எல்லோரும் கண்னை மூடிக்கொண்டு இதைதான் கேட்டுக் கொண்டிருக்கிறார்களா?   உணவு  வருகிறது  சாப்பிடுகிறார்கள் ஆனால் உட்கார்ந்தே இருக்கிறார்கள். இது விமானப் பயணமாம். இங்கே இவர்களுக்கு எழுதப்பட்ட விதி இப்படித்தானாம். .இலக்கு வந்தால் இறங்கிக் கொள்ளவேண்டும் அதுவரை இளைப்பாறவேண்டும்.எப்போது அந்த இலக்கு வரும்? இங்கே இடம் பெரிதில்லை .இந்த பிரயாண உலகம் காலத்தால் அமைந்தது.எங்கே போகவேண்டும் என்ன செய்யவேண்டும் என்பது கேள்வியல்ல எவ்வளவு நேரம் இப்படி இருப்பது? இது தான் கேள்வி.அந்த நேரம் முடிந்ததும் இன்னொரு உலகத்தில் இறங்கிக் கொள்ளவேண்டும்.

இடுங்கிய முட்டை ஜன்னலில் பார்த்தால் தான் வெ:ளியே இன்னொரு உலகம் இருப்பது தெரிகிறது.ஆனால் ஜன்னல் சீட் கிடைத்தால் பாக்கியம்..மேகங்ககள் வெளியே எனக்கு கிழே ஓடியது? மீண்டும் கேள்வி. நகர்வது நானா? மேகமா?
எத்தனை விடைகள் கிடைத்தாலும் கேள்விகள் மட்டும் சளைக்காமல் முளைத்துக்கொண்டே இருக்கிறது.எந்த பயணத்திலும் கேள்விகள் மட்டும் கூடவே வருகிறது..ஆனால் நான் கேட்காத கேள்விக்கு  யாரோ ஒலிபெருக்கியில்  பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.நான் பயணிக்கும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாம்  இன்னும் சில வினாடிகளில்
கடலில் மூழ்கப் போகிறதாம்.

சங்கு ஊதப்பட்டது திடுமென ஓர் சப்தம் தடக் முடகென்று குலுக்கல் எல்லோரும் அலறினார்கள் ஒருவர் மீது ஒருவர் உருண்டார்கள் நான் என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்கவும் அவகாசமில்லை என்னை சுற்றி எல்லாம் சுழன்றது..விமானம் சப்தமாய் விழுந்து தண்னீரில் மூழ்கியது. நீச்சல் கற்றுக் கொள்ளாமல் போனாயே என் மனம்  அபத்தமாய புலம்பியது .விமானப்பயணிகள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என யார் சொன்னார்கள்?.இனி என் உலகம் எது? ஐயோ எங்கே செல்கிறேன்  யாராவது வந்து இதை கனவென்றாக்கி என்னை எழுப்ப மாட்டார்களா? விழித்துக்கொள் மனமே இதுவும் ஒரு கெட்ட கனவு தானே....நான்...என் நினைவுகள் மெல்ல ஓய்ந்து போக நான் என்னை இழந்தேன் .

மெல்ல நான் உணர்வு பெற்றதும் எங்கே இருக்கிறேன் என யோசித்தேன். (மீண்டும் இரண்டாவது பாராவிலிருந்து தொடரவும். யாராவது தட்டி எழுப்பும் வரை வாசித்துக்கொண்டிருக்கவும்)    

கருத்துகள்

Rajakamal இவ்வாறு கூறியுள்ளார்…
different thought but true