சக்தியை சேமிப்போம் - தெர்மல் குக்கர்(Thermal cooker)

எரிபொருளை சேமிப்பதால் நம் காசும் சேமிக்கப்படுவதோடு நாம் வாழும் பூமிக்கும் பெரும் சேவை செய்தவர்களாவோம். எரிபொருளை சேமிக்க உதவும் அப்படியொரு பொருள் என் கண்ணில் பட்டதை ,வாங்கி பயன்பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதன் பெயர் தெர்மல் குக்கர்.

சாதாரண பானையிலோ, குக்கரிலோ நாம் சாதம் சமைக்கும் போது பெருமளவு வெப்பம் பாத்திரத்திலிருந்து ரேடியேஷன் ஆகி சுற்றியுள்ள காற்றை சூடுபடுத்தி வீணாகப் போகிறது. இதனால் சமைக்கும் பாத்திரம் சமைத்து முடியும் வரை அதிக நேரம் அடுப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. எரிபொருளும் அதிகம் செலவாகிறது. தெர்மல் குக்கர் இந்த எரிபொருள் விரயத்தை குறைக்கிறது .

இந்த தெர்மல் குக்கர் வேறொன்றுமில்லை உணவுப் பதார்த்தங்களை வெகு நேரம் சூடு ஆறாமல் வைக்கப் பயன் படுத்துவோம ஹாட் பாக்ஸ் (Hot Box) இதே போன்ற சற்று பெரிய பாத்திரம் தான். இதனுள்ளே உணவுப்பொருள் ஒட்டாமலிருக்க டெஃப்லான் (Teflon) பூசிய பாத்திரம் ஒன்று இருக்கும் அதற்கு வெளியே PUF எனப்படும் பாலியூரித்தேன் ஃபோம் இன்ஸுலேட்டர் கவர் ஆகி இருக்கும் இது உள்ளே இருக்கும் பாத்திரத்தின் வெப்பத்தை வெளியேற விடாது. அதற்கும் வெளியே அழகிய இன்னொரு வெளிப் பாத்திரம் இருக்கும். இதற்கான மூடியிலும் இதே போல் இன்சுலேட்டர் இருக்கும். சில குக்கர்களில் PUFக்கு பதில் வெற்றிடத்தை இன்சுலேட்டராக பயன் படுத்திருப்பார்கள்.

சாதம் சமைத்து முடியும் வரை அடுப்பில் வைத்து விட்டு இனி காத்திருக்கத் தேவையில்லை. பானையில் அரிசியை கழுவி தேவையான தண்ணீரும் விட்டு அடுப்பில் வைத்து ஒருமுறை கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, அந்த பானையை அப்படியே எடுத்து இந்த தெர்மல் குக்கர் பாத்திரத்திற்குள்ளே வைத்து மூடி விடவேண்டும். சுமார் முக்கால் மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் அருமையாக வெந்த சாதம் ரெடி. பானையில் ஏற்கனவே உள்ள நீராவியின் வெப்பம் வெளியேறாமல் இன்சுலேட்டருக்குள் சிறைபட அந்த வெப்பத்திலேயே சாதம் வெந்திருக்கும். அதிக வெப்பத்தால் உணவு கருகிப் போவதுமில்லை.

அவசரக்காரர்களுக்கு இது சரிப்படாது ஏனெனில் நேரடியான நெருப்பின்றி உள்ளே உள்ள நீராவியின் வெப்பத்தில் சாதம் வேகவேண்டியிருப்பதால் அதற்குரிய நேரம் நாம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அடுப்பின் உபயோகம் குறைவானாதால் அந்த நேரத்தில் அடுப்பில் மற்ற பொருட்களை சமைக்க முடிவதான் மொத்தத்தில் நேரம் மிச்சம் தான். வறுக்கவும் ,பொரிக்கவும் இது பயன்படாது. வேக வைக்கும் எல்லா வேலைகளையும் இதில் செய்யலாம்.

தெர்மல் குக்கரில் வைக்கப்பட்ட சமைத்த உணவும் அப்படியே 12 மணி நேரம் வரை சூடாக இருக்கும்.

உணவை சூடாக வைத்திருக்கும் பெரிய சைஸ் ஹாட் பாக்ஸ் ஆகவும் பயன் படுத்தலாம். பிக்னிக்குகள் போகும் போது உணவை கொண்டு செல்ல உப்யோகப்படும். ஐஸ் கட்டிகள் போட்டு குளிர் பானங்கள் அப்படியே குளிராக வைத்திருக்கவும் பயன் படும்.

இது சைனா பாட் என்றும் அறியப்படுகிறது. பல பிராண்டுகள் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த தரமான பிராண்ட் பார்த்து வாங்கவும். சில தரமற்ற பாத்திரங்கள் மோசமான இன்சுலேசன் காரணம் வெப்பம் தங்கி நிற்பதில்லை. நான் வாங்கியது ஒரு கிலோ கப்பாசிட்டி குக்கர் உள்ளே டெஃப்லான், லைட் வெயிட் , PUF இன்சுலேசன், மற்றும் மூடியுள்ள ஒரு ஸ்டீல் பானை எல்லாமாக சுமார் ஆயிரம் ரூபாய் ஆனது.

வேறென்ன சொல்ல எரிபொருளையும், பணத்தையும், மிச்சப்படுத்துவதில் உங்களுக்கும் ஆர்வம் தானே.

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்தல் நண்பரே.

---------------------


ரமலான் வாழ்த்துகள்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி. நட்புடன் ஜமால் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு

மின்சாரம் மிச்சபடுத்த முடியாதுலே
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//மின்சாரம் மிச்சபடுத்த முடியாதுலே//

ஏன் முடியாது இதுக்கு தான் மின்சாரம் தேவையில்லையே.அப்புறம் இதாலே துணி இஸ்திரி போட முடியுமா?குளிக்கிறதுக்கு தண்ணி சூடாக்கித் தருமாண்ணு கேட்க கூடாது.ஒன்லி சாப்பாடு மட்டும் தான்.அது தானே நமக்கு முக்கியமானது:-)

மின்சாரத்தை மிச்சப்படுத்த ஒரு எளிய வழி இருக்கு அபூ.யார்கிட்டயும் சொல்லாதீங்க.மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்தே வைத்திருப்பது.