தொலைந்த புத்தகம்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழில் நுட்பப் புரட்சிகளும், சமுதாய கலாச்சார மாற்றங்களும் வேகமாக நம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிக் கொண்டிருக்கிறது. என் வாழ்வில் நான் கண்ட மாற்றங்களை அசை போட்டுப் பார்கிறேன். முதலில் எனக்கு பிடித்த "புத்தகம்" எனும் பொருள் தன் அடையாளம் இழப்பதைக் காண்கிறேன்.

சின்ன வயதில் சுவாரசியமான கதைகள் கேட்பதில் எந்த குழந்தைக்குத்தான் ஆர்வமிருக்காது. உணவு உண்ணும் போது அம்மா சொல்லும் புலி மச்சான் கதையும் காக்கை குருவி கதையும் தூங்கும் போது பாட்டி சொல்லும் பேய் கதைகளும் இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. அப்புறம் முதல் வகுப்பில் பாட்டி வடை சுட்ட படக்கதை. அப்புறம் காமிக்ஸ் புத்தகங்கள். எந்திரக்கை மனிதன் ,வேதாளர்,மந்திர வாதி மாண்ட்ரேக், ஸ்பைடர் மேன் போன்ற படக்கதைகள் பாதாள பைரவி போன்ற சூனியக்கிழவிக் கதைகளில் மூழ்கி இருந்த பையன் பிராயம். இது போன்ற புத்தகங்களை நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஃபைல் ஷேரிங் நெட் வொர்க் அப்போதே உண்டு.

அப்புறம் வளர வளர ஆனந்த விகடன், கல்கி,குமுதம், ராணி போன்ற பத்திரிகைகளின் ஜனரஞ்சகம், ஜெயகாந்தன் ,கல்கி அப்புறம் மர்மமாக எழுதும் தமிழ்வாணன், விஞ்ஞானத்திற்கு சுஜாதா, சஸ்பென்ஸ் த்ரில்லுக்கு ராஜேஸ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார், புஸ்பாதங்கதுரை, பேய்க்கதைக்கு பி டி சாமி, குடும்பக்கதைக்கு லட்சுமி, சிவ சங்கரி , பால குமாரன், வரலாற்றுக்கு சாண்டில்யன் என இன்னும் எத்தனை எழுத்து வடிவங்கள் இருந்தன. இன்றைக்கு எனக்கு எழுத உதவுவது அவர்கள் தான் . அன்றைக்கு எப்படித்தான் சாண்டில்யனின் கடல் புறா பைபிள் சைஸ் புத்தகங்கள் படித்தேனோ. மஞ்சள் அழகி ரொம்ப நாள் கனவில் தொல்லை கொடுத்தாள். இன்று அதெல்லாம் படிக்க (ஹா...வ்) பொறுமை இல்லை . கடிகார வேகம் கூடி விட்டது.

புத்தகக் கடையை கண்டால் கள்ளுக்கடையை கண்ட குடிகாரன் போல் ஆகி விடுவேன் . புத்தகங்களைப் பார்க்கும் போது எனக்கு குழந்தைகளுடன் இருப்பது போல் சிலிர்ப்பாக இருக்கும். விடலைப் பருவத்தில் கூட பெண்பிள்ளைகளை விட புத்தகங்களைத் தான் அதிகம் ஆர்வமாய் பார்ப்பேன். பஸ் யாத்திரைகளில் ஒரு புத்தகத்தை பிரித்தால் அது சுகமான யாத்திரை. என்ன கண்ணுக்கு கொஞ்சம் கேடு

இன்றைய இளைய தலை முறை இதை எல்லாம் இழந்து விட்டது. காசு கொடுத்து யார் புத்தகம் வாங்குகிறார்கள்? யாருக்கு படிக்க நேரம் இருக்கிறது?

இன்று அதன் இடத்தை வீடியோ கேம்கள், டெலிவிஷன் ஆக்கிரமித்து இருக்கிறது. இதனால் இன்றைய குழந்தைகள் வாசிப்புத்திறனை இழந்து விட்டார்கள். காமிக்ஸ் கதைகள் இன்று ஹாலிவுட் க்ராபிக்ஸ் வடிவம் பெற்று ஸ்பைடர் மேன் போன்ற படங்களாக வருகிறது. குழந்தைகள் செய்ய வேண்டிய கற்பனைகளை எல்லாம் கிராபிக்ஸே செய்து விடுவதால் கற்பனை சக்தியும் வளர்வதில்லை. எழுத்து திறமை என்பது போய் விட்டது. பேசுவதை அப்படியே எழுதுவது என்று மாறி விட்டது. பல புதிய வாக்கிய அமைப்புகள் புதிய வார்த்தைகள் தோன்றி விட்டது. தமிழ் இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. ஒரு தமிழன் பேசுவதை மற்றொரு தமிழனால் கூட புரிந்து கொள்ள முடிய வில்லை. மற்றெந்த மொழிக்காரர்களை விடவும் தமிழர்கள் தான் அதிக ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். வரும் சந்ததிகள் இப்படி தமிழில் பேச வெட்கப்படக்கூடிய சூழல் உருவாக முதல் காரணம் ஆங்கில மோகமும் UKG,LKG என பால் பருவத்திலிருந்தே ஆங்கில மீடியம் ஸ்கூல்களில் பிள்ளைகளைத் தள்ளி விடுவது தான்.

தொடர்கதைகள் இன்று டிவி சீரியல்களாகி விட்டது. ஆனால் எல்லா நாவல்களையும் படமாக்க முடியாது . பால குமாரன் போன்றவர்களது எழுத்தில் கதாபாத்திரங்களின் மனசு பேசுவதை கேட்க முடியும் . எண்ண ஓட்டங்களை காட்சிப்படுத்தும் திறமை கதையாரியரின் எழுத்துக்கு இருக்கும். இது காட்சிகளையும் வசனங்களையும் மட்டுமே பதிவு செய்ய முடிகிற காமிராவுக்கு இல்லை. சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள மெல்லிய நகைசுவை கலந்த வர்ணனையை அவரது கதையில் உருவான படங்களில் காண முடியாது. சுஜாதாவின் "ப்ரியா" கதையில் உள்ள விறு விறுப்பு ரஜினியின் ப்ரியா படத்தில் இல்லை. சுஜாவின் கணேஷ் வசந்த் கதாபாத்திரங்களாக ரஜினி, ஒய் ஜி யை பார்த்த போது சப்பென்று இருந்தது.

கவிதைப் புத்தகங்கள் புதுக்கவிதைக்கு மாறி ஹைக்கூவாகி இன்று எது கவிதை என்றே குழப்பமாக இருக்கிறது. சில கவிதைகள் ஜோக்குகள் போல துணுக்குகள் போல பிரித்து பிரித்து போட்ட வாக்கியமாகவும் சில வேளை தெரிகிறது. மளிகைக் கடை பில் கூட சில வேளை கவிதை போல் தெரிகிறது. கவிஞர்கள் பெரும் பாலும் பெண்ணையும், காதலையும், புரட்சியை மட்டும் சிலாகித்து கற்பனை உலகில் திரிவார்கள். கவிதை என்றால் ந்ச் என்று இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த "நச்"கவிதைப் புத்தகம் திருக்குறள்தான். மேற்குடி மக்கள் மட்டும் ரசித்திருந்த கவியை பாமரர்களிடம் கொண்டு சென்ற புண்ணியம் சினிமாவுக்குத்தான். மட்டமான ரசனயுள்ளவர்களுக்கு மட்டமான பாடல்களை தருவதற்கும் சினிமா கவிஞர்கள் தயங்கியதில்லை. கவிஞர்கள் சினிமாப் பாட்டு எழுதப்போனதால் காசு கொடுத்து கவிதை நூல்கள் படிப்பதில்லை

சுய முன்னேற்ற நூல்கள் எல்லாம் படிக்கும் போது காபி குடித்தது போல் தெம்பாக இருக்கும் அப்புறம் பழைய கதை தான்.

டெக்னாலஜி பற்றிய புத்தகங்கள் வந்து சூடு ஆறுவதற்குள் வேறு டெக்னாலஜி வந்து பிரபலமாவதால் அவற்றின் ஆயுள் கம்மி. மீர் பதிப்பகத்தார்கள் பல நல்ல அறிவியல் புத்தகங்கள் (ரஷிய மொழிபெயர்ப்பு) குறைந்த விலையில் இட்டிருந்தார்கள். தமிழில் அறிவியலை சுஜாதா தான் கம்ப்யூட்டர், சிலிகான் என்று சிறிது முயற்சி செய்தார். ஆழ்ந்த அறிவியல் தமிழில் அதிகம் எட்டிப் பார்க்க வில்லை.அறிவியலும் ,எழுத்தும் சேர்ந்து அறிந்தவர்கள் தமிழில் குறைவு. புத்தகங்கள் பொது ஜனத்தை அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்திற்கு உட்பட்டது. அதற்கானவிளம்பரமும் குறைவு, புத்தகக் கண்காட்சி நடத்தி தான் விளம்பரம் செய்ய முடியும்.

இணையமும் கூகிளும் புத்தகங்களின் தேவையை வெகுவாக குறைத்து விட்டது. புத்தகங்கள் இடத்தை அடைத்துக் கொள்வதாலும் பாதுகாப்பதில் பிரச்சனைகளாலும் என்னிடம் இருந்த நல்ல புத்தகங்களையெல்லாம் pdf ஃபைல்களாக்கி CD யில் பதித்து வைத்திருக்கிறேன். நண்பர்கள் நல்ல புத்தகங்களை இரவல் வாங்கி லவட்டி விடுவது மற்றொரு காரணம். புதிதாக புத்தகம் வாங்குவது மிக குறைந்து விட்டது. அனேக புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கிறது. நவீன மொபைல் ஃபோன்களிலும் I pod களிலும் இதனை பதிவிறக்கி வாசிக்கலாம். தகவலை பெறுவது இன்று சுலபமாகி விட்டது. எல்லா தகவலும் விரல் நுனியில் ஒரு "க்ளிக்" தூரத்தில் தான்.

வலைப்பதிவு என்பது எழுதுபவர்களின் இன்றைய அவதாரங்களில் ஒன்று. எழுத்து ஒரு வேலை என்பது போய் உணர்வுகளுக்கு வடிகால் என்ற நிலைக்கு போய் விட்டது. வலைப்பதியும் தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து இருப்பதால் எழுத்துக்களின் தோற்றங்களும் அடையாளங்களும் பன் முகத்தில் இருக்கிறது. சில பதிவுகள் அரட்டையாக இருக்கிறது சில பேனா யுத்தங்கள், தனிமனித தாக்குதல் என இருந்தாலும் அருமையான இலக்கிய பதிவுகளும் பதியத்தான் செய்கிறது.

எத்தனையோ மாற்றங்கள் இன்று வந்தாலும் சில வடிவங்கள் மாறவில்லை. தினசரிகள் வாரப்பத்திரிக்கைகள் அதே வடிவத்தில் மாறாமல் இருக்கின்றன. படங்கள் மட்டும் கலராகி இருக்கிறது. கன்னித்தீவு தொடர்ந்து கொணடுதான் இருக்கிறது. விபச்சார அழகிகள் கைது. போலீஸ் வலை வீசித்தேடுவது, விளம்பரங்கள் எதுவும் மாறவில்லை. ஜோதிடமும் ஆன்மீகமும் அரசியலும், சினிமாவும் தான் அச்சு உலகிலும் சரி தமிழரின் மற்ற மீடியாக்களிலும் நிறைந்து நிற்கிறது. அறிவுலமும் அறிவியலும் துணுக்குச் செய்திகள் தான். இந்நிலை மாறினால் தான் தமிழன் உருப்படுவான்.

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
\\ஆனால் எல்லா நாவல்களையும் படமாக்க முடியாது . பால குமாரன் போன்றவர்களது எழுத்தில் கதாபாத்திரங்களின் மனசு பேசுவதை கேட்க முடியும்\\

மிக(ச்)சரியானதை

சிறப்பா சொல்லியிருக்கீங்க ...
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் பதிவும் அருமை. என் சமகாலத்தவரோ நீங்கள் என நினைக்க வைக்கிறது. எனது ஆரம்ப வாசிப்பும் இப்படியேதான் இந்திரஜால முத்து காமிக்ஸில் ஆரம்பித்துப் பின் பலவிதமாய் பயணித்து இன்று மேகஸின்களை மட்டுமே புரட்டியபடி இருக்கின்றது. தாங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கும் விதம் ரசிக்கத் தக்கதாய் இருக்கின்றது.