09 February 2009

செல் ஃபோன் அதிகமாய் உபயோகிப்பவரா நீங்கள்?

எந்த ஒரு விஞ்ஞானக் கண்டு பிடிப்பிலும் நன்மையும் தீமையும் சரி விகிதம் கலந்தே இருக்கிறது. செல்ஃபோன் கலாச்சாரம் இன்று கொள்ளை நோய் போல எல்லா தரப்பு மக்களிடமும் பரவி இருக்கிறது. நிச்சயமாக இதில் நன்மைகள் நிறைய இருந்தாலும் அதன் தீமைகளையும் உணர்ந்திருப்பது நல்லது.

காற்றிலே கரையும் பணம்: செல்ஃபோன்கள் என்னவோ குறைந்த விலையில் கிடைத்தாலும் அதில் பேசுவதற்காக செலவழிக்கும் பணம் சாப்பிடுவதற்கு செலவழிப்பதை விட அதிகமாயிருக்கிறது. முன்பெல்லாம் தூர இடங்களில் இருப்பவர்களுக்கு தந்தி மூலம் சுருக்கமாகத் தகவல் அனுப்புவார்கள். ஒரு போஸ்ட் கார்டில் சுருக்கமாக எழுதிப் போடுவார்கள். இன்று மொபைல் கால கட்டத்தில் தொலை பேசி ஒரு தகவல் சொல்ல உதவும் கருவி என்பது போய் ஓயாமல் பேச்சை ஒலிபரப்பும் கருவியாகி விட்டது. செல்ஃபோனை சுருக்கமாகத் தகவல் சொல்லப் பயன் படுத்துபவர்கள் எத்தனை பேர்? பலர் இன்று காற்றில் காசு கரைந்து போவது பற்றி கூட கவலைப் படாமல் குப்பைப் பேச்சுகளைத் தான் ஃபோனில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சரியாக உபயோகித்தால் இதைப் போல சக்தி வாய்ந்த பயனுள்ள சாதனமும் இல்லை தான்.

உடலைப் பாதிக்கிறது: செல்ஃபோனில் அதிகம் பேசுவது மூளை புற்றுநோய் ஏற்படுத்தும் என லண்டன் மருத்துவர் வினி குரானா தெரிவித்துள்ளார். ஆனால் செல்ஃபோன் பயன் படுத்துபவர் யாரும் அதன் ஆபத்தை இன்னும் உணரவில்லை. இன்னும் 10ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்பை மக்கள் உணர்வார்கள். செல்ஃபோனில் இருந்து வெளீப்படும் மின் காந்த அலைகளால், பேசுபவர்கள் மூளையில் கட்டிகள் வரும். அது புற்று நோயாக மாறும். இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம். எனவே செல்ஃபோன் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அரசும், செல்ஃபோன் நிறுவனங்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது சற்று பழைய தகவல்தான்.

இது போல நரம்பு தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை, அவை நிரூபிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் மொபைல் ஃபோன்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு தூக்கத்தைப் பாதிக்கும். மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்புடன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பின்லாந்து நாட்டைச் சார்ந்த சேர்ந்த டாரியூஸ் லெஜின்ஸ்கி என்ற அறிஞர் செல்போன் பாதிப்பு பற்றி ஆய்வு முடிவாக அவர் கூறியதாவது:
மொபைல் ஃபோன் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடலில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், அவை நிகழ்கின்றன. இந்த ஆய்வில், 10 பேரை தொடர்ந்து ஒருமணிநேரம் ஜி.எஸ்.எம்., மொபைல்போன் உபயோகிக்கச் செய்தோம். பின்னர் அவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் முழங்கைப்பகுதி தோல்திசுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், உடலின் மற்ற தோல் பகுதிகளோடு ஒப்பிடுகையில் புரோட்டின் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் செல்போன் கதிர்வீச்சால் வேறு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தோல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன,'' என்றார். லண்டனில் வெளியாகும் பி.எம்.சி., என்ற பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேர விரயம்:அனேக இளைஞர்களும் . இளம் பெண்களும் செல்போன்களை நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் செல்ஃபோன்களில் நண்பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதை பார்ப்பதிலும் கூடுதல் நேரத்தை செலவிடு கிறார்கள்.

மனதைப் பாதிக்கிறது: ஸ்பெயின் நாட்டு கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 18 முதல் 25 வயதுக்கு உள்பட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இது பற்றி ஒரு ஆய்வு நடத்தினார்கள் இதன் படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் தினம் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்ஃபோனை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு உடலில் மேலோட்டமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவது அவர்களது மனதைப் பாதிக்கிறது. போதை மருந்து போல் செல்போன்களுக்கு இவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.

மன உளைச்சல், விரக்தி, ஏமாற்றம், கோபம் போன்றவை அதிகரிக்கிறது. எஸ்.எம்.எஸ்., `மிஸ்டு கால்' போன்றவற் றுக்கு பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் பதட்டம் அதிகமாகிறது.

சுவீடன் நாட்டில் 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 21 மாணவர்களிடம் செல் ஃபோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயப்பட்டது இதில் செல் ஃபோன் அதிகம் பயன்படுத்தும் 20 மாணவர்கள் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களால் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியாததுடன் பொறுப்பில்லாமல் செயல்படும் மனபோக்கும் காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்களது உடல் நிலையையும் இது பாதிக்கும் என்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கல்வியில் பாதிப்பு: செல்ஃபோனில் SMS அனுப்புவது பாட்டு சினிமா போன்ற மல்டிமீடியாப் பயன் பாட்டால் மாணவர்களது படிப்பில் கவனம் சிதறுகிறது. இதை உணர்ந்த தமிழக அரசு , பள்ளிக்கூடங்களில் செல் போன் தடை செய்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனாலும் பெற்றோர்களின் நான்கு கண்ணும் பிள்ளைகளிடம் தேவை.

கலாச்சாரப் பாதிப்பு: இன்று செல்ஃபோனுடன் காமிராவும் இணைந்து பல பாதிப்புகள் உண்டாக்குகிறது. பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் அனுமதியின்றி படம் எடுப்பது. அதை பலருக்கு அனுப்புவது , ஆபாசமாகப் படம் எடுப்பது மிரட்டுவது. ஆபாசப் படங்களை பரப்புவது. என பல செல் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது. செல்ஃபோனில் பேசப்படும் எந்த பேச்சும் எதிரில் இருப்பவரால் என்னேரமும் பதிவு செய்யப்படலாம் . சில வேளை நமக்கு எதிராகக் கூடப் பயன் படுத்தப்படலாம். என்வே யோசித்து சுருக்கமாக பேசுவதே எப்போது நல்லது.

விபத்து :செல்ஃபோனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, சாலையை கடப்பது எவ்வளவு ஆபத்தானது என சொல்லத் தேவையில்லை. தினந்தோறும் பெருகிவரும் விபத்துக்களே சாட்சி. ஆய்வுகளும் இதை புள்ளி விபரங்களாகக் காட்டுகிறது. இஸ்திரி செய்து கொண்டிருக்கும் போது சமைத்துக் கொன்டிருக்கும் போது வரும் கால்களில் மூழ்கிப்போவது கருகி நாற்றம் வந்தாலும் தெரியாமல் போய்விடும்.

தகவல் திருட்டு: எல்லா இடங்களிலும் இப்போது செல்ஃபோன் கடைகள் நிறைந்துள்ளன. அங்கே செல் ஃபோனில் வீடியோ மற்றும் ரிங் டோன் ஏற்றுவதற்காக மொபைலை கொண்டு போய் கொடுக்கிறார்கள்.ஆனால் ஒரு கிளிக் செய்தால் உங்கள் ஃபோனில் உள்ள எல்லா தகவல்களும் அவர்கள் கம்ப்யூட்டருக்குப் போய் விடும்.அதில் உங்கள் ஃபோன் மெமரியில் உள்ள எல்லா கான்டாக்ட் நம்பர்கள், உங்கள் பெர்சனல் போட்டோக்கள்.குடும்ப அங்கத்தினர் ஃபோட்டோக்கள்.உங்கள் மெசேஜ் பாக்ஸில் உள்ள முக்கியத் தகவல்கள். வேறு சேமித்து வைக்கப்பட்ட முக்கிய எண்கள் பாஸ்வேர்டுகள் எல்லாம் காப்பி செய்யப்பட்டு விடலாம்.

முக்கியமாக உங்கள் செல் ஃபோனையோ சிம் கார்டையோ பிறர் உபயோகிக்க ஒரு போதும் கொடுக்காதீர்கள். பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் ஒலியின் அளவு அதிகம் உபயோகப் படுத்துபவர்களது காது பாதிப்படையச் செய்கிறது என்றும் காதுக்கு அருகே வைத்துப் பேசும்போது செல்ஃபோனிலிருந்து வெளிப்படும் அலைகள் மூளைக்கு செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களை சேதப்படுத்துகிறது என்றும் ஒரு ஆராய்ச்சித் தகவல் இணையத்தில் வெளியாகியிருந்தது. எப்படியானாலும் இதுபற்றிய முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் தெரிய சிறிது காலம் எடுக்கலாம். அதுவரை செல்ஃபோனை தேவைக்கு மட்டும் பயன் படுத்துவது ஆரோக்கியத்துக்கும் பாக்கெட்டுக்கும் நல்லது.

Download As PDF

5 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே, அலைபேசியினால் ஏற்படும் விளைவுகளை சிறந்த முறையில் விளக்கியுள்ளீர்கள். நன்றி.

என் பதிவில் இட்டது தவறான செய்தி என தகவல் கொடுத்ததற்கு நன்றி.

என் பதிவிலும் இந்த பதிவின் சுட்டியை இணைத்துள்ளேன்.

நன்றி.

Sathik Ali said...

ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து
வருகிறார்.
அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள்,மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey) செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Sathik Ali said...

செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –

1) செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள்
பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக்
கொள்ளுங்கள்.

2) குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.

3) செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

4) மூடிய வாகனங்களுக்கு உள்ளே
இருந்து பேசும் போதும் சிக்னல் குறைவாக இருக்கும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட
வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.

5) நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக்
கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப் படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும்,கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

6) காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

7)மருத்துவமனைகளில் அவசர
சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

8) முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.

Sathik Ali said...

சில சமயத்தில செல்போன் ரிங் ஆகிற மாதிரி அடிக்கடி தோணும். ஆனா எடுத்து பார்த்தா எந்த காலும் வந்திருக்காது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா...? அப்படின்னா உங்களுக்கு ரிங்கிஸ்டி வியாதி வந்திருச்சுன்னு அர்த்தம்.

எப்ப பார்த்தாலும் போனும் கையுமா அலையுறதாலதான் இந்த ரிங்ஸ்கிஸ்டி வியாதி வருதுன்னு மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க. இந்த வியாதியோடதான் உலகத்தில இருக்குற முக்காவாசி பேரே வாழ்றாங்க. இதனால பெரிய பாதிப்பு இல்லைன்னு சொல்றாங்க. ‘ரிங்ஸ்கிஸ்டி என்பது மூளை நமக்கு போடுற ஒரு தவறான உத்தரவு.
சரி... இந்த ரிங்கிஸ்டியில் இருந்து தப்புவது எப்படி...?

* ஒருநாளைக்கு சில மணி நேரங்களிலாவது செல்போன் உபயோகிக்காமல் இருங்கள்.
* படுக்கைக்கு தூங்க சென்ற பிறகு எக்காரணத்தை கொண்டும் செல்போனை உபயோகிக்காதீங்க.
* முடிந்தவரை இரவு நேரத்தில் செல்போனை அணைந்து விடுங்கள்.
* மூளைக்கு ஓய்வு கொடுங்க. அதிகமா யோசிக்காதீங்க. செல்போனை தலையணைக்கு பக்கத்தில வைச்சுக்காதீங்க.
* எப்பவுமே எதையாவது யோசிகிட்டே இருக்காதீங்க. ரிலாக்சா இருங்க.

Sathik Ali said...

This site compare the radiation levels of all phones. Using this, you can now make an informed choice as to the best model that suits your personal needs.

http://sarvalues.com/