22 January 2009

குடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன?
 நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது.   இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள  மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் 

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
  • பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். 
  • புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல்   குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.
  •  சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
  •  கலப்பட உணவு, அசுத்த குடிநீர்,மோசமான சுற்று சூழலாலும்  ஹெலிகோபேக்டர்  பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.
  • அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம்
  • கவலை மன அழுத்தம் காரனமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்
குடல் புண் எத்தனை வகைகள்?
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  1. வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .(Gastric ulcer)
  2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.(Duodenal ulcer)
பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
 வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும்  வலியிருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர்.மாறாக வலி அதிகரித்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர்.
வாந்தி ,குமட்டல் ,வாயுக்கோளாறு,உடல்  எடை குறைதல் சாப்பிடும் விருப்பமின்மை, காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வும்  இருந்தால் குடல் புண்ணுக்கான அறிகுறி.இந்தப்  அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப் படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலி காலை உணவுக்கு  முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக இருக்கும்..சில நேரங்களில் அமில நீர் வாந்தியாவதும் உண்டு.
 குடல் புண் வலியோடு மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் இல்லாவிட்டாலும் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.
ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வு  குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

 தேவைப்படும் டெஸ்ட் என்ன?
குடல் புண் இருப்பதாக தோன்றினால் வாய் வழியாக் குழாய் செலுத்தி செய்யப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் திசு மாதிரி எடுத்து (பயாப்ஸி) சோதனை செய்து அது எந்த மாதியான புண் என உறுதிப் படுத்திக்கொண்டு அதற்கேற்ற சிகிட்சை செய்வது ‘நல்லது.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.   புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப் படிதான் சாப்பிட வேண்டும்.

மருத்துவம் செய்யாவிட்டால்?
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும்  ஏற்படும். இதனால் , கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்,   ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரணி சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து , வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..
நாள் பட்ட அல்சர் புற்று நோயாக மாறுமா?
சாதாரணமாக டியோடினல் அல்சர் அல்லது காஸ்ட்ரிக் அல்சர் புற்று நோயாக மாறுவதில்லை ஆனால் எச் பைலோரி கிருமிகள் நீண்ட நாட்கள் வயிற்றில் தங்கி இருந்து அழற்சி ஏற்பட்டு முற்றிய நிலையில்  (Chronic Gastiritis) 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து புற்று நோயாக மாறுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை

செய்யக்கூடாதவை 
  •  புகைபிடிக்கக் கூடாது.
  • மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
  • அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
  • பட்டினி கிடக்ககூடாது.
  • காரம் ,எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும் 
  • பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
  • சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
  • சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
  • இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
  • மனநிலையை தடுமாற விடக் கூடாது.
  • அவசரப்படக் கூடாது.
  • கவலைப்படக் கூடாது.
  • மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
  • சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள்  படுக்ககூடாது
செய்ய வேண்டியவை
  • குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
  • அதிகம் தண்ணீர்  குடிக்க வேண்டும்.
  • அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
  • தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
  • இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
  • இருக்கமாக உடை அணியக் கூடாது.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
  • யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
  • மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்சியோடு இருக்க வேண்டும்.
  • அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
  • சுகாதாரத்தை பேண வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
பொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
  • சத்தான சரிவிகித உணவு.
  • குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
  • காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
  • வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
  • மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
  • பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
  • பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
  • பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.
தொடர்புடைய பதிவு :
வாய் துர்நாற்றம் (halitosis)

Download As PDF

14 comments:

cute baby said...

மிக அருமையாக நன்கு விளக்கமாகவும் சொன்னீங்க.இப்போது இருக்கும் கால சூல்நிலைக்குள் சுற்றிக் கொண்டு இருக்கும் அவசர உலகத்திற்க்கு தேவையான குறிப்புங்க‌

கலைமகன் said...

ஐயா
நல்ல பயன்மிகு தகவல் இது. நான் அல்சர் எனும் குடற்புண்ணால் அவதிப்படுகின்றேன். அலுவலகத்தில் கட்டாய வேலைப் பழு, மனம் அலைக்கழிகின்றது, இன்று நான் வைத்தியசாலைக்குப் போய்வந்து இணையத்தில் அல்சர் பற்றித் தேடினேன், பயன்மிகு உங்கள் கட்டுரை நன்கு விளக்கம் தந்துதவியது, நன்றி, தொடர்க நும்பணி, வாழ்வாங்கு வாழ்க,
அன்புடன் கலைமகன்

Sathik Ali said...

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம்.

Sathik Ali said...

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

Sathik Ali said...

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
துளசி இலை ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
மஞ்சள் மருந்து அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.
புதினா இலை புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும்.
எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பூ, வாழைப்பழம் துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

Sathik Ali said...

காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

Sathik Ali said...

நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

Sathik Ali said...

அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்

Sathik Ali said...

முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்

Sathik Ali said...

அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்

Sathik Ali said...

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்

Sathik Ali said...

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும்.
வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

Sathik Ali said...

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

Sathik Ali said...

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
http://ayurvedamaruthuvam.blogspot.com/2011/07/blog-post_08.html


அல்சர் -வயிறு வலிக்கு -எளிமையான சிறந்த மருந்து -நாரிகேள லவணம் -Narikela lavanam

http://ayurvedamaruthuvam.blogspot.com/2012/01/narikela-lavanam.html

அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham

http://ayurvedamaruthuvam.blogspot.com/2012/09/dhathree-loham.html