குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி

நடு வீட்டில் ஓர் நச்சு செடி
உங்கள் குழந்தைகள் பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கேட்கிறார்களா? சுண்டுவிரலை உங்கள் நெற்றிப் பொட்டில் வைத்து டிஸ்ஸோ டிஸ்ஸோ என்று சப்தம் கொடுக்கிறார்களா? உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்கிறார்களா? பெரியவர்கள் போல் பேசுகிறார்களா? விட்டத்தில் தொங்கிக் கொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா? பிற குழந்தைகளை கைகளால் தாக்கி விளையாடுகிறார்களா? என்னேரமும் சவுண்ட் எஃபெக்ட் கொடுக்கிறார்களா? கார்ட்டூன் கீச்சு குரலிலும் கனத்த வில்லன் சப்தத்திலும் பேசுகிறார்களா? பாட்டு, குத்தாட்டம் இவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களா? புத்தகம் வாசிப்பது, படிப்பு, விளையாட்டு இவற்றில் ஆர்வம் குறைந்து இருக்கிறார்களா? இத்தனைக்கும் ஒரே காரணம் டி வி தான்.

பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சு உள்ளத்தை பழுக்க வைத்து சாகடித்துக் கொண்டிருக்கிறது இந்தத் தொலைக் காட்சி.

தொலைவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அப்படியே அந்நேரமே வீட்டிலிருந்தபடியே பார்க்க முடிவது மிகச்சிறந்த அறிவியல் அற்புதம் தான். ஆனால் இன்று தொலைக்காட்சிகள் வெறும் விளம்பர நிறுவனமாகவும், சினிமா தியேட்டராகவும் மாறி மக்கள் மதியை கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கின்றன. நம் வீட்டுக்கு நடுவே திறந்து கிடக்கும் இந்த பாதாள சாக்கடைக்கு ஒரு மூடியை போட்டு நம் குழந்தைகளும் பெண்களும் தவறி விழாமல் காப்போம்.பிஞ்சுக்களின் புலன்கள் வழி மூளையை கைப்பற்றி அழிக்கும் இந்த நஞ்சிலிருந்து நம் அன்புச் செல்வங்களை காப்போம்

தொலக்காட்சியில் என்ன காட்டுகிறார்கள்?
முன்பு தெருவில் வித்தை காட்டி பல்பொடி, முதுகுவலி தைலம் விற்றவர்கள், கி்ராமத் திருவிழாக்களில் குழாய் ஒலிபெருக்கியில் விளம்பரம் பேசியவர்கள், ரிக்கார்ட் டான்சர்கள், பொம்மலாட்டக் காரர்கள், ஏல விற்பனைக்காரர்கள், எல்லோரும் இப்போது டிவிக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.

சினிமா என்பது ஒரு பொழுது போக்குக் கலை, தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம்.இரண்டும் வேறு.அனேக தொலைக்கட்சிகள் இதை உணராமல் தங்கள் நிகழ்ச்சிகள் முழுவதையும் சினிமாவை கொண்டே நிரப்பிக் கொள்கிறார்கள். ஒரு சுதந்திர தின நிகழ்ச்சியானாலும் திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகளைத் தான் காட்டுகிறார்கள். (மக்கள் தொலைக்காட்சி விதிவிலக்காக சினிமாவை ஓரங்கட்டுவதை பாராட்டலாம்.)

திரைப்படங்களின் கொள்கையானது பெரும்பாலான ரசிகர்களின் மட்டமான ரசனையை குறிவைத்தும்.மனித மனங்களின் அழுக்குகள்,வக்கிரங்களுக்குத் தீனி போட்டும் இரண்டு மணி நேரம் திரை அரங்கத்துக்குள் ரசிகர்களை முடிந்த அளவு குஷிப் படுத்தி காசு சம்பாதிப்பதிலும் தான் இருக்கிறது.ஆண்கள் எடுக்கும் படங்களில் பெண்ணை இன்றுவரை போகப் பொருளாகத்தான் காட்டுகிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள். கொச்சையான பாடல்கள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய தரத்திலுள்ள சினிமாவை குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் எல்லோரிடத்தும் ஒரே மாதிரியாக திணிப்பது மிகப்பெரிய தீமையான விளைவுகளை உண்டாக்கும். ஆத்தா ஆத்தோரமா வாரியா? என்று அம்மாவை அழைக்கும் ஆபாச வரிகள் எல்லாம் குழந்தைகள் வாயிலே கொண்டு சேர்த்தது யார்?

எந்த சேனலை திருப்பினாலும் டிஸ்ஸூம் டிஸ்யூம் ,பம் ,தடால் முடால் அடி தடி சப்தம், பாம்கள் வெடிக்கிறது, நீண்ட அரிவாள்கள் சகிதம் அலையும் முரடர்கள் தலையை கொய்வது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, பெண்களை மானபங்கப் படுத்துவது, பழி தீர்ப்பது,வெட்டு குத்து,அழுகை,அலறல், காதல், டப்பாங்குத்து ஆட்டம், துரத்தல், பஞ்ச் டயலாக் என சினிமா வெளிப் படுகிறது. பெரியவர்களுக்கு டென்சன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்க இது போதாதா?

எவ்வளவு எளிதில் சினிமாவில் பெண்கள் காதலிக்கிறார்கள். காதலியா ? கிராக்கியா எனுமளவு கதாநாயகிகளைக் காட்டுகிறார்கள்.டி வி சீரியல்களுக்கு ஜவ்வுபோல் இழுக்க முடிகிற, பல்வேறு கிளைகள், விழுதுகள் உள்ள ஆலமரம் போன்ற கதைகள் தான் மூலப்பொருள். அதில் கண்னீர் சிந்தி மூக்கை உறிஞ்சும் பெண்கள், ஆஸ்பத்திரி , கற்பிணி, பிரசவம், சோரம் போதல், பலதாரம், ஒரு தலை மோகம், குடும்பத்துகுள் பழி வாங்குதல், துரோகம், வெட்டி வசனம் பேசுவது, அடுத்தது ஆட்டோவில் போவது ,அங்குமிங்கும் உலாத்துவது, ஆஸ்பத்திரி, கோமா, சதி, வஞ்சனை இதைத் தான் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள்.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப் படுகின்றன என்று கூறுகிறது. ஏன் இவற்றில் எல்லாம் நல்லதை விடக் கெட்டதையே அதிகம் காண்பிக்கிறார்கள் என யோசித்துப்பார்த்தால் மக்கள் கெட்டதைத்தான் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. அதை பார்ப்பதால் கெட்டவர்கள் தங்கள் மனசாட்சியின் உறுத்தலிலிருந்து ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள்.கெட்டதைக் காணும் சுவாரசியம் நல்லவற்றை காணுவதில் இருப்பதில்லை. அமைதியான் வீடு அன்பான் குடும்பம் என ஒரு வாரத்துக்கு மேல் கதையை இழுக்க முடியாது. இதை தெரிந்து கொண்டுதான் கதை எழுதுகிறார்கள்.

அரசியல் வாதிகள், மதவாதிகளி்ன் விளம்பரத்திற்கும் மூட நம்பிக்கையை பரப்பவும் தான் தொலைக்காட்சி பெரிதும் பயன்படுகிறது.

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும்.
( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.
மேலும் வன்முறையும் தொலைக்காட்சியும் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

தொலைக்காட்சி மனதளவில் ஏற்படுத்தும் மாறுதல்களின் மூலம் சிறார்கள் பொறுமையை இழக்கிறார்கள். பலம் கொண்ட எதிரிக்கு அடங்கிப் போகும் மனப்பான்மையும் உத்வேகம், மன எதிர்ப்புச் சக்தி ஆகியவை சிறுகச் சிறுக இழக்கின்றனர் என்றும் தன்னிச்சையாக சிந்திக்கும் மனப்பான்மையை முற்றிலுமாக இழந்து இடர்பாடுகள் ஏதுமில்லாத ஒரு ரெடிமேட் உலகத்திற்காக இவர்கள் தவிக்கின்றனர் என்கிறது இன்னொரு அறிக்கை

சமீபத்தில் Center on Alcohol Marketing and Youth (CAMY) மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்களின்படி 2001 க்கும் 2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் மது அருந்துதலை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் நிறுவனங்கள், "அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தை, மூர்க்கத்தனமாகவும் புதிதாக படைப்புக்களை உருவாக்கும் உற்பத்தித் திறன் குறைவாகவும் பொறுமையற்றதாகவும் கற்பனைத் திறனற்றதாகவும் உடல் மற்றும் உள்ளப்பூர்வமாக மிகவும் பலவீனமாகவும் உருவாகிறது" என்பதைத் தமது ஆய்வறிக்கையின் முடிவுகளாக சமர்ப்பித்துள்ளன.

சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள். ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு முரட்டுக் குழந்தைகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.(ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பாதிக்கப்படும் பசுந்தளிர்கள்
இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா? சதாவும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந்திருக்கிறார்கள். விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. சிலைகளாக பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக் காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

1. இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
2. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை கெடுக்கிறது.
3.எப்போதும் டிவி முன் இருக்கும் குழந்தைகள் டி விப் பெட்டியிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர் தாக்குதலுக்கு தொடர்ந்து உட்பட்டு புற்று நோய் அபாயத்துக்குள்ளாகிறார்கள்
4.அதிரடி சப்தங்களால் காது கேட்கும் திறனை விரைவில் இழக்கிறார்கள்.
5.எதையும் பார்ததே அறியும் குழந்தை புத்தகம் படிக்க பழகுவதில்லை.கிராபிக்ஸ் ஜாலங்கள் கண்டு பழகிய கண்களுக்கு வகுப்பறையில் டீச்சர் பாடம் நடத்துவது போராடிக்கும்.டிவி யின் காட்சிகளின் தாக்கம் உள்ளத்தில் ஆக்கிரமித்திருப்பதால் பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை.
6. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.
7. திடீர் திடீரென மாறும் காட்சிகளால் எற்படும் ஒளி தாக்குதல்களால் விரைவில் கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.தூரக் கிட்டக் காட்சிக்கேற்ப்ப பார்வையை நிலை நிலை நிறுத்தும் தசைகள் செயல் திறன் குறைந்து விடும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
4.பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கணையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மை விரைவில் மறைந்தே போய்விடுகிறது.
5. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
6.தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.
7.மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். அதன் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். தன் முன் நிஜமாக இருக்கும் உலகத்தை புரிந்து கொள்ளாமல், டிவியில் கற்பனையாக காட்டப்படும் உலகையே புரிந்து கொள்கிறான்.நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ள தயாராகாமல் வளர்கிறான்
8.சுய சிந்தனை, கற்பனைத்திறன் என்பது குறைந்து, தொலைக்காட்சிகளில் போதிக்கப்பட்டதைப் பற்றி சிந்தனைகள் சுழல வைக்கப்படுகின்றன. குழந்தைகளின் நடை, உடை, முக பாவனைகள், பேச்சுத்திறன் என ஒவ்வொரு மனோபாவமும் மாற்றியமைக்கப்படுகிறது.
9. மாயாஜால கிராபிக்ஸ் படங்கள் அறிவியலை தொழில் நுட்பங்களை பற்றிய அறிவை வளர்க்காமல் மதங்களையும்,மூட நம்பிக்கையை வளர்ப்பதற்க்குத்தான் அதிகம் பயன் படுகிறது. சினிமா மற்றும் சீரியல்களில் காண்பிக்கப்படும் ஹீரோக்களின் துணிச்சல்(?) மிகு சாகசங்களின் பின்னணியில், பச்சைப் பொய்யை உண்மை போலாக்க ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது என்ற உண்மை குழந்தைக்குப் புலப்படுவதில்லை.ஸ்பைடர்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் மனதளவில் வாழ்ந்து வரும் குழந்தைகள், அது போன்ற செயற்கை உருவாக்கத்திற்குப் பின்னால் நடக்கும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கிராஃபிக்ஸ் போன்றவற்றினை அறிந்து கொள்வதில்லை.சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.
பவர் ரேஞ்சர் போன்ற கார்டூன்கள் பிஞ்சு குழந்தகளை மனநோயாளிகள் போல் மாற்றி விடுகிறது.
வழிகேட்டின் வாசல்
ஆடல்,பாடல் எல்லாம் மேல் தட்டு கனவான்களை வயிற்றுப்பாட்டிற்காக குஷிப்படுத்த அடிமைகள் உருவாக்கிகொண்டது.அதை ஒரு கலையாக உங்கள் குழந்தைகள் கற்றுக்கொண்டு என்ன மனித குல சேவை செய்யப்போகிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கல்லாமல் எதற்கும் உதவாத இதனை எல்லா பிஞ்சு உள்ளங்களிலும்,டீன் ஏஜ் பிள்ளைகள் உள்ளத்திலும் திணிப்பது ஏன். அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.பள்ளிக்கு சென்று இயற்பியலும் வேதியலும் கற்பதை விட டிவியில் எளிதாக குழந்தைகள் ரிக்கார்ட் டான்ஸ் கற்றுக்கொள்கிறது.

கதா நாயகர்கள் மதுவருந்துவது, சிகரெட் குடிப்பது,பெண்களோடு கூத்தடிப்பது, சட்டத்தை கையிலெடுத்து சட்டாம்பியாவது,துப்பாக்கிகளை தூக்கிகொண்டு அலைவது , வேண்டாதவர்களை பட் பட்டென போட்டுத் தள்ளுவது, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பலமாடி கட்டடத்திலிருந்து குதிப்பது. இதையெல்லாமா நம் குழந்தைகளுக்கு இரவு பகலாக கற்றுத்தர வேண்டும்? சினிமாவில் காணும் வன்முறைகள் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.

அடி தடிகள் செய்யும் ரவுடிகளைத் தான் பெண்கள் விரும்புவதாக காட்டுகிறார்கள். என்ஜினியர், டாக்டர் என்று நீங்கள் உங்கள் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கையில் வீட்டில் டிவி முன் என்னேரமும் இருக்கும் அவர்கள் உள்ளத்தில் எப்படி இந்த சினிமா விஷத்தை விதைக்கிறது தெரியவில்லையா?

சினிமாவில் கலப்புத்திருமணம் செய்து வைத்தால் ஜாதி ஒழிந்துவிடுமா? ஜாதியை பேசுபவர்களை ஜாதியை உருவாக்குபவர்களை ஒழிக்க வேண்டும். ஏழை பணக்காரன் ஒழிந்து பணவீக்கம் குறைந்து விடுமா?

விளம்பரங்களை திரும்பத் திரும்பக் காட்டி மக்கள் மூளையில் ஆணியடித்துக் கொண்டு போகிறார்கள்.விளைவு தேவையற்ற பொருட்கள் விரைவில் வீட்டில் குவியும். உங்கள் செல்வம் வேறு எங்கோ குவியும்.பணத்தை வாங்கிகொண்டு நடிகர்கள் சொல்லுவதை நாம் நம்பி விடுவதா?.ஒரு பொருளின் அடக்க விலையில் பெரும்பகுதி அதன் விளம்பரத்திற்குத்தான் செலவிடப்படுகிறது. அப்படியிருக்க விளம்பரம் பார்த்து வாங்கும் பொருளில் நீங்கள் செலவளித்த பணத்தின் மதிப்பு இருக்குமா?

குடும்பத் தலைவிகள் எவ்வளவு முக்கியமான வேலையிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு சீரியல்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள்,இளம் பெண்கள் நடன மங்கையாக விரு்ம்புகிறார்கள். மாமியார் மருமகள் உறவுகளில் விரிசல் ஏற்படுத்தி குடும்பத்தை சீர்குலைக்க எத்தனை சீரியல்கள் சொல்லித்தருகின்றன? முன்வாசல் வழி திருடன் வந்தாலும் கூடத் தெரியாத அளவு மயங்கிக் கிடக்கிறார்கள்.சாயங்காலத்திற்கு பின் எத்தனை வீட்டில் விருந்தினர்களுக்கு உபசாரம் கிடைக்கிறது? வேலை முடித்து களைப்பாக வீட்டிற்கு வரும் கணவனுக்கு ஒரு டீ தர நேரம் தருகிறதா?பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லித்தர, அவர்களோடு கொஞ்ச நேரம் தருகிறதா? ருசியான இரவு உணவு தயாரிக்க நேரம் தருகிறதா? இந்த பாழாய்ப் போன டிவி. அதிக உடல் பருமன் , கண் கெடுதல், இரண்டும் டிவி யால் நேரடியாகக் கிடைக்கும் பரிசு

வீடியோ கேம் போன்ற விளையாட்டுக்கள், டி.வி.டி ப்ளேயர்கள், குழந்தைகளுக்கு இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை என்றாலும் தொலைக்காட்சிகளில் வீணடிக்கப் படும் நேரங்கள் தான் அதிகம்.
திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்ற தாயே.கல்வி விழிப்புணர்வு பொது அறிவு,சமூக முன்னேற்ற நிகழ்சிகளுக்கு எத்தனை டிவி க்கள் முக்கியத்துவம் தருகின்றன?

தொலைக் காட்சிகள் குழந்தைகளுக்கு கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் இருக்கின்றன . இத்தகைய கேட்டிலிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன.

குழந்தகளை எப்படி வளர்க்க வேண்டும்?
இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா? உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.
எனவே! பெற்றோர்களே! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும். இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமை. குழந்தைகளை தூங்க வைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல்.
அப்படியும் டிவி யை தவிர்க்க முடியாவிட்டால், குறைந்த சானல்களை கொண்ட (இலவச சானல் மட்டும்) டிஸ் ரிசீவர் ஒன்றை வாங்கி உப்யோகிக்கவும், அல்லது ரிசீவரிலோ டிவியிலோ சைல்ட் லாக் வசதியிருந்தால் குழந்தைகளை தாக்கும் சானல்களை லாக் செய்து விடுங்கள்.அதையும் நேரக்கட்டுப்பட்டுடன் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுடன் உபயோகிக்கவும்.

நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும். அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.
இரண்டு நிலையும் தவறு.

குழந்தைகளுடன் அன்னியோன்யமாக மனம் விட்டுப் பேசுங்கள். அதாவது, அவர்களது முகம் பார்த்து - முக்கியத்துவம் தந்து உரையாடும் பேச்சுக்களினால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகின்றன. குழந்தைகளை அடிக்கடி ஆர்வமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துதல் நலன் சேர்க்கும். குறிப்பாக அவர்களின் எண்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், அவை பயனற்றதாக இருந்தாலும் கூட. இத்தகைய செயல்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கும்.

உலகில் அவர்களுக்கு முன் நடக்கும் எந்த ஒரு செய்கைகளாக இருந்தாலும் அதன் தர்க்க முறையிலான விளக்கத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதாக அமையும் சிறந்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பதை ஒரு வாடிக்கையாக ஆக்குதல் மிகுந்த பலன் விளைவிக்கும். நூல்களின் முக்கியத்துவத்தினை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறுதல் சிறந்தது.

பெரியவர்கள் சொல்வதை குழந்தைகள் கவனிக்க வேண்டும் என்று முரட்டுத்தனமான அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்காமல், அவர்கள் சொல்லுபவற்றை பெரியவர்கள்/ பெற்றோர்கள் கேட்கப் பழகுங்கள். அன்போடு மென்மையான முறையில் அணுகினால் எதையும் சாதிக்கலாம். தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள். தொலக்காட்சி நேரத்தை மிச்சப்படுத்தி வீட்டின் மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்கினால் எவ்வளவு டென்சன் குறையும்.சமைத்தல் வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளில் குழந்தைகளையும் உதவச்சொல்லி அவர்களையும் அதற்குத் தயார் படுத்தலாம்.அவர்களுக்கு படிப்பு சொல்லித்தரலாம்.

குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும்;.குழலை விட யாழை விட இனிதான மழலை சொல்லில் மனம் மயங்குங்கள்.அவர்கள் சொல்வதை காதில் வாங்கி அவர்கள் குறை தீருங்கள்.உச்சி முகர்ந்து முத்தம் கொடுங்கள். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெருங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.
உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.
பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.ஒரு வசனம் ஒரு தீய காட்சி ஆழமாக மனதில் பதிவது குழந்தைகளை வழி தவறச் செய்யப் போதுமானது. குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே பொறுப்பேற்க வேண்டும்.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம். மருத்துவம் , உடல் ஆரோக்கியம்,கல்வி,விஞ்ஞானம், செய்திகள்ஆகிய நிகழ்ச்சிகள் பயனுள்ளவை.
படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
அதுவும் ஒரேயடியாக பார்க்க்காமல் விளம்பர நேரங்களில் எழுந்து சற்று நடந்து உடலுக்கு வேலையும் கண்ணுக்கு ரிலாக்ஸும் கொடுக்க வேண்டும்.
விளக்கை அணைத்து விட்டு டீவி பார்க்ககூடாது.டிவிக்கு பின்புறம் மங்கலான வெளிச்சம் தரும் விளக்கு இருப்பது நல்லது.
வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாடஉதவும். குழந்தையை டிவி முன் நிறுத்தி விட்டு சமையல் செய்வதைக் காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.

நல்ல நிகழ்சிகளைப் பார்க்கும்போது உள்ளத்தில் அதுவரை நாம் திறக்காது வைத்திருந்த ஒரு ஜன்னல் திறக்கும். அதன் வழியே பார்த்தால் தெரியும் அற்புத சோலைகளும் அதிலிருந்து வீசும் காற்றில் கலந்து வரும் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிக்கச்செய்யும். மாறாக தரம் குறைந்த நிகழ்ச்சிகளும் சில ஜன்னல்களை திறக்கும் அங்கே சாக்கடை தெரியும்,குப்பை மேடு தெரியும் , மெல்ல சுவாசத்தை இழுத்தால் துர்நாற்றம் தான் வரும். நமக்கு எது தேவை?

தரமான நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அதே வேளையில் தீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்டு நேர்வழிப்படுத்த வேண்டியது நம் கடமை ஆகும்.

கருத்துகள்

கார்த்திகைப் பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு.. குழந்தைகள் இருக்கும் அனைவரும் படிக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்..
Several tips இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் நன்று
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
**TV can cause the developing mind to experience unnatural levels of stimulation ————> Dr Dimitri Christakis

Experts say Children under two should not be allowed to watch any TV, experts say after study over 1,345 children in Children’s Hospital.

Older children should watch no more than 2 hours a day, the researchers at the Children’s Hospital and Regional Medical Centre in Seattle said.

Each hour in front of the TV increased a child’s chances of attention deficit disorder by 10%, their research in the Pediatrics journal showed.

The study of 1,345 children showed three hours TV a day made children 30% more likely to have the disorder.
“The newborn brain develops very rapidly during the first two to three years of life. It’s really being wired.” —–

Children who were exposed to the unrealistic levels of stimulation at a young age continued to expect this in later life, leading to difficulty dealing with the slower pace of school and homework, he said.

“TV can cause the developing mind to experience unnatural levels of stimulation,” Dr Dimitri Christakis said.

Rapid image changes make it worse :——————>
This was made worse by the rapid image change that television makers used to keep young children interested, Dr Christakis added.

Parents were questioned about their children’s viewing habits and asked to rate their behaviour at age seven on a scale similar to that used to diagnose attention deficit disorders.

The youngsters who watched the most television were more likely to rank within the top 10% for concentration problems, impulsiveness, restlessness and being easily confused.

Courtesy : BBC, CNN..
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.spiritscienceandmetaphysics.com/why-steve-jobs-didnt-let-his-kids-use-ipads-and-why-you-shouldnt-either/