பிக் ப்ளாங்க் 19

பிரபஞ்ச இயக்கத்தை பார்க்கும் போது அதில் ஒரு நியதி,ஒழுங்கு இருப்பது போல் தெரிகிறது . ஆனாலும் அதில் ஒழுங்கு மீறலும் இருக்கிறது . அண்ட சராசரங்களும் அதற்குரிய சுழல் பாதையில் பயணிக்கிறது . கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இஞ்சினோ, டிரைவரோ இல்லை. அந்த பாதையே அப்படி ஒரு வளைவான மலைப்பாதை சரிவு போல அவற்றை ஈர்த்து நகர்த்துகிறது. அனைத்தையும் ஒரு பெரும் சக்தி சுழற்றி ஒரு புள்ளியை நோக்கி ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அணு முதல் அண்டம் வரை பிரபஞ்சத்தின் எந்த பொருளும் சுய விருப்பபடி நகரவில்லை.அப்படி இயங்கவோ, இயக்கத்தில் இருப்பதை நிறுத்தவோ நியூட்டன் விதிப்படி வெளி விசை தேவைப்படுகிறது . அனைத்து இயக்களும் குறிப்பிட்ட பவுதீக விதிகளுக்கு உட்பட்டு, கணித சமன்பாடுகளை மீறாமல் இயங்குகிறது. சூரியன் தினமும் உதிக்கிறது , மறைகிறது . பூமி தன்னை தானே சுற்ற 24 மணி நேரம் எடுக்கிறது. சூரியனை ஒரு முறை சுற்ற 365 நாள் 6 மணி 9 நிமிடம் சரியாக எடுக்கிறது. ஒரு நாள் ஓய்வெடுப்பதில்லை.
எல்லா இயக்கமும் ஒரு ஒற்றைப்புள்ளி (singularity) யிலிருந்து சிக்கலான இயக்கத்த்தை உருவாக்கிக்கொண்டே விரிந்து போகிறது. பிரபஞ்சத்தின் Entropy கூடிக்கொண்டே போகிறது. பெரு வெடிப்பு எனும் பிக் பேங்கில் தொடங்கியது .ஒரு கட்டத்தில் பெருஞ் சுருக்கமாக கருந்துளைக்குள் சுருங்கி விடும். ஓன்றுமில்லாததிலிருந்து தோன்றி, வளர்ந்து, சிதறி பின் இணைந்து ஒன்றுமில்லாமல் போவது போல தோன்றினாலும் இது ஒரு சுழல் இயக்கம். சுழலின் ஒரு பக்கம் நாம் பார்க்கும் போது மறுபக்கம் நமக்கு தெரியாது அது Dark matter ல் மறைந்து அங்கு எதிர்திசையில் பயணித்து ஆரம்ப கணத்தை அடைந்து விடுகிறது. இந்த இயக்கம் தான் அணுவில் எலக்ட்ரானின் இயக்கத்திலும் இருக்கிறது .
இயற்கையின் மற்ற எல்லா படைப்புகளும் சுய தேர்வு உரிமை இல்லாமல் விதி வரைந்த பாதை வழி செல்லும் போது உயிரினங்கள் மட்டும் தங்கள் இச்சைப் படி இயங்க முடிவது போல் தெரிகிறதே ? உண்மையில் உயிர்களுக்கு சுய தேர்வு இருக்கிறதா? ஏன் இந்த விதிவிலக்கு. அனைத்து லெவலிலும் இயக்க விதி ஒரே போல் தானே செயல்பட வேண்டும்?ஒரு நதி இஷ்டத்துக்கு வளைந்து நெளிந்து போனாலும் அதன் பாதை அப்படி இருப்பதனால் தான் அப்படி போகிறது. கடல் அலைகள் சுயமாய் இல்லை. காற்று தீர்மானிக்கிறது . காற்றை சூரிய வெப்பம் அசைய வைக்கிறது . சூரியனை , பூமியை வெளியின் ஈர்ப்பு பந்தாடுகிறது. இப்படி எல்லா இயக்கத்துக்கும் காரணமாக இன்னொரு இயக்கம் இருக்கிறது. இந்த இயக்கம் பரிணாமத்திலும் இருக்கிறது. சமூகத்திலும் இருக்கிறது. பசி , இனப் பெருக்கம் , பாதுகாப்பு போன்றவைகள் வாழ்வின் இயக்கத்தில் மிகப்பெரும் உந்து விசையாக இருக்கிறது. இவை கூட தன் இருத்தலை தக்க வைக்கும் முயற்சி தான் . நான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தத் தான் நமது எல்லா இயக்கமும் .
ஆனால் எனது கேள்வி நாம் ஏன் இயங்குகிறோம் என்பதல்ல .நாம் நம் சுய இச்சைப்படி முடிவெடுத்து நம் செயல்களை செய்கிறோமா? இல்லை திரு விழா கூட்டத்தில் யார் யாரோ நம்மை நெருக்கி நகர்த்துவது போல இயங்குகிறோமா? நாம் ஒரு காரின் ட்ரைவர் சீட்டிலிருக்கிறோமா ? யாரோ ஓட்டும் காராக இருக்கிறோமா? ஒரு செயலை செய்யவும், செய்ய வேண்டாம் என்றும் முடிவெடுப்பது யார்? நம் அனுபவமா? உள்ளுணர்வா? நாம் எத்தனை entity களின் கலவையாயிருக்கிறோம் அந்த முடிவை எடுத்தது எது? ரெஸ்டாரென்டை கடக்கும் போது மட்டன் கறி , புரொட்டா சாப்பிடலாம் , இல்லை வேண்டாம் என முடிவெடுப்பது நீங்களா? இல்லை முன் அனுபவம், கையிலுள்ள காசு நிலை , பசி , உடலின் சக்தி தேவை, ஆரோக்கியம் பற்றிய அறிவு , கறி வாசனை. புலால் மறுப்பு எண்ணம். நண்பர்கள், மகிழ்ச்சி ஹார்மோன்கள் , இவற்றில் ஏதோ ஒன்று அந்த முடிவுக்கு தள்ளியதா?
ஒரு கிரிக்கட் வீரர்களுக்கு தெரியும் பந்தின் போக்கை நிர்ணயிப்பதில் எத்தனை . ஃபிசிக்ஸ் விதிகள் செயல்படுகிறதென. அது போல் நாம் நம் எண்ணங்கள் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. நம் உள்ளத்தை உணர்வுகளை எத்தனையோ சக்திகள் எப்போதும் பாதித்துக் கொண்டும் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. நமக்கும் பங்கிருக்கிறது நாம் மற்றவர்களையும் பாதித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் இதைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நம் மூளையை ஏதோ சக்தி கண்டிசன் செய்கிறதா? நாம் காணும் ரியாலிட்டி ,நம் அறிவில் திணிக்கப்படும் கருத்துகள், பார்வைகள், நம்பிக்கைகள் எந்த அளவு உண்மைத் தன்மை உடையது.நம் தேர்வுகளை அது பாதிக்கிறதா?
நம் செயல்களில் நமக்குரிய உரிமையும் தேர்வும் எந்த அளவென்றால் ஏற்கனவே நம்மை விட பேரறிவு போட்டு வைத்த சாலைகளுக்குள் , சாலை விதிகளுக்குள் நம் அனுபவம் எனும் வாகனத்தை விரும்பிய திசையில் செலுத்த தேர்வு செய்வது மட்டுமே. நாம் என்பது நம் கான்சியஸ்னஸ். நம் அனுபவத்தை மட்டும் தேர்வு செய்கிறோம். சூழ் நிலை , ட்ராஃபிக் ,போன்ற பல்வேறு தகவலைக் கொண்டு தானாக சிந்தித்து முடிவெடுக்கும் செயற்கை நுண்ணறி வந்து விட்டது. நாமும் இப்படி யாரோ எழுதிய புரொக்ராம்படி தான் சிந்திக்கிறோமா? முடிவெடுக்கிறோமா?
Maze எனும் புதிர் விளையாட்டு விளையாடிருப்பீர்கள் , ஒரு வாசலில் நுழைந்து ஏற்கனவே வரையப்பட்ட புதிர் பாதைகளில் வலதா? இடதா? என தேர்வு செய்து முட்டி மோதி சுற்றி ,திரும்பி ஒரு வழியே வெளியேறுவது போல நாமும் ஒரு புதிர் விளையாட்டில் சிக்கியிருக்கிறோம். நம் சுய தேர்வு என்பது மாயையாக இருக்கிறது. நம்மை ஆட்டுவிக்கும் சூட்சும கயிறுகள் தெரியாததால் நாம் தற்செயலாக உருவானோம் இஷ்டப்படி நடக்கிறோம் என நம்புகிறோம். எந்த வழியை தேர்வு செய்தாலும் சுற்றிக் கிறங்கி சரியான பாதையை தேர்வு செய்தாலே வெளியேற முடியும்.. நாம் ஒரு பாதையை தேர்வு செய்ததும் நம் பயணம் புதிய பாதையில் எப்படி உருக்கொள்கிறது? தேர்வு செய்வதால் நம் ரியாலிட்டி மாறுகிறதா? நம் தேர்வு அதற்குரிய consequence எனும் கர்மாவை உருவாக்குகிறதா? உண்மையில் நாம் சிறை பட்டிருக்கிறோமா? சிறைப் படுத்தப் பட்டிருக்கிறோமா? இதன் அறிவியல் சாத்தியம் என்ன?யோசியுங்கள்.கருத்தை சொல்லுங்கள். Stay..tuned.

கருத்துகள்