ஒரு சம்பவத்தை பல்வேறு நிருபர்கள் பல்வேறு விதமாய் பார்த்து அவரவர் கோணங்களில் செய்திகள் இடுகிறார்கள். உண்மை என்பது பார்ப்பவர்களை பொறுத்து மாறி விடுகிறது. அந்த சம்பவம் பற்றி எவ்வளவு அதிகமாக தகவல் திரட்டுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது பற்றிய கதைகளும் விவரிப்புகளும் மாறி விடும்.
இன்றய கால கட்டத்தில் நாம் ஒரு பொதுவான ரியாலிடியிலிருந்து பெர்சனலான ரியாலிட்டிக்கு நமக்கே தெரியாமல் மெல்ல மாறிக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் நம் உலகில் இயற்கை அதிகமாக இருந்தது. அன்று என் உலகில் இருந்ததெல்லாம் உங்கள் உலகிலும் 90% இருந்தது, அப்போது ஒன்றைப் பற்றிய நம் விலாவாரியான அறிவு குறைவு. இன்று மனித அறிவு அபார வளர்ச்சி அடைந்து விட்டது. மீடியாக்கள், இணையம் வழி ஏராளமான தகவல்களை மூளை புதிது புதிதாய் வேகமாக அறிகிறது.
செயற்கையான, விர்ச்சுவலான பல விஷயங்கள், ப்ரோட்டோகால்கள், நம்பிக்கைகள், கான்செப்டுகள் தினம் உருவாக்கப் பட்டு மனிதர்கள் இப்படித்தான் உலகை உணர வேண்டும், இப்படித்தான் வாழவேண்டும் என்றெல்லாம் யாரோ கல்வி, அறிவியல், அரசாங்கம் , சட்டங்கள், மூலம் தீர்மானித்து அதற்கேற்ற தகவல்கள் அறிவின் பல்வேறு திசைகளில் விரிந்து உலகை பற்றிய நம் பார்வையை அசுரத்தனமாய் மாற்றுகிறார்கள் . சோசியல் மீடியாக்கள் இதில் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. நாம் கலாச்சசாரங்களை,தர்ம நியாங்களை, சரி தவறுகளை, உண்மை பொய்யை அவை தான் தீர்மானிக்கிறது.
நம் ரியாலிடியில் முன்பு இருந்தவை பலதும் இன்று இல்லை. அவரவர்க்கென்று ஒரு அறிவு தேடலின் வாய்ப்பு இருக்கிறது.அதனால் உலகை பற்றிய நம் பார்வை தனிப்பட்ட ரீதியில் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மனிதர்களுக்கிடையே இணைப்பில்லை. உங்களுக்கு பிடிததது எனக்கு பிடிப்பதில்லை, உங்கள் சரி எனக்கு தவறு, உங்களுக்கு முக்கியம் எனக்கு அனாவசியம். உங்கள் உலகில் கிரிக்கட் இருக்கிறது, என் உலகில் அது இல்லை.
ஆடை, உணவு, அரசியல், மதம் என ஒருவர் உலகம் மற்றவருக்கு புரிந்து கொள்ள முடியாத, சகிக்க முடியாத முரண்பாடாய் இந்த வேறுபாடு அதிகரித்து கொண்டிருக்கிறது. கால உணர்வு கூட ஒருவருக்கொருவர் மாறுகிறது. சிலர் இன்னும் அந்த கால உலகில் கிராமத்தில் வாழ்கிறார்கள், அதே சமயம் மற்றொரு பக்கம் நவீன வாழ்கையின் உச்சத்தில் மற்றொரு வர்க்கம். ஆண்களுக்கு ஒரு உலகம் என்றால், பெண்களுக்கு ஆண்களால் புரிந்து கொள்ள சிரமமான மற்றொரு ரியாலிட்டி.. என்னைப்பற்றி நீங்கள் நினைப்பது வேறு என்னைபற்றி நான் உணர்வது வேறு. சாப்பிடும் போதும் டாய்லட் போகும் போது மட்டும் தான் பலரும் நிஜ உலகில் வருகிறார்கள் மற்றெல்லா நேரமும் தத்தமது மூளைக்குள் வாழ்கிறார்கள். மிக நெருங்கிய உறவுகள், நண்பர்கள் கூட பரஸ்பரம் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளாத, புரிந்த கொள்ள முடியாத உலகில் சிறைபட்டுள்ளார்கள்.
அதே சமயம் இதற்கு நேரெதிராக புரிதலின் தளத்தில், உள் ஓளி பெற்றவர்கள் இன்னொரு ரியாலிடியில் இணைந்திருக்கிறார்கள், அங்கு அறிதல் இல்லை.உணர்தலே இருக்கிறது. இடம் கால தடையின்றி உணர்வுகளால் தொடர்பிலிருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்து கொள்பவர்கள், உதவுபவர்கள். அன்பு , கருணை நிறைந்தவர்கள், ஆணவமற்றவர்கள். எல்லாவற்றையும் ஒருங்கே புரிந்து கொண்டவர்கள்.
கருத்துகள்