புரியாத புதிர்

 

சில வேளை நம் கருத்துகளை சிலர் தவறாக விளங்கிவிட்டு பயங்கரமாக எதிர் வினையாற்றி விடுகிறார்கள். நாம் அன்பாக, வெளிப்படையாக, உண்மையாக, நல்ல நோக்கத்தில் பேசினாலும் அவர்கள் அதை தவறாக புரிந்து கொள்ளும் போது நம் தகுதி மரியாதை மதிப்பு எல்லாம் கேள்விக் குறியாகும். சில கருத்துக்களுக்கு சட்டென்ற அவர்கள் எதிர்வினை நம்மை ஆச்சரியப்படுத்தும். அதுவரை இருந்த இணக்கம் நட்பு அன்பு எல்லாம் சிக்கலாகி. உறவுகள் அதன் வீரியமிழக்கும். ஆனால் சிலரால் அடிக்கடி இப்படி நம் பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் என்ன செய்வது?. அவர்களை திருத்த முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அவர்களால் அடிக்கடி உண்டாகும் காயம் மன உளைச்சல் தேவையா?

தவறாக புரிந்து கொள்ளப் படுவதில் உள்ள முக்கிய பிரச்சனையே பலரும் தனக்கு பிடித்த மாதிரியே மற்றவர்கள் பேசவேMடும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் சிந்திப்பது போல் நாம் சிந்திக்கவில்லை என்றால் அதிகமா டிஸ்டர்ப் ஆகி விடுகிறார்கள். எல்லாவற்றையும் பெர்சனலாகவே எடுத்துக் கொள்கிறார்கள், பொதுவாக நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள இணக்கமான பகுதியை கொண்டே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம், முடிந்த வரை முரண்பாடுகளை தவிர்க்கப் பார்ப்போம், ஆனால் புதிய கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்ள இந்த சேஃப் ஸோன் உரையாடல் உதவாது . நம் நம்பிக்கைகள் அனுமானங்கள் எல்லாவற்றையும் மாற்றி வைத்து பிறர் சொல்வதை முழுமையாக கேட்டால் தான் அவர்கள் கருத்தை சரியாக உள் வாங்க முடியும், ஆனால் சிலர் தங்கள் நம்பிக்கைகள் யூகங்கள் முன் முடிவுகளோடு நம் கருத்தை கேட்கும் போது அவர்கள் வெளிக்காட்டாமல் மறைத்து வைத்த அவர்கள் நம்பிக்கைகளை நம் கருத்துக்கள் சரியாக தாக்கும் போது காயப்பட்டு வெடித்தெழுகிறார்கள். சாதாரணமாக கடந்து போக வேண்டிய கருத்துகளை கூட தங்கள் பயம் என்னும் லென்ஸ் வைத்து பூதகரமாக்கி பார்க்கிறார்கள், அதை திரித்து விளங்கி பிடிவாதமாய் சண்டை பிடிப்பவர்களாய் இருந்தால் அவர்களிடம் நாம் என்ன விளக்கம் கொடுத்தாலும் நம்மை நம்ப மாட்டார்கள். அல்லது நாம் சொல்லும் உண்மைகளை அவர்கள் மறைத்து வைத்த பொய்களை தகர்ப்பதால் தன் அடையாளம் இழந்து விடுவோம் என்ற அச்சுறுத்தலாம் நம்மை எதிரியாக பார்ப்பார்கள். நம் கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வாதிப்பார்கள், சிலரது மூளை எல்லாவற்றையும் வித்தியாசமாகவே புராசஸ் செய்யும். சிலருக்கு அவர்கள் டிக்ஸ்னரியே வேறு..நாம் சொல்லாத விசயங்களை சொல்லியதாக சாதிப்பார்கள். இன்ன உத்தேசத்தில் தான் சொன்னாய் என்பார்கள். நம் வார்த்தைகளை வளைத்து ஒடித்து கட் பண்ணி தர்க்கம் புரிவார்கள், சிலர் நம்மை அதிகம் பேச வைத்து கேட்கவே சண்டை ,ஊடல் தர்க்கம் செய்யக்கூடும்.
சிலரிடம் "நல்லாயிருக்கிறியா ? "என்று கேட்டால் கூட அதை அச்சுறுத்தலாக சந்தேகத்துடன் எதிர்கொள்கிறார்கள், நாம் சாதாரணமாக கருதும் விஷயங்களுக்கு அவர்கள் மிக புனிதம் கொடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் பலவீனம் எளிதில் நம் கண்ணுக்கு தெரியாது. ரசிகர்கள், தொண்டர்கள், பக்தர்கள் உள்ளத்தில் என்ன மாதிரி எதிர் விளைவுகள் உண்டாகும் என கணிக்க முடியாது, சிலருக்கு உள்ளே ஆழமான காயம் வலி , மோசமான கடந்த கால நினைவு, அச்சம் பதற்ற நோய் எல்லாம் இருக்கும் அவற்றை மறைத்து இயல்பாக தன்னை காட்டிக் கொண்டாலும் சில வேளை உள் காயங்களில் அடிபட்டு அதி உணர்ச்சி வசப்பட்டு உறவுகளை சிதைத்து விடுகிறார்கள்.
சொல்ல வரும் கருத்துகளின் வார்த்தைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து டிகஸ்னரி வைத்து பலவேறு அர்த்தங்களை பொருத்திப் பார்த்து புரிந்து கொள்வதை விட மேலோட்டமாக என்ன சொல்ல வருகிறார் என சாதாரண உரையாடல்களை சாதாரணமாக கடந்து போய் விட வேண்டும், ஆழமான விஷயங்களை அதன் உட்பொருள் சிந்தித்து உணர வேண்டும். ஒருவர் சொல்லும் விஷயம் புரியா விட்டால் அல்லது தவறாக தோன்றினால் அவரிடம் மேலும் விளக்கம் கேட்டு தெளிவு பெறலாம் .
சிலரது உள்ளத்தில் அவர்களுக்கே தெரியாமல் மறைந்திருக்கும் பொறாமையால் கூட நம்மை மட்டம் தட்ட நம் கருத்துக்களை தவறாக திரித்து மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள்..
உள்ளுக்குள் ரகசியமாய் வெறுப்பு ஓடிக்கொண்டிருக்க நம்மிடம் நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டே மற்றவர்களிடம் நம்மை மதிப்பிழக்க செய்யும் எல்லா வாய்ப்புகளையும் பயன் படுத்திக் கொள்வார்கள், நம்மைப் பற்றி ஒரு தவறான பிம்பத்தை நஞ்சை பிறர் உள்ளத்தில் விதைத்து விடுவார்கள், அதை உணர்ந்த மாத்திரம் அவர்களை விட்டு விலகி விடுவதே நல்லது.
தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களையும் திருத்துபவர்களையும், முரண் கருத்துள்ளவர்களையும் விட்டு விலக தேவையில்லை நாம் அவர்கள் பார்வையில் அதை புரிந்து கொள்ள முயல நம் பார்வையை விசாலப்படுத்த நம் தவறுகளை உணர அவர்கள் தேவை. ஆழமான அன்பும் புரிதலும் அறிவு நாட்டமும் உடையவர்கள் ,திறந்த மனமுடையவர்கள் சொல்பவர்களையும் சொல்லும் கருத்தையும் போட்டு குழப்ப மாட்டார்கள்.தன் கற்பனைகளை,யூகங்களை சந்தேகங்களை அதில் கலக்க மாட்டார்கள், அவர்களுடன் இருப்பதே நலம்.

கருத்துகள்

Rashid Faizee இவ்வாறு கூறியுள்ளார்…
True words..