நோய் நாடி நோய் முதல் நாடி.- பாகம் 9

 வன்மத்தை விட்டு விடுங்கள், மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்


பெரும்பாலான நோயாளிகளின் குணாதிசயத்தைப் பார்த்தால் அவர்கள் யார் மீதாவது கடுமையான வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும், கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவரை பார்த்தாலே, நினைத்தாலே தோன்றும் வெறுப்புணர்வு நம் ஆரோக்கியத்தில் அமிலத்தை கொட்டி விடும். வெறுப்புணர்வு ஒரு நோய் போலவே அவஸ்தை தருகிறது, மனம் அந்த அவஸ்தையை நொடிக்கு நொடி நினைவுகளில் பதிவு செய்கிறது. அது ஆழ்மனதில் ஒரு விதையாக விழுகிறது. அந்த பதிவுகள் தான் நீங்கள் யாரென்ற உணர்வையும் உங்கள் உடலையும் உங்கள் ரியாலிட்டியயும் உருவாக்குகிறது. உள்ளத்தில் புதைந்த வெறுப்புணர்வின் விதை உலகத்தைப் பற்றிய மற்றவர்களை பற்றிய உங்கள் கண்னோட்டத்தை மாற்றி விடுகிறது. உங்கள் உலகை நெகடிவ் உணர்வுகளால் கட்டமைக்கிறது , உடலில் மோசமான வேதி மாற்றங்களை உருவாக்குகிறது, நோயாக வெளிப்படுகிறது.
மனதை எப்போதும் இறுக்கமாக மூடி வைத்திருப்பவர்கள் எல்லோராலும் அடிக்கடி காயப் படுகிறார்கள் அதனால் எப்போதும் நோயுறுகிறார்கள். 
 
"அந்த மனிதனை என் வாழ்வில் இனி சந்திக்க கூடாது","என் உயிருள்ளவரை அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்", என்பது போன்ற எண்னங்களை மனைதில் நீங்கள் விதைத்திருந்தால் உங்கள் ஆழ் மனதிற்கு சென்று "இந்த வெறுப்புணர்வால் நான் துன்புறுவேன். எனவே அவனை நான் மன்னித்தாக வேண்டும்" என சிந்தித்து உணர்வது மிக அவசியம். அது போல நீங்கள் குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டாலும் உங்களை நீங்களே மன்னிப்பது அவசியம். இது மோட்டிவேசனோ? உபதேசமோ? அல்ல. மனதுக்கும் உடலுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஆன்மீக அறிவியல்.
 
உங்கள் வாழ்வில் பலர் நிச்சயமாக உங்களை காயப்படுத்தியிருப்பார்கள், துரோகமிழைத்திருப்பார்கள், ஏமாற்றியிருப்பார்கள், அதற்கு நீங்கள் காரணமல்ல என்றாலும் அவர்களால் நீங்கள் இப்போது துன்பம் அடைகிறீர்கள். அதை மாற்றியாக வேண்டும். அவர்கள் மன்னிப்பு கோருவார்கள் என காத்திருக்க முடியாது, நாம் நம் நலனுக்காக அவர்களை மன்னித்தே ஆக வேண்டும் ,இனியும் அவர்கள் தந்த வலிகளை சுமந்து திரியக் கூடாது. அவர்கள் மனிதர்கள். தவறிழைப்பவர்கள். அவர்கள் பார்வையில் உங்களை காயப்படுத்த ஏதோ ஒரு காரணம் இருக்கலாம், அது அவர்கள் பார்வைக் கோளாறாக, அறியாமையாக, பக்குவமின்மையாக அல்லது மன நோயாக கூட இருக்கலாம். அதற்காக நீங்கள் ஏன் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அவர்களை மன்னித்து விடுங்கள்.
நாம் தனித்தனி உயிர்களாக தோன்றினாலும் அடிப்படையான ஒரு நிலையில் ஒன்றாகவே இருக்கிறோம். நீங்கள் மிகவும் நல்லவராக உங்களை உணர்வதால் கூட உங்கள் பார்வையில் மற்றவர் கெட்டவராகி விடலாம். அவர் இப்போது திருந்தியிருக்கலாம். உங்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கிக் கொண்டிருக்கலாம். அல்லது அவர் அதை மறந்திருக்கலாம், அல்லது குற்ற உணர்வால் அவரும் நோய் வாய்ப் பட்டிருக்கலாம், செய்த தவறுக்காய் வருந்திக் கொண்டிருக்கலாம். ரகசியாமாய் இறைவனிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். உங்களுக்கு ஒருவர் கெட்டவராக தெரிவது உங்கள் நினைவின் பதிவு. வேறொருவருக்கு அவர் நல்லவராய் இருக்கலாம்.
கடந்த காலத்தின் நீங்களும் அவரும் அல்ல இப்போது இருக்கும் நீங்களும் அவரும். நாம் கணந் தோறும் மாறிக் கொண்டிருக்கும் தன்னுணர்வின் அதிர்வு. நீங்கள் முன்பு உங்களை வெட்டிய கத்திய எடுத்து தினம் தினம் உங்களை வெட்டி காயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். வெட்டுவதற்கு பதில் மருந்திடுங்கள். அதை இந்த கணமே செய்யுங்கள். காயம் தானே ஆறி விடும்.
பழி வாங்கும் உணர்ச்சி ஒருவருக்கு கடும் நோய் கூறுகளை வெளிப் படுத்தும். அவர்களின் அடையாளத்தை சிதைத்து விடும், மறதி மனிதனுக்கு கிடைத்த சிறந்த மருந்து. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பழைய காயங்களை நினைத்து நினைத்து மருகாமல் அதை கையிலெடுத்து பார்த்து இந்த முள்ளை மூளையில் வைத்துக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை, வலிதான் மிச்சம் என தூக்கிப் போட்டு கடந்து விடுங்கள். காயங்களை கூட உடல் ஏற்றுக் கொண்டு மன்னித்தால் தான் ஆறும். கடந்த காலம் வலி தந்தவர்களை மன்னித்து கடந்து செல்லுங்கள், இல்லையேல் அது நோயாக உங்கள் உடலில் வாழ்வில் இறங்கி விடும்.
கடந்த காலமும் காயமும் நினைவில் மட்டுமே உள்ளது. காயப்பட்டது நீங்கள் அல்ல அது உங்கள் ஈகோ. அது உடைந்து போகட்டும். அதனால் தான் உங்கள் ஈகோ இறை உணர்வில் சரணடையும் போது மனக் காயங்களும் வலிகளும் நம்மை விட்டு இறங்கி இலகுவாக உணர்வது. உங்கள் நினைவுகளை நீங்கள் என்று நினைத்து மருட்சியால் துன்பப்படுகிறீர்கள். நினைவுகளிலிருந்து உங்கள் ஐடென்டிடியை பிரித்து உணருங்கள். நீங்கள் இக்கணத்தில் இருக்கிறீர்கள், இக்கணம் தூய்மையானது, பவர் ஃபுல்லானது. நினைவுகளை விட்டு இக்கணத்தின் உங்களை உணரத்தொடங்கி விட்டால். கர்மாக்கள் அழிந்து விடும். காயங்கள் துக்கங்கள் வலிகள் நோய்கள் மறையத் தொடங்கி விடும். புதிதாய் ஃபார்மேட் செய்த கம்ப்யூட்டர் ஆகி விடுவீர்கள். நீங்கள் விரும்பிய படி உங்களை, உங்கள் ரியாலிட்டியை புதிதாய் உருவாக்கலாம் இது ஒரு அதிசயங்கள் செய்யும் இரகசியம்

கருத்துகள்