கபடம் (Deception) பகுதி 9

 

மனிதர்களை பல வகைகளில் பிளவு படுத்தும் கபட நாடகங்களில் ஒன்று ஆண் பெண்ணுக்குக்கிடையே உளவியல் ரீதியாக கட்டமைக்கபபட்ட பெரும் இடைவெளி. இது ஒரு ஆணை புரிந்து கொள்வதில் பெண்ணுக்கும் , பெண்ணை புரிந்து கொள்வதில் ஆணுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகிறது. இதனால் ஆண் பெண்ணுக்கிடயே துயர நாடகங்கள் அரங்கேறுகிறது. 
       ஆணும் பெண்ணும் உடலால் வேறுபட்டவர்கள். அதுவும் அந்த வேற்றுமை இனப்பெருக்க காரணத்திற்காக மட்டுமே உள்ள வேற்றுமை. மற்றபடி இருவர்களும் மனிதர்கள் தான். இருவருக்கும் ஒரு பாலினம் கடந்த ஆன்மா இருக்கிறது. ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் இல்லை. ஆனால் உலகம் அதற்கு மாறான பிம்பங்களை ஆண் பெண் பற்றி கட்டி எழுப்பியிருக்கிறது. அன்னையை அல்லது சற்று வயதான பெண்களை மரியாதையாக காண கற்பிக்கப்பட்ட ஆணுக்கு தன் சகோதரியை ,மகளை பாசமுடன் காணும் கண்ணுக்கு அன்னிய இளம் பெண்களை காமத்துடன் காண கற்பிக்கப்படுகிறது. எது அவர்களை சக மனுசியாய் பார்க்க முடியாமல் தடுப்பது..?
            பெண்களின் அழகு என்பது ஆண்களை வசீகரிக்கும் ஆயுதமாக தயார்படுத்தப்படுவது ஏன்? ஒரு ஆணைப்பற்றி பெண்ணின் மனதிலும், பெண்ணை பற்றி ஆணின் மனதிலும் எத்ததனை வக்கிரங்களை இச்சைகளை காதல் என்ற பெயரில் கலை படைப்புகள் மூல தினம் தினம் திணிக்கப்படுகிறது. பெண் என்றால் ஒரு மலர் போல, பிளாஸ்டிக் பொம்மை போல சிவந்த வண்ணம், கச்சித அளவுகளில் உடல் பாகம், எடுப்பான மார்பகம், நீண்ட அலை பாயும் தலமுடி .திருத்திய மையிட்ட புருவம், சிவந்த லிப்ஸ்டிக் இட்ட உதடுகள் நகச்சாயம் பூசிய மெல்லிய விரல்கள் இப்படியெல்லாம் சினிமா நாயகித்தனமாகத்தான் இருக்க வேண்டுமா? ஆண்கள் எல்லாம் முரடர்களாகவும் freek ஆகவும், சிக்ஸ் பேக்கர்களாகவும் , தான் இருக்க வேண்டுமா? கால காலமாக சினிமாவில், கதைகளில் காட்டப்படும் நாயக நாயகி வடிவங்களை தேடி தேடி தன்னை சுற்றியுள்ள இயல்பான பெண்களில் அவர்களை கண்டடைய முடியாமல் ஏமாற்றமுறும் ஆண்கள். பெண்கள்.உண்மையில் மேக்கப் இல்லாத நடிகைகள் நடிகர்கள் உங்களை ஒரு போதும் ஈர்ப்பதில்லை. சினிமாவில் ஊடகங்களில் மட்டும் பெண்கள் இனிய குரலில் பாடுகிறார்கள். மனைவிகள் அப்படி பாடுவதில்லை. நடனமாடுவதில்லை.
        திருவள்ளுவர், கம்பன் முதல் கொண்டு கண்ணதாசன் வாலி வைர முத்துவரை பெண்ணுறுப்பை பாடாமல் மயங்காமல் போனதில்லை. அந்த காலம் முதல் பெண் ஒரு சக உயிராக பார்க்கப்படுவதை விட காமப் பொருளாகத்தான் காணப்பட்டிருக்கிறார்கள். காட்டப்பட்டிருக்கிறார்கள். காமம் தான் கலைகளாக வெளிப்படுகிறது. பெண் உடல் தான் கலைகளில் காட்சி வைக்கப்படுகிறது. பெண் மனது அவ்வளவாக பேசப்படவில்லை. காப்பியங்களில் ,சிற்பங்களில் ,சினிமாக்களில் , வியாபாரங்களில் பெண் உடல் தான் முக்கிய சரக்காக இருக்கிறது. பெண் உடலை ஆடவிட்டு ரசிக்கும் ஆதிக்க ஆணியத்தின் கண்டு பிடிப்பு தான் நாட்டியம் , நடனம் எல்லாம் . காம அசைவுகள் தான் அதன் அடிப்படை. ஆனால் காமத்துக்கு கலை எனும் புனித பூச்சு கொடுத்து பல காலமாக ஆண் பெண் உளவியல் சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டிருக்கிறது. ரசனை என்ற பெயரில் ஆணியம் அதை அங்கீகரிக்கிறது. அந்த அங்கீகாரமே தன் பாக்கியம் ஆணை வசீகரிப்பதே பெண்மையின் நோக்கம் எனுமளவு பெண்மை அடிமைப்படுத்தப்பட்டும் விட்ட.து. சிறு வயதிலிருந்தே அவர்கள் மறை முகமாக ஒரு ஆணுக்கு கட்டுபட்டவர்களாகவும் ஆனால் ரசிக்கப்படுபவர்களாகவும் தான் வார்க்கப்படுகிறார்கள். பெண்கள் ஒருவிதமாகவும் ஆண்கள் மற்றொரு விதமான உளவியலோடும் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
         பெண்கள் எதை எப்படி உடுத்தவேண்டும் என்ற கலாச்சாரம் திணிக்கப்படுகிறது.. ஆணுக்கு பல பொத்தான்களுடைய முழு உடலையும் மறைக்கும் ஆடைகளும் அதற்கு மேல் கோட்டு ,டை என ஆண் உடல் மறைக்க கற்பிக்கப்டும் போது , இழுத்தால் அவிழும் முடிச்சு , ஜிப் களுடைய மெல்லிய அரகுறை ஆடைகள் , மிடி, மினி என்று கால் தொடை அழகை காட்டும் உடைகள் , மார்பகங்களை கவர்சியாக காட்டும் உடைகள் என பெண்களுக்கு ஆடை விடுதலையே கற்பிக்கப்படுகிறது. குதிகால் செருப்புகளில் உளவியல் இருக்கிறது.வித விதமான மேக்கப் பொருட்கள் , க்ரீம்கள் என பெண்களை குறிவைத்தே பெரும் வணிகம் இருக்கிறது. சினிமாக்கள் மீடியாக்கள் தான் ஃபேசன் என்ற பெயரில் பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக கட்டமைத்து அவர்களை வைத்து வணிகம் செய்கிறது. விமான பனிப்பெண்ணாகட்டும் வியாபார நிறுவனமாகட்டும், விளம்பரமாகட்டும் , மீடியாவாகட்டும், சினிமாவாட்டும், பத்திரிகை அட்டைப்படமாகட்டும் பெண்ணுடல் கவர்ச்சி தான் பிரதான சரக்காக இருக்கிறது. இதற்காகவே பெண் மீதான மோகத்துக்கும் இச்சைக்கும் , காமத்துக்கும் வக்கிரத்திற்கும் தீனி போட்டு மீடியாக்கள் ஆண்/பெண் மனதை நெடுங்காலமாக சிதைத்திருக்கிறது.
ஆண்மையும் பெண்மையும் பற்றி இதுவரையில் கட்டப்பட்ட பிம்பங்கள் உடைக்கப்பட்டு புதிதாக வரையறை செய்யப்பட வேண்டும். உடல்களை விட்டு விடுதலை பெற்று ஆண் பெண் மனங்கள் சிந்தனைகள் , உணர்வுகள் முக்கிய கவனம் பெற வேண்டும். அடிமைத்தனங்கள் நச்சுகள், வக்கிரங்கள், இச்சைகள் ஊறிய மனித மனம் சுத்திகரிக்கப்பட வேண்டும். கலைகள் எந்த வடிவில் இருந்தாலும் அது வக்கிரங்களின் வடிகாலாக கூடாது . சமூகத்தை கெடுக்கும் இத்தகைய ஆழ்மன அழுக்குகள் மீடியாக்களில் கண்டறியப்பட்டு களையப்படவேண்டும்.. ரசனை என்ற பெயரில் அழுக்குகள் ஆராதிக்கப்படக்கூடாது. கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்க சக்திகள் பெண்மை மீது பூசிய கறைகள் அப்புறப் படுத்தப்பட வேண்டும்.. உடல் ரீதியான அதீத கற்பனை புனைவுகள் ஆணையும் பெண்ணையும் இரு வேறு திசைகளில் பிளந்து காலம் தோறும் அவர்கள் ஒருவரை ஒருவர் அடைய முயலும் ஈகோவை வளர்து அந்த கற்பனை மயக்கங்களில் வைத்திருப்பதே கபட சக்தியின் நோக்கம். அவர்கள் ஒருவர் மற்றைவரை அடைய முயலவதை விட்டும் உணரமுயல வேண்டும். உணர்ந்தால் அந்த பேதம் நீங்கிவிடும்.



கபடம் (Deception): மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்