எதை தேடிக் கொண்டிருக்கிறோம்?

எல்லா மனிதர்களும் ஏதோ ஒன்றை சதா தேடிக்கொண்டும் துரத்திக்கொண்டும் வாழ்கையை போராட்டமாக கழிக்கிறார்கள். அவர்கள் அப்படி எதை தான் தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்?எதை அடைகிரார்கள்? என்பதை கொஞ்சம் தேடிப்பார்தேன்.
 
உயிர்கள் முதன் முதலாக தன்னை தன் சுற்றுப்புறத்திலிருந்து தனியாக பிரித்து உணரும் போது ஒர் வகை அச்சத்தை பாது காப்பின்மையை உணர்கின்றன. எனவே தன் இருப்பை உறுதிப்படுத்த , நீட்டித்துக்கொள்ள முயல்கிறது. இந்த முயற்ச்சி தான் தேடல்..
பிறந்த குழந்தை முதலில் மூச்சுக்காற்றை தேடுகிறது. பின் பாலுக்காக தாயின் மார்பு, பின் தன்னை ,உடலை, ஆரோக்கியத்தை, அறிவை பாதுகாத்து தன்னை நிலை நிறுத்தவும், விரிவு படுத்தவும், உனவை தேடுவது, உண்பது, கல்வியை தேடுவது. தன்னில் குறைவு பட்டதை நிறைவு செய்ய திருமணம் பண்ணுவது, வாரிசுகளை உருவாக்குவது ,சொத்துகள் சேர்ப்பது என அத்தனை தேடல்களுக்கும் காரணம் தன்னைப் பற்றிய பாதுகாப்புணர்வு இல்லாமையே.
எல்லாம் தேடினாலும் முதுமை நோய் வந்தடைந்து மிரட்டுகிறது . மரணம் அடியெடுத்து நெருங்கும் போது . தான் தான் தேடியது எல்லாம் இனியும் நம் இருப்பை தக்க வைக்க உதவாது என்ற அச்சம் வருகிறது. இப்போது தான் மரணம் என்றால் என்ன மரணத்திற்கு பின் என்னாவோம். எங்கே செல்வோம் தான் யார் ? என்ற கேள்விகள் ஆன்மீக சிந்தனையாய் தேடலை தொடர்கிறது…
பலர் இந்த ஆன்மீகத்தில் தாம் விரும்பிய ஒரு கற்பனை கடவுளை உருவாக்கி அவரிடம் தன்னை ஒப்படைத்து பாதுகாப்பு உணர்வும் அமைதியும் அடைகிறார்கள். இது பக்தி . சிலர் தன்னைப் பற்றிய உண்மை நிலைகளை உணர்கிறார்கள். பிறப்பு இறப்பு கடந்த தன் சுயத்தை உணர்ந்து அமைதி கொள்கிறார்கள் . இது ஞானம். அதன் பிறகு அவர்களுக்கு தேடல் இல்லை.. தேடுபவர்க்கு உதவுதலே வாழ்கையாகி விடுகிறது .அவர்களூடாக இறை தன்மை வெளிப்பட தொடங்குகிறது. மரணம் அவர்களை அச்சுறுத்துவது இல்லை. தேடியவற்றை அவர்கள் சுமப்பதும் இல்லை. அவர்கள் தேடிக் கண்டடைந்தவர்கள்.வெற்றி பெற்றவர்கள்

கருத்துகள்