01 August 2009

பத்துக்கு பத்து விபத்து

" ஹலோ உன்ன அவசரமா பாக்கணும் கடற்கரையில் சந்திக்கலாம் உடனே வா! "- நண்பன் கோபால் தான் செல் ஃபோனில் அப்படி பதற்றத்துடன் அழைத்தது. அவன் குரல் உடைந்திருந்தது . உடனே புறப்பட்டு விட்டேன்

கோபாலைப் பற்றி உங்களுக்கு தெரியாதே! ஆள் நல்ல சிவப்பா வாட்ட சாட்டமா இருப்பான். இளகிய மனது, வாக்கு சுத்தம். அவன் தந்தை சேர்த்து வைத்த சொத்து அவனுக்கு உட்கார்ந்து சாப்பிட போதுமானது. ஆனாலும் அவன் ட்ரை பண்ணாத தொழில் இல்லை. சோப்பு கம்பனி போட்டான் வழுக்கி கொண்டு விட்டது. ட்ராவல் ஏஜென்ஸி, இன்சூரன்ஸ் என்று எல்லாம் முற்ச்சித்து விட்டான்.கொஞ்ச நாளைக்கு முன் ஏதோ MLM கம்பனி பற்றி என்னிடம் சொன்னான். அதில் சேருகிறாயா? நிறைய பணம் கிடைக்கும் என்று சொன்ன போது மறுத்து விட்டேன். "ஈசி மணியெல்லாம் வேண்டாம்"என்று சொன்ன என்னை ஏளனமாக பார்த்த அவன் பைக் புதிதாக இருந்தது. கழுத்தில் டை ஏறியிருந்தது. முழுக்கை சட்டை போட்டு இன் செய்தி்ருந்தான்.

ரொம்ப நாள் கழித்து கடந்த வாரம் அவனைப் பார்த்த போது புதிய சிவப்பு கார் வைத்திருந்தான். மீசை தாடி சுத்தமாக ஷேவ் செய்து கண்ணில் கூல் கிளாஸ் போட்டிருந்தான். நகரின் மத்தியில் புதிதாக வீடு வாங்கியதாக சொன்னான். "உன்னையும் கோடீசுவரனாக்கலாம் என்றால் நீ சம்மதிக்க மாட்டாயே" . தினம் பத்து லட்சம் சம்பாதிப்பதாக சொல்லி சிரித்துக் கொண்டே சென்றான் . திடீரென்ற அவனிடம் கொழித்த அபரிமிதமான பணம் எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. இல்லீகலாக எதாவது செய்கிறானோ? அவனிடம் இது பற்றிகேட்டு விட வேண்டும்.

நாங்கள் முன்பு அடிக்கடி வரும் கடற்கரைக்கு வந்து அவனைத் தேடிய போது காணவில்லை. முகம் முழுவது தாடி வைத்த மெலிந்த மனிதர் ஒருவர் என்னை நோக்கி வருவதை உற்றுப் பார்த்தேன் . கடவுளே! இது கோபால் அல்லவா என்ன இது ஏழை நோயாளி போலாகி விட்டான். என்ன நேர்ந்தது இவனுக்கு? தினம் பத்து லட்சம் சம்பாதித்தவனா இப்படி?
" என்னாச்சு உனக்கு உன் கார் எங்கே கோபால்?"

"அதை ஏன் கேக்கிற எல்லாம் போயிடுச்சுடா? "என்றான் விரக்தியுடன்.

நான் அதிர்ச்சியுடன் "என்னாச்சுடா எதாவது இல்லீகல் பிசினஸ் செய்து மாட்டிக்கொண்டாயா? எதாவது மருத்துவச் செலவு ஆப்பரேசன்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா எல்லாம் லீகலாய் செய்ததால் வந்த வினை தான். ஒரு கோடீசுவரருடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம் காரணம் இந்நிலைக்கு ஆளாகி விட்டேன்.

"ஒப்பந்தமா ?புதிர் போடாதே விஷயத்துக்கு வா? "
"சொல்கிறேன் இரு".என்று சொல்லத்தொடங்கினான்.

"இரண்டு வாரத்திற்கு முன் ஒரு பாரில் வைத்து தான் பழக்கமானார் அந்த மனிதர்.
"என்ன நீ தண்ணி போடுவியா எப்பலேந்து?" இடைமறித்தேன்.

"அப்படி பார்க்காதே எப்பவாவது தான். அங்கே தான் "பெரிய மனிதர்கள்" அதிகம் உலவுகிறார்கள். என்று கோபால் தன் கதையை தொடர்ந்தான்.
ஒரு நாள்அப்படி ஒரு பணக்காரப் பெரிய ஜென்டில் மேன் என் எதிரே வந்து உட்கார்ந்து தண்ணியடிக்கத் தொடங்கினார். நான் தவளையல்லவா வாயை கொடுத்த அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் ஒரு பெரீய்ய கோடீசுவரராம்."மனைவி பிள்ளைகள் யாரும் இல்லை. தினமும் தன்னிடம் வந்து சேரும் கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்றே தெரியவில்லை. அளவுக்கு அதிகமான அந்தப் பணத்தால் தனக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
"அப்படியானால அதில் எனக்கு கொஞ்சம் கொடுங்கள் ஹஹ்ஹா "என ஜோக் அடித்தேன்.
" யாருக்கும் தானமாக கொடுத்து புண்ணியம் பெறுவதில் நம்பிக்கை இல்லை. நான் ஒரு பிஸினஸ் மேன் யாரிடமாவது பிஸினஸ் செய்து நஷ்டப்படவேண்டும். ஆனால் நான் செய்யும் எந்த தொழிலிலும் நஷ்டம் இல்லாமல் லாபம் தான் கொள்ளை கொள்ளையாக வருகிறது. என்ன செய்ய?"
"என்ன இது அருணாச்சலம் கதை போல இருக்கிறது?அவர் தானோ இது? அல்லது ஏதாவது லூசிடம் மாட்டிக் கொண்டேனோ? எங்கே அவர் தண்ணியடித்த காசை நான் கொடுக்க வேண்டி வருமோ?" என நழுவ நினைத்தேன்.

நான் மனதில் நினைத்தது எப்படி அவருக்கு கேட்டதோ.
"இரு நீ தமாசுக்கு கேட்டாயோ? என தெரியாது ஆனால் உண்மையில் நான் உனக்கு கொஞ்சம் பணம் தர நினைக்கிறேன். அதுவும் லட்சக் கணக்கில் . ஆனால் சும்மா தர மாட்டேன். ஒரு பிஸினஸ் மாதிரி தருவேன். எனக்கு நஷ்டம் உனக்கு லாபமான பிஸினஸ். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதுய்யா ? என்ன சொல்கிறாய்?
பேரர் இவரது பில்லையும் என் கணக்கிலேயே சேர்த்து விடு" என்று கேட்டு பில் பணம் மொத்தமும் அவரே கொடுத்து விட்டார் . ஆயிரம் ரூபாய் கத்தையிலிருந்து கையில் கிடைத்ததை எண்ணிப் பார்க்காமலேயே கொடுத்து விட்டு மிச்சத்தை எடுத்து கொள்ளும் படி பேரரிடம் கொடுத்து விட்டார். இன்னும் அவரிடம் நிறைய கட்டுகள் இது போல் இருந்தது.
எனக்கு ஒன்றும் புரியாம்ல் "ஙே" என்று முழித்தேன். அவர் தொடர்ந்தார்
"நாளையிலிருந்து நான் உனக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மாதம் அதாவது சரியாக 30 நாட்கள் தருவேன். ஆனால் ஒரு கண்டிசன்."
ஒரு லட்சமா? தினமுமா? அதற்கு நான் என்ன தரவேண்டும் ?
"முதல் நாள் நான் தரும் லட்ச ரூபாய்க்கு பதில் நீ எனக்கு பத்து காசு தந்தால் போதும்."
"பத்து காசுக்கு நான் எங்கே போவது வேண்டுமானால் பத்து ரூபாய் தருகிறேன் என்ன? "என்று நான் தமாசாய் சிரித்தேன்.
"நோ ஜோக்ஸ் . பத்து காசு என்றால் பத்து காசு தான் அதிகமாக ஒரு நயா பைசா வேண்டாம் . பிஸின்ஸ் இஸ் பிஸினஸ். வாக்கு தவறக்கூடாது.
இரண்டாம் நாள் இன்னும் ஒரு லட்சம் தருகிறேன், ஆனாம் இம்முறை இருபது காசுகள தர வேண்டும்.
மூன்றாம் நாள் இன்னும் ஒரு லட்சம் நான் தரும்போது முதல் நாள் தந்ததை போல் இரு மடங்கு அதாவது நாற்பது காசுகள் தரவேண்டும் இப்படி ஒவ்வொரு நாளும் நான் தரும் லட்சங்களுக்கு நீ முந்தய நாள் எனக்கு தந்ததை விட இருமடங்கு தந்தால் போதும்."

"என்ன இந்த மனிதன் உண்மையிலேயே மறை கழண்ட கேசா? . சில சில்லறை காசுகளை பெற்றுக்கொண்டு லட்சங்களை அதுவும் தினமும் தருகிறேன் என்கிறார்.ஒரு வேளை அதிகமாக ஏற்றிக்கொண்டு விட்டாரோ என அதிர்ச்சியிலும் யோசனையிலும் ஆழ்ந்தேன்.
நான் யோசிப்பதை தவறாக புரிந்து கொண்ட அவர், "பரவாயில்லை ஒரு லட்சம் என்பது குறைவாக இருந்தால் மன்னிக்கவும் தினம் ஐந்து லட்சம் தருகிறேன் என்று அவர் சொன்னதும் அதிர்ந்து போய்"அய்ய்யோ அப்படி யொன்றும் இல்லை" என்று நான் சொல்வதற்குள் மீண்டும் அவரே குறுக்கிட்டு "சே என்ன ஒரு மனிதன் நான் பேரம் பேசுகிறேன் . ஐந்து என்ன தினம் பத்து லட்சம் வீதம் தருகிறேன. நீங்கள் முதல் நாள் அதே பத்து காசு தந்தால் போதும் ஒகே யா? என்ன மகிழ்சி தானே? என்னிடம் உள்ள எராள பணத்தை வைத்து கொண்டு என்ன செய்யப் போகிறேன். என் பணம் விரைவில் தீர்ந்து விட்டால் போதும் எனக்கு நிம்மதியாக இருக்கும்"
நான் போட்டிருந்தது சுத்தமாக இறங்கி விட்டது. "இப்படியும் மனிதர்களா?"
" நான் சொல்வதை நம்பவில்லையா? நான் லூசும் இல்லை,போதை மப்பில் பேசவும் இல்லை. நான் செய்வது ஒரு பிசினஸ் இதில் என் பணத்தை இழக்கப் விரும்புகிறேன். முதலில் இது பற்றி தெளிவாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நாளை நீயோ நானோ மனம் மாறி விடக்கூடாது அல்லவா? ஒப்பந்தத்தை இடையில் முறிக்கக் கூடாது

சரி ..கொடுக்கிற தெய்வம் கூரையைய் பொத்துகிட்டு கொடுக்கும் என் விஷயத்தில் தெய்வம் இன்னும் கருணை காட்டி என் கூரயை கூட பிய்க்காமல் இந்த மனிதன் மூலமாக எனக்கு செல்வத்தை கொடுக்க விரும்புகிறது. இந்த அபூர்வ வாய்ப்பை நான் தவற விட விரும்ப வில்லை. போனால் எனக்கென்ன நஷ்டம் சில்லறை காசுகள். கிடைப்பதோ?...என்னால் அவ்வளவு பணத்தை எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை..
இன்றே ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் . என்று அன்றே பத்திரத்தில் ஒப்பந்தத்தை தெளிவாக எழுதி இருவரும் கையெழுத்திட்டு பதிவும் செய்து கொண்டோம்.
அவர் ஒன்று பைத்தியக்காராக இருக்க வேண்டும் அல்லது சன்னியாசியாயிருக்க வேண்டும்.
இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை எங்கேயெல்லாம் அலைந்து சில பத்து காசுகளை சேகரித்து வைத்திருந்தேன். என் அவசரத்தை உணர்ந்து ஐம்பது ரூபாய் அதற்கு பிடுங்கி விட்டார்கள். இப்படியும் சில மனிதர்கள்.உலகை நினைத்தால் வினோதமாக இருந்தது.

கோபால் சொல்லிக்கொண்டிருக்கும் போது சட்டென எனக்கு நம்ம பதிவர் நண்பர் அபூஅஃப்ஸரின் ஒரு பதிவில் இப்படித்தான் ஜிம்பாப்வே நாட்டினர் மூன்று முட்டைக்கு 100 பில்லியன் கொடுத்து வாங்குவார்கள் என படித்தது ஞாபகம் வந்தது. "கோபால் நீ சந்தித்தது ஒரு ஜிம்பாப்வே மனிதரையா? உன் பத்து காசை வாங்கி கொண்டு அவரது பணத்தில் பத்து லட்சம் தந்து ஏமாற்றி விட்டார் சரிதானே?"

"இல்லை அவர் ஏமாற்று காரர் இல்லை அதெல்லாம் ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதியிருந்தேன். சொன்ன படி மறு நாள் அதி காலையில் கையில் ஒரு சூட் கேசுடன் காரில் வந்திறங்கி விட்டார். என்னிடம் கொடுத்து எண்ணிப் பார்க்க சொன்னார். எல்லாம் ஒரிஜினல் ரூபாய்கள் தான் சரியாக பத்து லட்சம் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு வெறும் பத்து காசு கொடுக்க எனக்கு என்னாவோ போல் தான் இருந்தது. ஒப்பந்தம் அப்படி தானே எழுதிக் கொண்டோம். நான் கொடுத்த பத்து காசை பொற்காசு போல எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு மறு பேச்சின்றி கிளம்பி விட்டார். என்னால் எதையும் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் நெஞ்சு வலி வந்து விடக்கூடாதே என்ற கவலை வேறு.

நான் வாய் பிளந்த படி கேட்டுக்கொண்டிருந்தேன். கோபால் கதை விடுகிறானோ?

"மறு நாளும் இதே போல அதி காலை வந்து இன்னொரு பத்து லட்சம் தந்து விட்டுப் போனார். இம்முறை ஒப்பந்தப்படி இருபது காசுகள் வாங்கிச்சென்றார். மூன்றாம் நாளும் பத்து லட்சம் கொண்டு தந்து நாற்பது காசுகள் வாங்கி சென்றார்.
அவரது பயம் நியாய மானது தான் இப்போடு முப்பது லட்ச ரூபாய் சேர்ந்த உடனே யாராது திருடர் வந்து கொள்ளையடித்து சென்று வடுவார்களோ என்ற பயம் எனக்கே ஏற்பட்டு விட்டது."

"ஜாக் பாட் கூட இப்படி அடிக்காதே! நீ உண்மையிலேயே பெரும் அதிர்ஷ்டக்காரண்டா? பின் என்னடா அறிவு கெட்டவனே சோகத்தில் இருக்கிறாய்? லைஃபை நல்லா என்ஜாய் பண்ண வேண்டியது தானே? மொத்தம் முப்பது நாளில் ஒப்பந்தம் முடிந்து விடும் அதற்கு பிறகு பணம் வராது என்ற கவலையா?"

அட நீ வேறு அந்த எழவு ஒப்பந்தம் இப்போதே தீர்ந்து விடக்கடாதா? அல்லது என் உயிர் போய்விடாதா? என கவலையாயிருக்கிறேன். ஆரம்பத்தில் நான் நினைத்து போல் அல்ல இப்போதெல்லாம் பொழுது விடிவதே உயிரை அறுக்கத்தான் என்பது போல் வருகிறது. தினமும் அவன் கொண்டு வரும் பத்து லட்ச சூட்கேஸ் அளவு அப்படியயே தான் இருக்கிறது. ஆனால் கொண்டு போகும் பெட்டிதான் இப்போதெல்லாம் பெரிதாகி கொண்டிருக்கிறது. கொடூரமான இந்த ஒப்பந்ததில் கையெழுத்து போட்டதில் என் வீடு.என் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தெல்லாம் போய் விட்டது.அந்த ஒப்பந்தம் மட்டும் இன்னும் பாக்கியிருக்கிறது. என் வீட்டை அவசரமாக விற்பது பற்றி ஆலோசனை கேட்கத்தான் உன்னைஅழைத்தேன்.

கடற்கரையின் தூண்டில் வளைவில் ஒருவன் தூண்டிலில் ஒரு புழுவை வைத்துக் கடலில் எறிகிறான் சிறிது நேரத்தில் ஒரு கொழுத்த மீனை எடுத்து கரையில் போட்டான் .
நான் குழப்பமாக கோபாலை பார்தேன்.
"என்ன சொல்கிறாய்?. தினம் பத்து லட்சம் கிடைத்துமா இன்நிலை. நம்ப முடியவில்லையே? சரி இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது ஒப்பந்தம் முடிய சமாளிக்க முடியாதா?"
"அதற்குள் நான் முடிந்து விடுவேன் போலிருக்கிறது" என கோபால் கடலை வெறித்துப் பார்த்தான்.
கோபால் இன்னும் கொடுக்க வேண்டிய தொகையை கடற்கரை மணலில் கூட்டிப் பார்த்தேன். என் தலை கிறு கிறுத்தது. முதலில் கோபாலை கடற்கரையிலிருந்து தூரமாக கொண்டு செல்ல வேண்டும். கோபாலின் இப்போதைய நிலைக்கு என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. அப்புறம் யோசிக்கலாம்.என்ன நண்பர்களே! கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டரை ஒப்பன் பண்ணி ஒப்பந்த படி கோபால் முப்பதாவது நாள் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு? மொத்தம் கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு? மொத்தம் பெற்றுக் கொண்டது எவ்வளவு? ஒரு சின்ன லாப நட்ட கணக்கு போட்டு பாருங்கள். (கால்குலேட்டரில் 1 **2 என க்ளிக் பண்ணிவிட்டு = பொத்தானை மட்டும் மீண்டும் மீண்டும் க்ளிக் பண்ண முந்தைய எண்ணின் இரு மடங்கு காட்டும்.) அதை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு கோபாலிடம் சொல்லி அந்த கோடீஸ்வரரை உங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்கிறேன். தினம் பத்து லட்சம் கிடைக்கும்.
எனக்கு அதிக பணம் தேவை இல்லை. ஒரு பத்து நாள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டு சொல்ல சொல்லியிருக்கிறேன்.

Download As PDF

8 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கணக்கா? நாமலா? நமக்கு கணக்கு பண்ணதானே தெரியும் ??

அபுஅஃப்ஸர் said...

ஆஹா தினம் பத்துலட்சமா? ஹய்யோ நான் என்னசெய்வேன், இப்படி பண்ணிட்டாரே சாதிக்.. சொக்கா..அது எனக்கில்லை எனக்கில்லை.......

நல்லா யோசிக்கிறீங்கப்பூ

யோசிச்சு எவ்வளவு என்று சொல்லுகிறேன்

என்னுடைய பதிவையும் இங்கே உதாரணம் காட்டியதற்கு நன்றி அய்யா

சாதிக் அலி said...

குறை ஒன்றும் இல்லாத அப்பூ எம்ம்புட்டு கணக்கு பண்ணியிருக்கீக..கணக்கு வழக்கு உண்டா?:-)

அபூ அஃப்ஸர்...கடைசி அஞ்சு நாள் அக்ரீமென்டை நீங்கள் கண்டின்யூ பண்றீங்களான்னு கோபால் கேக்க சொன்னார். ...ஹலோ ஹலோ இருக்கிறீங்களா?

நட்புடன் ஜமால் said...

விடையத்தெரிஞ்சிகிட்டு

வடை போச்சேன்னு சொல்ல வாறேன் ... ;)

Prabhagar said...

நண்பா,

மிகவும் சாதுர்யமாக ஒரு கணக்கினை வைத்து அழகாக மெருகேற்றியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

Suresh said...

அவரு MLM multi level marketing la சேர்ந்து இருந்தாருனா எமாந்து இருக்க மாட்டாரு சில ஆயிரங்களை கொடுத்து பல கோடிகளை முழுங்கும் பல பிசினஸ் இது என்ன செய்ய

நல்ல வேளை நம்ம கணக்கில் கொஞ்சம் வீக் இல்லை நீங்க ஒப்பந்தம் சொன்ன வுடனே இதை நினைத்து அதிர்ந்தேன்

அப்பால கடைசியில் நான் நினைத்தது சரி

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பதில அனுப்புங்க தல..,

சாதிக் அலி said...

பின்னூட்ட பூஸ்ட் கோடுத்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. கால்குலேட்டரை யூஸ் பண்ணாதவங்களுக்கு
கோபால் தினமும் கொடுத்த பணம்:
1 - 10
2 - 20
3 - 40
4 - 80
5 - 1.60
6 - 3.20
7 - 6.40
8 - 12.80
9 - 25.60
10- 51.20
11- 102.40
12- 204.80
13- 409.60
14- 819.20
15- 1638.40
16- 3276.80
17- 6553.60
18- 13107.20
19- 26214.40
20- 52428.80
21- 104857.60
22- 209715.20
23- 419430.40
24- 838860.80
25- 1677721.60
26- 3355443.20
27- 6710886.40
28-13421772.80
29-26843545.60
30-53687091.20
கோபால் கொடுத்த மொத்த பணம்:10,7374182.30
கோபால் மொத்தம் பெற்றது:3,0000000