தமிழ் சினிமா-அரைச்ச மாவை அரைப்போமா?


சினிமாப் படம் எடுப்பது ரிஸ்கான தொழில்.கஸ்டப்பட்டு படம் எடுப்பவர்களுக்கு கடைசியில் கையில் விருது கிடைக்குமா?இல்லை பிச்சை சட்டி கிடைக்குமா? என்று படம் வெளியாவது வரை திக் திக் தான்.திருவாளர் பொது ஜனத்தின் ரசனையை கணிப்பது கஸ்டம் தான்.அரசியல் வாதிகளையும் தேர்தலில் திகிலூட்டி எதிர்பாராமல் குப்புறத்தள்ளிவிடும் தன்மை மக்கள் தீர்ப்புக்கு உண்டு. பொதுவாக சில தமிழ் படம் பார்க்க நேர்ந்தால் மூளையை கழற்றி ஃபிரிட்ஜில் வைத்து விட்டு வந்திருக்கலாமோ என்று தோன்றும்.காமடி எது கதை என்ற குழப்பம் அடிக்கடி வரும்.படம் தொடங்கியது முதல் முடியும் வரை லாஜிக்கெல்லாம் பார்க்க முடியாது. கையில் ஒரு பாக்கட் பாப்கார்னோ ஒரு கேர்ல் ஃபிரென்டோ இல்லாமல் தியேட்டருக்குள் போனால் கண்டிப்பாக வருந்த நேரிடும். அனேக தமிழ் படங்களில் பட்டா போட்டு உட்கார்ந்திருக்கும் சில விசயங்களில் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.உடன்பாடு என்றால் "ஓ" போடுங்கள்.இல்லை என்றால் நிறைய தமிழ் படங்கள் பாருங்கள்.இரண்டொன்றை பார்த்தாலே கண்டிப்பாக ஒப்புக்கொள்வீர்கள்.(அபூர்வமாக வரும் நல்ல படங்களை மட்டும் காசு குடுத்து பார்ப்பது வொர்த்) ஒரு படத்தின் தொடக்கம் பெரும்பாலும் இப்படிதான் இருக்கும் பொழுது புலரும் வேளை,சுப்ரபாதம்,மணியடித்து சாமி கும்பிடுவது போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் ஒரு குற்றவாளியின் அறிமுகம் சிறைச்சாலையிலிருந்து கதாநாயகன் விடுதலை ஒரு பிணத்தின் கண்டெடுப்பு பரபரப்பான சாலை காலை நேரம், ஆக்ஸிடென்ட், ICU கதாநாயகனை அறிமுகப்படுத்து முன் ரவுடிகள் பெண்கள் கையை பிடித்து இழுத்திருப்பர்கள்.தொடர்ந்து ஒரு ஃபைட், டப்பாங் குத்துப் பாட்டு. படத்தின் இடையிடையே டிவி விளம்பரம் போல கதையுடன் ஒட்டாத காமடியர்கள் அண்ட் கோஸ்டிகளின் தனி ட்ராக்.நாயகனுக்கு ஒரு காமெடித் தோழன் கட்டாயம் தேவையா? ஒரு குடும்பம் முழுதும் சந்தோசமாக ஆடிப்பாடினால் அடுத்து கண்டிப்பாக ஒரு எழவு விழும். பட்டிக் காட்டுக் கதையானாலும் நாயகிக்கு வெளுத்த தோல் தான்.லிப்ஸ்டிக்கும் ஷாம்பூ போட்ட கூந்தலும் கலக்கு்ம் ஆனால் தாவணி பாவாடை தான்.அதில் தான் இடுப்பைக் காட்ட முடியும்.மோசமான வில்லன்களுக்கு எவ்வளவு அழகிய மகள்கள்? சினிமாவில் பெண்களை எவ்வளவு கேவலமாகக் காட்டுகிறார்கள்.எந்த மாதர் சங்கமும் ஏன் வாய் திறப்பதில்லை. பெண்களில் உடலை 90% திறந்து காட்டி திரையில் கடை விரிக்கிறார்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும், போதைப்பொருளாகவும் தான் காட்டுகிறார்கள். பெண்கள் கதறி அழுவதைக் காட்டுகிறார்கள். அவர்களது உடம்பை அல்லாது மென்மையான உணர்வுகளை காட்ட எந்த காமிரா முயன்றிருக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ ஆண்களை காதலிக்க பேயாய் அலைவது போல கதாநாயகனிடம் எதுவும் யோசிக்காமல் கப்பென்று விழுந்து விடுகிறார்களே. ஒரு சுயமரியாதையுள்ள ஆணுக்கும் ,பெண்ணுக்கும் காதலை ஒருவர் மற்றவரிடம் சொல்வது எத்தனை கடினமான செயல். காதல் இல்லாமல் எந்த படமும் இல்லை. ஆனால் காதலின் மெல்லிய உணர்வுகளை சொல்லியது அபூர்வமாக ஒரு சில படங்களே. ஒரு சந்திப்பு ,அடுத்து வெளி நாட்டில் கனவுக் காட்சி. அதோடு காதல் முடிந்தது.வேகமாக நகரும் உயிரற்ற காட்சிகளும் பஞ்ச் டயலாக்குகளும் தான் படம்.ஆண்களை ரவுடிகளாகவும்,வீரர்களாகவும் தான் காட்டுகிறார்கள்,அறிஞனாக காட்டுகிறார்களா? எந்த கதையானாலும் ஐந்து நிமிடதிற்கு ஒரு முறை பாட்டு அவசியம் தானா? நாம் சாதாரணமாக காணும் மனிதர்கள் இப்படி தங்கள் உணர்வுகளை பாடித்தான் வெளிப்படுத்துகிறார்களா? சோகத்தில் கூட இப்படி இனிமையாகப் பாடுவார்களா? குடும்பப் பெண்கள் பாடல் காட்சிகளில் தெருவில் கூடி ஆட்டம் போடுவதாக காண்பிப்பது எந்தக் கலாச்சாரம். கதாநாயகி கூட அந்த கூட்டத்தில் மிடி அணிந்து ஆடுவதைக் காணலாம்.இடுப்பை ,தொப்புளை ,மார்பை குளோசப்பில் காட்டாத பாடல் காட்சி இல்லை.பாடல்களானால் ரெட்டை அர்த்தம் என்ன பச்சையாக கணவன் மனைவி கூட பேசக் கூசும் வார்த்தைகள்.(இத்தகைய தரங்கெட்ட பாடல்களை ஸ்கூல் ஆண்டு விழாக்களில் சிறு குழந்தைகள் பாடி ஆடுவதை கேட்டு ரசிக்கும் பெற்றோர்களை என்ன சொல்ல)உயர் போலீஸ் அதிகாரி அல்லது மதிப்புக்குரிய உத்தியோகத்திலிருக்கும் கதாநாயகன் தெருவில் பெண்களோடு குத்தாட்டம் போடுவது எங்கே நடக்கிறது.பாட்டு ,ஃபைட்டு இல்லாமல் ஒரு கதை இருக்கவே முடியாதா? தண்ணி அடிப்பதை தமிழக கலாச்சாரமாகவே காட்டுகிறார்கள்.நியாயப்படுத்துகிறார்கள். அதற்கென்றே மப்புப் பாடல்களும் தர கவிஞர்கள் தயார். படத்தில் தேசிய உணர்வு வர எப்படியாவது எல்லைப் பாதுகாப்புப் படைக் காட்சிகள் சேர்த்துக்கொள்வார்கள்.ஆனால் போலீசை காமடியர்களாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வில்லன்கள் என்றால் சுத்தி எப்போதும் அரிவாளோடு அடியாட்கள்.கதாநாயகன் வெறுங்கையாகவே வில்லனின் இருப்பிடத்துக்கே வந்து சவால் விட்டு முழுசாக திரும்பி போய் விடுவார்.50 பேர் இருந்தாலும் அனாயசமாக அடித்து நொறுக்கும் நாயகனிடம் ஒவ்வொருவராக வந்து அடி வாங்கி செல்லுவது நல்ல நகைச்சுவை. அப்புறம் அடியாட்கள் கதாநாயகனின் வீட்டில் உள்ள சாதுக்களை மிரட்டுவார்கள். சாதனங்களை யெல்லாம் போட்டு உடைத்து விட்டு போவார்கள்.படம் முழுக்க துப்பக்கியை தூக்கி அலைவது அரிவாள்களுடன் திரிவது.சண்டையெல்லாம் மார்கெட்கள், குடோன்கள், explosives என்று எழுதிய அட்டைப்பெட்டிகள், மண்ணெண்ணெய் பீப்பாய்கள், கண்டெய்னர்கள், ராட்சத எந்திரங்கள் உள்ள இடங்களில் தான் நடக்கும்.டப்பாக்கள், அட்டைபெட்டி, அலுமினிய பாத்திரங்கள், காய் கறிகள், மண் சட்டிகள், கூரைகள்,தள்ளு வண்டிகள்,காரின் முன்கண்ணாடி, வீட்டுக் கண்ணாடி, ஈர செங்கல் சுவர் இவையெல்லாம் சாதாரணமாக அடியாட்கள் சரியாக போய் விழும் இடங்கள்.கிளைமேக்ஸ் காட்சியென்றால் ட்ரான்ஸ் பார்மரில் விழுந்து வெடிப்பது.வில்லன் வைத்த டைம் பாம் வெடிக்க ஒரு செகண்ட் இருக்க நாயகன் வெளியே வரவும் பேக்ரண்டில் வில்லனில் கூடாரம் வெடிது சிதறுவதும் சரியாக இருக்கும் ,ஆனால் மெயின் வில்லனும் தப்பித்து விடுவான் அவனை தனியாக டயலாக் பேசி கொல்ல வேண்டும்.ஒரே குத்தில் 80 கிலோவுக்கு மேல் உள்ள அடியாள் வானில் பறந்து போவது,சுழன்று சுழன்று விழுவது, ஒரு அடியில் அத்தனை பேரும் அந்தரத்தில் பறப்பது. எல்லோரையும் ஒரே அடியில் பரலோகம் அனுப்பி விட்டு ஒரே ஒரு பிளாஸ்திரி மட்டும் போட்டுக்கொண்டு தோன்றும் நாயகன் இப்படி இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சகிப்பது.நிஜ வாழ்வில் இப்படி ஒரு ஹீரோவை தமிழகம் எப்போதாவது பார்த்திருக்கிறதா? ஒரு கார் சேஸ்,அல்லது எதாவது ஓட்டம் துரத்தல் கண்டிப்பாக இருக்கும். வில்லனிடம் தனியாக மாட்டிகொள்ளூம் நாயகன்.அப்போது ஒப்புதல் வாக்குமூலம் போல் எல்லா உண்மைகளையும் வில்லன் தன் வாயால் சொல்வது. கடைசி நேரத்தில் வில்லன் கையில் உள்ள துப்பாக்கியை கதாநாயகன் காலால் தட்டி விடுவது.வில்லனை ஓங்கி ஈட்டியால் குத்தப் போய் தரையில் குத்தி பழிவாங்காமல் மன்னித்து விட்டு திரும்புவது. வில்லன் அந்த ஈட்டி அல்லது துப்பாக்கியை எடுத்து் ஹீரோவை குறி வைப்பது ,போலீஸ் அல்லது ஏதாவது பெண் பின்னலிருந்து வில்லனை தீர்த்து கட்டி சுபம் போடுவது. அல்லது படத்தின் முடிவில் வில்லன் திடீரென ஞானம் பெற்று மகளை சேர்த்துவைப்பான்.அல்லது ஹீரோ ஆஸ்பத்திரி ICU என்று போராடி கண்விழித்து நாயகியை முதலில் பார்ப்பது.இது தான் பெரும்பாலான படங்கள் நிலை.விதி விலக்குகளும் உண்டு. கதை காட்சி என்று தான் இதுவரை அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ரீமிக்ஸ் என்ற பெயரில் பழைய பாடல்களை பெயின்ட் அடிக்கிறார்கள்.பிரியானியில் சாம்பார் கலந்து சாப்பிடுகிறார்கள்.படங்கள் தலைப்புக்கூட இப்போது ரீசைக்கிள் பின்னிலிருந்து தான் எடுக்கிறார்கள் ஒரு படமென்றால் கதையல்லாம் முக்கியமல்ல யார் ஹீரோவோ அவரின் இமேஜுக்கு தகுந்த ரெடிமேட் கதை உருவாக்குவார்கள். ஒரு நடிகன் என்றால் எல்லா பாத்திரமாகவும் மாற முடிய வேண்டும் இமேஜ் என்னும் ஒரு கூண்டுக்குள் அடைபட்டு தமக்காவே சினிமா உருவாக்கி மக்கள் மனதில் ஹிரோவாக இடம் பிடித்து நாளை நாற்க்காலியை கைப்பற்றுவதை லட்சியமாகக் கொண்டு தான் எல்லா நாயகர்களும்.இது எம் ஜி யாரின் பாதிப்பு. இங்கு கதையின் பாத்திரங்கள் பேசப்படுவதில்லை அதில் நடித்தவர்கள் தான் பேசப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? இதற்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம் .படம் எடுப்பவர்கள் தங்கள் முதலுக்கு மோசம் போகக்கூடாது என்று ரிஸ்க் எடுப்பதில்லை. அதனால் தான் எம்ஜியார் காலத்திலிருந்தே வெற்றி பெற்றுவரும் இந்த பார்மு்லாவை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் ரசனை மாற வேண்டும் .இது போன்ற படங்களை உடனே தியேட்டரை விட்டு ஓடசெய்தால் அடுத்து நல்ல திரைப்படங்கள் நிச்சயம் வரும்.இத்தகைய குப்பை படங்களை திருட்டு விசிடி போட இன்னொரு கும்பல் காத்திருக்கிறது.பெரும்பான்மை மக்களின் ரசனை மாறாததால் தான் சில படங்கள் சற்று வித்தியாசமாக புது முயற்சியில் வந்தாலும் மக்கள் மண்டைக்குள் அது ஏறுமுன்னே தியேட்டரை விட்டு காணாமல் போய் விடுகிறது. இத்தகைய படங்களை பயனுள்ளதாக்க சில யோசனைகள். சிறைச்சலைகளில் எப்போது தமிழ் படம் ஓடச்செய்தால் குற்றவாளிகள் எண்ணிக்கை குறையும் மனநோய் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெட்டராக ஃபீல் செய்ய உதவும் வீட்டில் மூன்று நாளக்கு மேல் டேரா போட்டிருக்கும் விருந்தாளியை விரட்ட ஒரே தமிழ் படத்தை திரும்பத்திரும்ப போட்டு காட்டலாம்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னும் சில:
கிளைமாக்ஸில் கதாநாயகியைக் கெடுக்க முயல்வான் வில்லன். அவனை சாகிற கட்டம்வரை துவைப்பார் ஹீரோ. அப்போ ஒரு அல்லக்கை வந்து ஹீரோவிடம் அடி வாங்கும். சாகும் தறுவாயிலும் மீண்டும் எழுந்து வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்க முயல்வான். (அடப் போங்கடா...)

ஹீரோ அல்லது வில்லன் கையில் மட்டுமே துப்பாக்கி அல்லது வேறு ஏதாவது ஆயுதம் இருப்பதாக காட்சி வந்தால், நிச்சயமாக ஆயுதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மல்யுத்தம் (என்னாது!!!!!) செய்வார்கள்.

சமீபத்தில் எல்லப்படங்களிலும் “லே” சேர்த்துப்பேசுவதும் (உதாரணம்- காளலே)ஒரு புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது. (கவுண்டர் இதை கிண்டலடித்தும் விட்டார்)
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
சாதிக் உண்மையிலேயே உணர்வுப்பூர்வமான பதிவு

இதை யோசிக்கதான் இத்தனை நாள் ஆளை காணோமா

இந்த பதிவு சினிமா மோகத்தை தாக்கும், மக்கள் இதைதான் என்டெர்டெய்ன்மென்ட் என்று சொல்றங்க, எப்படி எடுத்தாலும் காசு கொடுத்து பார்க்க ரெடியா இருக்காங்க

எப்படி கத்தினாலும் நம்ம ஆதங்கம் அவர்களை சென்றடையா..

சினிமாக்காரர்கள் கொட்டாவி விட்டாலே அது ஒரு செய்தி....

இது ஒரு மாயை உலகம்...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க keith kumarasamy, வாங்க அபு அஃப்ஸர். கருத்துக்கு நன்றி.தமிழ் சினிமாக்காரர்களால் நல்ல படங்களை கொடுக்க முடியும்.ஆனால் அட்ரீனல்,மற்றும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை ரசிகர்களிடம் அதிகம் சுரக்க செய்தால் தானே அவர்களுக்கு போட்ட முதல் கிடைக்கும்.சினிமா பார்த்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டே தமிழர்களுக்கு சுரணை குறைந்து விட்டதோ என சில வேளை தோன்றும்.
அபூ அஃப்ஸர் நீங்களாவது என்னை தேடுகீறிகளே!எப்படி உங்களை எல்லாம் விட்டு ஒதுங்க முடியும்.