கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 1)


இன்று எனது யாஹூ மெசெஞ்ஜெரை பார்த்த போது ஒரு ஆச்சரியம் அதில் எனது காண்டாக்ட் லிஸ்டில் "கடவுள்" என்றொரு ஐடி இருந்தது. இது எப்படி வந்தது யாராவது ஏப்ரல் ஃபூல் ஆக்க இப்படி செய்து வைத்திருக்கிறார்களா ?என யோசித்துக்கொண்டிருந்த போது அந்த ஐகான் பச்சையாகி "ஹாய்" என்று மெசேஜ் வந்தது. அதன் பின் எங்கள் உரையாடல் இப்படியிருந்தது. "ஹாய் நீங்கள் யார்" "நான் கடவுள்" "இருக்கட்டும் இருக்கட்டும் என் அக்கவுண்டில் எனக்குத்தெரியாமல் உங்கள் பெயரை எப்படி சேர்க்க முடிந்தது?" "ஹ ஹா அது ஒன்றும் கஸ்டமில்லை உன் ஐடி பாஸ்வேர்டு எனக்குத்தெரியும் நானே லாகின் ஆகி...." "அடக் கடவுளே! அப்ப நீ ஹேக்கரா" "நீ சொன்ன முதல் பாதி தான் சரி" "நான் நம்ப மாட்டேன் நீ கடவுளாக இருக்க முடியாது?என் பாஸ்வேர்டை எப்படியோ திருடி விட்டாய்?" "சரி நான் கடவுள் தான் என்று நீ நம்ப என்ன செய்ய வேண்டும்" "நான் என்ன கலர் சட்டை போட்டிருக்கிறேன் சொல்ல முடியுமா?" என்று டைப் அடித்து விட்டு என்டர் பட்டனை அழுத்தவில்லை அதற்குள் "டார்க் ப்ளூ கலர் சட்டை போட்டிருக்கிறாய், கண்ணாடி போட்டிருக்கிறாய்" மனதில் நினைத்ததற்கு சேர்த்து பதில் வந்தது. அதிர்ந்து போனேன். என் முன்னாலிருந்த வெப் காமிராவைப் பார்த்தேன் அது கம்ப்யூட்டரில் இணைக்கப்படாமல் தான் இருந்தது. இருந்தும் அதனை திருப்பி வைத்து அதன் மேல் ஒரு துணியும் எடுத்து போர்த்தி விட்டேன். சட்டென்று பொறி தட்டியது கூகிள் எர்த்தின் சாட்டலைட் காமிரா ஜன்னல் வழி கண்காணிக்கிறதா? ... ஜன்னலை இறுக மூடிக்கொண்டேன். "LOL" "கடவுளே இதென்ன சோதனை. சரி என்னைப் பற்றி வேறென்ன தெரியும்?" "உன் ஐ பி அட்ரெஸ் சொல்லவா? டெஸ்க் டாப் வால் பேப்பர் சொல்லவா?உன் இ மெயில்கள் வாசிக்கவா?அதிலிருந்து வேறு பல அக்கவுண்ட் பாஸ் வேர்ட் சொல்லவா? உன் கம்ப்யூட்டரில் ஹிட்டன் ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்கள் பேர் சொல்லவா? கூகிள் செர்ச் ஃஹிஸ்டரி, பிரவுசர் ஹிஸ்டரி சொல்லவா? டாரென்ட் டவுண்லோடு ஹிஸ்டரி சொல்லவா? பேங்க் யூசர் ஐடி பாஸ்வேர்ட் சொல்லவா?" "ஐய்யோ நீ ஹேக்கர் தான்" "நீ நாத்திகனானால் நான் ஹேக்கர் தான். உன் அக்கவுண்ட் பணமெல்லாம் ஆன்லைன் வழி என் அக்கவுண்டுக்கு மாற்றப்பட்டு விட்டது நீ தொலைந்தாய். நீ என்னை கடவுள் என்று நம்பினால் கேட்பதை தருவேன்" .சொல் . நம்பிக்கை தான் உன் உலகை தீர்மானிப்பது. எப்படி நம்புகிறாயோ அது தான் உண்மை. "அய்யயோ கடவுளே! நீ ஹேக்கராக இருக்கக் கூடாது. இல்லை இல்லை நீர் கடவுள் தான் நம்புகிறேன் ஐயா நம்புகிறேன். இருந்தாலும் நான் மனிதன் இல்லையா சந்தேகம் கூடப்பிறந்தது. சரி இந்த தகவல் எல்லாம் எப்படி தெரிந்தது? நீ கடவுள் என்றால் உண்மையை சொல். "நீ என்னை நம்புவதாய் சொன்னது பொய். எனவே அதற்கேற்ற உண்மையை சொல்கிறேன். உன் மேஜை மேல் கிடக்கும் காமிரா ஃபோன் வழி இணையத்தில் லைவ் ஆக எல்லாம் எனக்கு பார்க்க முடிகிறது. நீ அதை ஆஃப் செய்ய மறந்து விட்டாய். நீ மற்றொரு பிசி யில் யாஹூவில் பாஸ்வேர்ட் அடித்து லாகின் செய்வது கூட தெளிவாக பார்க்க முடிந்தது. உன் சட்டை கலரும் அப்படித்தான் சொன்னேன்" என்று நான் சொன்னால் நீ திருப்தி யாவாய். ஆனால் நான் உண்மையான கடவுள், உண்மை தான் சொல்வேன். மேலே "_"சொன்னது பொய். "முகத்தில் தண்னீர் தெளித்து நினைவு வர வைத்து அடிக்கிறாயே கடவுளே நான் எதை நம்ப" "நம்பிக்கை வரும் வரை குழப்பமாகத்தான் இருக்கும். நான் இருக்கிறேன் அல்லது இல்லையென்று தெளிவாக நம்பும் வரை குழப்பம் தான். பார் நானே உன்னை வலிய தொடர்பு கொண்ட போதும் நம்பிக்கை வரவில்லை உனக்கு" "ஒகே உன்னை நம்புகிறேன். நேற்று நான் இன்னேரம் என்ன சாப்பிட்டேன் சரியாக சொன்னால் கடவுள் என நம்புகிறேன்." "இது போன்ற சில்லியான கேள்வி கேட்டு என் நேரத்தை வீணடிக்கிறாய். இருந்தாலும் உனக்கு நம்பிக்கை வருவதற்காக சொல்கிறேன் சில்லி சிக்கனும் நாலு பரோட்டாவும். இன்னும் இரண்டு கூட சாப்பிட இடமிருந்தும் கொலெஸ்ட்ரால் கருதி நிறுத்திக்கொண்டாய் சரியா?" அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். சந்தேகமே இல்லை கடவுளே தான். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது. கடவுளிடம் கேட்க கருதி வைத்திருந்த எல்லா கேள்விகளையும் கேட்டு விட மனசு பரபரத்தது. ஆனால் தற்போதய தேர்தல் பரபரப்பால் எல்லாக் கேள்விகளையும் முந்திக்கொண்டு முந்திரி கொட்டை போல எந்த கட்சி ஜெயிக்கும்? என்று கேட்க நினைத்தது தான் தாமதம். அதற்குள் டுடொய்ங் என்று கடவுள் லாக் ஆஃப் ஆகி விட்டார். கடவுளை எதிர் பார்த்து வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இனி வந்தால் கடவுளுக்கும் பிடிக்காத அரசியல் சாக்கடையை கிளறக்கூடாது. கடவுளிடம் வேறு நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். இன்றைய தினத்தை கருதி இதை நீங்கள் கூட நம்பாமல் இருக்கலாம் . அது உங்கள் இஸ்டம். உங்களுக்கு கடவுளிடம் சீரியசான கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடவும், கேட்டு சொல்கிறேன் (தொடரும்) 
 
கடவுளுடன் ஒரு சாட்டிங் : மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
கடவுளிடம் ,சாதிக் அவர்களுக்கு,பயம் எல்லாம் போய் ,தெளிவான மனநிலை வேண்டும் என கேட்பேன்...ஹ ஹா ஹா
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்கல் சாதிக்

நல்லாவே கலாய்ச்சிருக்கீங்க கடவுளை, நல்ல கற்பனை வளம் உங்களுக்கு
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//உங்களுக்கு கடவுளிடம் சீரியசான கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடவும், கேட்டு சொல்கிறேன்
//

நீங்களே எல்லாத்தையும் கேட்டு அடுத்த பதிவுலே போடுங்க‌
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ராஜேஸ்வரி அந்த சிரிப்பு எனக்கு சந்தேகமாக இருக்கிறது .கடவுள் ஐடியில் வந்தது நீங்கள் தானோ?
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
சாதிக் அலி சொன்னது…
ராஜேஸ்வரி அந்த சிரிப்பு எனக்கு சந்தேகமாக இருக்கிறது .கடவுள் ஐடியில் வந்தது நீங்கள் தானோ?//

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அதுதான் கடவுள்...

மானிடனே..என்னை கடவுள் என்று நம்பினால் ”நான் கடவுள்”!(சே! என்னது இது ஆரியா வாய்ஸ் கேட்குது)