கடவுளுடன் ஒரு சாட்டிங் (பகுதி 4)

நேற்று மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகம் படித்து விட்டு அப்படியே தூங்கி போய்விட்டேன். ஒரே யுத்தக் கனவாக வந்து பயமுறுத்திகொண்டிருந்தது. சரித்திர மன்னர்களின் அட்டூளியம் தாங்க முடியவில்லை. ஏதோ ஒரு கொள்ளைக்காரனின் குறுவாள் என் தொண்டையை அழுத்த பதறிப் போய் எழுந்தேன். என் கழுத்திலிருந்து பக்கத்தில் கிடந்த என் பிள்ளையின் காலை எடுத்து நீக்கி வைத்து விட்டு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தேன். கண்ணை மூடியதும் தான் தாமதம் கால எந்திரம் ஏதோ ஒரு போர்களத்தில் என்னைக் கொண்டு விட்டு விட்டது. ஒரு மொகலாய மன்னனின் உடையில் நான். கையில் இருந்த வாளை சுழற்றி சுழற்றி எதிரிகளையும் என் நாட்டு வீரர்களையும் முகம் நோக்காமல் கண்ணில் பட்டவர்களின் தலைகளை கொய்து கொண்டிருந்தேன். என் வாளால் துண்டாகிப் போன ஒரு தலை "அரசே நான் உங்கள் தளபதி என்னையா....என்று தொங்கி விட்டது. கடைசியில் பார்த்தால் என் வீரர்கள் எவரும் உயிருடன் இல்லை. நான் மட்டுமே நின்றிருந்தேன். எதிரி மன்னன் என் அருகே வந்து குதிரையிலிருந்து இறங்கி கை குலுக்கினான். என் எதிரிகளையெல்லம் நீ வெட்டிச் சாய்த்த வீரத்தை பார்த்தேன். மெச்சுகிறேன். வீரனே இனி மேல் நான் மன்னனில்லை நீ தான் எனக்கும் மன்னன் என்று என்னை குதிரையில் ஏற்றி விட்டான். (அரசியலில் இதெல்லம் சகஜமப்பா) மற்ற எல்லா வீரர்களும் ஒத்த குரலில் "எங்கள் தானைத் தலைவா நீ வாழ்க "என்று போட்ட கோசத்தில் கனவு கலைந்தது.(வரும் தேர்தலை என் கனவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்) அப்பாடா எல்லாம் கனவு தானா? நல்ல வேளை நான் யாரையும் கொல்லவில்லை. ஹோ .. அந்த தளபதியின் துண்டான தலை வேறு என் மேனேஜர் தலை போல் இருந்தது. நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன்.
இன்று கடவுளுடன் சாட் செய்யும் போது நேற்றைய கேள்வியை ஞாபகப்படுத்தினேன். "பாவிகளுக்கு நீ என்ன தண்டனை வைத்துள்ளாய்?" "நீ இன்று போரில் எத்தனையோ தலைகளை உருட்டித்தள்ளினாயே அதற்கு நான் உன்னை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுக்கட்டுமா?" "ஐயோ கடவுளே நான் யாரையும் கொல்லவில்லை , அது வெறும் கனவு" "அது கனவென்று யார் சொன்னது, அத்தனையும் ஏன் நிஜமாக இருக்கக்கூடாது" "அதான் நான் விழித்து விட்டேனே. தலை துண்டான தளபதி மேனேஜரை கூட காலையில் நல்ல ஆரோக்கியமாகப் பார்த்தேன்"
"சரி நீ விழித்ததால் தானே அதை கனவென்கிறாய் விழிக்காமல் அப்படியே கனவிலே இருந்தாயானால் நீ கொலை காரன் தானே.."சரி உன் கழுத்தில் கத்தி வைத்த கொள்ளைக்காரனையாவது தண்டிக்கலாமா" "வேண்டாம் கடவுளே அது என் மகனின் கால் தான், கனவால் ஏற்பட்ட பிழை. சரி நான் தான் சாகவில்லையே அப்புறம் என்ன?" "இப்போது புரிகிறதா நீ விழித்திருப்பதாக கருதும் இந்த வாழ்வும் அது போல் ஒரு கனவு தான். உன்னை சுற்றி நடப்பதெல்லாம் அறிவின் மயக்கத்தால் உருவான கோலங்கள். இதுவரை கண்டது கனவென்று இதிலிருந்தும் நீ விழிப்படையும் போது தான் தெரியும். அதுவரை தான் நீ காண்பது நிஜம்" "மரங்களும் எனைய மிருகங்களும் பாவம் செய்வதில்லை, பகுத்தறிவு தான் பாவத்தை செய்கிறது, பாவத்தை உணர்கிறது. அறிவுக்கு வெளியே பாவம் என்று எதுவும் இல்லை யாரும் பாவியும் இல்லை. என்னைப் பொருத்தவரை யாரும் கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை. எல்லாம் அறிவின் மயக்கம் தான். எனவே நான் யாரைத் தண்டிப்பது. தண்டனை என்பதே அதைப் பார்த்து மற்றவர்கள் தவறு செய்யக்கூடாது என்று தான். திருத்திக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் மரணத்திற்கு பின் நான் தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? அதன் பயன் தான் என்ன? மனம் செய்யும் தவறுக்கு உடலுக்கு தண்டனை தருவதா? எந்த ஒரு மனமும் ஒரு தவறை உணர்ந்து செய்யும் போது அதற்குரிய தண்டனையை தானே பெற தகுதி பெற்றுக்கொள்கிறது. செய்த தவறை உணர்ந்து வருந்தும் போது மன்னிப்பு பெறும் தகுதிபெறுகிறது." "எனக்கு புரிய வைத்து விட்டாய் கடவுளே ஆனால் இது எல்லோருக்கும் புரியுமா? கடவுளின் தண்டனை பற்றி சாமானியர்களுக்கு பயமிருந்தால் தானே தவறு செய்ய மாட்டார்கள்?" "கடவுளின் தண்டனைப் பற்றி அதிகமாக நம்பும் மதவாதிகள் தான் சரித்திரத்தில் அதிகமாக கொலைகள், கொள்ளைகள் என கடவுளின் பெயரால் அரங்கேற்றியிருக்கிறார்கள். எல்லா குற்றவாளிகளும் குற்றம் செய்யும் போது தன் பக்கம் நியாயமும் கடவுளும் இருப்பதாகத்தான் நம்புகிறார்கள்." "இத்தனை மதங்களை ஏன் படைத்தாய் கடவுளே " "நான் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை, அது மனிதன் உருவாக்கிகொண்டது. தன் கடவுள் தான் உயர்ந்தது தன் மதம் தான் பெரிது என்று அடித்துக்கொள்ளும் மூடர்களுக்கு எங்கே தெரிகிறது? எல்லாவற்றையும் படைக்கும் வல்லமையுடய கடவுளுக்கு தன்னையும் தன் மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாதா? உன் மதம் பொய் என்று சொன்னால் சொன்னவன் நாக்கை அறுக்க துடிப்பது தானே மதம். கடவுளிடம் சாட் பண்ணிக்கொண்டிருக்கும் போது வெளியே ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சப்தம். தொடர்ந்து திபு திபுவென்று சில ஆட்கள். எல்லோரும் ஒரு கையில் கொடி மறு கையில் உருட்டுக்கட்டை அரிவாள் போன்ற ஆயுதங்கள். ஒவ்வொரு கொடியும் ஒவ்வொரு நிறத்தில் வெவ்வேறு மத சின்னங்கள் . கடவுளை பற்றி பதிவு எழுதியது நீ தானா? பல ஆயிரம் ஆண்டுகள் நாங்கள் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தில் அடிக் கல்லை அசைத்து பார்க்கிறாயா? எங்கள் வேதங்களும் விளக்கக்களும் சொல்லாத அறிவை நீ பதிவெழுதி சொல்லப்போகிறாயா? இந்த கைதானே எழுதியது என்று ஓர் உருட்டுக்கட்டை என் கையை பதம் பார்த்தது. "ஏய் நில் கடவுள் ஆன்லைனில் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடிக்காதே அவர் சொன்னதை தான் எழுதினேன், அவரையே கேட்டுப்பார்" அடுத்த அடியில் என் கம்ப்யூட்டர் வாய் பிளந்தது. என் மண்டையை குறி வைத்து ஒரு தடி இறங்கி வந்தது நினைவிருக்கிறது . "கடவுளே உன் விதியை திருத்தி எழுது இவர்களை தண்டிக்காமல் விடாதே?" "அவர் தாண்டா அனுப்பி வைத்தார்" "கடவுளே இதுவும் உன் சித்தமா ?" என்று நினைவு தப்பியது. (இருந்தா பார்ப்போம்)
 
கடவுளுடன் ஒரு சாட்டிங் : மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும்

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
மரங்களும் எனைய மிருகங்களும் பாவம் செய்வதில்லை, பகுத்தறிவு தான் பாவத்தை செய்கிறது, பாவத்தை உணர்கிறது. அறிவுக்கு வெளியே பாவம் என்று எதுவும் இல்லை யாரும் பாவியும் இல்லை. என்னைப் பொருத்தவரை யாரும் கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை. எல்லாம் அறிவின் மயக்கம் தான். எனவே நான் யாரைத் தண்டிப்பது. தண்டனை என்பதே அதைப் பார்த்து மற்றவர்கள் தவறு செய்யக்கூடாது என்று தான். திருத்திக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் மரணத்திற்கு பின் நான் தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? அதன் பயன் தான் என்ன? மனம் செய்யும் தவறுக்கு உடலுக்கு தண்டனை தருவதா? எந்த ஒரு மனமும் ஒரு தவறை உணர்ந்து செய்யும் போது அதற்குரிய தண்டனையை தானே பெற தகுதி பெற்றுக்கொள்கிறது. செய்த தவறை உணர்ந்து வருந்தும் போது மன்னிப்பு பெறும் தகுதிபெறுகிறது."
//
என்னை கவர்ந்த கருத்துள்ள வரிகள்
Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்குருவிக்கு கற்பனை வளம் ஜாஸ்திப்பா...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்க எழுதற திருக்குறள் தாங்க வழிகாட்டி
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல முடிவு தல‌

(டிஸ்கி: ஒரு வழியா முடிச்சிட்டீங்க ஹி ஹி)
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
//"நான் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை, அது மனிதன் உருவாக்கிகொண்டது. தன் கடவுள் தான் உயர்ந்தது தன் மதம் தான் பெரிது என்று அடித்துக்கொள்ளும் மூடர்களுக்கு எங்கே தெரிகிறது? எல்லாவற்றையும் படைக்கும் வல்லமையுடய கடவுளுக்கு தன்னையும் தன் மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியாதா? உன் மதம் பொய் என்று சொன்னால் சொன்னவன் நாக்கை அறுக்க துடிப்பது தானே மதம்.
//

நல்ல விளக்கம்
பா.மோசே செல்வகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
superb .............
busybee4u இவ்வாறு கூறியுள்ளார்…
part 5,6,7.... 1002...19199... waiting...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…

//part 5,6,7.... 1002...19199... waiting...//
மீதி எல்லா பார்ட்டுகளும் இங்கே தொடர்ந்து வாசிக்கவும்
http://sathik-ali.blogspot.in/2011/07/blog-post.html