வண்ணமில்லா வானவில்

இந்த உலகம் எவ்வளவு அழகானது. நீலக் கடல், பச்சை வயல்வெளி, அந்திச் சிவப்பு, ரோஜா மலர், ஆரஞ்சுப் பழம், கோதுமை நிறப் பெண்கள், பளீர் வெள்ளை புன்னகை என எவ்வளவு வண்ணங்களை இயற்கை அள்ளித் தெளித்திருக்கிறது. நேற்றுவரை நான் இப்படித்தான் இயற்கையை வியந்து கொண்டிருந்தேன்.

நேற்று என் மூன்று வயதுடைய மகன்"அப்பா! இந்த செடி ஏன் பச்சையாக இருக்கிறது ?" எனக் கேட்டான். "அதில் chlorophil என்ற பச்சையம் இருக்கிறது அதனால் தான்" என்று சொல்ல வாயெடுத்தேன். யோசித்தேன் உடனே அவனது அடுத்த கேள்வி பச்சையம் ஏன் பச்சையாக..? என்று வரும். அது எளிதான கேள்வி இல்லை எனவே நான் யோசித்து பிறகு சொல்கிறேன் என்று நிறங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

யோசிக்க யோசிக்க என்னைச் சுற்றி இருந்த அழகான வண்ண மயமான உலகம் இருண்டு போனது.

இந்த உலகம் முழுவதையும் வண்ணம் தீட்டுவதற்கான பெயின்டை சூரியன் தான் உற்பத்தி செய்கிறது. சூரியன் எனும் பிரம்மாண்ட சக்தி ஊற்றிலிருந்து பலவித  சக்தி அலைகள் வெளிப்பட்ட வண்ணமிருக்க்கிறது.  ஆனால் நமது கண்கள்  அதில் மிக சொற்பமான அலைகளைகளையே உணர்ந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. அந்த ஒரு குறிப்பிட்ட Bandwidth ல் உள்ள அலைகளையே ஒளி (visible light) என்கிறோம்.

சூரியன் அல்லாமல் மெழு வர்த்தி, பாட்டரி, CFL Bulb,என உலகின் எல்லா ஒளி மூலமும் கூட முன்னொரு நாள் சூரியனிடமிருந்து கடன் வாங்கிய சக்தி தான். கண்னால் பார்க்க முடிகிற இந்த ஒளி கற்றைகளில் வெவ்வேறு அலை நீளமுடைய அலைகள் இருக்கின்றன அவை தான் வண்ணங்களாக கண்ணால் உணரப்படுகிறது. வெள்ளை ஒளியில் உள்ள இந்த நிறங்கள் தான் வான வில்லில் தெரிவது. மற்ற படி ஏழு நிறங்கள் எல்லாம் நாம் நமது சௌகரியத்திற்கு வைத்துக்கொண்டது தான்.

உதாரணமாக சூரியனிலிருந்து வெளிப்படும் அலைகளை ஒரு ஆயிரம் பெட்டிகளை உடைய ரயில் வண்டி நம் ஸ்டேசனுக்கு வருவதாகக் கொண்டால். அதில் ஒரு பெட்டி தான் நம் கண்களுக்குத் தெரியும். அதில் இருந்து இறங்கி வரும் பயணிகளை மட்டும் தான் நம்மால் பார்க்க முடிகிறது. அதில் உள்ள எல்லோரும் பயணிகள் என்ற visible light என்றாலும் அதில் ஒரு குழந்தை,ஒரு பெரியவர்,ஒரு இளைஞன், ஒரு யுவதி, ஒரு பாட்டி என பலர் இருக்கிறார்கள். இது போல் தான் ஒளி பல வண்ணங்களில் தெரிகிறது. ஒளியை தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதே இல்லை

ஒளி நேர் கோட்டில் தான் செல்லும் . ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட் ஆசாமி. அதன் பாதையின் எதிரே நம் கண்ணை கொண்டு வைத்தால் தான் தெரியும். பூமியில் ஒளியை சிதறடிக்க பல ஊடகங்கள் இருப்பதால் உலகத்தில் பகலில் வெயில் கண்ணைக் கூசுது. கடன் காரர்கள் பார்த்தும் பாராதது போல் போவார்களே அது போல விண்வெளியில் எவ்வளவு ஒளி நமக்கு முன்னே கடந்து சென்றாலும் சுற்றியுள்ள வெளி எப்போதும் இருண்டு தான் இருக்கும்.

ஒளிக்கு எந்த நிறமும் இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஒரு அலை மட்டுமே. அனால் அதன் நேர் பாதையில் நம் கண்ணை வைத்தால் தான் விழித்திரையில் படுகிறது. அங்கே Rods எனும் செல்கள் ஒளியின் intensity யை உணர்ந்து மின் சிக்னல்களாக பார்வைநரம்புகள் வழி மூளைக்கு தகவல் அனுப்புகிறது. அதே போல Conesஎனும் உணர் செல்கள் ஒளியில் உள்ள அலை நீள வேறு பாட்டை உணர்ந்து நிறங்கள் பற்றிய தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது. நாம் உணரும் நிறத்தை தூண்டுவது தான் இந்த அலை நீளம் மற்றபடி இந்த அலை நீளத்துக்கும் நிறத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நமது மூளையில் தான் நமது முன்னோர்களிடமிருந்து கிடைத்த ஒரு புரோகிராம் இருக்கிறது. கண்ணில் இருந்து வரும் சிக்னல்களையும் மூளையில் ஏற்கனவே உள்ள தகவலையும் வைத்து மூளையின் இந்த புரோகிராம் தான் "பச்சை நிறமே பச்சை நிறமே... "மஞ்ச கலரு ஜிங்கிசான் ,சிவப்பு கலரு ஜிங்கிசான் என நமக்கு ஃபி்லிம் காட்டுவது. நாம் கண்ணைத் திறந்து  பார்க்கும் போது தெரியும் வெளிச்சம் ,நிறம்  எதுவும் வெளியில் இல்லை.மூளையில் தான் உருவாகிறது

ஒளியெல்லாம் சரி இலை ஏன் பச்சையாக இருக்கிறது? எதிரே இருக்கும் சுடிதார் ஏன் சிவப்பு நிறத்தில் கண்ணை உறுத்துது? அதை சொல்லுங்க?

சரி சரி... உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் பல அணுக்களின் இணைப்புகள். இப்படிப்பட்ட எல்லா மூலக்கூறுகளிலும் சக்தி சமனாக இருப்பதில்லை. சில பொருட்கள் மீது ஒளி படும் போது அதன் மூலக்கூறுகள் அந்த ஒளியின் சில அலை நீள ஒளிகளின் சக்தியை கிரகித்து விடுகிறது. மற்ற வற்றை விட்டு விடுகிறது. இந்த எஞ்சிய அலைகள் எதிரொளித்து அதற்கேற்ப நம் விழிகளை தூண்டி குறிப்பிட்ட வண்ணங்களை தோன்ற செய்கிறது. உதாரணமாக மேற்குறிப்பிட்ட சிவப்பு சுடிதாருக்கு அந்த வண்ணம் இல்லை. அதன் மீது படும் ஒளியிலுள்ள, ஒரு குறிப்பட்ட அலைநீளமுடய அலைகள் சிவப்பு நிறத்தை நம் மூளை உணருமாமாறு விழித்திரையில் தூண்டும். மற்ற அலைநீளங்களை அந்த துணியின் நூலில் பூசப்பட்ட ரசாயன மூலக்கூறுகள், கிரகித்து விடுகிறது.இதனால் சுடிதார் சிவப்பாக தெரிகிறது.

இதையே ஸோடியம் வேப்பர் லாம்ப் வெளிச்சதில் பார்த்தால் கறுப்பாக தெரியலாம். ஏனென்றால் சோடியம் விளக்கிலிருந்து ஒரே நிற ஒளி தான் வருகிறது. அதையும் சிவப்பு துணி கிரகித்து விட்டால் எஞ்சுவது கறுப்பு தான். இப்படி தான் பல அம்மணிகள் ஜவுளிக்கடை விளக்கு வெளிச்சத்தில் துணியெடுத்துவிட்டு வந்து பகல் வெளிச்சத்தில் பார்த்து கன்னத்தில் கை வைத்து உட்காருவது.

சூரிய ஒளியில் சில நிறங்களை உணரக் காரணமான் அலை நீளங்கள்  இல்லாவிட்டால்...., உலகின் எல்லா மூலக்கூறுகளும் எல்லா அலைகளையும் கிரகித்தால்......, கண்களால் இன்னும் வேறு பல அலைகளை உணர முடிந்தால்....... மூளையின் புரோகிராமில் மாற்றம் செய்தால்....., நாம் காணும் உலகம் நிச்சயம் இப்படி இருக்காது.

இதனால் தான் முதலில் சொன்னேன் இவ்வளவு யோசித்ததில் என்னை சுற்றி இருந்த எல்லா நிறமும் பொய்யாகி விட்டது. என் மூளை தீர்மானிப்பது தான் நிறம். பெண் பார்க்க செல்லும் போது பெண் கொஞ்சம் நிறம் குறைவு என்று இனி மேல் சொல்லாதீர்கள். சூரியன் ஆஃப் ஆனால் ஐஸ்வர்யா ராயும் கறுப்பு தான். ரோட்டில் முன்னால் பைக்கில் யாராவது பச்சை சேலை போனால் பின் தொடர வேண்டாம். சிவப்பு சிக்னலை தவற விட்டு பச்சை தானே இருந்தது என மூளை தவறு செய்யலாம். ட்ராபிக் காண்ஸ்டபிளுக்கு சொன்னால் புரியவா போகிறது.

என் மகன் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. இவ்வளவு பெரிய பதிலை புரிந்து கொள்ள அவன் இன்னும் கொஞ்சம் வளரட்டும். அதுவரை அவனது உலகம் வண்ண மயமானதாகவே இருக்கட்டும்.

மூளைக்கு ஒரு சின்ன வேலை: ஒரு ரோஜாப்பூவின் நிறத்தை நீங்களும் நானும் ரோஸ் என்றே சொல்லிக்கொள்கிறோம் .ஆனாலும் நாம் அதை உண்மையில் நீங்களும் நானும் வெவ்வேறு நிறமாக உணரும் சாத்தியமிருக்கிறதா?

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
அறிவியல் தத்துவங்களை,குறிப்பாக ஒளியை பற்றிய இயற்பியல் குறிப்புகளை அழகாக கூறியிருக்கிறீர்கள்.
ஷண்முகப்ரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழமான,அருமையான பதிவுகள்,சாதிக் அலி.வாழ்த்துகள்.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
ஷண்முகப்ரியன் ஐயா உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
நன்றி ராஜேஸ்வரி.
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு குறிப்பிட்ட ஊடகத்துக்கு [வெற்றிடம், காற்று, நீர், Glass etc., ] ஒளியின் வேகம் maariliyaagum. வெவ்வேறு வண்ணங்கள் என்பது வெவ்வேறு அலைநீளம் என்று பொருள். மேலும் ஒளியை உமிழும் source -ம் observar உம் நிலையாக இருந்தாலும் சரி, நகர்ந்து கொண்டிருந்தாலும் சரி, ஒளியின் வேகம் மாறுபடுவதில்லை. இன்னொன்று, நமது கண்களுக்கு \\அதில் ஒரு பெட்டி தான் நம் கண்களுக்குத் தெரியும். \\ என்றாலும், எந்த அலைநீளமுள்ள electromagnetic wave யும் பதிவு செய்ய கருவிகள் உள்ளன, அதை நாம் பார்க்கும் வண்ணம் படமாகவும் மாற்ற முடியும். உதாரணத்திற்கு, infra red கேமராக்கள் மூலம் இருட்டிலும் படம் பிடிக்க முடியும். இதைப் போலவே X-ray, Gamma ray எதுவானாலும் அதைப் பிடித்து பதிவு செய்யும் வண்ணம் கருவிகள் உள்ளன. இந்த வகையில் மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கேளக்ஷிகளில் இருந்து வரும் EM-waves களை பதிவு செய்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. கண்ணால் பார்ப்பது என்பதன் பொருள், கண்ணால் மட்டுமல்ல, மனிதன் கண்டுபிடித்த கருவிகளையும் சேர்த்துதான்.
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு குறிப்பிட்ட ஊடகத்துக்கு [வெற்றிடம், காற்று, நீர், Glass etc., ] ஒளியின் வேகம் மாறிலியாகும். [For any given media the velocity of light is a constant, irrespective of the relative movement of the source and the observer]
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
\\வெவ்வேறு வேகங்களை உடைய அலைகள். \\ Velocity of light is a universal constant for a given media.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//வெவ்வேறு வேகங்களிலான அதாவது வெவ்வேறு அலை நீளமுடைய அலைகள் இருக்கின்றன// வெவ்வேறு வேகங்களில் அலைகள் இருந்தாலும் ஒளி அலைகளை பற்றி குறிப்பிடும் போது அதன் வேகம் மாறிலிதான். தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக நன்றி.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//கண்ணால் பார்ப்பது என்பதன் பொருள், கண்ணால் மட்டுமல்ல, மனிதன் கண்டுபிடித்த கருவிகளையும் சேர்த்துதான்.// ஒரு காமிரா பார்க்கிறது ,மைக் கேட்கிறது என்று சொல்ல மாட்டோம். கருவிகள் பார்க்க முடியாத அலைகளை உளவாங்கி அதற்கு இணையாக பார்க்க முடிகிற விதத்தில் திரும்ப உருவாக்குகுகிறது .அப்போது அதை நாம் visible light உதவியால் தான் பார்க்கிறோம்.மேலும் நமது கண் கூட ஒரு கருவி தான் .ஆனால் பார்வை என்பது மூளையில் நிகழ்கிறது. இன்ப்ரா ரெட் காமிராவில் வண்ணமயமான உலகம் தெரியாது,வெப்ப வேறுபாட்டால் ஆன உலகம் தான் தெரியும்.
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
\\ஒரு காமிரா பார்க்கிறது ,மைக் கேட்கிறது என்று சொல்ல மாட்டோம்.\\

\\இன்ப்ரா ரெட் காமிராவில் வண்ணமயமான உலகம் தெரியாது\\

அதாவது, நாம் புலன்களுக்கு புலப் படாத, Visible region- க்கு அப்பால் அலைநீளம் கொண்ட Electromagnetic waves களான Radio waves, infrared waves, ultra violet rays, X-rays, Gamma Rays போன்றவற்றையும் கருவிகள் மூலம் பதிவு செய்ய முடியும் /அறிந்து கொள்ள முடியும் என்பதையே இவ்வாறு சொன்னேன்.
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
\\எந்த அலைநீளமுள்ள electromagnetic wave யும் பதிவு செய்ய கருவிகள் உள்ளன, அதை நாம் பார்க்கும் வண்ணம் படமாகவும் மாற்ற முடியும். உதாரணத்திற்கு, infra red கேமராக்கள் மூலம் இருட்டிலும் படம் பிடிக்க முடியும். இதைப் போலவே X-ray, Gamma ray எதுவானாலும் அதைப் பிடித்து பதிவு செய்யும் வண்ணம் கருவிகள் உள்ளன.\\ இங்கே வண்ணம் என்னும் வார்த்தையின் பொருள் colour அல்ல. so that என்ற பொருளில் வரும்!!
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
Is Your Red The Same as My Red?
http://www.youtube.com/watch?v=evQsOFQju08