17 March 2009

பொய் சொல்லும் புலன்கள்

இந்த பூமி எவ்வளவு அழகானது. பிரம்மாண்டமானது, சூட்சுமமானது. எவ்வளவு பொருட்கள், எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருப்பதை உணர்கிறோம். முன்பு இருந்த டைனோசரஸ் இப்போது இல்லை. முன்பு இல்லாத கணினி இப்போது இருக்கிறது. மலை, மரம், மலர், மழை, மழலை இப்படி நாம் உணரும் எல்லாப் பொருட்களும் என்ன? நாம் உணர்வது தான் இவற்றின் உண்மையான வடிவமா? பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆன்மீகவியலாளர்கள் தேடி உணர்ந்த விஷயத்தை விஞ்ஞானம் இப்போது தேடுகிறது.

புத்தருக்கு பிறகு நியூட்டனுக்கு மரத்தடியில் ஞானம் கிடைத்தது. இன்றைக்கு பல பவுதீக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி சாலைகளையும், நுண்ணோக்கிகளையும் துறந்து நிஷ்டையில் ஆழ்ந்து பிரபஞ்சத்தை ஆராய்கிறார்கள். விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒன்றைத்தான் தேடுகிறது. பிரபஞ்சத்தின் ஏக மூலப்பொருளை. இப்படி விஞ்ஞானத்தின் அடித்தளத்தைப் பெயர்த்தெடுத்தும் அதன் முகத்தை திருப்பி விட்ட பெருமை ஐன்ஸ்டீனுக்குத்தான் உண்டு. விஞ்ஞானம் இதுவரை நாம் உணரும் பவுதீக உலகைப் பற்றித்தான் ஆராயந்து கொண்டிருந்தது. இப்போது தான் தெரிகிறது உள்ளது வேறு உணர்வது வேறு என்று.

ஒரு பொருளைப் பற்றிய அறிவு நமக்கு எப்படி கிடைக்கிறது? நமது மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐந்து புலனுறுப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் தொடர்புடைய பொருளின் தன்மையைக் கொண்டும் மூளை ஒரு மாதிரி ஐடியா பண்ணிக்கொள்ளும். வெளியெ உள்ள உலகத்தின் பொருட்களுக்கு ஐம்பதாயிரம் குணங்கள் இருக்கலாம். நம்மால் கற்பனை செய்ய முடியாத தோற்றத்தில் இருக்கலாம். அனால் நாம் அதிலிருந்து வெறும் ஐந்தே ஐந்து தனமைகளை மட்டும் புலன்கள் வழி கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப அதற்கு மூளையில் ஒரு வடிவம் கொடுக்கிறோம். அது எப்படி உண்மையானதைக் காட்டும்? உண்மையில் இருப்பதை அல்ல நாம் உணர்வது. உணர்வதை மட்டும் இருப்பதாக நம்புகிறோம் அவ்வளவே. ஏன் இந்த ஐந்து புலனகள்? நாம் உயிர்வாழ இந்த ஐந்து புலன்கள் போதும் என நமது பரிணாமம் நினைத்திருக்கலாம்.

நாய்களுக்கு கொஞ்சம் மோப்ப சக்தி அதிகமாக போனதால் திருடனை பிடித்து விடுகிறது. போலீஸின் மூக்கிற்கு இந்த பவர் பத்தாது. சில பிராணிகள் நிலநடுக்கத்தை முன்னமே உணரக் காரணம் அதன் உயிர் வாழ்க்கைத் தேவை. மனிதன் எல்லாவற்றிற்கும் கருவியை நம்பத் தொடங்கியதால் புலன்கள் இதற்கு மேல் டெவலப் ஆக வில்லை. யார் கண்டார்கள் வருங்காலத்தில் SMS அனுப்பினால் நேராக மூளையில் சேவ் ஆகி விடலாம்.

இரு கண்ணுக்கு பதில் ஒரு கண் மட்டும் இருந்தால் ஊசியில் நூல் கோர்பது எப்படியாம்? கண்ணே இல்லாத மனிதர்களின் உலகத்தில் எனக்கு மட்டும் கண் இருந்து ஐயா அதோ பாருங்கள் வெளிச்சமாய் சூரியன், என்று சொன்னால் "போடாங்கொய்யாலே" என்று சொல்வார்கள். அவர்களுக்கு வெளிச்சம் இருட்டு எல்லாம் கிடையாது எல்லமே தடவல் தான் தடவி தடவி கையில் கிடைப்பதை வாயில் போட்டு உலகத்தை வேறு விதமாய் உணர்வார்கள். பச்சை இலைகள் , நிலவைப் பற்றிய கவிதைகள், டெலிவிசன்கள, கிரகங்கள், சினிமா, ஒபாமா, தாஜ்மஹால், ஷ்ரேயா எல்லாம் வேறொன்றாய் மாறி விடும். அல்லது இல்லாததாய் ஆகி விடும். கண் கொஞ்சம் மாறு கண்ணாயிருந்து லேடீஸ் காலேஜ் பக்கம் போனாலே பெண் போலீஸ் வந்து நேராக்கி விடுவார்கள். சரி கண் கொஞ்சம் டெவலப் ஆகி X- ray பார்வை கிடைத்தால் ரோட்டில் மறைத்துக்கொண்டு மானமாக நடமாட முடியுமா? கடன் காரனிடம் அய்யோ இப்ப தான் ஒருத்தனுக்கு கொடுத்தேன் என்று பதுக்க முடியுமா?

மூக்கு கொஞ்சம் பவர் கூடிப் போனால் ராத்திரி மனைவி மோந்து பார்த்து விட்டு "இன்னிக்கு பூரா வனஜாவோட சுத்தினீங்களா அவ ஸ்மெல் அடிக்குது. அவளோடு ஐஸ் கிரீம் வேறு சாப்பிட்டிருக்கிறீகள் "என பிரச்சனைகள் உருவாகும். மோப்ப சக்தி குறைந்தால் சோப்புக் கம்பனிகள் முதலில் இழுத்து மூடும். ட்றெஸ் சாக்ஸ் எல்லாம் ஒரு மாதத்திற்கு மேல் அப்படியே உபயோகிக்கலாம். நாக்கில் சுவை மொட்டுக்களையெல்லாம் சுரண்டி எடுத்து விட்டால் மளிகை லிஸ்டில் நிறையப் பொருட்கள் குறையும். அப்புறம் உப்பில்லை, புளியில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள்.

சிலருக்கு "தொலி கட்டி" என்று சொல்வது அவர்களை சுரணையற்றவர்கள் அல்லது தன்மானமற்றவர்கள் என்ற பொருளில் தான். உண்மையில் தொடு உணர்வு குறைவாயிருந்தால் அப்பளக் கட்டை அடியெல்லாம் சிரித்துக்கொண்டே சமாளிக்கலாம். "எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான் ரொம்ப நல்லவன்" என்று பாராட்டு பெறலாம். இதை எல்லாம் பார்க்கும் போது நாம் தேவையான புலன்கள் தேவையான உணர் திறனில் இருப்பதால் மட்டுமே நம் உலகம் இப்படி நமக்கு ஏற்றதாக இருக்கிறது. ஒரு பாக்டீரியாவின் உலகம் வேறு நம் உலகம் வேறு. ஐம் புலன்களை தவிர்த்து வேறு புலன்களும் உண்டு. கீழே விழுந்து விடாமல் உடம்பு பேலன்ஸ் செய்து கொள்வதற்கு காதில் உள்ள ஒரு திரவமே காரணம். மேலும் ஒரு சென்ஸ் கூடும் போது இப்போது காணும் உலகத்தோற்றம் அப்படியே மாறி விடும்.

உண்மையில் இந்த ஐம்புலன்களும் வெவ்வேறு ரேஞ்சுகளில் உள்ள சக்தியின் தொடுதல்களை உணரும் தொடு புலன்களே. ஃபோட்டான்கள் எனும் நிலையில் சக்தி தொடும் போது கண் உணருகிறது, ரசாயனத் தொடுதல்களை மூக்கும் நாக்கும் உணர்கிறது. காற்றின் தொடுதல்களில் உள்ள மெல்லிய வேறு பாட்டை ஒலியாக காது உணருகிறது. பொருளின் தொடுதலை உடல் உணர்கிறது. கண் ஒளியை உணர்வது போல அகச்சிவப்பு கதிர்களை கொண்ட வெப்ப சக்தியை தோல் உணர்கிறது. பாம்புக்கு செவி கிடையாது. உடலாலே மகுடியின் அதிர்வுகளை உணர்கிறது.

நம் கண் பார்ப்பதும் மூளை உணர்வதும் ஒரு காமிரா போல அல்லது ஒரு ஸ்கேனர் போல பதிவதில்லை. அதை நமது OCR, அல்லது Voice Reconition டெக்னாலஜி போல சொல்லலாம். அதாவது புலன் வழி பெறும் தகவலை மூளை ஏற்கனவே உள்ள மற்ற டேட்டா பேசுடன் ஒப்பிட்டு தான் அதைப் பற்றி உணர்கிறது. அதாவது உங்கள் வீட்டுக்கு யூனிபார்மில் அடிக்கடி வந்து லெட்டர் கொடுக்கும் போஸ்ட் மேன். உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஒருநாள் அவரை வேறு ஒரு உடையில் வேறு நாட்டில் காண நேர்ந்தால் உங்களால் அவரை அடையாளம் காண முடியாது. சிலருக்கு பணம் வந்தால் சொந்த பந்தங்களை தெரியாமல் போவது வேறு காரணம்.

ஐந்து புலன்களும் ஐந்து வடி கட்டிகள். யானைய தொட்டுப்பார்த்து சொன்ன ஐந்து குருடர்கள். யானையின் உண்மையான வடிவை ஐந்து குருடர்களும் ஐந்து பொருளாகத்தான் ஒப்புமைப் படுத்துவார்கள் அன்றி அவற்றை சேர்த்து முழு யானையாய் உணரமாட்டார்கள். காரணம் முழு யானைய அவர்கள் இதற்கு முன் பார்த்த தில்லை. இதனால் தான் முழு பிரபஞ்சத்தின் Unified தன்மையை உணர முடியால் நாம் இப்போது குறை பட்ட புலனறிவால் வெவ்வேறாக உணருகிறோம். நாம் காண்பது, கற்பது, கருதுவது எல்லாமே நமக்கு இந்த புலன்கள் தந்தது. உலக இன்பமும் துன்பமும் இந்த புலன்கள் நமக்குக் காட்டுவது. புலன்களுக்கு அப்பாற்பட்டு இருப்பது நாம் வெவ்வறாக உணரும் எல்லாம் சேர்ந்த கலவை. காலம், இடம், பொருள், என்று ஒன்றில் நின்று கொண்டு இன்னொன்றை அளக்கிறோம். உலகத்தின் எல்லாமும் ஒன்றை ஒன்று சார்ந்தது. எல்லாம் சேர்ந்ததுதான் அந்த தனித்தது.

யோகிகள் புலனடக்கத்தை சொல்வதற்கு காரணம் புலன்களை அடக்கும் போது அல்லது அறிந்து தெளியும் போது புலன்களால் உண்டாகும் பொய் உலகமும் அடங்கி விடும். பிரபஞ்ச உண்மையின் பேரொளி துலங்கும் அதன் பின் எந்த கேள்வியும் எஞ்சியிருக்காது. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

தெளிவாக குழப்புகிறேன் என்று தோன்றினால் எல்லா அப்ளிகேசன்களயும் குளோஸ் செய்து விட்டு நிதானமாக ஒரு முறை படித்து விட்டு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். அப்புறம் ஓட்டு போடுவது பின்னூட்டம் இடுவது உங்க இஸ்டம்.

தொடர்புடைய பதிவு : கண்ணால் காண்பதெல்லாம் உண்மை தானா?

Download As PDF

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\யோகிகள் புலனடக்கத்தை சொல்வதற்கு காரணம் புலன்களை அடக்கும் போது அல்லது அறிந்து தெளியும் போது புலன்களால் உண்டாகும் பொய் உலகமும் அடங்கி விடும். பிரபஞ்ச உண்மையின் பேரொளி துலங்கும் அதன் பின் எந்த கேள்வியும் எஞ்சியிருக்காது. கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.\\


நீங்கள் தெளிவாக குழப்பவில்லை

நான் தெளிவாதற்கு ...

நட்புடன் ஜமால் said...

\\தெளிவாக குழப்புகிறேன் என்று தோன்றினால் எல்லா அப்ளிகேசன்களயும் குளோஸ் செய்து விட்டு நிதானமாக ஒரு முறை படித்து விட்டு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். அப்புறம் ஓட்டு போடுவது பின்னூட்டம் இடுவது உங்க இஸ்டம்.\\

இதுவும் கூட நல்லா சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

\\தொலி கட்டி\\

கேட்டிறாத வார்த்தை

நட்புடன் ஜமால் said...

\\மனிதன் எல்லாவற்றிற்கும் கருவியை நம்பத் தொடங்கியதால் புலன்கள் இதற்கு மேல் டெவலப் ஆக வில்லை. \\

சரியான கருத்து

\\யார் கண்டார்கள் வருங்காலத்தில் SMS அனுப்பினால் நேராக மூளையில் சேவ் ஆகி விடலாம்.\\

ஹா ஹா இருக்கலாம் ...

Sathik Ali said...

வாங்க ஜமால் எப்படியிருக்கீங்க?
"தொலி கட்டி" என்றால் "சரியான எருமை மாடு" அல்லது "எருமை மாட்டுக்கு மேலே மழை பெய்ஞ்சாப்லே" போன்ற அர்த்தம் தான்."தொலி என்பது தோல்"

Rajeswari said...

//யோகிகள் புலனடக்கத்தை சொல்வதற்கு காரணம் புலன்களை அடக்கும் போது அல்லது அறிந்து தெளியும் போது புலன்களால் உண்டாகும் பொய் உலகமும் அடங்கி விடும். பிரபஞ்ச உண்மையின் பேரொளி துலங்கும் அதன் பின் எந்த கேள்வியும் எஞ்சியிருக்காது. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.//

உண்மை. அந்த நிலையை நானும் அனுபவிக்க வேண்டும் என்ற ஓர் ஆசையும் இருக்கிறது

Sathik Ali said...

வாங்க ராஜேஸ்வரி.
//அந்த நிலையை நானும் அனுபவிக்க வேண்டும் என்ற ஓர் ஆசையும் இருக்கிறது//
நல்ல ஆசை தான்.ஆனால் அதற்கு முதலில் நானும் என்பதில் உள்ள "நான்" என்பதும் "ஆசை" என்பதையும் ஒழிக்க வேண்டுமே. பிரும்மத்தை அறிய முயல்வது ஒன்வே.

NADESAN said...

nalla pathivu keep update

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

அபுஅஃப்ஸர் said...

ரொம்ப அருமையா அலசி ஆராய்ந்து எழுதிருக்கீங்க.. வாழ்த்துக்கள்

Sathik Ali said...

யூத் ஃபுல் விகடனில் குட் பிளாக் பகுதியில் இடம் பெற்ற எனது நான்காவது பதிவு இது. விகடனாருக்கு நன்றி..நன்றி
http://youthful.vikatan.com/youth/index.asp
மற்ற பதிவுகள்:
இதயத்திலே ஓர் இசைத்தட்டு சுழலுது
என்ன சாப்பிடலாம்?
ஆறுதல் சொல்வது எப்படி?
http://youthful.vikatan.com/youth/bcorner2.asp

ஆதவா said...

முன்பே படிச்சேன்... இப்போதான் பதில் போடறேன்..

நல்லா இருக்குங்க பதிவு!!! விகடன்ல செலக்ட் ஆயிருக்கு போல,.. வாழ்த்துக்கள்

பட்டாம்பூச்சி said...

//நாக்கில் சுவை மொட்டுக்களையெல்லாம் சுரண்டி எடுத்து விட்டால் மளிகை லிஸ்டில் நிறையப் பொருட்கள் குறையும்.//
அட அட அட எவ்வளவு பெரிய விஷயத்தை சுலபமாக சொல்லி விட்டீர்கள்.
அடங்காத நாக்கினால் நாசமான விளைவுகள்தான் நிறைய.

Sathik Ali said...

மேலே உள்ள படத்தில் ஒரு முகம் தெரிந்தால் உங்கள் கண்கள் பொய் சொல்கிறது.உண்மையில் Liar என்று தான் எழுதியிருக்கிறது.

சாதிக் அலி said...

நிகழ்வுகள்.காமின் மார்ச் மாத சிறந்த31 பதிவுகளில் ஒன்றாக இந்த பதிவை தேர்வு செய்தமைக்கு நன்றி

Rajakamal said...

simply superb