நிஜமாவே பேய் இருக்கா? இல்லையா?

சின்ன வயதிலிருந்து எவ்வளவு பேய் கதைகள் கேட்டிருப்போம். எக்ஸார்ஸிஸ்ட், ஓமன் என எவ்வளவு ஹாலிவுட் படங்கள் பேய்களை அவிழ்த்து விட்டிருக்கிறது. எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும் மனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக செல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளையிட்டால் இதயத்துடிப்பு எகிறும். இதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன பல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல் அப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.

பேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட நம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும், graphics மற்றும் Trick photos களும், "1862-ல் ஒரு கார் விபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி " என் தொடரும் உண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. போதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள், பேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம். சந்திரமுகியில் "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு "என்ற வடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா?

பேய் என்று சொன்னாலே மனதில் தோன்றும் உருவம் வெள்ளை புகை போல கால்களின்றி. இந்த கற்பனை உருவம் ஓவியர்கள் புகையிலிருந்து உருவாக்கியது. காரணம் இறந்தவர்களின் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ ஒன்று பிரிந்து போவதாக நினைப்பது. அமைதி கிடைக்காத ஆத்மா பேயாக அங்குமிங்கும் அலைவது போன்ற கருத்து தான்.

ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.

அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?
அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது, கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது, காதில்லை. நம்மைத் தாக்க முடியாது, ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை , காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.

இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.

ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.

சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.

முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.

பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.

உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல், ஆவேசமாக அட்டகாசம் புரிதல், அசுர பலத்துடன் செயல்படுதல், எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல், தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றிருப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.

இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். நிலவில் பாட்டி நூல் நூற்பதை கண்டுபிடித்த நமக்கு மரத்தின் நிழல் பேயாக தெரிவதில் என்ன அதிசயம். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காரணம். எங்கேயாவது ஒரு பேய் புரளி கிளம்பி விட்டால் ஆளாளுக்கு கை கால் மூக்கு எல்லாம் வைத்து கதை சொல்வார்கள். காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது. ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால் குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.

எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.

சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே

இனி தைரியமாக இருட்டில் போவீர்கள் தானே. பேய் போகும் போது குடம் உடைத்து விட்டு போகுமாம் அது போல உங்களுக்கு பேய் பயம் தீர்ந்தால் தைரியமாக தமிழ்ஷில் குத்திவிட்டு போங்கள்.

கருத்துகள்

நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
பயமுறுத்திறீங்களே ...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்களாவது பயப்படுவதாவது.நான் தான் இந்த பதிவெழுதிவிட்டு பேய்க்கு பயந்து தாயத்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.அடிக்கடி நான் இருக்கிறேனா என்று விசாரித்துக் கொள்ளுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன தான் நடக்குது இங்கே ?
யாரு பேயீ ,
யாரு மனுஷன்னே புரியல ...
ஷாஜி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்னா கீது சாரே...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க mony சந்தேகம் வேண்டாம். கண்ணுக்குத் தெரிவது பேயீ இல்ல மனுஷன் தான். கருப்பு பேக்ரவுண்ட்ல இருட்டுல மறஞ்சிருக்கிறதுதான் பேயீ.அது கண்ணுக்கு தெரியாதில்லே
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//நன்னா கீது சாரே...//
தாங்ஸ் வாத்தியாரே
முக்கோணம் இவ்வாறு கூறியுள்ளார்…
அசத்தலாக எழுதுகிறீர்கள். வித்தியாசமான விஷயங்கள். தமிழ் வலைப் பதிவுகள் மேலும் உயர்ந்த தரத்தை அடைந்து விட்டதற்கு உங்கள் பதிவே சாட்சி. நன்றி.
Positive Vibration இவ்வாறு கூறியுள்ளார்…
nambavum mudiyala, nambaama irukkavum mudiyala....
kuzhappatthil -MAHA
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
enna sir ithu nallave illa
Thirumalai Kandasami இவ்வாறு கூறியுள்ளார்…
HI Sakthi,
I added your old post in indli and you got 20 votes.Congrats..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
that is ok..Saami vanthu aadravanga
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பேய் இருக்க? இல்லையா?|pa... Sollunga
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பேய் இருக்க? இல்லையா?|pa... Sollunga
உலக அறிவியல் இவ்வாறு கூறியுள்ளார்…
இருக்கு ஆனா இல்ல
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மையா பேய் இல்லையா...? ஆனால் நான் நிறைய உணர்ந்து இருக்கேனே...