ஆறுதல் சொல்வது எப்படி?

உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஸ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.
  • "அட , என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது, காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.
  • மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும்.அதைக் கேட்க காதுகள் தான் தேவை.எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம்.அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.
  • பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.
  • வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.
  • சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.
  • அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.
  • நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.
  • புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.
  • பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.
  • கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.
  • மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.
  • எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.
  • உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.
ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:
சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

தொடர்புடைய பக்கம்: - மூளை வளர என்ன சாப்பிடலாம்?

கருத்துகள்

Rajeswari இவ்வாறு கூறியுள்ளார்…
nice article.
மன வேதனையில் இருக்கும் போது கூட இருக்கவங்க புருஞ்சுக்ககாம அட்வைஸ் பண்ணுற கொடுமை இருக்கே அப்பப்பா ..
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
இப்பொழுது உள்ள ஸ்ட்ரெஸ் வாழ்க்கைக்கு தேவையான பதிவுங்க‌

வாழ்த்துக்கள், குட் பிளாக்கர் விகடன் லே வந்ததுக்கு
நட்புடன் ஜமால் இவ்வாறு கூறியுள்ளார்…
\\துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.\\

ஆம் நல்ல செய்தியே ...
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்திய நண்பர்கள் ராஜேஸ்வரி,அபு அஃப்ஸர்,ஜமால் ஆகியோர்களுக்கு மிகவும் நன்றி.உற்சாகப்படுத்துவது எப்படி? என்று உங்களை அடுத்த பிளாக் எழுத சொல்லலாம் போலிருக்கிறது.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
யூத் ஃபுல் விகடனில் குட் பிளாக் பகுதியில் எனது இந்த கட்டுரையை இடம் பெறச் செய்த விகடன் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழிஷ்-ல் இந்த பக்கத்துக்கு வாக்களித்த,உற்சாகப்படுத்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
கிளியனூர் இஸ்மத் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
- கிளியனூர் இஸ்மத்
hyma இவ்வாறு கூறியுள்ளார்…
Thankyou for sharing your article is very helpful for beginners and i have to say that If you want to travel to Hotels In Kanyakumari Near Beach