சிரிப்பு ஒரு மாமருந்து

"சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள்ஒருவரே அழுதுக் கொண்டிருப்பீர்கள்"...ஸ்டீவன்சன்-

சிரிப்பு ஆக்கப் பூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியம் அடைகிறது. மனம் ஆரோக்கியம் அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான்.

சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்.
[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.]
சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ஆம் ஆண்டின் இவ் ஆராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பயை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் மனவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம் சிரிக்கும் போது நம் மூக்கினுள் உள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின் - ஏ ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து பாக்டீரியாக்கள், வைரஸ் புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதாம். இதனால் "மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் "என்கிறார் இந்தப் பேராசிரியர்.

மேலை நாடுகளில் டாக்டர்கள் நேயாளிகளுக்கு சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்திரை செய்கிறார்கள். 'நோர்மன் கசின்ஸ்' என்னும் அமெரிக்க நாவலாசியரியர் 1983-ஆம் ஆண்டு தான் எப்படி " இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்தேன்.எளிய உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்காக நகைச்சுவைப் படங்கள் டி வி யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது "நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பயைச் 'சிரிப்பு' முடுக்கி விடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை 'GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் இவைகள். சிரிப்பு நம்முடைய தசைகளை வலுவாக்குகிறது; ' இரத்த அழுத்தம்' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன. 'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது. சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.

"சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு. மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனதெளிவு , மனமகிழ்ச்சி என பலவிதமாக பயன்பட்டு திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

"பெர்னாட்" ஒரு சமயம் " உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னாலேயே செயல்படுகிறது " என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்ப்பால் கதைகள், தென்னாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது.

அமரர் 'கல்கியின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். அதே போல் N.S. கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது , அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, "காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் காரை மரத்தில் சாத்தி வைச்சியிருக்கிறோம்..." என்றாராம். இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் வஞ்சகமில்லா நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் என்று கூறலாம்.

நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் " சிரித்துப் பேசக் கூடாது " என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவை உணர்வால் மட்டுமே - பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளிதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.

சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ' கவர்ந்திழுக்கக் ' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!! இளமையான புன்னகை எனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்கு தெரி்யாமல் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. தத்துவ டாக்டர்கள், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி என்கிறார்கள்

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள், சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.? இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளைய தலை முறையினர் நட்பை இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது. நல்ல நகைச் சுவைகளை நினைந்து நாம் தனியாக சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள் "ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் பயக்கும்.

"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்திடாதே"

---- நன்றி சிங்கை கிருஷ்ணன் (இணைய இதழில் வாசித்தது)
என் சிபாரிசு: அப்படியானால் நடிகர் வடிவேலுக்கு டாக்டர் பட்டம் தரலாம்.

கருத்துகள்