சாலையில் சாகசம்

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் செப்பனிடப்பட்ட சாலைகள் எல்லாம் சமீபத்தில் பெய்த மழையில் வாய் பிளந்து உயிர்களை கபளீகரம் செய்ய காத்துக் கிடக்கிறது. இங்குள்ள சாலைகளில் டூ வீலரில் பயணம் செய்வதற்கு மரணக் கிணறில் சாகசம் செய்யும் திறமை வேண்டும். சாலைகள் எங்கும் அடுத்தடுத்து பெரும் பள்ளக்களில் தலை குப்புற விழுந்து உயிர் போகாமல் ஒழுங்காய் வீடு போய் சேர வேண்டுமானால், "பைக்கில் , உயரம்,நீளம் , ஆழம் எல்லம் தாண்ட தெரிந்திருக்க வேண்டும். இதனால் தான் இப்போதெல்லாம் மரணக்கிணறு, ராட்டினங்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் அலுத்து விட்டது.
இரவானால் பல இடங்களில் தெருவிளக்கு கூட இல்லாததால், வழியில் எமன் பாசக்கயிறுடன் காத்திருந்தாலும் கண் தெரியாமல் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது. கார்களை விட டூவீலர்களுக்கு ஹெட் லைட் வெளிச்சமும் குறைவு. இடுங்கிய ரோடுகளில் எதிரே வாகனம் வந்தால் நூலிடைவெளியில் பயணம் . ஒருபக்கம் பார லாறி மறுபக்கம் பாதாளம் எனுமளவு ரோடு விளிம்புகள். கடந்து விட்டால் அடுத்த பிறவி. இது போதாதென்று எந்த ரோடு சைனும் இல்லாமல் திடும் திடுமென ஹம்புகள். விழாமல் தப்பித்தாலும் நிறுத்தி எலும்புகளை அதன் சரியான இடத்தில் எடுத்தி பொருத்திவிட்டு ஓட்டுவது பொதுவாக நல்லது. வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது செல் போன் அவசரமாக அடிக்கும். எடுக்க வேண்டாம் . எடுத்தால் சில வேளை "இன்னும் உனக்கு இங்கெ வந்து சேர நேரம் வர வில்லையா ?" என்று ஏற்கனவே போய் சேர்ந்த முன்னோர்களின் அழைப்பாக இருக்கலாம். அதோடு அவர்களை நேரில் காணும் ப்ராப்தியும் கிடைக்கலாம்.

எவ்வளவுதான் நாம் கவனமாக போனாலும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப்படாத தற்கொலைப் படைகள் வாகனங்களை ஓட்டி வந்து என்னோடு வர்ரியா? கடவுளை பார்க்கலாம் என்று பயமுறுத்துகி்றார்கள். குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள். அதனால் எங்காவது போய் இடித்தாலும், உடனே எங்கே சாராயக்கடை என்று தேடி ஒரு ~புல் போட்டு விட்டு நிதானத்திற்கு வருகிறார்கள். இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கண்ட கண்ட இடங்களில் திடீரென ரோட்டின் குறுக்கே பாயும் பாத சாரிகள். அட இந்த முறை நீ தப்பித்தாய்! என்று நம்மை கிளித்தட்டு விளையாடுவார்கள். வேகமாக போனாலும் அவ்வளவு ஆபத்தில்லை, மெதுவாகப் போனால் நம்மை சர் சர்ரென ஒவர் டேக் செய்யும் வண்டிகள் போகிற போக்கில் தட்டி இழுத்துகொண்டுப் போய் விடுவார்கள். இண்டிகேட்டரை போடாமல் படக்கெனெ திரும்பும் வண்டிகள், நடு ரோட்டில் வண்டியை விட்டு டீ குடிக்கப்போகும் ட்ரைவர்கள், வளைவுகள் வண்டியை நிறுத்தி ஆளெடுக்கும் பேருந்துகள் என எத்தனை ஆபத்துகள் வழியில், யாருக்குப் பொறுப்பு?

தண்ணீர், குப்பை , மணல், ஜல்லி, கழிவுப்பொருள் என பாரங்கள் ஏற்றிக் கொண்டு ரோடு முழுக்க விசிறியடித்துக் கொண்டு முன்னால் செல்லும் வாகனங்கள், என்னேரமும் ரோட்டில் போவோர் தலையில் விழக்கூடிய நிலையில் கருங்கற்களை பாதுகாப்பின்றி ஏற்றிச்செல்லும் வண்டிகள். பிரேக் இட்டால் மூளையை கடந்து செல்லுமோ எனக்கருதும் வகையில் நீண்ட கூரிய கம்பிகளை ஏற்றிவரும் லோடு ஆட்டோக்கள். நிறை மாத கற்பிணி போல் பஸ்கள், மக்களை குலுக்கி குலுக்கி ஏற்றி அடைத்துக்கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து செல்வதைக் கண்டால் திருப்பத்தில் கவிழுமோ என மனம் பதைக்கும். ஒரு வகுப்புக்குத் தேவையான அளவு பள்ளிக் குழந்தைகளை நசுக்கி அடைத்துக்கொண்டு , இருபுறமும் இறக்கைகள போல் புத்தகப்பைகளுடன் ரோட்டை அளந்து கொண்டு பறக்கும் ஆட்டோக்களை யார் பார்க்கிறார்கள்?
கண்ணீர் புகை போல் பெரும் புகையை கருப்பாக விட்டுக்கொண்டு காற்றை மாசுபடுத்தும் வாகனங்கள் இவற்றால் குளித்து புத்தாடையணிந்து புறப்பட்ட நாம் போய் செரும் போது குண்டு வெடித்த இடம் போல் ஆகியிருப்போம்.
பெரும் ட்ராபிக் ஜாமை உண்டாக்கி கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்காமல் ரோட்டை அடைத்துகொண்டு மெதுவாய் ஊர்ந்து செல்லும் பார வண்டிகள். ஆடு , மாடுகள் கூட ஆட்டோக்களை போல தெருவில் திரிகின்றன. அது வரை காத்திருந்து டூ வீலரின் எதிரே படக்கென்று குறுக்கே பாயும் நாய்கள். நாயின் மீது வண்டியை ஏற்றியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார், வண்டியும் அஷ்ட கோணலாயிருக்கும். நாயோ வள் என்று ‘ஹாரன்’ அடித்து விட்டு டைவ் அடித்து கூலாக பறந்து விடும்.
கதவை திறந்து வைத்துகொண்டு படியில் ஸ்பைடர்மேனாகத் ஒரு" கிளி" (னர்) தொற்றிகொண்டு சாலையில் பறக்கும் மினி வேன்கள் நம்மை அறைந்து விடாமல் இருக்க ஒரு கண் நம் காதுக்கு அருகிலும் தேவை. வண்டியின் முன் விழுவதைப் போல் ஹேண்டிலை இப்படியும் அப்படியும் வெட்டித்திருப்பி ஹாயாக நடு ரோட்டில் பயணிக்கும் சைக்கிள் வீரர்கள். இரவில் ஹெட் லைட்டோ, பின்னால் ரிப்லெக்டரோ இல்லாமல் இருட்டில் திடீரென தோன்றும் சைக்கிள்கள், அவர்களுக்கென்ன பின்னால் வருபவர்கள் பார்த்து ஓட்டிக்கொள்வார்கள் என அவ்வளவு நம்பிக்கை. முழு இருட்டில் கருப்பு சட்டையணிந்து நடு ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் தெரிவதில்லை எதிரே வரும் வாகன வெளிசசத்தில் சிறிது நெரம் கண் குருடாகும் வாகன ஓட்டிகள் தன் விதியை எழுதிச்செல்லக் கூடுமென்று.

மாலை மயங்கும் வேளைகளில் ஹெல்மெட், அல்லது கண்ணாடி இல்லாமல் இரு சக்கரவாகனங்களில் செல்வது மிகுந்த ஆபத்து. சில வகை பூச்சிகள் வேகமாக கண்ணில் வந்து மோதி நிலை குலையச்செய்துவிடும். எல்லோரும் பிறருக்கு மட்டுமே விபத்து நடக்கும், நமக்கு ஒன்றும் ஆகாது என நினைத்துக்கொண்டிருந்தாலும் சில வேளை பல்வேறு காரணங்கால் நாம் விபத்துக்கு இரையாக நேர்ந்தால் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் அடி படாமல் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்களில் தலைக்காயங்கள் காரணம் தான் உயிரிழப்பு அதிகம்.
விபத்துக்கள் தன்னை திருத்திகொள்ள வாய்ப்பே தருவதில்லை. ஹெல்மெட் அணிவதில் சில் அசௌகரியங்கள் இருந்தாலும், தக்க சமயத்தில் உயிர் காக்க்கும். எனவே அலட்சியப்படுத்தாதீர்கள்.

எல்லா வண்டிகளிலும் ஒரு முதலுதவி கிட் இருக்கும், தேவையான நேரங்களில் அதை மறந்து தொலைக்காமல் சரியாக உபயோகப்படுத்த வேண்டும். முன்பே அதை எப்படி பயன் படுத்துவது என் தெரி்ந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இயற்கை கூட டூ வீலர்காரர்களை விட்டு வைப்பதில்லை. கொழுத்தும் வெயிலாகட்டும், புழுதிக்காற்றாகட்டும், திடீரென கொட்டும் மழை சிலவேளை ஒதுங்க இடம் தேடினால் கிடைத்தால் தானே. எல்லாவற்றையும் வெற்றிகரமாக திறமையாக தாண்டி வந்தால் நிறுத்து! என ட்ராபிக் கான்ஸ்டபிள். எல்லா பேப்பர்களுடன் பர்சையும் மறக்காமல் வைத்திருங்கள்.
ஒலிம்பிக்கில் இத்தனை சாகசங்களுடன் இது போன்ற போட்டியிருந்தால் இந்தியாவும் தங்கம் குவிக்கும். இத்தனை த்ரில்லும், விறுவிறுப்பும் சாகசமும் இருப்பதால் தான் இன்று மக்கள் டூ வீலரை அதிகம் விரும்புகிறார்களோ?

தரமற்ற ரோடுகளை இடுவதால் கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணாகிறது, சுருட்டப்படுகிறது. மோசமான ரோடுகளால் எவ்வளவு உயிர்சேதம், எத்தனை குடும்பங்கள் அனாதையாகிறது? எத்தனை வாகனங்கள் பழைய இரும்பாகின்றன? இதோடு ட்ராபிக் ஜாம் ஆகி தினமும் எவ்வளவு டீசலும் பெட்ரோலும் வீணாகிப் போகிறது? அதனால் காற்று மாசு படுகிறது. மக்களின் வேலை பார்க்கும் நேரம் குறைந்து பயன்படாத பயண நேரம் அதிகரிக்கிறது. எவ்வளவு மருந்துகள், மருத்துவச்செலவுகள்? எத்தனை ஊனமுற்றவர்களை உற்பத்திசெய்கிறது? இந்நிலைக்கு யார் காரணம், யார் இதை மாற்றுவது? அதுவரைக்கும் கடவுள்? நம்மைக் காக்கட்டும்.

கருத்துகள்

எட்வின் இவ்வாறு கூறியுள்ளார்…
பெரும்பாலான சாலைகள் தமிழகத்தில் இப்படித் தான் இருக்கின்றன. தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அளிக்கின்ற முக்கியத்துவத்தில் நகராட்சிகளுக்கும் சிறிதே அளிப்பார்களென்றால் இவை போன்ற இன்னல்களிலிருந்து பொதுமக்கள் காப்பாற்றப்படலாம்.

கடந்த மாதத்தில் கூட மதுரவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பணி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள். (கிராமங்களையும்,நகராட்சிகளையும் கவனிப்பது என்றோ... உள்துறை அமைச்சர் செவி மடுத்தால் பரவாயில்லை)